Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் 17

அளவுக்கு மீறிய இரக்கம்... அவஸ்தைக்கு வழி!டாக்டர் ஷாலினி

ரொமான்ஸ் ரகசியங்கள் 17

அளவுக்கு மீறிய இரக்கம்... அவஸ்தைக்கு வழி!டாக்டர் ஷாலினி

Published:Updated:
##~##

ல பெண்கள், 'ஐயோ... என் கணவன் குழந்தை மாதிரி; அவனுக்கு எல்லாமே நான்தான்; அவனை நல்லவனா மாத்தணும்’ என்றெல்லாம் கசிந்துருகி, அன்னை தெரசா ரேஞ்சுக்கு தாய்மையைக் கொட்டி, தான் கவிழ்ந்து போவார்கள்.

 'ஏன் இப்படி நடந்து கொண்டால் என்ன தவறு?' என்று கேட்கத் தோன்றுகிறதுதானே?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை மிகத் தெளிவாக ஏற்படுத்தி வைத்த, 'உன் குழந்தைக்கு நீதான் பொறுப்பு, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீதான் அதைக் காத்து ரட்சித்து, பேணி பராமரித்து, நல்வழிப்படுத்தித் தர வேண்டும்’ என்கிற இந்த ஆட்டத்தை இவர்கள் மாற்றி, தன் காதலன்/கணவனுக்கு பிரயோகிக்கிறார்கள். கணவனை, குழந்தையைப் போல அரவணைத்து, அன்பைப் பொழிந்தால் பரவாயில்லை. ஆனால், அவனையே தன் குழந்தையாக நினைக்கிறார்கள் என்பதுதான் ஆபத்து!

குழந்தைக்கும் கணவனுக்கும் வித்தியாசங்கள் உண்டு. குழந்தை என்பது மரபணு பந்தத்தினால் வருகிற ஒரு உயிரியல் (Biological)  பந்தம். நம் குழந்தை, நம் மரபணுக்களை சுமக்கின்றன. ஆனால், உறவுக்குள் திருமணம் செய்த தம்பதிகளைத் தவிர, மற்றவர்களைப் பொறுத்தவரை, கணவனுக்கும் மனைவிக்கும் எந்தவித மரபணு சம்பந்தமும் இருப்பதில்லை. அதனால், இந்த உறவும் வெறும் ஒரு சோஷியல் பந்தம்தானே தவிர, இதில் எந்த உயிரியல் நிபந்தனைகளும் கிடையாது. அதனால்தான் தாய் - மகன், சகோதரன் - சகோதரி என்ற எந்த உறவுக்கும் இல்லாத சலுகையாக, கணவன் - மனைவி உறவில் ஒருவர் சரியில்லை என்றால், அந்த உறவை துண்டித்துக் கொள்ள முடியும். ஆனால், 'ஐயோ, அவன் என் குழந்தை மாதிரி’ என்று நினைக்கும் பெண்ணால், எப்படி அவனை விட்டு வெளியேற முடியும்?

ரொமான்ஸ் ரகசியங்கள் 17

பெண்கள் மிக அதிகமாக செய்யும் இன்னொரு தவறு, 'ஐயோ பாவம், என்னை விட்டா அவனுக்கு வேற யார் இருக்கா?’ என்று அநியாயத்துக்கும் இரக்கப்பட்டு, அவனோடு சேர்ந்து அவளும் தன் வாழ்வை தொலைத்துவிடுவதுதான். அப்படிப் பல பெண்கள் இருக்கிறார்கள், இந்த கலிகாலத்திலும். சமியின் கதையையே கேளுங்களேன்.

சமியின் கணவன் சரியான பயந்தாங்கொள்ளி, சோம்பேறி, பொறுப்பே இல்லாமல் நாள் முழுக்க சோபாவில் சாய்ந்து தொலைக்காட்சி பார்க்கும் ஒரு 'கவுச் பொட்டேட்டோ' (Couch potato). வேலைக்கும் போவதில்லை, மனைவிதான் வேலைக்கு போய்விட்டு களைத்துப் போய் வருகிறாளே, அவளுக்கு வீட்டு வேலையில் உதவுவோமே என்கிற கரிசனமும் இல்லை. சின்ன வயதிலிருந்தே அவனுக்கு டயாபடிஸ். சரியாக சிகிச்சை செய்துகொள்ளாததால் நரம்புகள் பாதித்து, கலவி கொள்ளவே முடியாத ஆண்மைக் கோளாறு. அதனால் சமிக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது, திருமணமாகி முழுதாக நான்கு ஆண்டுகளுக்கு. இந்த லட்சணத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, நாத்தனார் கணவரின் நையாண்டி பேச்சு என்று எக்கச்சக்க டென்ஷனில் சமிக்கும் இளம் வயதிலேயே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது.

''இத்தனை கஷ்டங்களையும் தாங்கிட்டு வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் கிடைக்குது உனக்கு? இவனை விட்டுவிட்டு வா, நான் உனக்கு வேறொரு கல்யாணம் செய்து வைக்கிறேன்...'' என்று சமியின்அம்மா எவ்வளவோ சொன்னபோதும், சமிக்கு மறுமணம் பற்றி நினைக்கவே மனம் ஒப்பவில்லை. ''சரி, என் பொண்ணா மட்டுமாவது பத்திரமா நிம்மதியா இரு'' என்று அவள் அம்மா கேட்டபோதும், அவளால் தன் கணவனை விட்டு வரமுடியவில்லை.

ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அவன் திருந்திவிட மாட்டானா, நம் வாழ்வு செழித்துவிடாதா என்கிற நப்பாசையிலேயே தன் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தாள் சமி. வருடங்கள் ஓடின. எதுவும் மாறவில்லை. மறுமணம் செய்துகொண்ட பல பெண்களைப் பார்த்தபோது, சமிக்கு லேசாக மனம் மாற ஆரம்பித்தது. ஆனால், அதற்குள் அவளுக்கு வயது அதிகமாகிவிட்டதால், வாய்ப்புகள் குறைந்துவிட்டது... சோகத்தின் உச்சம்!

 - நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism