Published:Updated:

அபார்ட்மென்ட் கட்டினாலும்... கூட்டுக்குடும்பம்தான்!

புகுந்த வீடு - 8

அபார்ட்மென்ட் கட்டினாலும்... கூட்டுக்குடும்பம்தான்!

புகுந்த வீடு - 8

Published:Updated:

குடும்பத் தலைவிகளின் 'ப்ளாஷ்பேக்’ தொடர்  

##~##

தினேழு வயதில் திருமணம் முடித்து, கணவரின் நான்கு தம்பிகள், அவர்களின் மனைவிகள், அவர்களின் 15 பிள்ளைகள் என்று எல்லோருக்கும் நல்ல தாயாக உருவெடுத்து, மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தின் அசைக்க முடியாத ஆணிவேராக வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்... புதுக்கோட்டை கீழ நான்காம் வீதி கமலா. இங்கே, தன் புகுந்தகத்தின் அனுபவங்களை, அந்தக் கூட்டுக் குடும்பத்தை கட்டிக் காப்பாற்றும் ரகசியங்களை... உங்களுக்காக பகிர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் மலேசியா சிட்டிசன். எங்கப்பா அம்மாவுக்கு என்னையும் சேர்ந்து மொத்தம் 12 பிள்ளைகள். உலகப் போர் நடந்தப்போ, 'செத்தாலும் எல்லோரும் இந்தியாவுல சாவோம்'னு சொந்த ஊரான அரியலூர் பக்கமிருக்கிற வாரணவாசிக்கு வந்துட்டோம். கொஞ்ச நாள்ல நாலு பேர் தவிர, மீதி அண்ணன், அக்காவெல் லாம் மலேசியாவுக்கே போயிட்டாங்க. என்னை பிறத்தியில, அதுலயும் தூரத்தில இருக்கற புதுக்கோட்டையில கட்டிக் கொடுத்தாங்க.

அப்ப எனக்கு 17 வயசு, இவருக்கு 19. இவ ரோட தம்பி, தங்கச்சி எல்லாம் நண்டுசிண்டுங்க. கடைசி கொழுந்தனாருக்கு ஆறு வயசுனா பார்த்துக்கோங்க. எல்லா வாண்டுகளும்... 'அண்ணி அண்ணி'னு ஆசையா ஒட்டிக்கிச்சுங்க. பூக்கடை வெச்சிருந்த மாமனார், காலையிலயே கிளம்பி போயிடுவாரு. மாமியாரும் வயலுக்குப் போயிடுவாங்க. வீட்ல உள்ள வேலைகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியா இருக்கும். மாமனார் காலையிலயும் ராத்திரியிலயும் இட்லி தான் சாப்பிடுவார். ஒருநாள் உடம்பு சரியில்லாததால... வெளியில மெஷினுல கொடுத்து இட்லிக்கு மாவு அரைச்சுட்டேன். இட்லியை எடுத்து வாயில வெச்ச மாமனாரு, நேரா சமையற்கட்டுக்குப் போய், இட்லி மாவை எடுத்து ரோட்டுல ஊத்திட்டு சாப்பிடாம படுத்துட்டாரு. அன்னிலயிருந்து வெளியில மாவு அரைக்கற வேலையே வெச்சுக்கல. ஆட்டுக்கல்லுதான்.

அபார்ட்மென்ட் கட்டினாலும்... கூட்டுக்குடும்பம்தான்!

ஆனா... அதுக்குப் பிறகு என் வேலைகளில் கொழுந்தன்களும் பங்கெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் மாவு அரைச்சுக்கிட்டு இருந்தா... ஒரு தம்பி வந்து மாவு ஆட்டுவார். நான் வீட்டைக் கூட்டினா, இன்னொரு தம்பி முற்றத்தைக் கூட்டுவார். சமையலில் கஷ்டப்படும்போதெல்லாம்... நாத்தனார் வந்து உதவி செஞ்சாங்க. அந்த சந்தர்ப்பத்துலதான்... 'என்னிக்கும் எல்லாரையும் இப்படி ஒண்ணாவே கடைசி வரை வெச்சுக்கணும்'னு முடிவெடுத்தேன். அதைத்தான் இன்னிவரை கடைப்பிடிக்கிறேன்!''

- கமலாவின் பெருமூச்சில் நிம்மதியும் கலந்திருந்தது.

''பொறந்த வீட்டுக்கு போறது பத்தியோ, வீட்டுக்காரரோட சினிமா, நாடகம்னு வெளில போறது பத்தியோ நினைச்சுகூட பார்க்கல. ஒரு கட்டத்துல மனசு ஆசைப்பட்டுச்சு. ஆனா... 'சின்னபுள்ளைங்க இருக்கிற இடத்துல அப்படியெல்லாம் போகக் கூடாது'னு கறாரா சொல்லிட்டாங்க மாமியார். ரெண்டு நாளைக்கு மூஞ்சை தூக்கி வெச்சுகிட்டு திரிவேன். மூணாவது நாளு பூக்கடையிலருந்து வரும்போதே, 'உன் வீட்டுல இருந்து தகவல் வந்துச்சு, உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்’னு சத்தமா சொல்வார் வீட்டுக்காரர். 'அவனையும் கூட்டிகிட்டு போய் உங்கப்பாவை பார்த்துட்டு வாடி’னு அனுப்பி வைப்பாங்க மாமியார். நேரா ஊருக்குப் போனா... தடபுடலா வரவேற்பார் அப்பா. அவருக்கு உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கும். இவருதான் பொய் சொல்லி வெளியில கூட்டிகிட்டு வந்திருப்பாரு. அப்புறமென்ன... திருச்சியில படம் பார்த்துட்டு, ஜவுளிக் கடைக்கு போய் புடவை எடுத்துகிட்டு வீடு திரும்புவோம். ஆனா, அதுக்கு பிறகு... தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கும் தடை போட்டுட்டு ஒட்டுமொத்த குடும்ப நலன் பத்தி மட்டுமே நானும் நினைக்க ஆரம்பிச்சேன்'' என்றவர்,

''ஒரு சின்ன பூக்கடையை வெச்சு எல்லாரும் எப்படி பிழைப்பு நடத்தறதுனு நெனைச்சப்பதான் இன்னொரு இடம் விற்பனைக்கு வந்துச்சு. ரெண்டாவது கொழுந்தனார், அந்த இடத்தை வாங்கி பூ மொத்த வியாபாரம் பண்ணலாம்னு ஆசைப்பட்டாரு. உடனே என் நகைகளைக் கழட்டி கொடுத்தேன். துணிஞ்சு இடத்தை வாங்கி, பூ மொத்த வியாபாரத்தை ஆரம்பிச்சாரு. அதுதான் வளர்ந்து இன்னிக்கு பல கடைகளா பெருகி நிக்குது. ஒவ்வொரு கொழுந்தனாரும் பெரிய ஆளா ஆனவுடனே... பேக்கேஜிங், சீவல், கேபிள்னு ஒவ்வொண்ணா ஆரம்பிச்சோம். இதுக்கிடையில எல்லோருக்கும் திருமணம் ஆயிடுச்சு. அதனால எதுக்கு யார் பேர் வைக்கிறதுனு குழப்பம் வந்துடக் கூடாதுனு புதுக்கோட்டையை கட்டிக் காப்பாத்துற புவனேஸ்வரி அம்மன் பெயர்லயே... புவனா கேபிள், புவனா பேக்கேஜிங், புவனா கேபிள்னு ஆரம்பிச்சோம்'' என்ற கமலா,

அபார்ட்மென்ட் கட்டினாலும்... கூட்டுக்குடும்பம்தான்!

''ஆச்சு... பல வருஷங்கள் உருண்டோடியாச்சு. ஆனாலும், புருஷன கூப்பிட்டுகிட்டு தனியா போகணும்னு ஓரகத்திங்க யாருமே நினைக்கல. 'அக்கா, மாமா'னு எங்கள சுத்தியே இருக்கறாங்க. இவரு புடவை எடுத்தாலும் அஞ்சு புடவைதான் எடுப்பாரு, வேட்டி எடுத்தாலும் அஞ்சு வேட்டிதான் எடுப்பாரு. யாரும் தனிப்பட்ட முறையில புடவையோ... நகையோ எடுத்ததில்லை. பணம் வரும்போது எனக்கு ரெண்டு பவுன் எடுத்தா, அடுத்த முறை ரெண்டாவது ஓரகத்திக்கு, அதுக்கு அடுத்த முறை மூன்றாவது ஓரகத்திக்குனு வரிசையா அஞ்சு பேருக்கும் முறை வைச்சு எடுத்துடுவோம். அதே நேரத்துல ஒரு இடம் வாங்கணும்னா சீட்டு எழுதி போட்டு யார் பேர் வருதோ அவங்க பேர்ல வாங்கிடுவோம்!'' என்று ஒற்றுமையின் ரகசியத்தை உடைத்தார்.

''அஞ்சு பேருக்குமா சேர்த்து 15 பிள்ளைகள். இதுவரை என் தம்பிகளையும், தங்கச்சியையும் சேர்த்து 10 கல்யாணம் இவ செஞ்சு வெச்சுட்டா. எங்கம்மா மேல நாங்க எப்படி பாசமும் மரியாதை யும் வெச்சுருந்தோமோ, அதே மரியாதையை பாசத்தை இவ மேலயும் வெச்சுருக்கோம். ஆனா... இவளோ எங்கம்மாவைவிட இன்னொரு பங்கு அதிகமான அன்பையும் அக்கறையையும் இந்தக் குடும்பத்து மேல வெச்சுருக்கா'' என்ற கமலாவின் கணவர் கௌரிஷங்கர்,

''அத்தனை வருமானமும் வீட்டுக்குள்ள வந்துடும். ஒரே வரவு - செலவுதான். அதுல என்னாச்சு ஏதாச்சுனு யாரும் தலையிட மாட்டாங்க. நாங்க யாரும் அதிகமா படிக்கலைங்கிறதால எங்க பசங்களை நல்லா படிக்க வைக்கிறோம். பி.இ, எம்.பி.ஏ, எம்.எஸ்சி,  எம்.காம், எம்.சி.ஏ-னு பல பட்டதாரிங்க இங்க இருக்காங்க. செல்போன் வாங்கினாகூட எல்லோருக்கும் ஒரே மாதிரி வாங்குறதுனு எங்கள மாதிரியே பசங்களும் ஒற்றுமையா இருக்காங்க'' என்ற கணவரைத் தொடர்ந்தார் கமலா.

''இதே தெருவில அஞ்சு வீடு வாங்கி அபார்ட்மென்ட் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாலும்கூட, நாங்க யாரும் தனியா பிரிஞ்சு போய் வாழணும்னு நெனைக்கல. எங்க காலம் வரைக்கும் என் மாமனார் -  மாமியார் வாழ்ந்த இந்த வீட்ல தான்னு தீர்மானமா இருக்கோம்!'' என்று சொல்லி முடித்தவர்,

''நாங்க இவ்வளவு ஒற்றுமையா, சந்தோஷமா இருக்கறதை பெருமையா நினைக்குறோம். ஆனா, எங்க வீட்டுக்கு பெண் கொடுக்கத் தயங்கறாங்க. பெரியகுடும்பத்துல பொண்ணு கொடுத்தா... அவ ரொம்ப கஷ்டப்படுவானு நினைக்கறாங்க. ஒற்றுமையா இருக்கறதே இந்த காலத்துல தப்பா போயிடுச்சு பார்த்தீங்களா?!'' என்று சமுதாயத்தின் மீதான வருத்தத்தை கேள்வியாக்கினார். ஆனால், இதற்கு நம்மிடம் பதில் இல்லை!  

- கரு.முத்து         படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism