Published:Updated:

"என் படைப்புகளை புத்தகமாக வெளியிட வழிகாட்டுங்களேன்...''

ஹெல்ப் லைன் ஆல்-இன்-ஆல் உதவிப்பகுதி

"என் படைப்புகளை புத்தகமாக வெளியிட வழிகாட்டுங்களேன்...''

ஹெல்ப் லைன் ஆல்-இன்-ஆல் உதவிப்பகுதி

Published:Updated:
##~##

''பள்ளி, கல்லூரி கவிதைப் போட்டிகளில் ஏராளமான பரிசுகள் வாங்கியிருக்கிறேன். ஆனால், கல்லூரியில் வெளியாகும் சிறப்பு மலர் தாண்டி, என் கவிதைகளை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை. திருமணத்துக்குப் பின் கணவரின் ஊக்குவிப்பில் மறுபடியும் எழுத துவங்கியுள்ளேன். சமீபத்தில் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததில்இருந்து, 'உன்னுடைய கவிதைகளையும் புத்தகமாக வெளியிடலாமே’ என கணவர் ஆர்வமூட்டுகிறார். கவிதை எழுதுவது, புத்தகமாக வெளியிடுவது இவற்றில் அனுபவ ஆலோசனைகள்  'அவள் விகடன்’ மூலமாகக் கிடைக்குமா?''

 - ராதிகா சிவராமன், சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவிஞர் பா.விஜய்:

"என் படைப்புகளை புத்தகமாக வெளியிட வழிகாட்டுங்களேன்...''

''கவிதை எழுத வேண்டும், அதை அச்சில் வெளியிட வேண்டும் என்று விழைபவர்கள் அதிகம் எதிர்கொள்ளும் விமர்சனம்... தமிழில் கவிதை படிப்பவர்களைவிட எழுதுபவர்களே அதிகம் என்பதுதான். ஆனால், நம் ஒவ்வொருவரின் பார்வை, வாழ்க்கை, கடந்து வந்த பாதை, அனுபவம் இவற்றை பொதுவில் வைக்கவும் அதில் கவிதை வரிகளாக நம் திறமையை வெளிப்படுத்தவும் உரிமை இருக்கிறது. அந்த எழுத்தின் மூலமான அடையாளம், அங்கீகாரம் இவற்றால் நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால்... சரியான திட்டமிடல், தயாரிப்பு இவற்றை மேற்கொண்டால் மட்டுமே இம்முயற்சியில் வெற்றிபெற முடியும்.

புதிய எழுத்தாளர்களின் முன்பாக இரண்டு சவால்கள் இருக்கின்றன. தங்களது படைப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பதிப்பகம்தோறும் ஏறி இறங்குவது. அல்லது, சொந்தக் காசில் ரிஸ்க் எடுத்து வெளியிடுவது. இதில் ஜெயிக்க நீங்களோ... உங்களது எழுத்துக்களோ வாசக வட்டத்தில் ஓரளவேனும் பரிச்சயமாகி இருக்க வேண்டும் என்பதால், முதல் வெளியீடு என்பது பலருக்கும் முதல் பிரசவம் போல படுத்தி எடுத்துவிடும். முதல் கவிதை நூலை வெளியிடு வது எளிது என்ற போதிலும், அது பலருக்கும் கையைக் கடித்த அனுபவமே! உங்களுக்கே என ஒரு கவிதை நூலை வாழ்க்கையில் பார்த்தாக வேண்டுமெனில்... இம்முயற்சியில் முதலும் கடைசியுமாக இறங்கலாம். மற்றபடி, உங்களுக்கென ஒரு வாசகர் வட்டம் இல்லாமல், இலக்கிய உலகில் எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ள சூழலில் புத்தகத்தை வெளியிடுவதென்பது... எழுத்துலகில் உங்களை மறுபடியும் எழவிடாது முடக்கிப் போட்டுவிடும்.

முதற்படியாக பலனை எதிர்பாராது உங்கள் எழுத்துக் கடமையை வெளிப்படுத்த பழகுங்கள். இதற்கு வெகுகாலமாக இருக்கும் எளிய உபாயம், சிற்றிதழ்கள். தமிழில் மட்டும் சுமார் மூவாயிரம் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து உங்கள் எழுத்துக்கள் சுலபமாக வெளிவரச் செய்யலாம். பரிசோதனை முயற்சியில் உங்களைப் போன்ற தொடக்க நிலை எழுத்தாளர்கள் பலரோடு, பல வீரிய எழுத்தாளர்களும் இந்த பாதையில் கலந்து வருவார்கள் என்பதால், உங்கள் எழுத்துக்களை ஒப்பிட்டு புடம்போட சிற்றிதழ்கள் களம் அமைத்துக் கொடுக்கும். அடுத்ததாக, உங்கள் பகுதியில் இலக்கிய கூட்டம் எது நடந்தாலும் ஆர்வத்தோடு கலந்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் பார்வையாளராகவும், பிறகு பங்கேற்பாளராகவும் முன்னேறுங்கள். அனுபவசாலிகள் பேச்சைக் கேட்பதும் அவர்களில் ஒருவராக மேடையேறுவதும் உங்களைப் பிரபலப்படுத்தும், இன்னும் கற்றுக்கொள்ளத் தூண்டும்.    

"என் படைப்புகளை புத்தகமாக வெளியிட வழிகாட்டுங்களேன்...''

நவீன காலத்துக்கு ஏற்ற, பலரும் பரிசோதித்து வெற்றி காணும் உபாயம்... இணையம், பிளாக், முகநூல் வாயிலாக சாத்தியமாகிறது. உதாரணமாக, உங்கள் கவிதைக்கென தனியாக ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி ஒரு சிறு கவிதையேனும் பதிவேற்றுங்கள். கவிதை உலகு சார்ந்தவர்களோடு நட்பு வட்டத்தில் இருங்கள். உங்கள் தனித்திறமை, எழுத்தாளுமை, வாசகர் வட்டம், பலதரப்பட்ட விமர்சனங்கள், சிபாரிசுகள், பிரபல எழுத்தாளர்களின் மோதிரக் குட்டு, பதிப்பகத்தார் பார்வை என பலவும் ஒரு சேர இங்கே வாய்ப்பாகும். நான் இன்றும் இந்த முயற்சியை தொடர்கிறேன். வாசகர் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படி வெளியான என் கவிதைகளை 'முகப்புத்தகம்’ என்ற பெயரிலேயே தனிப்புத்தகமாக அச்சில் ஏற்ற இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அடுத்ததாக, வெகுஜன பத்திரிகை பக்கம் திரும்பலாம். உங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு கவிதைகளை இங்கே அனுப்புங்கள். உங்களுக்கென தனி அடையாளம் நிற்கும் வரை, பத்திரிகையின் பல்ஸ் பார்த்து அவர்களுக்கென பிரத்யேகமாக எழுதிய கவிதைகளை அனுப்புவதே நல்லது. இதற்கு அந்த பத்திரிகை மற்றும் அவற்றில் வெளியாகும் கவிதைகளை வாசித்து வந்தால் போதும். இப்படி பிரபல பத்திரிகைகளில் வெளியான வாசகர் கவிதை முயற்சிகளை முன்வைத்து முன்னணி பதிப்பகங்களில் கவிதை நூல் வெளியிட்டவர்கள் உண்டு.

தனித்துவம் கிட்டும் வரை தேடலோடான காத்திருப்பு முக்கியம். கதைகள், கட்டுரைகள் என பல தரப்பிலான வாசிப்பையும் விசாலமாக்குங்கள். சிறப்பான எழுத்து மற்றும் உங்கள் பெயருக்கென ஓரளவு வாசகர் பரிச்சயம் இவற்றை நிச்சயமாக்கியதும்... உங்கள் முதல் கவிதை நூலை வெளியிட்டால், எழுத்துலகில் உங்களுக்கென தனி மேடை நிரந்தரமாகும். கவிதை நூல் கனவு கைகூடும்!''

இந்தப் பகுதிக்கு உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி... 'அவள் ஹெல்ப் லைன்’ அவள்விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism