Published:Updated:

501 குடும்பமா..2,500 குடும்பமா ?

மு.சா.கௌதமன் படங்கள்: செ.சிவபாலன், தே.தீட்ஷித்

501 குடும்பமா..2,500 குடும்பமா ?

மு.சா.கௌதமன் படங்கள்: செ.சிவபாலன், தே.தீட்ஷித்

Published:Updated:
 ##~##

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு... இந்த விவகாரம் நாளுக்கு நாள் இந்திய அளவில் பற்றிக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் இந்த விஷயம் பெரிய அளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 'அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இங்கே நுழைந்தால், அதன் பாதிப்புகள் வணிகர்களுக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு குடும்பத்துக்கும்தான்' என்கிற விஷயத்தை, பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களையும் தங்களோடு கைகோக்கச் செய்வதில் தீவிரமாக இருக்கின்றனர் வணிகர்களின் பிரதிநிதிகள்.

அவர்களில் ஒருவராக இங்கே பேசுகிறார் 'கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு' மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆகியவற்றின் செயலாளர் சத்யநாராயணன். 'வால்மார்ட்’ நிறுவனம் கொண்டு வரப்போகும் ஆபத்துக்களை பேசும்போது, அவருடைய வார்த்தைகளில் கொதிப்பு கூடுகிறது.

''இன்றைய தேதியில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சில்லறை வர்த்தகர்கள்... ரிலையன்ஸ், மெகாமார்ட், ஸ்பென்ஸர் போன்றவர்கள். அவர்களை எதிர்கொள்வதே, எங்களைப் போன்ற சில்லறை வணிகர்களுக்கு சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில், அவர்களைவிட 100 மடங்கு பணபலமும், அரசியல் பலமும் கூடுதலாகக் கொண்டிருக்கும் வால்மார்ட் வரப்போகிறது என்பது, எங்களின் வாழ்வாதார வாசல்களை அடைக்கும் வேலைதான்! இந்த நிறுவனத்தையெல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு சில்லறை வர்த்தகர்களுக்கு பண பலமோ, அரசியல் ஆதரவோ கிடையாது.

501 குடும்பமா..2,500 குடும்பமா ?

ஒரு சில்லறை வர்த்தக வியாபாரி, 100 சதுர அடியில், தான் ஒரு முதலாளியாகவும், தனக்குக்கீழ் உறவினர்கள் அல்லது வெளியாட்கள் 4 பேரை தொழிலாளியாகவும் வைத்துக் கொள்வார். எனவே, 100 சதுர அடியில் அங்கு ஐந்து குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால், வால்மார்ட்டோ 50,000 சதுர அடியில், ஒரேயரு முதலாளியாக, 500 ஊழியர்களை சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்ளும். நன்றாக யோசியுங்கள்... 2,500 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை, வெறும் 501 குடும்பங்களின் வாழ்வாதாரமாக வால்மார்ட் மாற்றிவிடும். நம் நாட்டில் 22 கோடிக்கும் மேலானோர் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது, நாட்டின் மக்கள் தொகையில் 5-ல் 1 பங்கு.

இந்தியாவுக்குள் நுழைவதற்கு 125 கோடி ரூபாயை வால்மார்ட் செலவழித்திருக்கிறது. 'பெரிய மனிதர்கள்’ என்கிற போர்வையில் இங்கே திரிபவர்கள், நம்மையெல்லாம் அடிமைகளாகவே அவர்களிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, 'வால்மார்ட்’டில் இன்றைக்கு பணிபுரிய தயாராக இருப்பவர்களுக்கும், 'வால்மார்ட்’டுடன் வர்த்தகம் செய்வோருக்கும் எந்த ஒரு பாதுகாப்பையும், உரிமையையும் பெறமுடியாது. அதற்கான எந்த சட்டங்களும் இயற்றப்படவில்லை'' என்று சில உண்மைகளை உடைத்த சத்யநாராயணன்,

''சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 'வால்மார்ட்’டின் வில்லத்தனத்தை புரிந்து கொண்டு மக்கள் விழிப்படைய ஆரம்பித்துள்ளனர்'' என்று சொன்னார்.

501 குடும்பமா..2,500 குடும்பமா ?

''இந்திய மக்களின் நிலை, கிழக்கிந்திய கம்பெனியிடம் அடிமைப்பட்ட நம் முன்னோருடைய நிலையாகத்தான் ஆகப்போகிறது!'' என்கிற எச்சரிக்கையுடன் ஆரம்பித்த தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் 'சோழா' சி.மகேந்திரன்,

''நம்நாட்டின் மொத்த சில்லறை வணிகத்தில் வரும் வருவாய் 25 லட்சம் கோடி. இது வரும் 2020-ல் 60 லட்சம் கோடி வரை உயரும் என்று கணித்துள்ளனர். காரணம்... இது, 121 கோடி மக்களைக் கொண்ட நாடு. அதனால், வியாபாரத்துக்கு இங்கே உத்தரவாதம் உண்டு. இதுதான் வால்மார்ட் இங்கு வரத்துடிப்பதற்கான முக்கிய காரணம்.

501 குடும்பமா..2,500 குடும்பமா ?

வால்மார்ட் தங்கள் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுத்துவது... விளம்பரம், பிரமாண்டம், விலை குறைப்பு ஆகியவைதான். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு... பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகம்தான். அதன் பரப்பளவு 1,10,000 சதுர அடி. இங்கு 17,000 வகையான பொருட்கள் கிடைக்கும். இந்த பிரமாண்டத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் அலைமோதுகிறது. சென்று பார்ப்பவர்கள் எதையாவது வாங்காமல் திரும்புவதில்லை. அத்தனை பொருட்களும் ஒரு கூரையின் கீழ் வைத்துள்ளதால் அதிக விற்பனையும், அதனால் லாபமும் கியாரன்டி.

வால்மார்ட்டும் இதே பாணியில்தான் செயல்படும். குவிகின்ற லாபத்தை வைத்து சில மாதங்களுக்கு விலையைக் குறைத்து, மக்களை நம்ப வைத்து, சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும் வால்மார்ட். ஆனால், போகப்போக எல்லாமே மாறிவிடும். 50% மூலப்பொருட்களை, கடையை நடத்தும் பகுதியில் இருந்தே வாங்குவதாக வால்மார்ட் ஆரம்பத்தில் சொல்லும். சில மாதங்களில் அந்த வார்த்தைகள் காணாமல் போய்விடும். பிறகு, உலகில் எங்கு மிக மலிவாகக் கிடைக்கிறதோ அங்கிருந்துதான் கொள்முதல் செய்வார்கள். இதனால், ஆரம்பத்தில் இவர்களை நம்பி வந்த மூலப்பொருள் உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) கதையும் கேள்விக்குறியாகிவிடும். விலையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி, நுகர்வோரையும் சிக்கலில் மாட்டிவிடுவார்கள்!

மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே தற்போது தனியார் மயத்தில் லாபம் சம்பாதிக்க விரும்புகின்றன. மத்திய அரசையே அதிகாரம் செய்யும் இடத்தில் இருக்கின்றன, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள். இவர்களையே நம்மால் கட்டுப்படுத்த முடியாத சூழலில், உலகின் பெரியண்ணனான அமெரிக்காவிலிருந்து வரும் 'உலக முதலாளி' 'வால்மார்ட்’டை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?'' என்று கேள்வியை எழுப்பிய மகேந்திரன்,

''இதற்கும் வழி இருக்கிறது. 'அந்நிய நேரடி முதலீடு மூலமாக இங்கே வரும் பொருட்களை வாங்கமாட்டோம்... வால்மார்ட்டுக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்' என்று மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால், 'வால்மார்ட் என்ன பெரிய புடலங்காய்’ என்று விரட்டிக் காட்டலாம்!'' என்கிறார் கட்டை விரல் உயர்த்தி!

என்ன செய்யப் போகிறோம்?!