ரெகுலர்
Published:Updated:

சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு !

ஜெயமோகன்,ஓவியம்: ஹரன், படம்: ரா.ராம்குமார்

##~##

'சூரியநெல்லி பாலியல் பலாத்கார' வழக்கு... புதையுண்ட டிராகுலா, பின்பு உயிர்த்தெழுவது போல எழுந்து வந்த சமயத்தில்... நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். காலை நடை சென்றபோது 'மலையாள மனோரமா'வில் செய்தி பார்த்தேன். டீக்கடையில் இருந்த தொழிலாளி... ''பி.ஜெ.குரியனுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது'' என்றார்.

இன்னொருவர்... ''என்ன கெட்ட காலம்? ஜனங்கள் ஓட்டுபோட்டு அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பிரச்னைக்குப் பிறகும் அவரால் ஜெயிக்க முடிகிறது என்றால், இது என்ன பெரிய விஷயம்? இது ஒரு வாரத்திலேயே மறைந்துபோகும்'' என்றார்.

''டெல்லி சம்பவத்துக்குப் பிறகு, இதெல்லாம் முன்னைப் போல சாதாரணமாக போய்விடாது'' என்றார் முதல் தொழிலாளி!

''டெல்லி சம்பவத்துக்குப் பிறகு நம்முடைய நீதியுணர்ச்சி தலைகீழாக மாறிவிட்டதா என்ன?'’ என்றார் இரண்டாம் தொழிலாளி.

'எட்டு வருடம் கேரள அரசாங்கத்தின் அப்பீல் உச்ச நீதிமன்றத்தில் எப்படி தூங்கிக் கிடந்தது?’

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சூரியநெல்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி, 1996 ஜனவரி 16-ம் தேதி பேருந்து நடத்துனரால் மிரட்டப்பட்டு, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு, உஷாதேவி என்பவரிடம் அந்தப் பெண் விற்கப்பட்டார். உஷாதேவியும் ஒரு வழக்கறிஞரும் சேர்ந்து, அப்பெண்ணை கிட்டத்தட்ட நாற்பது நாட்கள், முப்பது பேருக்கு பாலுறவுக்கு விட்டனர். பின்னர் கடுமையாக மிரட்டப்பட்டு அந்தப் பெண், ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

தனக்கு நிகழ்ந்த கொடுமையை, ஊரிலிருந்த சமூகசேவகர்களின் உதவியோடு வெளியே கொண்டு வந்தார் அப்பெண். போலீஸிடமும் ஊடகங்களிடமும் பலர், பல இடங்களிலாக தன்னை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகச் சொன்னார். அதில் ஒருவர்... பி.ஜெ.குரியன். கேரள காங்கிரஸைச் சேர்ந்த அரசியல்வாதி. இப்போது, இந்திய ராஜ்யசபாவின் துணைத்தலைவர் எனும் உயரிய பதவியில் இருக்கிறார்!

இந்த வழக்கு பல படிகளாக விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், மீண்டும் மீண்டும் பி.ஜெ.குரியனின் பெயரைச் சுட்டிக்காட்டிய போதும், அவர் மீது போலீஸ் வழக்குப் பதியவே இல்லை. பெரும்போராட்டத்துக்குப் பின் வழக்கு பதியப்பட்டாலும், மேலோட்டமான விசாரணைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் 36 பேர் தண்டிக்கப் பட்டார்கள். ஆனால், அப்பீலை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அவர்களில் ஒரேயருவரை மட்டுமே தண்டித்தது.

சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு !

விஷயம் உச்ச நீதிமன்றத்துக்கு  போக, 'உயர் நீதிமன்ற விசாரணை முறையாக நடத்தப்படவில்லை' என்று சொல்லி, மீண்டும் வழக்கை விசாரிக்கத் தீர்ப்பளித்தனர். இம்முறை இன்னொரு குற்றவாளிக்கு மட்டும் தண்டனை அளித்து, வழக்கை முடித்தது உயர் நீதிமன்றம். இதன்மேல்முறையீடுதான், உச்ச நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில்!

இப்போது, டெல்லி பாலியல் பலாத்கார பிரச்னைக்குப்பின், சூரியநெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அன்னை, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அளிக்க, அதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம்... மீண்டும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 'பி.ஜெ.குரியன் ராஜினாமா செய்யவேண்டும்' என்று இடதுசாரிகள் தெருவில் போராடி வருகிறார்கள்.

டெல்லி பாலியல் வன்முறைக்குப் பின்னர், பெண்கள் மீதான அத்துமீறல் பற்றி பல தளங்களில் விவாதங்கள் நிகழ்கின்றன. சட்டென்று நம் தேசிய மனசாட்சி சீண்டப்பட்டது. அதற்கு அந்நிகழ்ச்சியை உக்கிரமாக மக்கள் முன்வைத்த காட்சி ஊடகங்கள் முக்கிய காரணம்.

''இது, வெறுமனே ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பரபரப்பு'' என்கிறார்கள் சிலர். ஆனால், உலகமெங்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இப்படி சில அன்றாட நிகழ்வுகளை முன் வைத்துத்தான் ஒட்டுமொத்தமான ஒரு சமூக எழுச்சி இதுவரை நிகழ்ந்துள்ளது.

இந்த எழுச்சியின் விளைவாக நம் காதில் விழுபவை... பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்கள். ''அப்டியே நிக்க வெச்சு சுட்டுத் தள்ளணும் சார்'' என்று என் பக்கத்துவீட்டு குமரேசன் சொன்னார்.

''விசாரணை வேண்டாம்கிறீங்களா?'' என்றேன்.

''என்னத்த விசாரணை? நாசமா போறவனுகளுக்கு என்ன விசாரணைங்கிறேன்?'' என்று கொதித்தார்.

இதில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களுக்கு ஆதாரங்களைக் கண்டடைகிறார்கள். ''எல்லாம் இந்த நாகரிகம் போற போக்கு சார். குடி, கூத்து, கும்மாளம்... இன்னிக்குள்ள பசங்க போற போக்கே சரியில்லை'' என்றார் ஓய்வுபெற்ற நல்லாசிரியர் ஹென்றி சார்.

''ஏன், உங்க சின்ன வயசிலே பொம்புள்ளைப் புள்ளைங்க சுதந்திரமா நடமாடுவாங்களோ?'' என்றேன் அறியாதவனாக!

சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு !

''எங்க... அப்பல்லாம், வீட்டுக்கு வெளிய வயசுப் பொண்ணுங்கள பாக்க முடியாதே? சவரியார் கோயில் விழாவுக்கே வண்டிகட்டி சொந்தம், சாதி மக்களோடத்தானே வருவாளுக...''

''பின்ன? இப்பமும் அதேமாதிரி பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போகாம இருக்கணும்னு சொல்றீங்களா?'' அவர் யோசிப்பதற்குள் நான் சொல்ல ஆரம்பித்தேன். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை சொந்தக்காரர்கள் புடைசூழக்கூட ஒரு பெண் வில்லுக்குறி சாலையில் சென்றுவிட முடியாது. இந்திய வரலாற்றில் மிக அதிகமாக பெண்கள் கற்பழிக்கப்பட்ட காலம்.

''நம்ம நாட்டுப்புறப் பெண் தெய்வங்களிலே முக்காவாசி... பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட குமரிங்கதான். ஏன்... சுசீந்திரம் கோயிலுக்குள்ளேயே நடந்திருக்கு. இப்ப அறம்வளத்தநாயகினு அந்தப் பொண்ண கும்பிடறோம்.''

ஹென்றி சார், ''உள்ளதுதான்...'' என்று இழுத்தார்.

''எல்லாம் இவளுக டிரெஸ் பண்ணிக்கிடுததைக் கண்டுதான் சார்'' என்றார் ராமச்சந்திரன்.

''அப்ப திருட்டு எல்லாம்... வீட்டையும் டிரெஸ்ஸையும் கண்டுதான் நடக்குதுனு சொல்லலாமா? அப்ப இனி, குடிசைதான் கட்டிக்கணும். கந்தலைத்தான் உடுக்கணும், அப்ப திருடனுக்கு மூடு வராது... இல்ல?''

''அப்டி இல்ல..''

காந்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும்போது 'சுதந்திரம்' என்றால் என்ன என்று வரையறை செய்தார்... 'நள்ளிரவில் பெண் தனியாக நடமாடும் சுதந்திரம்.’ 'என்ன இது... அபத்தமாகச் சொல்கிறார்' என்று பழைமைவாதிகளுக்கு தோன்றலாம். நள்ளிரவில் ஏன் பெண் தனியாக நடமாட வேண்டும்.?

ஆனால், தாத்தாவின் சொல்... குறள்போல. குறுகத்தறித்த பொருள் கொண்டது அது. நடமாட்ட உரிமைதான் ஆதாரம். அதிலிருந்துதான் கல்வி கற்கும் உரிமை, சுயமாக பொருளீட்டும் உரிமை, தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் உரிமை எல்லாம் வருகிறது. அதை தன் குடிமக்களுக்கு அளிப்பதே அரசின் முதற்கடமை. நடமாட்ட உரிமை மறுக்கப்பட்ட பெண்களுக்கு அதை அளிப்பதையே சுதந்திர இந்தியாவின் கடமை என்று காந்தி சொன்னார். அதை அளிப்பது எப்படி என்பதுதான் பேச்சே ஒழிய... பெண்ணுக்கு உரிமை வேண்டாமா, பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல!

அந்த உரிமைக்குத் தடையாக இருப்பது என்ன? சட்டங்களா.... இல்லவே இல்லை! இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானவை. இச்சட்டங்கள் ஏன் செயலற்றிருக்கின்றன என்பதுதான் கேள்வி.

இத்தகைய ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மிக முக்கியமானது. கண்ணால் பார்த்த சாட்சிகள் இருந்தால்தான் பாலியல் வல்லுறவு வழக்கை நம்புவோம் என்றால்... எவரையுமே தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதற்காக கடுமை காட்டுவதற்கு நேர்மாறாக, 'மைனர் பெண் சொல்வதை நம்பமுடியாது' என்கிற நிலைப்பாட்டை எடுத்தது நீதிமன்றம்

தண்டிக்கப்பட்டு விடுதலையானவர்களில் சிலர் இப்போது வெளிப்படையாகவே ஊடகங்கள் முன் சொல்லிவிட்டார்கள், 'நாங்கள் குற்றம் செய்தோம்... பி.ஜெ.குரியன் அனைத்துக்கும் பின்னால் இருந்தார்' என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சட்டமும் அரசும் மசியவில்லை.

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்து சமூகசேவகி, உள்ளூர் உயர்சாதி இளைஞர்களால் 1992-ல் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்ட வழக்கில் கீழ்நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழக்கில்கூட 'படித்த இளைஞர்கள், அழகில்லாத பெண்ணை கற்பழிக்கமாட்டார்கள்’ என்கிற அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகள் நூற்றில் ஒன்று. அவற்றில் நான்கு சதவிகிதம் குற்றவாளிகள்கூட தண்டிக்கப்படுவதில்லை. அதாவது குற்றங்களில் ஆயிரத்தில் நான்குபேர்கூட தண்டிக்கப்படுவதில்லை.

அப்படியானால் உண்மையான பாலியல் பலாத்கார குற்றவாளிகள் யார்? கண்முன் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்காளாகி வந்து நிற்பதைக் கண்டும் வரைமுறையில்லாமல் வருடக்கணக்காக, வேண்டுமென்றே வாய்தா வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய, சில்லறை காரணங்களுக்காக குற்றவாளிகளை விடுதலை செய்யத் துணியக்கூடிய ஒரு சில நீதிபதிகள்தான் என்று சொல்லலாமா?

பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகபட்சம் ஓர் ஆண்டுக்குள் கடைசி மேல்முறையீடு வரை முடிந்து தண்டனை வழங்கப்படட்டும். பிரச்னை முக்கால்வாசி தீர்ந்துவிடும். அதுவல்லாமல் வெறுமனே சட்டங்களை கடுமையாக ஆக்கினால், அதை வைத்துக் கொண்டு போலீஸும் பிறரும் சாமானியர்களை மிரட்டுவதுதான் நடக்கும்.

பாலியல் குற்றம் என்பது ஒரு குற்றம் மட்டுமல்ல. பெண்களின் அடிப்படை நடமாட்ட உரிமைக்கெதிரான ஒடுக்குமுறையும்கூட. ஆகவே, சட்டம் உண்மையான வீரியத்துடன் அதைத் தடுத்தாக வேண்டும். அதைச் செய்வதற்கு, சட்டத்துறையானது மக்களால் கண்காணிக்கப் படவேண்டும். இரக்கமற்ற தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளின் மனசாட்சி அப்போதுதான் கொஞ்ச மாவது செயல்படும்.

சூரியநெல்லி வழக்கு, பக்கத்து வீட்டுக்காரர் குமரேசனை தலைகீழாக மாற்றிவிட்டது. அவர் சொன்னார். ''சும்மா போட்டு கலாட்டா பண்றாங்க சார். எல்லாம் பாலிடிக்ஸ்... குரியனை கோர்ட்டே விட்டாச்சு...'' குமரேசன், காங்கிரஸ்காரர். ''அந்தக் குட்டி என்ன பண்ணிச்சோ? ஒரு நல்ல பொண்ணு இவ்வளவு நாள் இத வெச்சு பாலிடிக்ஸ் பண்ணாது... என்ன சார் சொல்றீங்க?''

இப்படிப்பட்டவர்கள்,  தினமும் பலாத்காரம் செய்கிறார்கள்!