Published:Updated:

பெண்களின் சிறகுகள்

பட்டையைக் கிளப்பும் பாதுகாப்புப் படை! என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்

பெண்களின் சிறகுகள்

பட்டையைக் கிளப்பும் பாதுகாப்புப் படை! என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம், பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் நம் நாடு இருக்கும் லட்சணத்தை தெள்ளத் தெளிவாக காட்டிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் குறித்துக்கொள்ளும் வகையில் பெண் பாதுகாப்புக்கான விதை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து துவங்கிஇருக்கிறது. 'பெண்களின் சிறகுகள்’ என்ற தனிப்படையையே அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்!

''மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அதிகம். கிராமப் பகுதிகளில் இருந்தும், புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவிகள் தினமும் நாகர்கோவில் டவுனுக்கு வந்து செல்கிறார்கள். அனைவரது பாதுகாப்பையும் உறுதிபடுத்தத்தான் 'பெண்களின் சிறகுகள்’ என்ற பெயரில் அரசின் வழிகாட்டுதலோடு தனிப்படை அமைத்தோம்'' என்று முன்னுரை தந்த மணிவண்ணன், அதன் செயல்பாடுகள் பற்றி பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுவரை, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காவல் நிலையத்திலோ, மகளிர் காவல் நிலையத்திலோ புகார் செய்யப்படும். நடவடிக்கை எடுப்பதற்குள், குற்றவாளிகள் ஸ்பாட்டில் இருந்து தப்பித்திருப்பார்கள். இனி, பெண்களை யாராவது கிண்டல் செய்தாலோ, வக்கிரமாக நடந்துகொண்டாலோ உடனடியாக 'பெண்களின் சிறகுகள்’ ஹெல்ப் லைனுக்கு ஒரு மெசேஜோ, மிஸ்டு காலோ கொடுத்தால்... பத்தாவது நிமிடத்தில் போலீஸ் படை... சம்பந்தப்பட்ட இடத்திலிருக்கும்!

பெண்களின் சிறகுகள்

தக்கலை, குளச்சல், நாகர்கோவில், கன்னியாகுமரி என மாவட்டத்திலிருக்கும் நான்கு சப்-டிவிஷன்களிலும் உள்ள மகளிர் மற்றும் ஆண் காவலர்கள் 'பெண்களின் சிறகுகள்’ படையில் இருப்பார்கள். இந்தப் படை 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும். பள்ளி, கல்லூரிகள் விடும் நேரங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைக் கண்காணித்தபடி இருப்பார்கள். நான்கு டிவிஷன்களுக்கும் தனித்தனியாக செல்போன் நம்பர்கள் உள்ளன. அவற்றை பள்ளி, கல்லூரி நோட்டீஸ் போர்டிலும் ஒட்டியிருக்கிறோம். மகளிர் புகார்கள் சம்பந்தமாக 1098 எண்ணுக்கு வரும் புகார்கள், கன்ட்ரோல் ரூம் 100 எண்ணுக்கு வரும் பெண்கள் சம்பந்தமான பிரச்னைகளிலும் இந்தப் படையை பயன்படுத்தி வருகிறோம். பெண்கள் அதிகமாக கூடும் கடைவீதி உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்'' என்ற மணிவண்ணன்,

பெண்களின் சிறகுகள்

''ஜனவரி ஒன்றாம் தேதி முதல், இந்த அமைப்பு செயல்பட ஆரம்பித்துள்ளது. மூன்றாவது நாளே கன்னியாகுமரி பக்கத்தில் இருந்து ஒரு பெண்ணை, மூன்று பையன்கள் சேர்ந்து, பஸ் ஸ்டாப்பில் கேலி பேசியிருக்கிறார்கள். தகவல் கிடைத்ததும் 'பெண்களின் சிறகுகள்’ படை பாய்ந்து சென்று அவர்களை மடக்கிவிட்டது. 'முதல் முறைங்கறதால எச்சரித்து விட்டுடலாம். இனி, கன்னியாகுமரி பொண்ணுங்களோட பாதுகாப்புக்கு 'பெண்களின் சிறகுகள்’ இருக்குங்கறத இந்தப் பசங்க ஊருக்குள்ள போய் சொல்லட்டும்!’ என்று சொல்லி, வழக்கு போடாமல் தடுத்துவிட்டார் அந்தப் பெண். அதுவும் சரிதான் என்று நாங்களும் எச்சரித்து அனுப்பி விட்டோம்!'' என்றார் மணிவண்ணன்.

கல்லூரி விடும் நேரம், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் 'பெண்களின் சிறகுகள்’ படை மாணவிகளுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரியிடம் பேசியபோது, ''படையோட தொடர்பு எண் தவிர, எங்க பெர்சனல் நம்பரையும் காலேஜ் போர்டுல ஒட்டி வெச்சுருக்கோம். எங்க டிவிஷனுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிக்கும் போய் விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்துறோம். இதனால எல்லா பெண்களும் தயக்கமில்லாம தொடர்புகொள்றாங்க. நாங்களும் உரிய வகையில நடவடிக்கை எடுத்துட்டிருக்கோம். இந்த படையோட செல் நம்பரை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லா பெண்களும் மொபைல் போன்ல 'சேவ்’ பண்ணி வெச்சுக்கணும். புகார் தர்ற பெண்கள் பத்தின தகவல்களை வெளியில பகிர்ந்துக்க மாட்டோம். இதில் சிக்கும் நபர்களை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ள தள்ளாம இருக்க மாட்டோம்'’ என்றார் அழுத்தமாக.

'பெண்களின் சிறகுகளுக்கு வரவேற்பு எப்படி?'

பெண்களின் சிறகுகள்

ஒரு சோறு பதமாக, நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் பி.ஏ., ஆங்கில இலக்கியம், மூன்றாமாண்டு மாணவியான சிவகாமி நம்மிடம், ''டெல்லி சம்பவத்துக்கு பிறகு, எங்க அம்மா பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கலைப் போட்டிகள்னு எதுக்குமே வெளியில் அனுப்பறதுக்கு ரொம்ப யோசிச்சாங்க. 'பெண்களின் சிறகுகள்’ அமைப்பு வந்த பிறகு, எல்லாருக்கும் நம்பிக்கை துளிர்த்திருக்கு. 'காவல்துறை உங்கள் நண்பன்’ங்கறத இப்போ நான் உணர்றேன். அதனாலதான் 'பெண்களின் சிறகுகள்’ தொடர்பு எண்ணை 'பெஸ்ட் ஃப்ரெண்ட்’னு மொபைல்ல பதிவு செஞ்சுருக்கேன். ஸ்பீடு டயல்ல ஒண்ணாம் நம்பரை அழுத்தினா, அவுங்களுக்கு போன் போயிடும்'' என்றார் மகிழ்ச்சியுடன்!

நாடு முழுவதும் முளைக்கட்டும் பெண்களின் சிறகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism