##~##

நேற்று... திருமணம்; இன்று... மணவாழ்வு; நாளை... மணமுறிவு... இப்படி எல்லாமே அவசரமாக நடந்து முடிகிற இன்றைய காலகட்டத்தில், 25-வது ஆண்டு திருமணநாள், 50-வது ஆண்டு திருமணவிழா, கணவரின் 60 வயது, 75 வயது பூர்த்தி விழா என்று விழாக்களாக கொண்டாடி விழா நாயகியாகவும், புகுந்த வீட்டின் முடிசூட்டிய ராணியாகவும் வாழ் கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம், நல்லூரில் இருக்கும் சுசீலா சுப்ரமணியன். மூன்று ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்து, அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்து பள்ளி, கல்லூரி யில் படித்துக் கொண்டிருக்கும் இந்த நாளிலும், எல்லோரும் கூட்டுக்குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, அத்தனை பேரையும் தனது அன்பால் பின்னிப் பிணைத்திருக்கிறார் இந்த அன்னை!

''எங்களுக்கு கல்யாணம் ஆகி 51 வருஷமாச்சு. அன்னிலேருந்து இன்னிவரைக்கும் மொத்தமா கூட்டிப் பார்த்தா, அதிகபட்சம் 100 நாள்கூட அவங்க அப்பா வீட்டுக்கோ, சொந்தங்காரங்க வீட்டுக்கோ போய் இவ தங்கியிருக்க மாட்டா. இது ஒண்ணே போதும்... இந்த குடும்பத்து மேல இவ வெச்சுருக்கற பாசத்தைச் சொல்ல!'' என்றபடி ஓய்வுபெற்ற ஆசிரியரான சுப்ரமணியன், மனைவி சுசீலாவை அறிமுகப்படுத்த, சிறிய புன்முறுவலில் கணவருக்கு நன்றி சொல்லி, நம்மிடம் பேசத் தொடங்கினார் சுசீலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புகுந்த வீடு....

''திருவாரூர் பக்கத்துல இருக்கற அடியக்கமங்கலம்தான் நான் பொறந்த ஊர். 'கோபதாபம்னா... கொள்ளிடம் காட்டுக்குள் கொண்டுபோய் தள்ளு'னு எங்க ஊரு பக்கம் சொலவடை சொல்லுவாங்க. இந்த நிலையில, 'மாப்பிள்ளை கொள்ளிடம்'னு சொன்னதுமே, ரொம்ப பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, கல்யாணம் ஆகி இங்க வந்தா... ஒரே வீட்டுக்குள்ளே ஒரு ஊரே இருந்துச்சு. அவ்வளவு கும்பல். எங்க மாமியாருக்கு இவரையும் சேர்த்து மூணு ஆண், ரெண்டு பெண்ணுனு அஞ்சு பிள்ளைங்க. மூத்த அண்ணனுக்கு திருமணமாகி நாலு பெண், மூணு பையன்... அடுத்த அண்ணனுக்கு ரெண்டு பெண், ரெண்டு பையன். இவ்வளவு பெரிய திருவிழா கூட்டத்தில வந்து சேர்ந்ததும், பயமெல் லாம் ஓடியே போயிடுச்சு. கூடவே, 'இந்தக் கூட்டத்துல எப்படி நல்லபடியா கரைசேரப் போறோம்'னு கவலையும் வந்துடுச்சு.

நாத்தனாருங்க ரெண்டு பேருக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிஞ்சுருக்க... எங்களுக்கு திருமணமானவுடனேயே நடுவுள்ளவர், தனிக்குடித்தனம் போயிட்டார். இருந்த சுத்துகட்டு வீட்டுல பெரியவர் குடும்பமும், சின்னவரான என்னவரோட குடும்பமும் இருந்தோம். ஆனா, ஒரு வருஷம்தான் தாங்குச்சு. அடுத்த வருஷத்துல தனி உலையா ஆயிடுச்சு. நாலு பக்கம் தாவாரம் (தாழ்வாரம்), அடுப்படி, ரெண்டு அறைகள், முத்தம் உள்ள அந்த வீட்டுல... கிழக்கு பக்க தாவாரம் மட்டும் எங்க பங்கு. 7 அடி அகலம் 20 அடி நீளம் கொண்ட அந்த தாவாரத்துலதான் 15 வருஷமா எங்க குடித்தனம். அடுப்பு, அதுக்கு பக்கத்துலயே சாமான்செட்டு, மீதியிருக்கிற எடத்துல புழங்குவோம். ராத்திரியில படுக்கையும் அங்கதான். மூணு புள்ளைங்களும் அதுலதான் பொறந்து, வளர்ந்தாங்க.

இவருக்கு 64 ரூபா சம்பளம். அதை வெச்சு கட்டுசெட்டா குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன். ஒருநாளுகூட அது இல்லை, இது இல்லைனு யாரு வீட்டுலயும் போய் நின்னதில்லை. அதேநேரத்துல அக்கம்பக்கம் யார் வீட்டுலயாவது ஏதாவது நல்லது கெட்டது செஞ்சாங்கன்னா, அதைப் பார்த்து என் பிள்ளைங்க ஏங்கிடக் கூடாதேனு உடனே செஞ்சுடுவேன்...''

- அந்த அன்பில் நம் வீட்டு அம்மா, அத்தைகளை நினைவுபடுத்தினார் சுசீலா.

புகுந்த வீடு....

