ரெகுலர்
Published:Updated:

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே !

ஒர் எச்சரிக்கை கட்டுரைஎஸ்.கே.நிலா

##~##

''நிச்சயதார்த்தம் என்பது பாதி கல்யாணம் என்பார்கள் பெரியவர்கள். அது வார்த்தையோடு நின்றது அந்தக் காலம். இக்காலத்து பெண்களும், ஆண்களும் நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையே இருக்கும் நாட்களில் அதை உண்மையாக்கத் துடிக்கிறார்கள். மொபைல் பேச்சில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள சிக்கல்கள் நிறைய...''

- கரூர் மனநல மருத்துவரான கா.செந்தில் வேலனின் வார்த்தைகள், நிதர்சனம்.

தொடர்ந்த டாக்டர், ''திருமணத்துக்குப் பிறகு இல்லறத்தின் சூட்சமங்களை அந்தக் காலத்தில் பாட்டி, அத்தை என்று சீனியர் பெண்கள் ஜாடைமாடையாக சொல்லி வளர்ப்பார்கள். இன்றைய நியூக்ளியர் குடும்ப வளர்ப்பில், திருமண வயதுப் பெண்களுக்கு அந்த பாக்கியம் இல்லை. திருப்தியான தாம்பத்யம், திருமண வாழ்வின் அடித்தளங்களில் பிரதான மானது. அதில் தயக்கங்கள், குழப்பங்கள், சிரமங்கள் ஏற்படுவது இயல்பே. ஆனால், அதையெல்லாம் நிவர்த்தித்து சரிசெய்பவர்களுக்கே அழகான இல்லறம் பரிசாகக் கிடைக்கும்.

ஆகவே, திருமணத் துக்கு முன்னான கால கட்டத்திலும்... பின்வரும் நாட்களிலும் மணப் பெண்ணுக்கு இவை எல்லாம் முக்கியமாக தேவை'' என்றபடி பல விஷயங்களையும் பட்டிய லிட்டார் டாக்டர், நீங்கள் நோட் செய்து கொள்வதற்காக...

'வெட்டிங்’ வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் 'டேட்டிங்’!

''மேற்படிப்பு, வேலை என நிச்சயதார்த்தத்தை முடித்து, திருமணத்தை தள்ளிப்போடும் தலைமுறை இது. இந்த இடைவெளியில் கணவன், மனைவியாகப் போகிற வர்கள் தங்களை புரிந்து கொள் ளட்டுமே என பெரியவர்களே சின்னஞ்சிறுசுகளை பார்க்க, பேச அனுமதிக்கிறார்கள். ஆனால், இதன் மறுபக்கத்தில் முதலுக்கு மோசமாகும் ஆபத்து இருக்கிறது. இருதரப்பும் தங்கள் பாஸிட்டிவ் அம்சங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும்போது, அதனால் வேர்விடும் எதிர் பார்ப்புகள், திருமணமானதும் பல் இளித்துவிடும். உதாரணத்துக்கு, 'வெளிப்படையாக பேசுகிறேன் பேர்வழி' என்று எக்கச்சக்கமாய் உளறிவைத்து, நடக்கப் போகும் திருமணத்துக்கே உலை வைத்துவிடும் பெண்கள் இருக்கிறார்கள்.

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே !

இதில் முக்கியமானது, ஆண் சிநேகிதர்கள் அல்லது தன்னைக் கடந்த காதல் பரிச்சயம் குறித்த பேச்சுகள். பப்பி லவ், பதின்ம பருவத்து கிரஷ் என்றெல்லாம் பெயர் வைத்து... ஆண் தனது கடந்த கால காதல் திரு விளையாடல்களை எடுத்து விட்டு, அதேபோல பெண்ணின் தரப்பிலிருந்தும் தகவல்களை கறக்க முயற்சிப்பான். இது ஒருவிதமான சூழ்ச்சி என்பதை உணராது, விட்டில்பூச்சிகளாக விழும் பெண்களே அதிகம். ஓர் இளம் பெண்ணின் திருமணத் துக்கு முந்தைய முறிந்து போன காதல் என்பது, அவளே மறக்க முயற்சிக்கும் கசப்பு அனுபவமாக இருக்கும். அதை திருமணத்துக்கு முன்பே சிதறு தேங்காயாக்குவது எதிர்விளைவுகளையே தரும்.

'என்னைக் கட்டிக்கப் போற வர் எவ்ளோ பொசஸிவ் தெரி யுமா? நான் வாட்ச்மேன் தாத்தா கிட்ட பேசினாகூட அவருக்கு மூஞ்சு விழுந்திரும்...’ என்பார்கள் பெண்கள் அப்பாவியாக. ஆனால், இந்த பொசஸிவ் போர்வையில் பெரும்பாலும் பின்னாளைய சந்தேகப் புத்தி வக்கிரங்களே அதிகம் ஒளிந் திருக்கும். எனவே, அதீத பொசஸிவ் பேர்வழிகள் என் றால்... உஷாராவது நல்லது. ஆணோ... பெண்ணோ... திரு மணத்துக்கு முன்பாக பெரும் பாலானவர்களுக்கும் சின்னச் சின்ன பெர்சனல் விஷயங்கள் இருக்கும். அவை அனைத்துமே பெரும்பாலும் அறிந்தும் அறி யாத வயதில் நடந்து முடிந்தவை களாகவே இருக்கும். அப்படி யிருக்க, அவற்றையெல்லாம் பூதாகாரமாக்கிக் கொண்டிருப் பது இரு தரப்புக்குமே நல்ல தில்லைதானே!

