ரெகுலர்
Published:Updated:

நாங்கள் வாங்குவதெல்லாம் தரமான தங்கம்தானா ?

நாங்கள் வாங்குவதெல்லாம் தரமான தங்கம்தானா ?

பிஸினஸ் கேள்வி - பதில்

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

''சமீபத்தில் புதிய நகைகள் வாங்க நகை கடைக்குச் சென்றபோது... பழைய நகையை அங்கே கொடுத்தேன். எடை பார்த்தவர்கள், என் நகைக்கு குறைந்த தொகையே மதிப் பிட்டனர். கேட்டதற்கு... 'உங்கள் நகை மச்சம் குறைவு... தங்கம் தரமானதாக இல்லை' என்று கூறினர். அந்த நகையை நான் வாங்கும்போதே ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்பது தெரிந்ததும்... மிகவும் கவலையாகிவிட்டது. அதேசமயம்... 'தரமான தங்கம்தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது... தரமான தங்கம் வாங்க என்ன செய்ய வேண்டும்... ஏமாற்றுபவர்களிடம் இருந்து இழப்பீட்டை எப்படி பெறுவது' என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு உதவ முடியுமா?''

- கே.லட்சுமி, அமைந்தகரை

''ஆயிரங்களில், லட்சங்களில் பணம் கொடுத்து நாம் வாங்கும் தங்க நகைகள் தரமானவைதானா... நாம் ஏமாற்றப் படவில்லைதானே..? என்பது போன்ற கேள்விகள், அடிக்கடி நம்மில் பலருக்கும் ஏற்படுவது வாடிக்கையே. ஆனால், மேற்கொண்டு அதற்கான முயற்சிகளில் இறங்காமல் அப்படியே விட்டுவிட்டு, நம்முடைய அன்றாட பணிகளில் மூழ்கி விடுவோம். இங்கே, இதைப் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கும் உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்!

இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும் பாலான பெண்கள் தங்க நகைகளை அணிபவர்கள்தான். நீங்கள் வாங்கும் நகையில் 99.99% தங்கம் இருந்தால்தான், அது 24K (காரட்) தங்க நகை. அந்த அளவிலிருந்து படிப்படியாக தங்கத்தின் அளவு குறையும்போது... 22K முதல் 9K வரை அவை மதிப்பிடப்படுகின்றன. 22K என்பது 91.67% தங்கம் (916)... மீதி செம்புக் கலவை. பெரும்பாலும் கடைகளில் 22K தங்க நகைகள்தான் விற்பனை செய்கிறார்கள். உலக சந்தை மற்றும் இந்திய சந்தைகளிலும் 22K தங்கத்தின் விலை தினமும் அறிவிக்கப்படும்.

22K தங்க நகைக்கான பணம் கொடுத்த பின், அந்த நகை 22K என எப்படி உறுதி செய்வது?

அதற்காக இந்தியாவில் இருக்கும் தரக்கட்டுப்பாட்டு மையம் (BIS - Bureau of Indian Standards), தங்கத்தை தர நிர்ணயம் செய்ய 'ஹால் மார்க்' முத்திரையுடன் தங்க நகைகளை விற்பனை செய்ய உதவுகிறது. விற்பனையாளர்கள் தாங்களாகவே 'ஹால் மார்க்' முத்திரை போட முடியாது. அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில்தான் இம்முத்திரையை இட வேண்டும்.

ஹால் மார்க் முத்திரையில், கீழ்க்கண்ட 5 குறி கள் இருக்க வேண்டும். 1. BIS லோகோ, 2. தங்க அளவு - (916 - 22 காரட், 375 - 9 காரட்), 3. ஹால் மார்க் முத்திரை குத்தும் மையத்தின் குறி, 4. விற்பனையாளரின் ஹால் மார்க் கோட் அறிந்து கொள்ள அவரின் குறி, 5. 'எந்த வருடம் குறியிடப்பட்டது?' என்கிற குறியும், ஆங்கில எழுத்தும் (உதாரணமாக 2000 ஆண்டு என்றால்... கி, 2010-ம் ஆண்டு என்றால் ளீ). ஒவ்வொரு நகையும் ஹால்மார்க் குறியிடும் மையத்துக்குக் கொண்டு சென்றுதான் குறியிட வேண்டும்.

