Published:Updated:

காக்கியை ரசித்தேன்...கல்யாணத்தை தவிர்த்தேன் !

சா.வடிவரசு, படங்கள்: க.கோ.ஆனந்த்

காக்கியை ரசித்தேன்...கல்யாணத்தை தவிர்த்தேன் !

சா.வடிவரசு, படங்கள்: க.கோ.ஆனந்த்

Published:Updated:
##~##
''பணி
ஓய்வு பலருக்கும் வாய்க்கிறதுதான். ஆனா, 'தமிழக காவல் துறையின் முதல் பெண் போலீஸ் ஓய்வு பெற்றார்’ என்கிற சிறப்போட நான் ஓய்வுபெறுவதை நினைக்கும்போது, என்னோட இந்த 39 வருஷ சர்வீஸை நினைச்சு ரொம்பப் பெருமையா இருக்கு!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கம்பீரப் புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார், வசந்தி. தமிழக காவல் துறையின் முதல் பெண் போலீஸாக 1973-ம் ஆண்டு பதவியேற்று, சமீபத்தில் ஓய்வுபெற்றிருக்கும் வசந்தியை, சென்னை - செம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.

''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் விழுப்புரம். அப்பா சாரங்கன், டீசல் இன்ஜின் மெக்கானிக். நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சு முடிச்ச நேரம், போலீஸ் வேலைக்கு தமிழகத் திலேயே முதல் முறையா பெண்களையும் தேர்வு செய்றதா நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். ஏதோ ஒரு ஆர்வம், துடிப்பு... எப்படியாவது அதுல சேர்ந்துடணும்னு முடிவெடுத்தேன். இது என்னோட வீட்டுல இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சா, நிச்சயமா அனுமதிக்க மாட்டாங்க. அதனால, யார்கிட்டயும் சொல்லாம, பக்கத்து வீட்டுல இருந்த ஆசிரியர் ஒருத்தர் உதவியோட விண்ணப்பிச்சேன். அது 1973-ம் வருஷம். பெண் போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான தேர்வுல மொத்தம் 450 பெண்கள் கலந்துகிட்டாங்க. எல்லா சுற்றுகளையும் சிறப்பா செய்தேன். நான் உள்பட 21 பேர் போலீஸாவும், உஷாங்கறவங்க சப்-இன்ஸ்பெக்டராவும் தேர்வானோம். ஆமா... எனக்கே ஆச்சர்யமா நான் போலீஸ் ஆகிட்டேன்!''

காக்கியை ரசித்தேன்...கல்யாணத்தை தவிர்த்தேன் !

- இப்போதும் அந்த நேர பரவசம் வசந்தியின் முகத்தில்.

''வீட்டில் விஷயத்தைச் சொன்னேன். அதுவரை என் வீட்டில், உறவில்... ஆண்கள்கூட போலீஸ் வேலைக்குப் போனது கிடையாது. அப்படி இருக்குறப்ப நான் போலீஸ் வேலைக்குப் போறதை அவங்களால ஏத்துக்க முடியல. யாருமே சம்மதிக்கல. 'போயே தீருவேன்'னு பிடிவாதமா நின்ன நான், எல்லாரோட கோபங்களையும் வாங்கிட்டுதான் யூனிஃபார்ம் போட்டேன். ஃபர்ஸ்ட் பேட்ச் பெண் போலீஸ்ங்கறதால எங்க எல்லாருக்குமே தீவிர பயிற்சி கொடுத்து, சிறப்புப்படை போலீஸா அனுப்பினாங்க. ராத்திரி, பகல் பார்க்காம ஓட வேண்டிய இந்த வேலையில பல நேரங்கள்ல கடுமையான கஷ்டங்களைச் சந்திச்சு இருக்கேன். ஆனாலும், இந்த வேலை எனக்கு ரொம்பப் பிடிச்சுது. மனசுக் குள்ள நிறைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் வளர்ந்துச்சு'' என்று உருகுபவர், தன் பணிக்காகவே திருமணத்தைத் தவிர்த்திருக்கிறார்!  

''என்கூடவே வேலையில் சேர்ந்த உஷா உள்ளிட்ட பலர் பல்வேறு காரணங்களால வேலையை விட்டுப் போயிட்டங்க. குறிப்பா, திருமணத்துக்கு அப்புறம் பலரால வேலையத் தொடர முடியல. அதை எல்லாம் பார்த்துட்டு, திருமணமே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். எனக்கு 24 வயசு இருக்கும்போது... வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. 'கல்யாணமே வேண்டாம்'னு சொன்னா... அதிர்ச்சியாயிடுவாங்கனு, 'இப்ப என்ன அவசரம்?'னு தட்டிக் கழிச்சே காலத்தை ஓட்டினேன். ஒருகட்டத்துல, திருமணம் வேண்டாம்ங்கற முடிவை சொன்னப்போ, அவங்களோட கோபம்... நான் போலீஸ் வேலையில சேர்ந்த நேரத்துல இருந்ததைவிட, இன்னும் அதிகமாச்சு. ஆனாலும், என் முடிவுல நான் உறுதியா இருந்து, வேலையை மட்டும் நேசிச்சேன்'' என்ற வசந்தி, தன் பணி அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.  

காக்கியை ரசித்தேன்...கல்யாணத்தை தவிர்த்தேன் !

''இந்த வேலையை மக்களுக்கு உதவி செய்றதுக்குக் கருவியா பயன்படுத்தணும்கிறதுதான் என் எண்ணம். அப்படியே வாழ்ந்தேன். என் சர்வீஸ்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்த எத்தனையோ பேருக்கு நீதிமன்றங்கள் மூலமா தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கேன். பல்வேறு சமுதாயக் கொடுமைகள்ல, ஒரு பெண்ணா துணிய முடியாததை, போலீஸா துணிந்து எதிர்த்து நின்னுருக்கேன்.

வேண்டிய நாளில் விடுமுறை கிடைக்காது. இதனால நட்பு, உறவுகளில் பல முக்கிய விசேஷங்களுக்கும் போக முடியாமல் இருந்திருக்கு. அப்படியே போன சில விசேஷங்களின் போட்டோக்கள்லயும் காக்கி யூனிஃபார்மில்தான் இருப்பேன். சிலரோட இறப்புக்கும் போக முடியாதபடி ஆனதுதான் ரொம்ப வருத்தமா இருக்கும். இந்த வேலையோட இயல்பு அப்படி. இந்த மாதிரியான சூழல்கள்ல எல்லாம், எனக்குத் திருமணம் ஆகாததை நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன். ஏன்னா, குடும்பம், குழந்தைனு இருந்திருந்தா... பணியில் சிக்கலான சூழல்களைச் சந்திக்கிறது ரொம்பவே சிரமமா இருந்திருக்கும் இல்லையா?'' என்று இயல்பாக கேட்கும் வசந்தி,

''என்னோட பணிக் காலங்களில் பத்து வருஷம் இன்ஸ்பெக்டரா பணியாற்றியிருக்கேன். பூக்கடை காவல்நிலையம் தொடங்கி கள்ளக்குறிச்சி, சிதம்பரம், கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புளியந்தோப்புனு பல காவல் நிலையங்கள்ல பணியாற்றியிருக்கேன். இந்த 39 வருஷ காவல்துறை வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும் நேசிச்சு கடந்தேன். அந்த நிறைவோட விடைபெறுகிறேன்!''

- தன் வீட்டின் சுவரில் மாட்டியிருக்கும் போட்டோவில் காக்கி உடுப்பில் மிடுக்குடன் மிளிர்கிறார் செல்வி. வசந்தி!