தாலி கட்டும் முன் வேண்டாம் நெருக்கம்!

நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப் பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு. குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள் வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதி லும்கூட ஆபத்து இருக்கிறது'' என்று சொல்லும் டாக்டர்... ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்து வைத்தார்.

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே !

''எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் ஐ.டி. துறையைச் சேர்ந்த இருவருக்கு, நிச்சயத்துக்குப் பின் ஒரு வருட இடைவெளியில் திருமணம் என முடிவானது. பெண் பெங்களூருவில், பையன் ஃபாரினில் என சாட்டிங்கிலும், ஸ்கைப்பிலும் காதல் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத் தில் பையனுக்கு அது போரடிக் கவே, இன்னும் அந்யோன்யமாக அவளைப் பார்க்க ஆசைப்பட்டு, அரைகுறை ஆடைகளுடனும், பிறகு அதுவும் இல்லாமலும் படங்களை கேட்டிருக்கிறான். அந்த படித்த பெண்ணும் திருமணம், வருங்கால கணவன் என்ற பிதற்றல் கண்ணை மறைக்க அப்படியே செய்திருக் கிறாள். இதற்கிடையே அதிக வரதட்சணையுடன் இன்னொரு திருமண வாய்ப்பு கதவைத் தட்டவே, பழையதை தட்டிக் கழிக்க... மேற்படி ஏடாகூட புகைப்படங்களை நெட்டில் விநியோகிக்கும் பிளாக் மெயிலில் அவன் குதித்தான். பெரும் பஞ்சாயத்துக்குப் பின் பிரச்னையிலிருந்து மீண்டுவிட்டனர் அந்த பெண்ணும் குடும்பத்தினரும். ஆனால், அந்த அதிர்ச்சி யிலிருந்து இன்னும் விலகவில்லை. எனவே பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனை யும் அவசியம்.

எதிர்பார்ப்பும் எதிர்ப்பும்!

ஆணும் பெண்ணும் தனக்கான துணையைத் தேடுவதில் தங்களை அறியாது ஒரு முன்மாதிரி பிம்பத்தை மனதில் வைத்துக் கொண்டு, அதை இறக்கி வைக்க பொருத்தமான பாத்திரத்தை தேடுவார்கள். உதா ரணத்துக்கு ஓர் ஆணைப் பொறுத்த வரையில், அந்த பிம்பம் அவன் தாயாக, சகோதரி யாக, ஆசிரியையாக, பிடித்த நடிகையாக, ஏன் முன்னாள் காதலியாக அல்லது இவர்களின் கலவையாகவோகூட இருக்கலாம். இப்படியே பெண் வசமும் டிட்டோ எதிர்பார்ப்பு பிம்பம் கையில் இருக்கும். ஏதோ வெளித்தெரியும் ஒரு சில ஒற்றுமைகளை வைத்துக்கொண்டு, 'ஆஹா... இதுதான் நான் தேடும் ஆதர்சம்!’ என்று சரணடைந்துவிடுவார்கள்.

திருமணமான சில மாதங்களுக்கு உண்மை உறைக்காது. ஆரம்ப ஜோர் கடந்ததும், தத்தம் பிம்பங்களை பரஸ்பரம் எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் இணக்கப்பூச்சு விலகி, பிரச்னைகள் ஆரம்பமாகும். தொடரும் நாட்களில் வலுக்கட்டாயமாக தங்கள் பிம்பத்தை திணிக்கும் எதிர்பார்ப்பும், அதற்கான எதிர்விளைவு எதிர்ப்புமாக குடும்பத்தில் புதிய பூகம்பங்களை வெடிக்கச் செய்யும். இந்தக் கட்டத்தில் தான் குடும்பப் பஞ்சாயத்து, விவாக ரத்து என்று ஓரிரண்டு வருடத்திலேயே முட்டிக்கொண்டு நிற்பார்கள். அதிர்ஷ்டவசமாக இவற்றை கடந்தவர்கள், தங்கள் எதிர்பார்ப்பின் அபத்தத்தை உணருவார்கள். அதற்குள் மனதில் வரிந்திருக்கும் பிம்பம் சாயம் வெளுக்க, எதிரிலிருக்கும் நிதர்சன துணையின் அருமை உரைக்கும். அதன்பிறகே உடல்களைக் கடந்த ஆத்மார்த்த வாழ்க்கை ஆரம்பமாகும்.

சரி, இந்த மன ரீதியிலான நெருக்கமும் முதிர்ச்சியும் ஒரு புறம் இருக்கட்டும். திருமணமான புதிதில்... பயமுறுத்தும் தாம்பத்ய புதிர்களை பார்க்கலாமா..?!

அடுத்த இதழ் வரை காத்திருங்கள்..!