நாங்கள் வாங்குவதெல்லாம் தரமான தங்கம்தானா ?

ஒவ்வொரு தங்க நகைக் கடைக்காரரும் ஹால் மார்க் முத்திரை பி.ஐ.எஸ் (BIS) தலைமை அலுவலகத்தில் பதிவு செய்து அவர்களுக்கென ஒரு குறியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஹால் மார்க் முத்திரை இடும் மையம், நகைகளை சோதனை செய்து, தர நிர்ணயம் செய்து முத்திரை இட்டு தருவார்கள். கடைகளில் ஹால் மார்க் பற்றிய விளக்கம் அனைவரும் தெரிந்து கொள்ளும் முறையில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்.

'10X’ பூதக்கண்ணாடியை (இது உருவத்தை 10 மடங்கு பெருக்கிக் காட்டும்) ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்க வேண்டும். நகை வாங்குபவர்களிடம் அதைக் கொடுத்து ஹால் மார்க் முத்திரையைப் பார்க்கும் வசதி செய்து தர வேண்டும்.

ஐந்து குறிகள் இல்லை என்றால்... நகைகளை வாங்காதீர்கள். உங்களுக்கு மேலும் சந்தேகம் என்றால். ஹால் மார்க் முத்திரையிடும் மையங்களை (இவற்றைப் பற்றிய விவரங்களை ‘BIS’-ன் வெப்சைட்டில் சென்று தெரிந்து கொள்ளலாம்) அணுகி, தங்கத்தின் தரம் பற்றிய அத்தாட்சி பெறலாம். ஒரு நகை என்றால்... முப்பது ரூபாய்க்குள்தான் கட்டணம் செலுத்த வேண்டும். போட்டோ டெஸ்ட்டிங் என்றால்... ரூபாய் 80 வரை கட்ட வேண்டும்.

இப்போது... உங்கள் நகை, ஹால் மார்க் முத்திரையுடன் இருந்து, தரம் இல்லை என்றால் பரிசோதனை செய்ததற்காக நீங்கள் எந்தப் பணமும் கட்டத் தேவையில்லை. கூடுதல் உதவியாக... உங்களுக்கு உண்மையான 22 காரட் தங்க நகையை, சம்பந்தப்பட்ட கடைக்காரர் கொடுப்பதற்கு, அந்த மையம் ஏற்பாடு செய்யும். ஆறு மாதத்துக்குள் இரண்டு முறைக்கு மேல் தவறாக நடந்தால்... கடைக்காரரின் ஹால் மார்க் உரிமம் ரத்து செய்யப்படும்.

'ஹால் மார்க்' நகை தேவைப்படுபவர்கள் மட்டுமே, அதைக் கேட்டு வாங்கிக் கொள்வது தான் தற்போது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அனைத்து தங்க நகைகளும் ஹால் மார்க் முத்திரையுடன்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே பேசப்படுகிறது. இதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சட்டம் விரைவிலேயே அமலுக்கு வந்துவிடும் என்கிறார்கள். அப்படி வரும்போது... இந்த ஏமாற்று வேலைகள் பெருமளவு குறைந்துவிடும் என்று நம்பலாம்!

'ஹால் மார்க்' முத்திரை இடப்படாமல் விற்பனை செய்யப்படும் நகைகளையும், ஹால் மார்க் முத்திரை இடும் இடத்தில் கொடுத்து, அதில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சான்றிதழ் பெறலாம். அதற்கும் ஒரே கட்டணம்தான். நீங்கள் வாங்கிய 22 காரட் தங்க நகையில், 91.6 சதவிகிதத்துக்கும் குறைவாக தங்கம் இருந்தால்... சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் முறையீடு செய்து, தரமான தங்க நகையைப் பெறலாம். சட்டப்படி நடவடிக்கைகூட எடுக்கலாம்.''