Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

##~##

பெண்களுக்கு ரொமான்ஸுக்கான தேவை ரொம்பவே அதிகம் என்பதைப் பற்றி இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். எந்த அளவுக்கு என்றால், ரொம்பவே புத்திசாலித்தனமான பெண்கள்கூட, இந்த ரொமான்ஸில் சென்டிமென்டல் சிக்கல்களை ஏற் படுத்திக் கொள்ளும்போது, முட்டாள் தனமான காரியங்களைச் செய்து விடுகிறார்கள், மிகவும் தவறான முடிவு களை எடுத்துவிடுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் ‘Smart women making stupid choices’ என்பார்கள்.

சரி, பெண்கள் இந்த காதல் விவகாரத்தில் செய்யும் தவறுகள் என்னென்ன என்று பட்டியல் இட்டுப் பார்க்கலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓவர் அப்பா சென்டிமென்ட், பெண்கள் செய்யும் முதல், முக்கிய ஸ்டுபிடிட்டி. ஆண்கள் எல்லோருக்கும் தங்கள் அம்மாக்களின் மீது இருக்கும் சென்டிமென்ட் போலவே, சில பெண்களுக்கு அப்பா மீது அதீத அன்பு இருக்கும். 'என் அப்பா மாதிரி ஒரு நல்லவன், உத்தமன், யோக்கியன் உலகத்திலேயே இல்லை’ என்றே இவர்கள் நம்புவார்கள்.

உதாரணத்துக்கு அம்பிகாவை எடுத்துக் கொள்வோமே. அவளுக்கு அப்பா என்றால் உயிர். 'அவரைப்போல ஓர் ஆதர்ச ஆண் இந்த உலகிலேயே இல்லை' என்பது அவளுடைய எண்ணம். அதனால் பார்க்கும் எல்லா ஆண்களையும் அவள் அப்பாவோடு ஒப்பிட்டு, 'சே... என்ன இருந்தாலும் டாடி மாதிரி இல்லை’ என்று குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பாள். இதனாலேயே அவளுக்கு தன்னைவிட அதிக வயதான, கலவியில் ஈர்ப்பே இல்லாத ஆண்களோடு பேசிக் கொண்டிருக்கத்தான் பிடித்தது. இவள் வயதுக்கு நிகரான ஆண்களை, அவ்வளவாகப் பிடிக்கவே இல்லை.  

ரொமான்ஸ் ரகசியங்கள் !

இவளையும் ஒருவன் தீவிரமாகக் காதலித்து திருமணமும் செய்துகொண்டான். ஆனால், அவனோடு இவளுக்கு செக்ஸில் ஈடுபடுவதில் நாட்டமே இருப்பதில்லை. ரொம்பவே இன்டிமேட்டாக கட்டிப்பிடிப்பாள். ஆனால், 'மை டாடி’ என்றுதான் கொஞ்சுவாள். போகப் போக, 'நீ என் டாடிதானே... என்னை நல்லா பார்த்துப்பதானே?’ என்கிற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்துவிட்டாள். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும் இவளுக்கு கணவனோடு கலவுறவே இல்லை.

'இதெல்லாம் என்ன விசித்திரம்?' என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா! இதெல்லாம் ரொம்ப அபூர்வமாக எங்கேயோ நடக்கிற விஷயமாக இருக்கும் என்று தோன்றுகிறதா? அதுதான் இல்லை. இது மாதிரியான தவறான ஈர்ப்புகள்  (Malimprintings) மிகவும் பரவலாகவே நடக்கின்றன. இதைத்தான் 'எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்' (Electra complex) என்பார்கள். இதைப் பற்றி முதன் முதலில் பேசியவர், சிக்மண்ட் ஃபிராய்ட் எனும் உளவியல் மேதைதான்.

ஓவராக தங்கள் தந்தையை ஆராதிக்கும் பெண்களின் இந்தத் தன்மைக்கு அவர் வைத்த திருநாமம்தான், 'எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்'. 'எலெக்ட்ரா' என்பது, கிரேக்க இதிகாசங்களில் வரும், ஓவர் அப்பா சென்டிமென்ட் கொண்ட கதாபாத்திரம். இந்த எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்... பெண்களிடம் காதல், திருமணம் ஆகிய மரபணு அபிவிருத்தி திட்டங்களை மறக்க வைத்து, 'அப்பாவை கொண்டாட’ மட்டும் பயன்படுத்தி, மரபணு ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல், அப்பாவை தக்க வைத்துக் கொள்வதிலேயே மும்முரமாக இருப்பதால், இது சுயதோல்வியை (Self defeating) முன்னெடுக்கும் ஒரு முரண்பாடான, போக்கு என்றே அறியப்படுகிறது.

பெண்கள் இந்த ரொமான்ஸ் வாழ்வில் செய்யும் இன்னொரு முக்கியமான தவறு என்ன தெரியுமா? 'ஐயோ, அவன் பாவம், குழந்தை மாதிரி, நான்தான் அவனைப் பார்த்துக்கணும், அவனுக்கு எல்லாம் செய்து தரணும், அவனை நல்லவனா மாத்தணும்’ என்றெல்லாம் கசிந்து உருகி, என்னவோ அன்னை தெரசா ரேஞ்சுக்கு தாய்மையைக் கொட்டி கவிழ்ந்து போவார்கள். இதுவும் ஒரு வகை ஈர்ப்புதான்!

'ஏன் இப்படி பிரயோகித்தால் என்ன தவறு?' என்று கேட்கத் தோன்றுகிறதுதானே?!

நெருக்கம் வளரும்...