ரெகுலர்
Published:Updated:

புகுந்த வீடு - புள்ளியாக்கினாள் பெரும்புள்ளியாக்கினாள் !

கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

குடும்பத் தலைவிகளின் 'ஃப்ளாஷ்பேக்’ தொடர்

##~##

''இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான பல தொழிலதிபர்கள், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களின் முக்கிய நீதியரசர்கள்னு பல்வேறு பிரமுகர்களும் எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. அவங்க எல்லோருமே, என்னை சொல்றாங்களோ இல்லையோ, இவள புகழாமப் போனதில்லை. குறிப்பா, நீதியரசர் சொக்கலிங்கம் சொன்னது, என் மனசுல எப்பவும் இருக்கற வார்த்தைகள். 'நீ ரியல் எஸ்டேட் தொழில் செய்ற. ஆனா... உன்னோட ரியல் அசெட், உன் மனைவி காந்திமதிதான்’னு சொன்னாரு.

எங்க நகரத்தார் சமூகத்துல திருமணமானாதான் அவன் ஒரு 'புள்ளி’யா (குடும்பஸ்தன்) மதிக்கப்படுவான். அப்படி என்னை ஒரு 'புள்ளி’யாக்கினதோட, எல்லோரும் மதிக்கத்தக்க பெரும்புள்ளியாவும் ஆக்கின இவதான் என் மதிப்பில்லாத சொத்து!'' என்று தன் மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறார், காரைக்குடி, கண்டனூரைச் சேர்ந்த 71 வயது இளைஞர் அருணாசலம்.

சொந்த ஊர் கண்டனூர் என்றாலும், தஞ்சாவூர் வந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இங்கே பல தொழில்களைச் செய்துவரும் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் 65 வயதான காந்திமதிதான் எல்லாமுமே! காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கணவர் அருணாசலத்தின் உறவினர் குடும்பங்கள், காந்திமதியின் உறவுகள் என்று இரண்டு பக்க குடும்பத்திலும் யார் வீட்டுக்கு பெண் பார்க்க வந்தாலும், அப்பெண்ணுக்கு கட்டப்படுவது காந்திமதியின் சேலைதான். குடும்ப விழாக்கள் எதுவானாலும், அடுப்பை தொடங்கி வைப்பது காந்திமதிதான். அந்தளவுக்கு மதிப்புமிக்க ஓர் இல்லத்தரசியாக உயர்வு பெற்றிருக்கிறார் காந்திமதி!

புகுந்த வீடு - புள்ளியாக்கினாள் பெரும்புள்ளியாக்கினாள் !

''எனக்கு லண்டன், பர்மா, சிங்கப்பூர்னு எல்லா நாடுகளிலும் மாப்பிள்ளை தேடினார் எங்கப்பா. கடைசியா... உள்நாட்டு மாப்பிள்ளைதான் பொருத்தமாச்சு. ஊட்டி (கூடலூர்) எஸ்டேட்ல வேலை பார்த்துட்டு இருந்த இவருக்குத்தான் மனைவியானேன். 'சூட்டிகையான பையன், எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல'னு இவரைத் தேர்ந்தெடுத்த எங்கப்பா, லண்டன்லயெல்லாம் மாப்பிள்ளை பார்த்த கதையை, சொல்லியிருக்கார். அதுக்கு இவரு, 'ஊட்டி ஈஸ் த லிட்டில் லண்டன்’னு அடிச்சுவிட, மறுவார்த்தை பேசாம என்னைக் கொடுத்துட்டார். இப்படி... எங்க பாட்டி, அப்பானு எல்லாரையும் அப்பவே மயக்கினவர்கிட்ட இன்னமும் எங்க வீட்டு ஆளுங்க மரியாதையோட மயங்கித்தான் கிடக்கறாங்க...''

- புகுந்த வீட்டில் நுழைந்த கதையோடு, கணவர் அருணாசலத்தின் பெருமையையும் சேர்த்துச் சொன்னார் காந்திமதி.

''அஞ்சு கேணி, அஞ்சு அடுப்படி, ஆறு பட்டாலைனு இருக்கற மிகப்பெரிய வீடு அது. என் கணவர் குடும்பம், அவரோட பெரியப்பா, சித்தப்பா குடும்பங்கள்னு பல குடும்பங்களும் தலைமுறை தலைமுறையா கூட்டுக் குடும்பமா இருந்தாங்க. ஆனா, 'புதுப்பொண்ணு, மாப்பிள்ளை பிரிஞ்சு கஷ்டப்பட வேண்டாம்... நீ உன் வீட்டுக்காரனோட போய் இரு’னு எல்லாரும் வழியனுப்பி வைக்க, ஊட்டி எஸ்டேட்லயே வீடு பார்த்து கூட்டிட்டுப் போனார். அங்கேதான் பெரியவன் ஆனந்த் பிறந்தான். 'எவ்வளவு நாள்தான் 80 ரூபாய் சம்பளத்துக்கு கூலிக்காரனா இருக்கறது?'னு நான் கேட்கவும், மதுரைக்கு வந்து பத்து பால் மாடுகளை வாங்கி பால் பண்ணை வெச்சோம். இவருக்கு அந்த வேலை சரிப்பட்டு வரல. பெரிசா லாபமும் கெடைக்கல. தஞ்சாவூருக்குக் கிளம்பிட்டோம்.

