ரெகுலர்
Published:Updated:

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

வே.கிருஷ்ணவேணி ,படம்: தி.விஜய்

##~##

'குழந்தைகளுடைய வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்'

- இதுதான் அனைத்து பெற்றோர்களின் அக்கறை, கவலை எல்லாம். இதற்கு... ஊட்டச்சத்து, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களில் ஒவ்வொருவருமே கவனம் எடுக்க வேண்டியது அவசியம். இந்த கவனம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று உங்களுக்காக இங்கே பேசுகிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள் சிலர். ஒவ்வொரு நிபுணருமே... உங்கள் கைபிடித்து 'அ... ஆ..' எழுதக் கற்றுக் கொடுப்பதுபோல, அத்தனை அருமையாக 'அ முதல் ஃ வரை' விளக்கியிருக்கிறார்கள்... உங்கள் பட்டுக்குட்டிகள் அனைத்திலும் 'படு ஸ்மார்ட்' என்று வளர! அத்தனையையும் கேட்டு அழகாக மனதில் பதியுங்கள்... குழந்தைகளை ஆரோக்கியமாக்குங்கள்!

ஆரோக்கியம்... அம்மாவிடமிருந்து ஆரம்பம்!

''குழந்தையின் வளர்ச்சி என்பது, கர்ப்ப காலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது'' என்று அடித்தளத்தை முதலில் புரியவைத்த டாக்டர் ஸ்ரீதேவி, (மகளிர் நலம்), தொடர்ந்தார், ''ஊட்டச்சத்து விஷயத்தில் கர்ப்பிணிகள் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத் தில் அயர்ன் மாத்திரைகள் சாப்பிட் டால், குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்கிற மூட நம்பிக் கையை விட்டு, முதல் மூன்று மாதங்கள் வரையிலும் தவறாமல் அயர்ன் மாத்திரைகள் சாப்பிடுவது, தன் குழந்தைக்கு தாய் செய்யும் மிகப் பெரிய உதவி.

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

இந்தியாவைப் பொறுத்தவரை 70% பெண்கள் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை. கர்ப்ப நேரத்தில் ஏற்படும் ரத்தசோகை, குழந்தையின் வளர்ச்சி யைப் பாதிக்கும், அதனால்தான் இரும்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலிருந்தே தினமும் 4 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அல்லது அதை ஈடுகட்டும் விதத்தில் கால்சியம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இவை எல்லாம்தான் குழந்தை பிறக்கும்போது, அதற்கு முழுமையான வளர்ச்சியையும், எடையையும் கொண்டு வந்து சேர்க்கும்'' என்று நிஜத்தைப் புரிய வைத்தார்.

சாப்பிடாத குழந்தையை சாப்பிட வைக்கும் டெக்னிக்!

அடுத்து உணவு விஷயம் பற்றி உரைக்க வந்த டயட்டீஷியன், டாக்டர் புவனேஷ்வரி, ''குழந்தைப் பருவத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளின் தன்மையைப் பொறுத்துதான் ஒருவரின் உடல் நலம், உறுதி, வளர்ச்சி மற்றும் பருமன் போன்றவை அமையும். பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

தாய்ப்பால் மட்டுமே போதும்... தண்ணீர்கூடத் தேவையில்லை.

வேலை வேலை என்று ஓடாமல்... குழந்தைகளின் ஊட்டச் சத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாகிவிடும். குழந்தையின் வளர்ச்சியை 'க்ரோத் சார்ட்’ மூலம் அறியலாம். உதாரணமாக, குழந்தையின் ஐந்தாவது மாதத்தில் அதன் எடை, பிறந்தபோது இருந்த எடையைவிட, இரண்டு மடங்காக உயர்ந்திருக்க வேண்டும். ஒரு வருடத்தில் அது மூன்று மடங்காக இருக்க வேண்டும். வளர்ச்சியைத் தூண்ட கை, கால் அசைவுகளுக் கான ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற தசை, நரம்புகளுடன் தொடர்பு உடைய விளையாட்டுகளை மேற்கொள்ளச் செய்யலாம்.

நன்றாக பசி எடுக்கும் தருவாயில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துப் பழக்கப்படுத்துவதுதான் சரியானது. சரியாக சாப்பிடாத குழந்தைகளையும் சாப்பிட வைக்கும்'' என்று அருமையான டெக்னிக் ஒன்றைக் கற்றுத்தந்தார்!

பட்டுக்குட்டியை பாதுகாக்கும் பருத்தி!

