Published:Updated:

அழகென்றால் குழந்தைகளே !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அழகென்றால் குழந்தைகளே !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
 ##~##

''குழந்தைகளை விரும்பாதவங்க யாராவது இருப்பாங்களா..? வித்தியாசப் பிறவியா நான் இருந்தேன். அழுகை, பிடிவாதம், சேட்டைனு குழந்தைகளோட இயல்புகள் எனக்கு அலர்ஜி. ஆனா, இன்னிக்கு..?! குழந்தைகள்தான் என்னோட உலகம். அந்தக் குட்டி மனிதர்களை, கேமராவுக்குள் சிறைபிடிப்பதுதான், என் அடையாளம், ஆனந்தம்!''

- உதடுகள் குவித்து, கண்கள் கசக்கி, பொக்கைவாயில் சிரித்து என துறுதுறுக்கும் குழந்தைகளின் புகைப்படங்களை, தன் சிஸ்டத்தில் காட்டியபடி கண் சிமிட்டுகிறார், சுபாஷினி வணங்காமுடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தன் 'சட்டோரி’ ஸ்டூடியோ மூலம் கிட்ஸ் போட்டோகிராஃபி, சினிமா, விளம்பரம் என கலக்கிக்கொண்டிருக்கும் 28 வயது இளம்பெண்!

''அப்பா வணங்காமுடி, பிஸினஸ்மேன். அம்மா உஷா, ஹவுஸ் வொய்ஃப். தம்பி விஷாகன், யு.எஸ்-ல பிஸினஸ் செய்துட்டு இருக்கான். எனக்கு கேமராவை அறிமுகப்படுத்தினது என் அப்பாதான். அவர், அப்போ வெச்சிருந்த எஃப்.எம்-2 கேமரா மேல எனக்கு குறுகுறு காதல். கொஞ்சம் வளர்ந்ததும், அப்பா அதை யூஸ் பண்ண சொல்லிக் கொடுத்தார்.

அழகென்றால் குழந்தைகளே !

பிறகு, போட்டோகிராஃபி பத்தி எதுவும் அலட்டிக்காம படிப்பில் கவனம் செலுத்தினேன். ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்ல பி.ஏ., ஃபைன் ஆர்ட்ஸ், டபுள்யூ.சி.சி-ல எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷனு படிப்பை முடிச்சேன். திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆனப்போ, கணவர், குழந்தைனு வாழ்க்கை நகர்ந்து. போட்டோகிராஃபி ஆசை அணையாத ஒரு கனவா உள்ளுக்குள்ள இருந்தது'' என்றவரை அந்தக் கனவு தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் நனவாக்க முடிவெடுத்திருக்கிறார் சுபாஷினி.

''போட்டோகிராஃபியில நம்ம திறமை என்னனு சோதிச்சுப் பார்த்துடலாம்ங்கற முடிவோட சென்னை வந்தேன். நண்பர்கள், உறவினர்கள் உதவியோட வாய்ப்புகளை வாங்கி... விளம்பர படங்கள் எடுத்துனு கவனத்தைக் குவிச்சேன். மாஸ் கம்யூனிகேஷன் கிராஜுவேட் என்பதால், கேமரா தொழில்நுட்பங்கள் சிரமப்படுத்தாம சுலபமா கை வந்துச்சு. என்னோட முதல் விளம்பரம், கல்யாண் சாரீஸ். நல்ல வரவேற்பு கிடைச்சுது.

அழகென்றால் குழந்தைகளே !

தொடர்ந்து விளம்பர வாய்ப்புகள் வந்தாலும், மனசுக்குள்ள ஒரு நெருடல். 'எல்லோருக்கும் ஒரு பிரத்யேக ஸ்டைல் இருக்கு. போட்டோகிராஃபியில சுபாஷினி ஸ்டைல் என்ன?’னு ஒரு கேள்வி எனக்குள்ள வந்துச்சு. குழந்தைகள்?! யெஸ்... முதல் முறையா என் குழந்தை மயூரி மூலமா நான் தரிசிச்ச குழந்தை உலக அதிசயங்கள், என்னை 'கிட் போட்டோகிராஃபி’யை டிக் பண்ண வெச்சுது. அவளையே பல ஆங்கிள்களில் ஸ்டில்ஸ் எடுத்தேன். அத்தனையும் அழகு.

என் குழந்தை மட்டுமில்ல... குழந்தைகளே அழகு என்பது பல குழந்தைகளையும் என் கேமராவில் பதிவு பண்ணினப்போ புரிஞ்சது. நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலோட இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் அற்புத எக்ஸ்பிரஷன்களை படமாக்கியிருக்கேன். நாள் முழுக்க போட்டோ ஷூட் முடிஞ்சு, இரவு படுத்தால், கனவுகளில் எல்லாம் குழந்தைங்க சிரிப்பாங்க!''

அழகென்றால் குழந்தைகளே !

- கண்களில் பட்டாம்பூச்சி சுபாஷினிக்கு.

''ஆரம்பத்தில் குழந்தைகளை படம் எடுப்பது சிரமமாதான் இருந்தது. முதல்ல அவங்களுக்கு கேமரா மீதான அந்நியத்தை விரட்டி, எனக்கு நெருக்கமாக்கி, அப்புறம் 'க்ளிக்’ பண்ணினா... சிரிப்பு, அழுகை, அடம், கோபம், விளையாட்டு, குறும்புனு அவங்க என் கேமராவுக்கு புதையல்கள் அருளிட்டே இருப்பாங்க.

சமீபத்தில் அண்டர்வாட்டரில் 12 குழந்தைகளைக் கிட்டத்தட்ட 40 மணி நேரம் விதவிதமா படம் பிடிச்ச அனுபவம்... ஆனந்தம்! குழந்தைகளை அவங்க அம்மாவோட சேர்த்து போட்டோ எடுக்கும்போது, அது இன்னும் அழகாகும்!'' என்று ரசித்துப் பேசுபவருக்கு, கமர்ஷியல் போட்டோகிராஃபியிலும் அலாதி பிரியம்.

''இதுவரை புடவை விளம்பரங்கள் ஆறு எடுத்திருக்கேன். 25-க்கும் மேற்பட்ட ஜெனரல் போட்டோகிராஃபி, 100-க்கும் மேற்பட்ட குழந்தைப் படங்கள்னு கேமரா பயணம் போயிட்டு இருக்கு. இப்போ பாரதிராஜாவோட ஒரு படத் துக்கு அட்வர்டைஸ்மென்ட் ஸ்டில்ஸ் எடுத்துட்டு இருக்கேன். கமர்ஷியல் போட்டோகிராஃபியில எனக்குனு ஒரு இடத்தைப் பிடிக்கணும்ங்கறதுதான் இலக்கு.

அழகென்றால் குழந்தைகளே !

போட்டோகிராஃபியில இப்போ விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் இருக்காங்க. அந்த நிலை மாறி, அதிகப் பெண்கள் இந்தத் துறைக்கு வரணும். அதில் என்னோட ரேங்க் தரமா இருக்கணும். 'அதுக்கெல்லாம் லக் வேணும்!’னு சாக்கு போக்கு சொல்ற டைப் இல்ல நான். கற்றுக்கொள்ளும் ஆர்வமும், சரியான காலத்தேர்வும் இருந்தா போதும், நிச்சயம் ஜெயமாகும்!'' - படம் பிடித்ததுபோல் மனதில் பதிந்தது, சுபாஷினியின் உறுதியான புன்னகை!