Published:Updated:

யாதுமாகி நின்றாள் !

கி.மணிவண்ணன்,ஓவியம்: ட்ராட்ஸ்கி மருது

யாதுமாகி நின்றாள் !

கி.மணிவண்ணன்,ஓவியம்: ட்ராட்ஸ்கி மருது

Published:Updated:

வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

 ##~##
சலங்கைச்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தத்துடன் வில்வண்டிகள் புறப்பட்டபோது... பொழுது விடியத் தொடங்கியிருந்தது. தடுப்புக் கம்பியில் சாய்ந்துகொண்டே கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு வந்தவனின் தலைமுடியை, காற்று கலைத்துவிட்டதில் அழகாயிருந்தான் அந்த ஆறு வயதுப் பையன்.

''பத்திரமா உக்காந்துக்கணும்யா..!''

''ம்...ம்...ம்...'' என்று அப்பாவைப் பார்த்துத் தலையாட்டியவனின் பூப்போட்ட புதுச்சட்டை வாசமாயிருந்தது. வண்டிகளையும், வானத்துப் பறவைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். வழியெங்கும் சூரியனின் மஞ்சள் வெளிச்சம். செவ்வரளியும், எருக்கம் பூக்களுமாயிருந்த இடத்தில் வண்டிகள் நின்றன. இறங்கி ஒற்றையடிப் பாதையில் மலையேறியபோது கொஞ்சம் கொஞ்ச மாக

யாதுமாகி நின்றாள் !

சத்தமும், வெளிச்சமும் குறைந்து... அவர்களை வரவேற்றது அழகர்கோயில் வனம். புரிந்தும் புரியாத வயதில் அந்த இருள் அவனுக்குப் புதிதாயிருந்தது. லேசாக தண்ணீரின் சலசலப்பு. அம்மாவின் கையைக் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

அடர்ந்த மரக்கொடிகள் சூழ... அகன்ற மரத்தடியில் குங்குமப் புடவைக் கட்டி சிலையாக ஒரு தேவி நின்றிருந்தாள். அவள் பாதத்தை நனைத்து புரண்டு விழுந்து கொண்டிருந்தது சுனைநீர். அவன் நிமிர்ந்து பார்த்தபோது பரவசமாயிருந்தது. ஆடிப்பெருக்கு விழாவின் அக்காட்சி, மாபெரும் கலைஞனை உருவாக்கத் தொடங்கியிருந்தது. அந்த வனத்தின் தமிழ் தேவதையின் பெயர் 'ராக்கு’. அந்தச் சிறுவன்... தமிழ்த் தொன்மங்களையும், தமிழர் வாழ்வியலையும் தனது நவீனப் படைப்புகளில் தனித்துவமாகக் கொண்டு இயங்கும் நாயகன்... ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

''என்னோட மதுரை வாழ்க்கையில தொன்மையான அழகர்கோயில் வனம் முக்கியத்துவமானது. மதரீதியான விஷயத்தையும், கடவுள்ங்கறதையும் தாண்டி... கலாபூர்வமா, ஆத்மார்த்தமான இடமா அந்த வனம் என் வாழ்வுல இருக்கு.

என்னைக் கவர்ந்த தமிழ்த் தன்மை கொண்ட கலைவடிவான ராக்கு... இன்னிக்கு வரைக்குமான என்னோட இன்ஸ்பிரேஷன். அதோட எக்ஸ்டென்ஷன்தான் நான் பார்க்கற எல்லா பெண்களும். நான் வரையுற பெண் உருவத்துல சிலசமயம் முகமே இருக்காது. ஏன்னா, பெண்ணுங்கறத பொதுமைப்படுத்தத்தான்... அதில் பேதமில்லை!''

- உணர்வுடன் தொடங்கிய மருது, சுவரிலிருந்த ஓவியத்தைக் காண்பித்தார்.

''உட்கார்ந்து சாப்பிடறதுக்கு சொத்துக்கள் இருந்தும், விவசாயத்தைப் பாக்குற எளிய மக்களோட தானும் உழைச்சு, வெயில்ல தோல் உரிஞ்ச முதுகுக்கு தண்ணி ஊத்திக்கிட்டு உக்காந்துருக்கற ஆளுதான் எங்க அப்பத்தா. கணவனை இழந்துட்டு ஒத்தை ஆளா குடும்பத்தைத் தூக்கி நிறுத்துன பல பெண்களை பாத்துருக்கேன். கிராமத்துல இருந்து வந்து, நெல் அவிச்சுப் போட்டு வாழ்க்கையை நடத்தி, வயசானதால கிராமத்துக்கே திரும்பிப் போய், செத்துப்போன பாட்டியையும் பாத்துருக்கேன்.''

நெல் அவிக்கும் வாசம்... நினைவிலாடியது!

''ஒரு பாட்டிகிட்ட பனங்கிழங்கு வாங்கினேன். வயசானதால பாக்கி சில்லறையை எடுக்கறதுக்கு தாமதமாச்சு. 'பரவாயில்ல இருக்கட்டும்’னு சொன்னதுக்கு... 'இங்க வா. இந்த பாவத்தை நான் எங்க போயி கழுவுறது!’னு படக்னு சொல்லுச்சு. அது நின்ன இடம் எது தெரியுமா.? இந்தியா முழுசுல இருந்தும் மக்கள் வந்து பாவத்தை கரைக்கிற ராமேஸ்வரம். பாட்டி அப்படி சொன்னதை மறக்கவே முடியாது.''

ஆச்சர்யம் கலந்து சிரிக்கிறார் மருது.

''திருநெல்வேலி பக்கத்துல ஷூட்டிங் லொகேஷனுக்கான பொட்டல் காடு... கடுமையான வெயில். மனித நடமாட்டமே இல்லை. ரோட்டோர மரத்தடியில பத்து வயசுப் பொண்ணு உட்கார்ந்திருந்துச்சு. 'இங்க என்னம்மா செய்யுறே.?’னு கேட்டேன். 'படிக்கிறேன்’னு சொல்லுச்சு. நான் கலங்கிட்டேன். 'எங்கம்மா மாடு மேய்க்கறாங்க. அவங்களுக்குத் துணையா வந்தேன்'னுச்சு.

யாதுமாகி நின்றாள் !

புத்தகம் காத்துல பறக்காம கல்லெல்லாம் வெச்சுக்கிட்டு சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்ததை படம் எடுத்தப்போ பயந்துருச்சு. 'நீ ரொம்ப சிறப்பான காரியம் செய்றேனுதாம்மா போட்டோ எடுக்குறேன்’னேன். அதுக்கு ரொம்ப சந்தோஷம். 'அம்மா, இனி மாடு மேய்க்கக் கூடாது. அவங்கள மேல கொண்டு வந்துடணும்’னு சொன்னப்போ, அழகா சிரிச்சுது!''

சந்தோஷம், மருதுவின் புன்னகையிலும்!

''21 வயசுல ஓவியக் கல்லூரி மாணவனா சென்னைக்கு வந்தப்போ... மர்லின் மன்றோ நடிச்ச 'ப்ரின்ஸ் அண்ட் த ஷோ கேர்ள்' (Prince and the show girl) படம் பாத்தேன். அதுக்கு முன்ன மர்லினை போட்டோவுலதான் பாத்துருக்கேன். லாரன்ஸ் ஆலிவர் நடிப்பு, இயக்கத்துல வந்த படத்தின் ஒரு காட்சியில... மர்லினோட முகம் மட்டும் டைட் க்ளோஸ்- அப்ல வரும். அந்த இமேஜோட கலர்... இளம் பொன்னிறமான தலைமுடி... ரெட்டிஷ் லிப்ஸ்டிக்கோட... தலை சாய்ச்சு இமை மூடி... நிமிர்ந்துகொண்டே கண் திறப்பா பாருங்க, அடடா... அந்த செகண்ட்லதான் அவளை உணர்ந்தேன். அந்த ஷாட் என்னோட உள்ளுணர்வைத் தொட்டுச்சு. அவளோட உண்மை மனம் அப்படியே மிளிர்ந்துச்சு. உலகம் அவளை கிளாமர் தேவதையா ஏன் கொண்டாடுதுனா... குழந்தையைப் போல ஒரு ஆர்ட்டிஸ்டிக் இன்னோசன்ஸ்தான்!

உலகம் முழுமையும் கலைஞர்கள், கலைகளை வெளிப்படுத்துறதுக்கு ஓர் ஊடகமாக பெண் உடலை பயன்படுத்தியிருக்காங்க. மனித வாழ்வினுடைய முக்கிய கட்டத்தை உய்விக்கிறதுக்கும், உயர்வு பெறுவதற்குமான வழியைச் சொல்லுகிற கலைப் படைப்புகளெல்லாம் பெண்ணைத்தான் முன்னிறுத்தியிருக்கு. அதெல்லாம் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்.''

சிறிது நேரம் மௌனித்துத் தொடர்ந்தார்.

''ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்குப் போனா, 'உனக்கு என்னய்யா செஞ்சு தர..?’னு அம்மா கேப்பாங்க. 'மெட்ராஸ்ல பழைய சோறுதான் கெடைக்கலம்மா’னு சொன்னா அழுவாங்க. அது தாய்மை. நான் சிறப்பா செயல்படுறதுக்கு என் மனைவியும் முக்கியமான காரணம். இப்படியானவங்களாலதான் என்னோட ரசனை மேம்பட்டுச்சு.

யாதுமாகி நின்றாள் !

நெறைய ஓவியங்கள்ல காற்றே இருக்காது... என்னோட படங்கள்ல தலைமுடி, துணியெல்லாம் பறக்கும். குதிரையோட வேகம், வாள் வீசுறது... இப்படி பாடி லாங்குவேஜை சரியா யூஸ் பண்ணியிருப்பேன். இதை நான் மட்டும்தான் செய்றேன்னு தைரியமாவே சொல்வேன். ஓவியங்கள்ல மூவ்மென்ட்... அதுதான் என்னோட தனித்தன்மை. பெண்களின் மகோன்னதமான பெருமை... அவர்களின் உணர்வுகள்... காமம் எல்லாமே என் ஓவியங்கள்ல இருக்கு. பெண்ணை அறிவது என்பது உன்னை அறிவது. உன்னையும் உன்னைச் சார்ந்த இந்த உலகையும் அறிவது.''

''ராக்கு வழியா என்ன கத்துக்கிட்டீங்க..?''

''இந்த இருளில் பூச்சியிலிருந்து மிருகங்கள் வரை... மகிழ்வும் ஆபத்தும் நிறைந்திருக்கிறது. என்னைப் புரிந்துகொள் என்று சவால் விட்டுக்கொண்டே இருக்கும் வனம். எல்லாவற்றையும் கற்று உணரு... வென்று உணரு... அனுபவி என்று தமிழ்த்தொன்ம உருவமான ராக்கு, 'சிம்பலைஸ்' (Symbolize)பண்ணுச்சு. வனத் துக்கு நடுவுல, பெரும் வயதுகொண்ட பிளந்திருக்கும் மரங்களுக்கிடையில ஒரு மனிதன் செஞ்ச கலை வடிவம். அதன் காலடியிலிருந்து பல நூற்றாண்டு வற்றாத சுனைநீர்தான் நமக்கான கொடை. இதைத்தான் உணர்ந்தேன்!''

வெள்ளைக் காகிதத்தில் குழைந்து வழியும் வண்ணமாயிருந்தேன் நான். மருதுவிடம் வேறெதுவுமே கேட்கத் தோன்றவில்லை!

- வருவார்கள்...