Published:Updated:

தேவ் தீபாவளி !

தேவ் தீபாவளி !

தேவ் தீபாவளி !

தேவ் தீபாவளி !

Published:Updated:

 நீங்களும் நிருபர்தான் !

 ##~##
நம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரத தேசத்தில் பண்டிகைகள், திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்களுக்குப் பஞ்சமில்லை. இவற்றில் பிராந்திய அளவில் நடைபெறும் திருவிழாக்கள்... அம்மண்ணின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருப்பது சிறப்பு. அவற்றில் ஒன்றுதான், 'தேவ் தீபாவளி’!

'தேவ் தீபாவளி’ என்றால், 'விண்ணவர்களுக்கான தீப ஒளி' என்று அர்த்தம். நடைபெறும் தலம்... இந்த அவனியில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், யாத்ரிகர்களின் மோட்சபுரி, கங்கை அன்னை சீராட்டும் புண்ணிய பூமி... காசி! அங்கு கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் வைபவம்தான் இந்த தேவ் தீபாவளி!

சிவன், திரிபுரத்தை எரித்து, அரக்கர்களை வென்று திரிபுரந்தகராக காசியில் கோயில் கொண்டு, பின் விசுவநாதராக வணங்கப்பட்டார். அவர் வெற்றிபெற்ற நாளை கொண்டாடுவதற்காக தேவர்கள் பூமிக்கு இறங்கி வரும் நாள்... 'தேவ் தீபாவளி’. அந்நாளில் மக்கள் தீபங்களை ஏற்றி, வரவேற்கின்றனர். இதுதான் ஐதீகம்.

தேவ் தீபாவளி !

இம்முறை, 'தேவ் தீபாவளி’க்கு  இரண்டு நாட்கள் முன்பாகவே காசி சென்றோம். நாங்கள் தங்கிய இடம், கங்கையின் கரை மடி. பகலில் கோயில்களில் தரிசனம் முடித்து, மாலையில் 'காட்ஸ்’ என்று அழைக்கப்படும் படித்துறைகளுக்குச் சென்றோம். அங்கே நதிதான் தெய்வம். அதனால் எல்லாத் துறைகளிலும் கங்கைக்கு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. தசாஸ்வமேத துறையில் நதிஅன்னைக்கு ஆரத்தி காட்ட, அருகே உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் துறையில் பெரிய மேடை போட்டு, கதக் நடனம், சிதார் என கச்சேரி களைகட்டிக் கொண்டிருந்தது.

அன்றைய நாள்... 'தேவ் தீபாவளி’க்காக விடிந்தது! ஊரே கோலாகலமாகியது.  கோயிலை நெருங்க முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருப்பதி கோயிலைவிட பெரிய க்யூ! காலை ஏழு மணிக்கெல்லாம் ஒருவழியாக கேதாரேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, படிகளில் இறங்கினோம். புண்ணியம் வேண்டி கங்கையில் ஒரு முழுக்குப் போட்டோம். அந்த நாளன்று கங்கையில் குளித்தால் முக்தி நிச்சயம் என்ற ஐதீகத்தால், எல்லா துறைகளிலும் மக்கள் வெள்ளமோ வெள்ளம்!

''ஹோட்டல்கள், விடுதிகளில் ஒரு இடம்கூட காலி இல்லை. ஒருவருடம் முன்னதாகவேகூட புக்கிங் ஆகிவிடும்'' என்றார் காசிக்காரர் ஒருவர்.  

தேவ் தீபாவளி !

மதிய உணவுக்குப் பின், மாலை நான்கு மணிக்கு 'கங்கா சேவா நிதி' (விழாவை நடத்துபவர்கள்) அமைந்திருக்கும் படித்துறையை அடைந்தோம். பகலவன் மறைய மறைய, கூட்டம் திரண்டுகொண்டே இருந்தது. படகில் ஏறினோம். கார்த்திகை மாதம் என்றாலே, ஒளி மாதம். அதிலும் 'தீபங்களின் நகர்’ (City of lights) என்று பெயர்பெற்ற காசியைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! இருளைக் கிழித்து விளக்குகள் பளிச்சிட்டன. தீபங்கள் ஏற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. கங்கையின் கரையெங்கும் தீபங்கள். சுடலைகள் எரியும் 'மணிகர்ணிகா' மற்றும் அரிச்சந்திரா படித்துறைகளின் அருகில்கூட தீபங்கள் சுடர் விடுகின்றன. எங்கும் எதிலும் தீப ஒளி. உண்மையிலேயே தேவர்கள் இறங்கி வந்து விட்டார்களோ என்று மனம் பரவச அதிர்வை உணர்கிறது. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு படியிலும் மின்னும் விளக்குகளை படகில் சவாரி செய்துகொண்டே பார்த்தது, கண்களுக்கு விருந்து!

தசாஸ்வமேத துறையில் படகு நிற்க, ஆரத்தி தரிசனம். பளபளவென்று ஆடைகளை உடுத்தியிருக்கும் இளைஞர்கள் பக்திப் பரவசத்தோடும் தீப ஆராதனை நடத்துகிறார்கள். பின்னால் அணிவகுத்து நிற்கும் பெண்கள் கங்கையின் புகழ் பாடுகிறார்கள். 'இக்காசினியில் சிறந்தது காசி' என்று முழக்கமிடுகிறார்கள். உயரத்திலிருந்து பார்த்தால், இந்திரலோகமே வந்து விட்டதுபோல இருந்திருக்கும்.

இந்த விழாவுக்கு ஒரே அடிப்படை... புனித கங்கை. இங்கு அவள்தான் மாதா, குரு, தெய்வம், எல்லாம். தேசிய ஒருமைப்பாட்டினைக் கொண்டு வரும் ஒரே நதி கங்கை. வறட்சியே இல்லாமல் ஜீவ நதியாக, சுபிட்சத்தை வாரி வழங்குகிறாள். இந்த விழாவே, அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா எனலாம்! ஆனால், இந்த ஐஸ்வர்ய தேவிக்கு செய்யப்படும் பிரதியுபகாரம்... குப்பைகள், அழுக்குகள் அவள் மீது வீசப்படுவதுதான். சமயங்களில் பாதி எறிந்த நிலையில் உள்ள பிணங்களும் மிதந்து வருகின்றன. கங்கையை 'தாய்' என்று அழைப்பது அவள் நம் பாவங்களை போக்குகிறாள் என்பதால் மட்டுமல்லவே?!

நீங்களும் நிருபர்தான்!

அசத்தலான, அற்புதமான, விஷயங்கள், சாதனை புரியும் பெண்கள்... இன்னும் பலதரப்பட்ட செய்திகள் உங்கள் அக்கம்பக்கத்தில் கொட்டித்தானே கிடக்கின்றன! அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, புகைப்படங்களுடன், கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு பரிசு உண்டு!

அனுப்ப வேண்டிய முகவரி...

'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயில்: aval@vikatan.com பின்குறிப்பு: கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மை யானவையாக இருப்பது முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism