Published:Updated:

சி.ஏ. தேர்வில் நேஷனல் ஃபர்ஸ்ட்...

அசகாய சாதனை படைத்த ஆட்டோ டிரைவர் மகள் ! - மும்பைவாலா, படம்: இளையகன்னி

சி.ஏ. தேர்வில் நேஷனல் ஃபர்ஸ்ட்...

அசகாய சாதனை படைத்த ஆட்டோ டிரைவர் மகள் ! - மும்பைவாலா, படம்: இளையகன்னி

Published:Updated:
 ##~##

''வறுமைக்கு இடையிலும் பெரும்நம்பிக்கையோட பிள்ளைங்கள படிக்க வைக்கிற பெற்றோர்களுக்கு, என்னோட இந்த வெற்றி ஊக்கமா இருக்கும்னு நம்புறேன். சாதனை உணர்வைவிட, இந்த சந்தோஷம்தான் மனசு முழுக்க இருக்கு!''

- அழகாகப் பேசுகிறார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கும் 24 வயது தமிழ்ப் பெண் பிரேமா. ஏழை ஆட்டோ டிரைவரின் மகளாக இருந்து பிரேமா பெற்றிருக்கும் இந்த வெற்றி, அதை இன்னும் சிறப்பாக்குகிறது!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பை, மாலட், எஸ்.பி. கான் சால் என்கிற பகுதியில் வசிக்கும் பிரேமாவை, 'அவள் விகடன்’ சார்பில் வாழ்த்துக்களோடு சந்தித்தோம். ''நாடு முழுக்க இருந்து பாராட்டுகள் குவிந்து கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து நீங்க கொண்டு வந்திருக்கிற வாழ்த்து, ரொம்ப நெருக்கமா உணர வைக்குது!'' என்று சிலிர்ப்புடன் பிரேமா சொல்வதற்குள்... அந்தச் சிறிய வீட்டின் நான்கு மூலைகளையும் நம்முடைய கண்கள் பார்த்துத் திரும்ப... ''வறுமைதான் எங்க வீட்டோட ஸ்பெஷல்!'' என்று பளிச்சென சிரிக்கிறார்!

''விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பக்கத்துல இருக்கற பெரியகொல்லியூர்தான் அப்பா ஜெயக்குமாரோட ஊர். அங்க விவசாய வேலை பார்த்திட்டுஇருந்தவர், வாழ்வு நொடிச்சதால பிழைப்புத் தேடி 25 வருஷத்துக்கு முன்ன மும்பைக்கு வந்திருக்கார். இங்க இருந்த என் தாய்மாமன்கள் குப்புசாமி, பெருமாள் ஆதரவு தர, சொந்தமா ஆட்டோ வாங்கி ஓட்டினார். அப்பா, அம்மா, அக்கா, நான், தம்பினு அஞ்சு பேர் கொண்ட குடும்பத்தை ஆட்டோ வருமானம்தான் காப்பாத்துச்சு. ஒத்தாசையா, அம்மாவும் தனியார் கம்பெனியில வேலைக்குப் போனாங்க. அக்காவுக்கு கல்யாணமாயிடுச்சு. எனக்கு கல்யாணப் பேச்சை எடுத்தப்போ, 'நான் சி.ஏ. படிக்கணும்’னு சொன்னேன். அத்தனை பொருளாதார சிரமங்களுக்கு இடையிலயும் என்னைப் படிக்க வெச்சாங்க'' என்றவர், தன் படிப்புத் தடம் பற்றிப் பகிர்ந்தார்.

சி.ஏ. தேர்வில் நேஷனல் ஃபர்ஸ்ட்...

''மலாட் நகராட்சி பள்ளியில ஏழாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்துலதான் படிச்சேன். பிறகு, மலாட் செகண்டரி பள்ளியில பத்தாம் வகுப்பு, என்.எல். காலேஜ்ல பிளஸ் டூ, நாகின்தாஸ் கண்ட்வாலா காலேஜ்ல பி.காம்னு முடிச்சேன். இதில் 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று, மும்பை பல்கலைக்கழகத்திலேயே ரெண்டாம் இடம் பிடிச்சேன். உடனே சி.ஏ. தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். கூடவே, மும்பை பல்கலைக்கழகத்துல எம்.காம். சேர்ந்தேன். சி.ஏ-வுல இந்திய அளவில் ரேங்க் வாங்கணும்னு வைராக்கியத்தோட படிச்சேன். ஆனா, முதல் இடம்... எனக்கே சர்ப்ரைஸ்!'' என கண்கள் சிமிட்டும் பிரேமா, 2012 நவம்பரில் நடந்த சி.ஏ. தேர்வில், 800-க்கு 607 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.

''இதில் இன்னொரு சந்தோஷம், என்னுடன் சேர்ந்த பரீட்சை எழுதிய தம்பி தன்ராஜ், முதல் முயற்சியிலேயே சி.ஏ. பாஸ் பண்ணியிருக்கான். அதனால இப்போ எங்க வீடு ரெட்டை சந்தோஷத்துல இருக்கு!'' என்றவர்,

''நானும் தம்பியும் ஒண்ணாவேதான் சி.ஏ. படிச்சோம். இது ரொம்பச் சின்ன வீடு. ஆனாலும் எங்க கவனம் சிதறாம படிக்கற சூழலை அம்மா உருவாக்கித் தந்தாங்க. அவங்க டி.வி. பார்த்தே பல வருஷம் ஆகுது. புத்தகம், பரீட்சை கட்டணம்னு சிரமப்பட்டாலும்... எங்ககிட்ட காட்டிக்காம, 'நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும்’னு மட்டும் சொல்லுவார் அப்பா. வாழ்க்கையில பிள்ளைகளுக்காக ஓடா உழைச்சு கஷ்டத்தை மட்டுமே பார்த்த எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும், இனி... ஓய்வையும் நிம்மதியையும் தரணும்''

- கண்கள் கலங்குகின்றன பிரேமாவுக்கு.

பிரேமாவின் சாதனையைப் பாராட்டி   மத்திய கப்பல் போக்குவரத்துத்து துறை சார்பாக        5 லட்ச ரூபாய், தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய், தமிழக அரசின் சார்பாக 10 லட்சம் ரூபாய் என ஆதரவு குவிகிறது!

''பெரியவங்களோட வாழ்த்துக்கும் பரிசுக்கும் நன்றி. ஏழ்மை நிலையில இருக்குற பெற்றோர்களும் பிள்ளைகளும், 'படிப்புதான் வாழ்க்கைக்கான ஏணி'ங்கறத உணர்ந்து, விடாமுயற்சி எடுக்கறதுக்கு என்னோட வெற்றி ஒரு தூண்டுகோலா இருந்தா... ரொம்ப மகிழ்ச்சி அடைவேன். நான் நல்ல நிலைமைக்கு வந்ததும், என்னை மாதிரியான ஏழை மாணவர்களோட படிப்புக்கு நிச்சயமா உதவுவேன். இதை சம்பிரதாய வார்த்தையா சொல்லல, மனசோட அடி ஆழத்துல இருந்து சொல்றேன்!''

- பிரேமாவின் பேச்சை அகம் நிரம்பி, விழிகள் தளும்ப கேட்டுக் கொண்டிருந்தனர் பெற்றோர்!