''என்னதான் தனித்தனியா இருந்தாலும் ஒரே வீட்டுக்குள்ளேயே இருந்ததால எனக்கும் ஓரகத்திக்கும் இடையிடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்துச்சு. இடையில... 'நாலு தாவாரம் வெச்ச வீட்டுல வாழறவ மாதிரி பேசுறா’னு வெளியில பேச்சு வந்துச்சு. அது எனக்குள்ள முள்ளா தைக்க... சாகறதுக்குள்ள நாலு தாவாரம் வைச்ச வீட்டுல வாழ்ந்துடணும்னு முடிவெடுத்தேன். இன்னும் சிக்கனமா இருக்க ஆரம்பிச்சேன். இவருக்கும் சம்பளம் அதிகமாச்சு. சொந்தமா வயல், மாடு இதெல்லாம் இருந்ததால... நெல்லு, அரிசி, பாலு, தயிருனு காசில்லாம கிடைச்சுடும். சேத்து வெச்ச காசு ஆறாயிரம் ரூபாயா சேர்ந்ததும்... அக்ரஹாரத்துல ஒரு வீட்டை வாங்கினோம். அந்த வீடு, நாலு தாவாரம் உள்ள சுத்துக்கட்டு வீடு!

வாழ்க்கையில ஜெயிச்ச சந்தோஷத்தோட, குடித்தனம் வந்தோம். அங்க இருந்த நாலு தாவாரத்துல, ஒரு தாவாரம் சமையலறை. உடனடியா கொல்லைப் பக்கம் கொட்டகை போட்டு, சமையல்கட்டை மாத்திட்டு, 'உன் ஆசைப்படி நாலு தாவாரத்திலயும் நீ தாராளமா பொழங்கு!’னு சொன்ன அந்தக் கணத்துல, இவரோட பாசத்தை நினைச்சு கண்ணீர் வடிச்சேன். இன்னும் அதிகமா பணம் வேணும்கிற நிலையில வெளிநாடு கிளம்பினாரு. கல்யாணமானதுல இருந்து அவரை விட்டுப் பிரிஞ்சதே இல்லையா? அதனால அந்த ரெண்டரை வருஷமும் படாத பாடுபட்டேன். அதுக்குப் பலனா எங்க பிள்ளைங்க நல்லா    படிச்சு, வேலைக்குப் போனாங்க. பெரியவன் வாத்தியார், அடுத்த வன் இன்ஜீனியரு, மூணாவது பையன் பேங்க் வேலை. எல்லாருக்கும் கல்யாணம் முடிச் சுட்டோம்.''

- அதுவரை நிறைவான மனைவி, அக்கறையான அம்மாவாக இருந்த சுசீலா, மாமியாராக என்ன மதிப்பெண் வாங்கினார்..?

''எந்தப் பொண்ணு வீட்டுலயும் அதை கொடுங்க, இதை கொடுங்கன்னு கேட்கல. அவங்கவங்க என்ன போட்டுக்கிட்டு வந்தாங்கனு எனக்கும் சரி... இவருக்கும் சரி, இன்னிவரைக்கும் தெரியாது. கிராமத்துலயெல்லாம் மாமியார்தான் அரிசி, பருப்பு எடுத்து கொடுத்து மருமகளை சமைக்க சொல்லுவாங்க. ஆனா நான், மருமக வந்த முதல் நாள்ல இருந்து முழுபொறுப்பையும் கொடுத்துட்டு, விலகிட்டேன். பேருக்கேத்த மாதிரி மகாலட்சுமி அவ. என்னைவிட அதிக அக்கறையா பார்த்துக்குறா. அடுத்து வந்த ரெண்டு மருமகள்களும் இந்த வீட்டோட குணம் புரிஞ்சவங்களா இருக்காங்க'' என்றவர், ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.

''ஒரு வீட்டு ஆம்பளை, தன் பொண்டாட்டிக்கு என்ன மரியாதை, பிரியம் கொடுக்குறாரோ, அதைத்தான் மத்தவங்களும் கொடுப்பாங்க. ஒருவேளை அவரே மனைவியை மதிக்காம உதாசீனப்படுத்தினா, மத்தவங்ககிட்டயும் எந்த மரியாதையும், அன்பும் கிடைக்காது. என் வீட்டுக்காரர் என்னைக் கொண்டாடி நல்லா பார்த்துக்கிட்டதோட பலன்தான்... குடும்பத் துக்கு நான் முக்கியமானவளா இன்னிக்கு இருக்கறது!'' என்று கூட்டுக் குடித்தன ரகசியம் சொன்ன சுசீலா,

''மகனுங்க, மருமகளுங்க, பேரனுங்க, பேத்திங்கனு எல்லோரும் தர்ற சந்தோஷத்துலதான் இந்த 66 வயசுலயும் எந்த வியாதியும் இல்லாம ஆரோக்கியமாவும் சந்தோஷமாவும் இருக்கேன்'' என்று சொல்லி கணவரையும் மகன்களையும் ஆனந்தக் கண்ணீர் பெருக பார்த்தார் அந்த குடும்பத்து ராணி.

''அவ செஞ்ச வீட்டு வேலைகள்தான் அவளோட ஆரோக்கியத்துக்குக் காரணம். ஏன்னா கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெஷின்னு எல்லாமே அவளாதானே இருந்திருக்கா!''

- மனைவியின் உழைப்புக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி சொல்கிறார், சுப்ரமணியன்!