Published:Updated:

மாவு உற்பத்திக்கு மானியத்துடன் கடன்!

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

மாவு உற்பத்திக்கு மானியத்துடன் கடன்!

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

Published:Updated:

பிஸினஸ் கேள்வி - பதில்

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

''கம்பு, கேழ்வரகு, சோளம், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, முழு உளுந்து, வரகு இவற்றைப் பயன்படுத்தி மாவு அரைத்து சின்ன அளவில் விற்பனை செய்கிறேன். இதை எப்படி விரிவுபடுத்துவது? தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்குமா?''

- எலிசபெத்மேரி வில்லியம் ராஜ், பெண்ணாடம்,
ஜெ.சகுந்தலா, சென்னை

''இரண்டு சகோதரிகளும் ஒரே கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். மிகவும் பயனுள்ள கேள்வியும்கூட! கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு போன்றவை சிறுதானியங்கள் வரிசையில் வருபவை. இவற்றை ஆங்கிலத்தில் மில்லட் (Millet) எனக் கூறுவார்கள். நாம் அரிசி மற்றும் கோதுமையைத்தான் உணவாக உட்கொள்கிறோம். அரிசி, கோதுமையின் பயன்பாடுதான் இங்கே அதிகமாக இருக்கிறது. ஆனால், இவற்றைவிட அதிகமான, நல்ல சத்துக்கள் (நியூட்ரியன்ட்) கொண்டவை சிறுதானியங்கள். ஆனால், 1960-களில், அதாவது 'பசுமைப் புரட்சி' என்கிற ஒன்று இந்திய விவசாயத்தில் அறிமுகமாவதற்கு முன்பு இருந்த சிறுதானிய உற்பத்தி... 60 சதவிகித அளவுக்கு தற்போது குறைந்திருக்கிறது என்பதுதான் வருத்தமான செய்தி.

மாவு உற்பத்திக்கு மானியத்துடன் கடன்!

இந்நிலையில், காலங்கடந்தாவது விழித்துக் கொண்ட நம்மவர்கள், சிறுதானியங்களின் பெருமையை எடுத்துச் சொல்ல... இவற்றிலிருக்கும் நியூட்ரியன்ட் அளவை கருத்தில் கொண்டு, 'இன்சிம்ப்' (INSIMP-Initiative for Nutritional Security through Intensive Millets Promotion) என்கிற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. நியூட்ரிஷனல் அளவு அதிகம் கொண்ட மில்லட் வகை சிறுதானியங்களை தீவிர உற்பத்தி செய்து பாதுகாக்கும் இத்திட்டம், சென்ற வருடம் முதல் அமலில் உள்ளது.

இத்திட்டத்தின்படி, சிறுதானியங்களை வீரிய உற்பத்தி செய்ய முன்வரும் விவசாயிக்கு நிலம் மட்டும் இருந்தால்போதும், ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2,000 - 3,000 ரூபாய் வரையிலான உரம், பூச்சிக்கொல்லி, விதைகள் ஆகிய அனைத்தும் இலவசமாகத் தருவார்கள். இதன் மூலம் சிறுதானிய வகைகளை விவசாயிகள் பெருக்கலாம். மேலும் விவரங்கள் அறிய, உங்கள் ஊருக்கு அருகில் உள்ள விவசாயத் துறை அதிகாரிகளை அணுகவும்.

அடுத்ததாக, நீங்கள் கேட்டுள்ள சிறு தானிய வகை மாவு உற்பத்தித் தொழில் பற்றிச் சொல்கிறேன். இத்தானியங்களை அப்படியே அரைத்து மாவாக விற் கலாம். மேலும் இவற்றை முளைகட்டி, நன்கு காய வைத்து, பிறகு மாவாக அரைத்தும் விற்கலாம். அதன் விவரங்கள் அனைத்தையும் உங்கள் தயாரிப்பில் இணைத்து விற்பனை செய்யுங்கள். மாவுப்பொருட்களை துளி ஈரம் இல்லாத, காற்றுப் புகாத பாதுகாப்பான முறையில் பேக் செய்ய வேண்டும். இல்லையெனில், சில நாட்களில் மாவில் வண்டு அல்லது பூச்சி விழுந்து, தொழிலைப் பாதிக்கும். 60 மைக்ரானுக்கு அதிகமான பாலிதீன் பைகளை உபயோகிக்க வேண்டும். அவை ஃபுட் கிரேடாக இருக்க வேண்டும். சோளத்தில் இருந்து பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயாரிப்பது பற்றிய வழிகாட்டலுக்கு, ஹைதராபாத்தில் உள்ள 'டிஎஸ்ஆர்' (DSR -The Directorate of Sorghum Research)  என்கிற நிறுவனத்தை அணுகலாம். வலைதள முகவரி: www.sorghum.res.in

எங்கெல்லாம் இத்தானியங்கள் கிடைக்கும், அவற்றை எந்தெந்தப் பருவத்தில் வாங்கி வைக்க வேண்டும் என்கிற அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு, தொழில் தொடங்க முயற்சியுங்கள். உங்கள் தேவையைக் கருத்தில் கொண்டு, உரிய ஆவணங்களுடன் கடன் கேட்கும்பட்சத்தில், வங்கிகள் நிச்சயமாக உதவி செய்யும். நீங்கள் 8-ம் வகுப்பு முடித்து 45 வயதுக்குள்ளாக உள்ள பெண் என்றால், உற்பத்திக்கு 5 லட்சம் வரை 'யுஒய்இஜிபி' (UYEGP-Unemployed Youth Employment Generation Programme) என்கிற திட்டத்தில் கடன் கிடைக்கும். இதில் உங்கள் பங்கு 5 சதவிகிதம், மானியம் 15 சதவிகிதமாக இருக்கும். நீங்கள் படிக்கவில்லை. ஆனால், 45 வயதைக் கடந்தவர் என்றாலும் பரவாயில்லை... இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்' (PMEGP) மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளது. அத்திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் உங்கள் பங்கு 5%, மானியம் 25% - 35% வரை.

மாவு உற்பத்திக்கு மானியத்துடன் கடன்!

இது, உணவு பதப்படுத்தும் தொழில் என்பதால், மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான அமைச்சகத்தின் மூலமும் உதவி பெறலாம். இவர்கள் பயிற்சி மற்றும் தொழிலுக்கான மானியம் 25%    வரை அளிக்க உள்ளனர். உங்கள் தொழிலுக்கான முதலீடு 2 கோடி வரைகூட போகலாம். அதற்கு அதிகபட்சமாக 50 லட்சம் வரை மானியம் உண்டு.  'டிக்' (TIIC) என்றழைக்கப்படும் 'தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்' மூலமாகவும் கடன் பெறலாம். இக்கழகம் சிறு கடன்காரர்களுக்கு வகுத்துள்ள சிறப்புத் திட்டத்தின்படி, 2 லட்சம் வரை தனிநபர் ஜாமீனிலும், 5 லட்சம் வரை இரு நபர் ஜாமீனிலும் கடன் கொடுக்க தயாராக இருக்கிறது. விவரங்களுக்கு, உங்கள் ஊரில் உள்ள இந்த 'டிக்’ அலுவலகத்தை அணுகவும்.

விவரங்கள் சேகரியுங்கள், சரியான திட்ட அறிக்கையை தயார் செய்யுங்கள், மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகளை நேரில் அணுகுங்கள்!''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’ கேள்வி  பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism