Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ரொமான்ஸ் மீட்டரில் உங்களின் மதிப்பெண்கள்? !

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ரொமான்ஸ் மீட்டரில் உங்களின் மதிப்பெண்கள்? !

Published:Updated:

 டாக்டர் ஷாலினி

##~##

சினிமாவிலும் விளம்பரங்களிலும் வருவதுபோல, விடிய விடிய நிலா பார்த்து உருகிக் கொண்டிருப்பது, இந்தப் பெண் நடந்து போகும்போது, அவள் துப்பட்டா அவன் மீது மோதும் அளவுக்கு நெருக்கமாக பின்னால் நடப்பது, கொத்துக் கொத் தாக ரோஜாக்களைக் கொண்டு வந்து தருவது, மெழுகுவத்தி ஒளியில் உணவருந்துவது, அடிக்கடி கிரீட்டிங் கார்டு, சாக்லேட் என்று பரிமாறிக்கொள்வது, அவனுக்கு/அவளுக்குப் பிடித்த நிறத்தில் உடை உடுத்திச் செல்வது... இது எல்லாம்தான் ரொமான்ஸா? இல்லை! இவற்றுக்கு ரொமான்ஸ் மீட்டரில், மதிப்பெண்கள் குறைவே! இதையும் தாண்டி எத்தனையோ இருக்கின்றன. அவைதான் மதிப்பெண்களை அள்ளுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணத்துக்கு இந்த ஜோடியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் சற்றே முதிர்ந்த தம்பதி. ஐம்பது வயதிருக்கும் நிலையில் மனைவிக்கு பக்கவாதம். பிள்ளைகள் இருவரும் கல்லூரி, வேலை என்று பிஸியாக இருந்ததால், தானே தன் மனைவியைக் குளிப்பாட்டி, படுக்கைப் புண் வராமல் பவுடர் போட்டுவிட்டு, வீல் சேரில் வாக்கிங் அழைத்துப் போய், உணவு ஊட்டிவிட்டு, மனைவி குணமாகும் வரை ஆறேழு மாதங்களுக்கு இத்தனை பணிகளையும் செய்தார் கணவர்.

யோசித்துப் பாருங்கள்... கழுவி, துடைத்து, ஊட்டி விடுவதெல்லாம் உண்மையில் ரொமான்டிக் நடவடிக்கைகளே இல்லை. தினம் தினம் ஹாஸ்பிட்டல்களில் நர்ஸ்கள் நோயாளிகளுக்குச் செய்யும் வேலைகள்தான் இவை. நர்ஸ்கள் இவற்றைச் செய்யும்போது, அதை ஒரு ரொமான்டிக் ஜெஸ்சராக நினைத்து யாரும் புளகாங்கிதம் அடைவதில்லை. ஆனால், இதையே ஒரு கணவன், காதலன் தன் துணைக்குச் செய்யும்போது, 'அட, எவ்வளவு அன்பு காட்டுகிறார் மனிதர்!’ என்று நாம் உருகிவிடுகிறோமே, அது ஏன்?

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ஏனெனில், இந்தப் பணிவிடைகள் அவரின் வேலை இல்லை. ஆனாலும், மனைவிக்காக மெனக்கெட்டுச் செய்யும் கூடுதல் பணி. அதையும் வேண்டா வெறுப்பாகச் செய்யாமல், அக்கறையாக, பாசமாக, பொறுமையாக செய்கிறார். யாரும் வற்புறுத்தாமல் தானாகவே முன்வந்து, சமூகத்தில் 'ஆண்’ என்றால் இப்படித்தான் என்கிற 'ஸ்டீரியோடைப்' (Stereotype) சிந்தனையை உடைத்து, மனைவிக்காக மனம் உவந்து செய்கிறாரே... அதனால்தான் இது ரொமான்ஸ் மீட்டரில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறது.

இந்த இரண்டாவது ஜோடியைப் பாருங்கள். கணவனுக்கு அதிகாலையிலேயே விமானத்தைப் பிடித்து வெளியூர் போக வேண்டிய கட்டாயம். ஆனால், சற்றே தாமதமாக போனதால் விமானம் புறப்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் மனைவிக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

''ஏன் லேட்டா போனே? ஃபிளைட்டை கோட்டை விட்டுட்டியே, பொறுப்பில்லாத ஜென்மமே'' என்றெல்லாம் வசைபாடாமல்,

''சரி அங்கேயே இருங்க. அடுத்த ஃபிளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணுறேன்'' என்று இன்டர்நெட்டில் அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனுக்கு புது புக்கிங் செய்து, பி.என்.ஆர் நம்பரை எஸ்.எம்.எஸ் செய்துவிட்டாள். அதை வைத்து பயணத்தை முடித்தான்.

மனைவி டிக்கெட்டை புக் செய்து தந்தபோது, மணி காலை 5.30. இந்த வேலையை டிராவல் ஏஜென்ட்கூடச் செய்யலாம். ஆனால், விடியற்காலை வேளையில் உறக்கம் கலைத்து, இரண்டு கைக்குழந்தைகளை சமாளித்துக் கொண்டு, 'அய்யோ, கணவர் கஷ்டப்படுவாரே’ என்கிற அக்கறையில் மெனக்கெட்டுச் செய்ததால், இவள் பெறும் ரொமான்ஸ் மதிப்பெண்கள் மிகமிக அதிகம்!

ரொமான்ஸ் ரகசியங்கள் !

இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்... இந்த இரண்டு தம்பதிகளுமே 'ஐ லவ் யூ’ என்றெல்லாம் சினிமாத்தனமாக தங்கள் காதலை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த வில்லை. மல்லிகை, ரோஜாக்கள், வாழ்த்து மடல் என்றும் தங்கள் அன்பைப் பதிவு செய்யவில்லை. அன்றாடம் ஒரு குடும்பத்தில் நடைபெறும் சின்னச் சின்ன சம்பவங்களினால்தான் மிக அழுத்தம் திருத்தமாக தங்கள் நேசத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

'உனக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன். ஏன்னா, உன் மேல எனக்கு எக்கச்சக்க அன்பு, நீதான் என் உலகம்!’ என்று செயல்களின் மூலமாகப் பிரியத்தைப் பரிமாறியிருக்கிறார்கள்.

ஆதலினால் தோழியரே, ரொமான்ஸ் என்றால்... தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு, விடிய விடிய கட்டிப்பிடித்து, கையை பிடித்துக் கொண்டு இருப்பதுதானாக்கும் என்றெல்லாம் ஓவராக கற்பனை வானில் மிதந்து, யதார்த்தத்தை கோட்டைவிடாதீர்கள். நிஜ வாழ்வில் ரொமான்ஸ் என்பது, அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்பாமல், ராத்திரி சிணுங்கும் குழந்தைக்கு கணவன் எழுந்து தொட்டில் ஆட்டிவிடுவது, கணவன் தேடுவானே என்று மனைவி அவன் சாக்ஸ் ஜோடியை எடுத்து வைப்பது... இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவர் காட்டும் பரிவில்தான் இருக்கிறது.

'ஐ லவ் யூ பேபி' (I love you baby)என்று தினமும் முணுமுணுக்கலாம். அது ரொம்ப ரொம்ப சுலபம். ஆனால், வெறும் வார்த்தைகள் மட்டுமே, அதை நிறைவேற்றிவிடுமா? ஒருவர் தன் அன்பின் ஆழத்தை செயல்களில் வெளிப்படுத்தும்போதுதானே... முழுமை அடையும்!

Remember, actions speak better than words. . கணவர் செய்யும் சின்னச்சின்ன உபகாரங்களை இன்முகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 'இதை எல்லாம் நீ ஏன் செய்யறே? நானா செய்துகிட்டாதான் எனக்கு திருப்தி’ என்று ஓவராக பிகு செய்துகொள்ளாமல், அன்பாக, ஆசையாக ஒரு 'தேங்க் யூ டார்லிங்’ சொல்லுங்கள். அதேசமயம், 'பரவாயில்லையே... நமக்காக செய்கிறானே இளிச்சவாயன்’ என்று அவரைத் தொடர்ந்து அதேவேலையைச் செய்ய ஏவாதீர்கள். 'அன்னிக்கு செய்தியே, இப்ப மறுக்குறியே, அப்படினா, இப்ப என் மேல அன்பு போச்சா?’ என்றெல்லாம் தேவையில்லாமல் சண்டை போட்டு அவர் அன்பை கொச்சைப் படுத்தாதீர்கள்.

'மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்' - திருக்குறள்

ஆம்... சிலர் மட்டும்தான் அந்த உண்மையை அறிந்து, அதன் நல்ல பயனை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காரணம், சிலருக்குதான் அந்த உறவைக் கட்டிக் காப்பாற்றும் பொறுமையும், திறமையும் இருக்கிறது. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகென்ன... உங்களின் ரொமான்டிக் லைஃப்... எப்போதுமே சுவாரசியம்தான்!

- நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism