Published:Updated:

இந்திய உணவுகளுக்கு அடிமையாகும் இங்கிலாந்து!

குழாய் புட்டு... மிளகு ரசம்... லண்டனிலிருந்து லாவண்யா

இந்திய உணவுகளுக்கு அடிமையாகும் இங்கிலாந்து!

குழாய் புட்டு... மிளகு ரசம்... லண்டனிலிருந்து லாவண்யா

Published:Updated:
##~##

கலைகள், கலாசாரத்துக்கு மட்டுமல்ல... மருத்துவ குணங்கள் நிறைந்த அறுசுவை உணவுக்கும் தாயகம் இந்தியாதான்! உலகின் எந்த மூலையில் உள்ள உண

வகத்துக்குச் சென்றாலும், நிச்சயமாக அங்கு ஓர் இந்திய உணவு இருக்கும். குறிப்பாக, இங்கிலாந்தில் இந்திய உணவுகள் கொடிகட்டிப் பறப்பது... நமக்கான பெருமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவின் 29-வது மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் குவிந்து கிடக்கும் தேசம் இங்கிலாந்து. இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நாட்டின் வருமானத்தில் பல பில்லியன்களை ஏற்றித் தருகிறது இந்திய உணவுத் தொழில்.

'பிரிட்டன் கரி (Curry) விருதுகள்’ என்ற பெயரில் இங்கு வழங்கப்படும் விருதுகளில், சிறந்த உணவு, சிறந்த உணவகம், சிறந்த சமையல்கலை வல்லுநர் என பல பிரிவுகளிலும் பரிசை வாங்குபவர்கள், பெரும்பாலும் இந்தியர்களே! கடந்த ஆண்டு நடந்த விழாவில், பிரதமர் டேவிட் கேமரூன், சிக்கன் டிக்கா மசாலாவை 'கரி ஆஸ்கர்’ என்று புகழ்ந்தார். அந்தளவுக்கு பிரிட்டிஷ் மக்கள், இந்திய உணவின் சுவையில் மூழ்கி யுள்ளனர்.

இந்திய உணவுகளுக்கு அடிமையாகும் இங்கிலாந்து!

ஒவ்வொரு வாரமும் இரண்டரை மில்லியன் மக்கள், இந்திய உணவகங்களுக்கு வருகிறார்கள். இது சென்னை, டெல்லி, மும்பையில் உணவகங்களுக்கு வரும் வாடிக்¬க யாளர்களைவிட அதிகம். தவிர, ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 10 இந்திய உணவகங்கள் இங்கு முளைத்தபடி இருக்கின்றன. இன்றைய தேதியில் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்களைவிட, அந்த நாட்டு மக்கள்தான் நம் உணவை அதிகம் விரும்பி உண்கிறார்கள். ஐரோப்பிய உணவு வகைகளான பாஸ்தா, பீட்சா மற்றும் சீன நூடுல்ஸ் போன்றவை மீது மக்களுக்கிருந்த மோகம் குறைந்ததோடு, அவற்றின் வியாபாரமும் குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்திருக் கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய உணவுகளுக்கு அடிமையாகும் இங்கிலாந்து!

ஈஸ்தாம் பகுதியில் வசிக்கும் தமிழ்ப் பெண் விஜயலட்சுமி, ''யு.கே வந்த புதுசுல பீட்சா, பர்கர் மீதுதான் என் ஈர்ப்பு. கொஞ்ச நாள்லயே, அதெல்லாம் செரிமானமாக நிறைய நேரம் எடுக்கறது புரிஞ்சுது. கூடவே, இங்க இருக்கிற ஹோட்டல்களுக்குப் போனா... இந்திய உணவுகள் நிறைஞ்சுருக்கிறத பார்க்க முடிஞ்சுது. அப்போதான் நம்ம பாரம்பரிய உணவுகளோட பெருமையை முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். என்கிட்ட மட்டுமில்ல... கடந்து அஞ்சு வருஷத்துல இங்க உள்ள நிறையபேர்கிட்ட உணவு விஷயங்கள்ல நிறைய மாற்றத்தைப் பார்க்க முடியுது.

சாண்விட்ச்ல பிரெட்டுக்கு நடுவே கொத்தமல்லி சட்னி இருக்கறதைப் பார்த்தப்போ, எனக்கு ஒரே ஆச்சர்யம். ஒரு பார்ட்டியில் புத்துணர்ச்சி பானம்னு ஒண்ணு தந்தாங்க. பார்த்தா, அது நம்ம மிளகு ரசம். மெக்டொனால்ட், கே.எஃப்.சி கடைகள்ல இருக்கற பொரித்த சிக்கன் ஆசைக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா... வயித்துக்கு நல்லதில்லனு பிரிட்டிஷ்காரங்களே சொல்றாங்க. எங்ககிட்ட பழகும் இங்கிலாந்துக்காரர்கள் அடிக்கடி கேட்கறது... இஞ்சி - பூண்டு சேர்த்து செய்யுற நம்மூர் சமையல் ரெசிபிதான். ஸ்கூல்ல குழந்தைகளுக்கு இந்திய உணவின் மருத்துவ குணங்கள் பற்றி டீச்சர்ஸ் சொல்லித் தர்றாங்க. பிரிட்டிஷ்காரங்க, அவங்க வீட்டு விசேஷங்களுக்கு நம்ம உணவு வகைகளைத்தான் ஆர்டர் செய் றாங்க. காய்கறிகளை வெட்டி, உப்பு - மிளகுத் தூள் சேர்த்து சாலட் செஞ்சு சாப்பிடறாங்க. சுண்டல், பச்சைப்பயிறு, கிழங்கு துருவல்னு நம்ம பாரம்பரிய உணவுகளை நிறையவே சாப்பிடறாங்க!'' என்றார் விஜயலட்சுமி பெருமிதத்துடன்.

பிரம்பிளியில் வசிக்கும் பிரதீபா, அந்த ஆச்சர்யப் பட்டியலைத் தொடர்ந்தார்...

இந்திய உணவுகளுக்கு அடிமையாகும் இங்கிலாந்து!

''ஹாஸ்பிட்டல், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் இந்திய பாரம்பரிய உணவுப் பொருட்களில் இருக்கும் மருத்துவ குணங்களை எழுதி வெச்சிருக்காங்க. வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிற முக்கிய உணவு... நம்ம ஊர் குழாய் புட்டும், சீரகம் சேர்த்த சமையலும்தான். வெளிநாட்டில் இந்திய உணவுகள் கிடைக்காதுங்கறதெல்லாம் இப்போ இல்லை. இங்க வசிக்கிற இந்தியர்கள் பல பேர், வீட்டுமுறை சமையல் செய்து வியாபாரமே செய்றாங்க. இங்கிலாந்துக்காரங்களும் அதை விரும்பி வாங்கறாங்க'' என்றவர்,

''அதேசமயம், இந்தியாவில் இருந்து வரும் கறிவேப்பிலையை சில மாதங்களுக்கு முன்ன இங்கே தடை செய்திருந்தாங்க. அதிகமா ரசாயன உரத்தைப் போட்டு கறிவேப்பிலையை வளர்க்கறதாலதான் தடை செய்திருக்கறதா காரணமும் சொன்னாங்க. இதனாலேயே... இந்தியாவிலிருந்து வர்ற உணவுப் பொருட்கள்ல கலப்படம் இருக்கும்னு ஐரோப்பியர்கள் நினைக்கறாங்க. அதுல உண்மையும் இருக்குதுங்கறத நாம ஒப்புக் கொண்டாகணும். வியாபாரிகள் சிலர் செய்யுற தவறால... இந்தியாவில விளைஞ்சு ஏற்றுமதியாகி வர்ற உணவுப் பொருள்களோட மதிப்பு குறையுதுங்கறது வருத்தமான விஷயம். இத்தனை பிரச்னை இருந்தாலும்... இங்கிலாந்து ரெஸ்டாரன்ட்டுகள் பலதுலயும் இப்போ இந்திய உணவின் ஆட்சிதான்!'' என்று கட்டை விரல் உயர்த்திச் சொன்னார் பிரதீபா!

அன்று வியாபாரம் என்கிற பெயரில் பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள். இன்று, உணவு மூலம் அவர்களை நாம் ஆளுமை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்! அதேசமயம்... பீட்சா, பர்கர் என்று உடலுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய மேற்கத்திய உணவுகளுக்கு இந்தியாவில் அடிமைகள் அதிகம் பெருக ஆரம்பித்திருப்பதுதான் கொடுமை!

- லண்டனிலிருந்து லாவண்யா

ஐரோப்பாவின் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த செரியா புங்கர்... கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் குடியேறியவர். இவருடைய காதல் கணவர்... தமிழரான மதனகோபால். தமிழில் இரண்டு வார்த்தைகள்கூட சேர்ந்தாற்போல் பேசத் தெரியாது செரியாவுக்கு. ஆனால்... நம் தமிழகத்தின் அத்தனை உணவு வகைகளின் பெயர்களும் அவருக்கு அத்துப்படி!

''எனக்கு இந்திய கலாசாரம் பிடித்திருந்தாலும்... இந்திய உணவுகள் காரமாக, அதிக மசாலா சேர்க்கப்பட்டு, உடலுக்கு கெடுதல் தரக்கூடியவை என்கிற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. திருமணத்துக்குப் பிறகு என்னுடன் சேர்த்து அவரும் ஸ்பெகட்டி, பர்கர், ஸ்னூகு (ஆப்பிரிக்க ஸ்டைல் உப்புமா) என்று சாப்பிடப் பழகிவிட்டார். அவருடைய உறவுகள், நட்புகள் வீட்டுக்குப் போனாலும், நான் ஆர்வமாக அவர்களுடைய சமையலைச் சாப்பிட மாட்டேன்.

இந்திய உணவுகளுக்கு அடிமையாகும் இங்கிலாந்து!

இப்படியே மூன்று வருடங்கள் ஓடின. நான் கருவுற்ற சமயம்... வாந்தி மயக்கத்தில் எதுவுமே சாப்பிடாமல் உடம்பு தளர்ந்துவிட்டது. 'கர்ப்பிணி பெண் வாய்க்கு நல்லது' என்றபடி, மதனுடைய நண்பரின் மனைவி, ரசம் சாதம் செய்து தந்தார். எனக்குப் பிடிக்காவிட்டாலும், அவருடைய மனது புண்பட்டு விடக்கூடாதே என்று வேண்டா வெறுப்பாக சாப்பிட ஆரம்பித்தேன். இரண்டு வாய் சாப்பிட்டதும்... அந்த ருசி எனக்குப் பிடித்துவிட்டது. பிறகென்ன... கர்ப்ப காலம் முழுவதும் சத்தான இந்திய உணவுகளாகத்தான் சாப்பிட்டேன்.

இடுப்பு எலும்பு வலுவுக்கு உளுந்தங்கஞ்சி, வெந்தயக் களி என்று மதனின் உறவுகளும் நட்புகளும் சளைக்காமல் செய்து கொடுக்க... விதம்விதமாகச் சாப்பிட்டேன். குட்டிப் பாப்பா பிறந்த பிறகும், பத்திய உணவுகள் சமைத்துத் தந்தார்கள். இப்போது எங்கள் வீட்டில் புளிப்பும், உறைப்புமாக தினமும் இந்திய சமையல் மணக்கிறது. என் மாமியாரிடம் 'ஸ்கைப்’ மூலமாக ரெசிபி கேட்டு சமைக்கிறேன். ஏழு மாதக் குழந்தையான என் மகளுக்கும் பருப்பு சோறுதான் பழக்கப் போகிறேன். ஐ லவ் வெங்காய சாம்பார்!'' என்று சிரிக்கிறார் செரியா!