தஞ்சாவூர்ல எங்களுக்குப் பூர்வீகமான எட்டு வேலி நிலத்தை குத்தகைக்கு விட்டு, 200 மூட்டை நெல்லை வாங்கிக்கிட்டிருந்தாங்க. 'நாமளே விவசாயம் பார்த்தா போதும்’கிறதுதான் எங்க முடிவு. வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். ரெண்டாவது பையனும் பொறந்தான். விவசாயத்தை மட்டுமே நம்பாம, நிரந்தரமான வருமானத்துக்கு வழிபார்க்கணும்னு அலைஞ்சார். நானும் வீட்டுக்குப் பின்னால பூச்செடி, காய்கறினு போட்டேன். இது ரெண்டும்தான் எங்க குடும்பத்தை கவலையில்லாம ஓட்ட வெச்சது.

நூறு டிசம்பர் பூ இருபது காசுனு வித்தேன். இன்னும் லாபம் கிடைக்குமேனு எல்லா பூவையும் நாள் முழுக்க உட்கார்ந்து கட்டி வித்தேன். கையில காசு நின்னுச்சு. ஒரு மாசம் பூ வித்தா, உடனே ஒரு பவுன் வாங்கிடுவேன். அப்ப ஒரு பவுன் 350 ரூபா. காய்கறி விக்குற காசு, குடும்பச் செலவுக்கு போதுமானதாஇருந்துச்சு'' என்று ஆரம்ப கட்டத்தை சர்வ சாதாரணமாகக் கடந்த காந்திமதி, தொடர்ந்தார்.

''இவரோட நண்பர் ஒருத்தர், 'மெடிக்கல் ஷாப் திறக்கலாம்'னு சொன்னார். கையில இருந்த சேமிப்பையெல்லாம் போட்டு உடனே ஆரம்பமாச்சு 'எக்ஸ்போ’ மெடிக்கல். அடுத்ததா 'எக்ஸ்போ’ ஒயின்ஸ். இதுல நாமளும் லாபம் பார்க்கலாம்னு கிழங்கு சிப்ஸ் பாக்கெட் போட்டு கொடுத்தனுப்பினேன். அந்த ருசி, ஒயின்ஷாப்ல மட்டுமில்லாம... மார்க்கெட் பூராவும் பரவி எல்லாரும் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

புகுந்த வீடு - புள்ளியாக்கினாள் பெரும்புள்ளியாக்கினாள் !

இப்படியெல்லாம் கிடைச்ச லாபத்தை வெச்சு மாசம் ஒரு கிலோ வெள்ளி வாங்கினேன். அப்ப கிலோ 700 ரூபாதான். பிறகு, சொந்தமா வீடு வாங்கிட்டோம். அதுக்கு என் பேரைத்தான் வைக்கணும்னு சொன்னாரு. 'உங்கம்மா பேர்தான் வைக்கணும்’னு நான் தெளிவா சொல்ல... 'உமையாள் இல்லம்’னு பேரு வெச்சோம்.

ஒரே வருஷத்துல, 'எனக்கு தொழில்ல கொஞ்சம் நெருக்கடியா இருக்கு. கொஞ்சம் பணம் தேவைப்படுது கழுத்திருவையை (தாலிக்கொடி) கழட்டிக் கொடு’னு கேட்டார். எங்கள்ல யாருமே அதை அவ்வளவு சீக்கிரம் கழட்ட மாட்டாங்க. 'அவசரம் ஆபத்துக்கு இல்லாதது எதுக்கு?'னு கழட்டி கொடுத்துட்டேன். அன்னிக்கு சாயங்காலமே என் பேர்ல ஒரு வீட்டை வாங்கிட்டு வந்து கொடுத்தார். என் பேர்லயும் ஒரு வீடு இருக்கணும்னு கடுமையா உழைச்சு காசு சேர்த்திருக்கார். பணம் கொஞ்சம் கொறையவும்தான் கழுத்திருவையை அடகு வெச்சுருக்கார். இன்னிக்கு அந்த வீடு 'காந்திமதி கல்யாண மண்டபமா’ இருக்கு. கழுத்திருவையும் ஆறு மாசத்துலயே திரும்ப வந்துருச்சு!'' என்று சொல்லி கணவரை நன்றியுடன் பார்த்த காந்திமதி,

''அதுக்கப்புறம் இவருக்கு வேகமான வளர்ச்சி. நிறைய மெடிக்கல்ஸ், நிறைய கடைகள்னு    தஞ்சாவூர்ல எல்லோருக்கும் அறிமுகமான நபராகிட்டார். நகரத்தார் சபை, அது இதுனு நிறைய கௌவர பொறுப்புகள் வர ஆரம்பிச்சுது. பல பெரிய மனிதர்களும் பழக்கமானாங்க.

எனக்குத் தெரிஞ்சு... மூணு தலைமுறையா எங்க குடும்பத்துல மாமியார் - மருமகள் சண்டையோ, பங்காளிகள் சண்டையோ வந்ததே இல்லை. கல்யாணம் காட்சினா எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சந்தோஷமா இருப்போம். என் ரெண்டு பிள்ளைங்களும் இதேபோலத்தான் இருக்காங்க. பேரப்பிள்ளைங்களும் எடுத்தாச்சு.

வாடகை வீட்டுக்கு குடி வந்தவ... இன்னிக்கு எட்டு வீட்டுக்கு சொந்தக்காரி. எஸ்டேட்ல வேலை செஞ்சவரை கட்டிக்கிட்ட நான், ஒரு எஸ்டேட்டுக்கு சொந்தக்காரி. 'ஜெயிச்சுக் காட்டணும்’னு இந்த வாழ்க்கை மேல எனக்கிருந்த வைராக்கியமும், அதுக்கு கை கொடுத்த கணவர் கிடைச்சதும்தான் எல்லாத்தையும் சாத்தியப்படுத்தியிருக்கு!'' என்று சொல்லும் மாமியாரை, பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இரண்டு மருமகள்களும்!