குழந்தை பராமரிப்பு பற்றி பேசிய சரும நோய் நிபுணர் டாக்டர் சில்வியா, ''குழந்தைகள் வெளியில் சென்று வந்தால், குளிக்க வைத்து, உடனே ஆடைகளை மாற்றுவது மிகவும் நல்லது. குழந்தைக்கு என்றே பிரத்யேக சோப், டவல், சீப்பு, பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் வாயில், கையில் வைத்து விளையாடும் பொருட்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குழந்தை படுக்கும் மெத்தை/படுக்கையை தினமும் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடை, காலணிகளை சுத்தமாகப் பராமரிப்பதுடன், அவர்களின் வாட்டர் பாட்டில்

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

மற்றும் லஞ்ச் பாக்ஸ்களை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். சிந்தடிக் துணிகளைவிட, பருத்தி (காட்டன்) துணிகளே உங்கள் பட்டுக்குட்டியின் சருமத்துக்கு ஏற்றவை!'' என்று தன்னுடைய பரிந்துரையை அழகாக அடுக்கினார்.

அனீமியா... உஷார்!

''குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் பிரதானமானது, அனீமியா'' என்று எடுத்ததுமே கோடிட்டுக் காட்டிய குழந்தைகள் நல டாக்டர் குணசிங், அதற்கான தீர்வுகளைப் பட்டியலிட்டார்... ''இரும்புச் சத்து குறைபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மற்றும் அடலசன்ட் ஏஜில் இருப்பவர்களுக்கு கொக்கிப் புழு (ஹூக் வார்ம்) பாதிப்பு இருக்கும். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அடலசன்ட் வயது பெண்கள், ஆறு மாதத்துக்கு ஒரு முறை கொக்கிப் புழு நீக்குவதற்கான மாத்திரைகளைச் சாப்பிடுவது நல்லது. ஒரு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு... ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும், அதற்கு மேலான வயதுள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் பூச்சிமருந்து (டி-வார்ம்) கொடுக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அனீமியா பாதிப்பு அவ்வளவாக வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அசைவம் சாப்பிடாதவர்கள் அதை ஈடுகட்டும்விதமாக இரும்புச்சத்து அதிகமுள்ள சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் சைவ உணவைத்தான் அதிகமாக சேர்த்துக் கொள்கிறோம். இதிலுள்ள அயர்ன் மற்றும் கால்சியம்  நம் உடலில் அப்படியே சேர்வதற்கு, சாப்பிட்டு முடித்தவுடன் வைட்டமின் 'சி’ சத்து நிரம்பிய நெல்லிக்காய், லெமன் ஜூஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்.

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

ஒருவரின் உயரத்தை  கூட்டவோ, குறைக்கவோ முடியாது. 18 முதல் 21 வயதில் ஒருவரின் வளர்ச்சி முடிவு பெற்றுவிடும். மூன்று வயதுக்கு மேலான குழந்தைகள் ஆண்டுக்கு ஆறு செ.மீ. வீதம் வளர்வார்கள். விளம்பரங்களில், 'என் குழந்தை ஆண்டுக்கு 6 செ.மீ வளர்கிறான்’ என்று சொல்வதும் இதைத்தான். சரியான ஊட்டச்சத்து உணவு, இயல்பாகவே அந்த வளர்ச்சியை நடத்தும்.

சில குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். எல்லா ஆகாரங்களையும் சரியாகக் கொடுத்தும் அக்குழந்தை வளரவில்லை என்றால், பிறக்கும்போதே எடை மற்றும் உயரம் மிகக்குறைவாக பிறந்த குழந்தைகளாக இருக்கும். இதை ஐ.யு.ஜி.ஆர். குழந்தைகள் (IUGR-Intrauterine growth restriction) என்போம். கருவுற்ற மாதத்திலிருந்து முதல் மூன்று மாதங்களில்      தாய்மார்கள் சரியான ஊட்டச் சத்து எடுத்துக் கொள்ளவில்லை என்றால்... ஐ.யூ.ஜி.ஆர் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு. இந்தக் குழந்தைகள் வளர்வதற்கு, குரோத் ஹார்மோன் கொடுக்கலாம். குரோத் ஹார்மோன் டெஃபி ஷியன்சி இருக்கிறது என்று உறுதியான பிறகு, இந்த சிகிச்சையை எடுக்கலாம். ஆனால், இதற்கான செலவு அதிகம்.

இரண்டு வயது வரை கொடுக்கப்படும் ஊட்டச்சத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலத்துக்கான அடிப்படை. அதனால்தான் குழந்தையின் ஆரம்ப வருடங்களில் அதிக அக்கறை செலுத்தச் சொல்லி வலியுறுத்துகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சந்தோஷமான சூழலில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் இயல்பாகத் தூண்டப்பட்டு அதன் ஆரோக்கியம் சீராக உயரும்'' என்று மனதில் பதிய வைத்தார் தன் டிப்ஸ்களை!

கசப்பு... துவர்ப்பு!

சரி, குழந்தைகளுக்கான சித்த மருத்துவ பரிந்துரைகள் எப்படி? அதைப் பற்றி பேசும் டாக்டர் வேலாயுதம், ''ரத்தத்துக்கு தெம்பு ஊட்டக்கூடிய தனிச் சிறப்பு கீரை, காய்கறிகளில் உள்ளது. எலும்பை வலுப்படுத்துவதற்கு உளுத்தம் பருப்பு, பிரண்டை கை கொடுக்கும். பாசிப் பருப்பு, துவரம் பருப்பு இவை எல்லாம் தசைகளை வலிமைப் படுத்துவதற்கு உதவக் கூடியவை.

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

மாவுச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து இந்த மூன்று சத்துக்களும் இனிப்பு, உப்பு, புளிப்பு, கைப்பு (கசப்பு), கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவை கொண்ட உணவுகளில் இருக்கின்றன. இதில் புளிப்பும், கார்ப்பும் அதிகமானால்... அசிடிட்டி கூடிவிடும். நாம் பொதுவாக துவர்ப்பு மற்றும் கசப்புச் சுவைகளைத் தவிர்த்து   விடுவோம். புளிப்பையும் இனிப்பையும் அதிகமாகச் சேர்க்கிறோம். ஆனால், நம் உடலுக்குத் தேவையான நியூட்ரீஷியன்     கள் அதிகம் இருப்பது கசப்பு, துவர்ப்பு வகை உணவுகளில்தான். எனவே, குழந்தைகளுக்குத்   தவிர்க்காமல் இவற்றைப் பழக்கும் போது, அவர்களின் உள்  உறுப்பு வளர்ச்சிக்குக் கை கொடுக்கும்.

அசதிக்கு சுடர் தந்த தேன்!

ஒரு வயதிலிருந்தே நான்கு நாட்களுக்கு ஒரு முறை குழந்தைக்கு எண்ணெய்  தேய்த்துக் குளிக்க வைக்கலாம். இரவு 8 - 8.30 மணிக்கெல்லாம் தூங்க வைக்க வேண்டும். நீண்ட நேரம் டி.வி. பார்க்க அனுமதிக்கக் கூடாது. காலையில் சூரியோதயத்துக்கு முன்பாக குழந்தைகளை எழுப்புவது சிறந்தது. தேர்வு நேரங்களில் இரவு கண் விழித்துப் படிக்கும் குழந்தைகளுக்கு பழச்சாறு அல்லது கிரீன் டீ கொடுக்கலாம். வெந்நீரில் தேன் கலந்தும் கொடுக்கலாம். அதனால்தான் 'அசதிக்கு சுடர் தந்த தேன்’ என தேனின் தனிச்சிறப்பை பாரதிதாசன் பாடியிருக்கிறார். இதில் இருக்கும் வைட்ட மின்கள்... சோர்வை விரட்டி உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்'' என்று சொல்லி, தினமும் மூன்றுவேளைக்கு குழந்தைகளுக்கான சித்த மருத்துவ உணவுப் பரிந்துரை யையும் தந்தார் (பார்க்க பெட்டிச் செய்தி)!

என்ன தாய்க்குலங்களே... மொத்தத்தையும் குறித்துக் கொண்டீர்கள்தானே..? இனி உங்கள் பட்டுக்குட்டியின் வளர்ச்சி... உங்கள் கையில்தான்!

சித்தமருத்துவ உணவுப் பரிந்துரை!

இனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்!

காலை...

இட்லி, இடியாப்பம், அரிசி புட்டு, கேழ்வரகுப் புட்டு என ஆவியில் வெந்த உணவு வகைகள். புதினா சட்னி சைட் டிஷ் நல்லது. கொழுப்புப் பொருட்களை கூடுமானவரையிலும் தவிர்ப்பது நல்லது.

மதியம்...

பருப்பு, நெய், கீரை, பழங்கள் என எல்லா ஊட்டச்சத்துகளும் இணைந்த முழுமையான உணவு. அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற நம்நாட்டுக் காய்கறிகளே சிறந்தவை. கீரை வகை ஏதாவது ஒன்று இருப்பதுடன், மிளகு ரசம் சேர்க்கலாம். வெயில் காலமென்றால்... எலுமிச்சை ரசம், மோர் நல்லது. தயிரைத் தவிர்க்கலாம்.

இரவு...

சப்பாத்தியுடன் பழங்கள் சாப்பிடலாம்.