Published:Updated:

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

Published:Updated:
##~##

மாமல்லபுரம் சென்றால், ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் உளியோசை, உங்கள் உள்ளத்தை உருக்கும். ஆம், வீதியெங்கும் விரிந்திருக்கும் சிற்பக் கூடங்களில் உங்களைக் கவர்ந்திழுக்கும் உருவங்களை உருவாக்கும் சிற்பிகள் குவிந்திருக்கும் வரலாற்று பூமி! பெரும்பாலும் ஆண்களே இப்பணியில் ஈடுபட்டிருக்க.. இவர்களுக்கு நடுவே,

 'எங்களாலும் முடியும்' என்றபடி தமிழக அளவில் ஆங்காங்கே பெண்களும் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் வெளிநாட்டுப் பெண்களும் வந்து நிற்பது ஆச்சர்யமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாமல்லபுரத்தில் உள்ள 'கிரியேட்டிவ் ஸ்கல்ப்டர்ஸ்’ (Creative Sculptors) என்கிற நிறுவனம், உலகளவில் உள்ள பல்வேறு நாட்டு சிற்பக்கலைஞர்களை ஒன்றிணைக்கும் 'குளோபல் ஸ்டோன் வொர்க்ஷாப்’ என்கிற அமைப்புடன் சேர்ந்து, சிற்பக்கலை பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. இதில், நம்நாட்டு சிற்பக் கலைஞர்களிடம்... செதுக்கும் கலையின் அழகை ஆழமாக, நுட்பமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டினர்!

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

முகாம் பற்றிப் பேசிய 'கிரியேட்டிவ் ஸ்கல்ப்டர்ஸ்' நிறுவனர் டி.பாஸ்கரன், ''ஆர்வம், திறமை, அழகியல் உணர்ச்சிகள்... கூடவே நிறைய பொறுமையும் சிற்பக் கலைக்கு அவசியம். அப்போதான் சிற்பத்தில் உணர்ச்சியைக் கொண்டு வர முடியும். கிட்டத்தட்ட, உலகம் முழுவதிலும் இருந்து ஐம்பதுக்கும் மேலான சிற்பிகள், இந்த 'குளோபல் ஸ்டோன் வொர்க்ஷாப்’ அமைப்பில் உறுப்பினர்களா இருக்காங்க. இத்தாலியைச் சேர்ந்த ஸ்டெபானோ என்பவர்தான் தலைமை ஏற்று வழிநடத்தறார். உலக அளவில் இந்த முகாம்களை ஏழு நாடுகள்ல மட்டுமே நடத்துறாங்க. இதுல இந்தியாவுல ஒரே ஒரு இடத்துலதான் நடக்குது. அது நம்ம மாமல்லபுரம்கிறது... நமக்கெல்லாம் பெருமையான விஷயம். இது மூணாவது வருஷ பயிற்சி முகாம். வெளிநாட்டுல இருந்து மொத்தம் 14 பேர் வந்திருக்காங்க.

தொடக்க விழாவுக்கு பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருது மற்றும் ம.தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் 'மல்லை' சத்யா ரெண்டு பேரும் வந்து கலந்துகிட்டது, ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம்'' என்று பரவசக் குரலில் சொன்ன பாஸ்கரன், வெளிநாட்டுக் கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களில் ஏழு பேர் பெண் கலைஞர்கள்!

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

ஃபிரான்ஸிலிருந்து வந்திருக்கும் ஃபிரான்சஸ் பிரிஸ்டோவ், ''எனக்கு 54 வயதாகிறது. நான் ஹோம்மேக்கராக இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். ஒருவன் இன்ஜினீயராக இருக்கிறான். மற்றவன், பிஸினஸில் ஈடுபட்டுள்ளான். மகள், சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறாள்.

சின்ன வயதிலிருந்தே ஓவியம் வரைவது என்றால், எனக்கு மிகுந்த இஷ்டம். அடுத்த கட்டமாக சிற்பம் செதுக்கும் ஆர்வம் வந்தது. இந்த அமைப்பில் சேர்ந்து, என்னுடைய ஓவியங்களை கல்லில் சிற்பமாக வடித்துக் கொண்டிருக்கிறேன்.

எங்களுக்கு உதவ தமிழகத்தைச் சேர்ந்த 65 சிற்பிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.  எங்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, மிக நுணுக்கமாகவும், மிகுந்த ஈடுபாட்டுடனும் சொல்லித் தருகிறார்கள். பல நாடுகளுக்குச் சென்று சிற்பங்களை வடித்திருந்தாலும், தமிழ்நாட்டில் இங்குள்ள கலாசார முறைப்படி, சிற்பங்கள் செய்வதை பெருமையாக நினைக்கிறோம்'' என்றவரின் பேச்சில் ஆர்வம் பொங்கி வழிந்தது.

உளி பிடிக்கும் வளைக்கரங்கள்!

அடுத்து நம்மிடம் பேசியது... லோட்டா நில்சன். ''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே ஸ்வீடன் நாட்டில்தான். எனக்கு இப்போது 25 வயதாகிறது. ஓவியத்தில் உள்ள ஆர்வத்தால் கலைத் துறையில் பட்டப் படிப்பை முடித்தேன். 5 ஆண்டுகளுக்கு முன், மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது... இங்கிருக்கும் சிற்பங்களைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். நாடு திரும்பிய நான், சிற்பம் செதுக்குவதற்கு கற்றுக்கொள்ள முயற்சித்தேன். ஆனால், எங்கள் நாட்டில் அதற்கான வாய்ப்புகள்  இல்லை. தொழிலதிபரான என் அப்பா மற்றும் மருத்துவரான அம்மா இருவரும்தான், இந்த அமைப்பில் சேர்த்தனர். இப்போது, என் ஆசைப்படியே சிற்பியாகி, கற்களில் சிற்பங்களை வடித்துக் கொண்டிருக்கிறேன். இக்கலையை, எங்கள் நாட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்காலத் திட்டம்'' என்று புன்னகைக்கும் லோட்டாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஞ்சா கெஸ்கினேன், ''இந்த 59 வயதிலும் ஓவியம் வரை வதில் மிகுந்த ஆர்வத்தோடுதான் இருக்கிறேன். நான் வரைந்த ஓவியங்களில சில, இப்போது என் கைகளாலேயே கற்சிற்பங்களாக உயிர்பெற்றிருப்பதைப் பார்க்கும்போது... பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் மட்டுமல்லாமல் என்னுடைய மகளும், இங்கே வந்து என்னுடனேயே இக்கலையைக் கற்றுக் கொண்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம்'' என்று சொல்லும் அஞ்சா கெஸ்கினேனின் கணவர் மற்றும் மகன் இருவரும், ஃபின்லாந்து நாட்டில் இசையமைப்பாளர்களாக இருக்கிறார்களாம்.

பாரம்பரிய சிற்பக்கலையை தொன்றுதொட்டுத் தொடர்ந்து வருவதுடன், அயல்நாட்டினருக்கும் கற்றுக்கொடுக்கும் தமிழக சிற்பிகளுக்கு வாழ்த்துக்களுடன், சல்யூட்!

- சா.வடிவரசு, படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism