Published:Updated:

ஆனந்தம் பொங்கும் ஐ.டி.குடும்பம் !

ம.மோகன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

ஆனந்தம் பொங்கும் ஐ.டி.குடும்பம் !

ம.மோகன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##
'இன்றைக்கு
விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு ஓடுபவர்களில் பெரும்பான்மையாக இருப்பது... 'ஐ.டி' என்று சுருக்கமாக அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்தான்!' என்று அடிக்கடி செய்திகள் எட்டிப் பார்க்கின்றன. புள்ளிவிவரங்களும் இதைத்தான் உறுதிபடுத்துகின்றன!

'ஐ.டி வேலை என்பது டென்ஷன் பிடித்த வேலை; எந்த நேரமும் பிஸியாக இருப்பதால், இருவருமே மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்; ஒருவரையருவர் புரிந்துகொள்ளும் சூழல் இல்லாததால், ஈகோ மோதலில் முட்டிக் கொள்கிறார்கள்' என்றே இதற்கு காரண, காரியங்களை அள்ளிவிடுகிறார்கள் பலரும்!

இவர்களுக்கு நடுவே... ''நாங்க 25 வருஷமா ஒரு ஐ.டி நிறுவனத்தையே நடத்திட்டு வர்றோம். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஹேப்பியாதான் கடந்து போயிட்டிருக்கு எங்களுக்கு!'' என்று கலகலப்போடு மெசேஜும் சேர்த்துக் கொடுக்கிறார்கள், சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கும் உதாரண தம்பதி... அகிலா - அருள்!

''ஸ்ரீராம், பிரேம் சங்கர்னு எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருக்குமே திருமணம் முடிஞ்சுடுச்சு. ரெண்டுமே லவ் மேரேஜ்தான். ரெண்டு மருமகள்களும் ஐ.டி வேலைதான் பார்க்கறாங்க. ஆனா, துளிகூட பிரச்னை எட்டிப் பார்க்காம... எங்களைப் போலவே அவங்களும் சந்தோஷமாத்தான் வாழ்க்கையை அனுபவிச்சுட்டு இருக்காங்க'' என்று, அடுத்த தலைமுறையின் சந்தோஷ வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தி ஆச்சர்யமூட்டிய அகிலா, தொடர்ந்தார்...

ஆனந்தம் பொங்கும் ஐ.டி.குடும்பம் !

''என் கணவர் அருளும் பசங்களும் சென்னை, மும்பை, பெங்களூருனு பல ஊர்கள்ல கிளை நிறுவனங்களோட இயங்குகிற ஐ.டி நிறுவனத்தை நடத்திக்கிட்டிருக்காங்க. 20 வருஷங்களுக்கு முன்ன கணினி துறையோட ஆரம்ப காலகட்டம். வெற்றியைத் துரத்திக்கிட்டிருந்த அந்த நேரத்துல இவரோட உழைப்பு அதிகமா தேவைப்பட்டாலும், குழந்தைகளோட படிப்பு, வளர்ப்பு, குடும்பத்துக்கான நேரம்னு எங்களோட சராசரி ஆசைகள், சந்தோஷங்களில் குறையில்லாம பார்த்துக்கிட்டார். குடும்பம்தான் முதல்ல... குடும்பத்துக்காகத்தான் எல்லாம்கிறதுல தெளிவா இருந்தார்!''

- கேட்கவே இனிக்கிறது அகிலாவின் பேச்சு.

''எங்க பசங்க வளர்ற பருவத்துல, 'வெளிநாட்டுல போய் படிக்கணும், அங்கேயே செட்டில் ஆகணும்...’னு நினைச்சாங்க. ஆனா, நம்ம நாட்டுலயே சாதிக்கறதுக்கான எல்லா தடங்களும் இருக்கும்போது, வெளிநாடு எதுக்குனு அவங்களுக்குப் புரிய வெச்சோம். இப்பவும் அவங்க தங்களோட கம்பெனி விஷயமா பல வெளிநாடுகளுக்கும் போயிட்டு வந்துட்டுதான் இருக்காங்க. ஆனாலும், 'தமிழ்நாடு போல வராதும்மா!’னுதான் சொல்வாங்க. கை நிறைய சம்பாதிக்கணும்ங்கிறதை மட்டுமே இளம்தலைமுறையோட இலக்கா புகுத்தாம, பெற்றோர்களோட இருந்து, நம்மோட பண்பாடு, வாழ்க்கை முறையை புரிஞ்சிகிட்டு நல்ல பண்புகளை கற்றுக்கொள்ளணும்ங்கிற விருப்பத்தை அவர்களாகவே உணரும்படி வளர்த்ததுக்கான பலன் இது!'' என்று தன் அனுபவம் மூலமாகவே பலருக்கும் அகிலா பாடம் சொல்ல...

''எங்க அம்மா கிரேட் அம்மா!'' என்று கொண்டாடினார்கள் மகன்கள் இருவரும்!

ஆனந்தம் பொங்கும் ஐ.டி.குடும்பம் !

''உறவுகளுக்கு இடையேயான புரிதல்தான் ஒரு குடும்பத்தின் பலம். அந்த விஷயத்துல எங்க குடும்பம் செம ஸ்ட்ராங். சுயநலத்தை தூக்கிப் போட்டுட்டு, இங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னுதான் எல்லாருமே நினைப்போம். குறிப்பா, வீடு, கார், ஆடம்பரம் இதுல எல்லாம் இல்ல சந்தோஷம். 'இது எங்க குடும்பம்!’னு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஒற்றுமையா பாசப் பிணைப்போட வாழ்றதுதான் சந்தோஷம்னு புரிஞ்சு வெச்சிருக்கோம்! அதனால எங்ககிட்ட துளிகூட ஈகோங்கறது எப்பவுமே எட்டிப் பார்க்காது. அப்பப்ப சின்னச் சின்ன உரசல்கள் வரும். நண்பர்கள்கிட்ட கோவிச்சுக்குவோமே... அதுபோல! ஆனா, அது அதிகபட்சம் நிமிஷங்கள்லகூட நீடிக்காது'' என்று சகோதரர்கள் ஸ்ரீராமும், பிரேம்சங்கரும் சந்தோஷம் பொங்க சொல்ல...

''அத்தனையும் நூறு சதவிகிதம் உண்மை!'' என்று புன்னகை பொங்க வந்து நின்றார்கள் அந்த வீட்டு மருமகள்கள் சந்தியா, ஐஸ்வர்யா.

''நாங்களும் ஐ.டி படிச்ச பொண்ணுங்கதான். காதல் கணவரோடு சேர்ந்து ஐ.டி நிறுவனத்தோட வேலைகளை எல்லாம் கவனிச்சுட்டு இருக்கோம். கம்ப்யூட்டர் மட்டுமே உலகம்னு இருந்த பொண்ணுங்களுக்கு ஃபேமிலி அட்டாச்மென்ட்னா என்னனு கத்துக் கொடுத்தது எங்க மாமியார்தான். 'எப்படா ஆபீஸ் வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்’னு இருக்கும். பெரியவங்க, சின்னவங்க, குழந்தைகள்னு வீடு நிறைஞ்சு கிடக்குறதைப் பார்க்கும்போது, ஆசீர்வதிக்கப்பட்ட மாதிரி இருக்கும். ஐ.டி வேலைனா பரபரப்பு, குடும்பத்தினரோட நேரம் செலவிட முடியாது என்கிற கதை எல்லாம் சும்மா. மனசிருந்தா, ஐ.டி குடும்பங்களிலும் சந்தோஷத்துக்கான நேரம் தாராளமா கிடைக்கும்!'' என்று ஒரே குரலில் சொன்ன இந்த மருமகள்கள்,

''இப்படி மாமனார், மாமியார், மச்சினர், குழந்தைகள் என்று கூட்டுக்குடும்பமா இருக்கும்போது... ஆபீஸ் டென்ஷன், அந்த டென்ஷன், இந்த டென்ஷன் அத்தனையும் காணாம போய், சந்தோஷம் மட்டும்தான் குடியிருக்குது. அதனால சின்னச் சின்ன பிரச்னைகளை மட்டுமில்ல... பெரிய பெரிய பிரச்னை வந்தாலும்கூட, ஈஸியா நாங்க கடந்துடுவோம். அதுக்குக் காரணமே, குடும்பம்கிற இந்த திடமான பந்தம் தர்ற தெம்புதான்!'' என்று சொல்லி அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினர் இருவரும்!

உண்மைதானே!