Published:Updated:

மதிப்புக்குரிய மாற்றுத்திறனாளிகள்!

மதிப்புக்குரிய மாற்றுத்திறனாளிகள்!

மதிப்புக்குரிய மாற்றுத்திறனாளிகள்!

மதிப்புக்குரிய மாற்றுத்திறனாளிகள்!

Published:Updated:
##~##

வாழ்க்கையில் எல்லாம் வாய்க்கப் பெற்றும், ஏதாவது ஒரு குறையைச் சொல்லியே சலித்துக் கொள்ளும் தோழிகளும் இங்கு உண்டு. அத்தகையோருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உற்சாக டானிக்தான்... இந்தச் சகோதரிகள்.

 இயக்கம்தான் உடலின், உயிரின் அச்சாணி. அது பறிபோன நிலையிலும், முடங்கிவிடாமல், 'ஊனத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம்!’ என்று தங்களுக்கென தனிப்பாதை அமைத்து வாழ்க்கையை வசப்படுத்தியிருக்கும் இந்தச் சகோதரிகளுக்கு, நாம் அனைவருமே கடமைப்பட்டிருக்கிறோம்... வணக்கங்களையும் வாழ்த்துகளையும் சொல்வதற்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வருத்தப்பட விஷயமும் இல்ல... நேரமும் இல்ல!’

சென்னையைச் சேர்ந்த பிரபாவுக்கு எலும்பு வளர்ச்சி இல்லாததால்... கை, கால் முழுதாக வளர்ச்சி பெறவில்லை. அதனால் உயரம் இல்லை. நடக்க முடியாது. இவ்வளவு இன்னல்களையும் புறந்தள்ளி, இன்று ஃபேஷன் ஜுவல்லரி, ஆயில் பெயின்ட்டிங் பிஸினஸில் கலக்கி வருகிறார் பிரபா.

''நான் பிறந்த பத்து நாள்லயே கால்கள்ல எலும்பு முறிவு ஏற்பட்டுடுச்சு. அப்பாவும், அம்மாவும் வேதனையோடதான் வளர்த்தெடுத்தாங்க. அதை புரிஞ்சுக்கற வயசு வந்தபோது, அந்த வேதனை என்கிட்டயும் தொத்திக்கிச்சு. பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். 'மேல படிச்சு, மத்தவங்ககிட்ட வேலை பார்க்கறதைவிட, இருந்த இடத்துல இருந்துட்டே செய்ற சுயதொழில்தான் சரி வரும்'னு முடிவெடுத்தேன்.

சின்ன வயசுல இருந்தே ஓவியத்துல ஈடுபாடு உண்டு. அதனால பெயின்ட்டிங், ஆயில் பெயின்ட்டிங், ரிவர்ஸ் பெயின்ட்டிங்னு வகுப்புகளுக்குப் போனேன். 'நந்தினி வாய்ஸ்’ங்கற மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்போட உதவியால, அரசு பொருட்காட்சியில ஸ்டால் போட்டேன். என்னோட பெயின்ட்டிங் நல்லா விற்பனை ஆச்சு. 'ஜோதி மகளிர் சுய உதவிக்குழு’வோட சேர்ந்தும் பெயின்ட்டிங் விற்பனை செய்தேன். தொடர்ந்து ஜுவல்லரி கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் எல்லாம் போனேன். புதுவிதமான டிசைன்களில் ஃபேன்ஸி ஜுவல்ஸ் செய்து வித்தது... நல்ல லாபம் கொடுத்துச்சு. இப்போ வீட்டுலயே ஜுவல்லரி மேக்கிங் கிளாஸும் எடுக்குறேன்.

நாலு வருஷத்துக்கு முன்ன கவர்னர் கையால, 'சிறந்த சுயதொழில் முனைவோருக்கான விருது'ம், உடல் ஊனமுற்றோர் அறக் கட்டளையின் 'அசெண் டாஸ்’ அவார்டும் வாங்கினேன். இப்போ எனக்கு வருத்தப்பட விஷயமும் இல்ல, நேரமும் இல்ல!''

- தன் வகுப்பில் பிஸியாகிறார் பிரபா.

மதிப்புக்குரிய மாற்றுத்திறனாளிகள்!

குடும்ப வறுமை... போயே போச்!

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த மாலா, போலியோ தாக்குதலால் கால்களை இழந்தவர். 'வைக்கோல் கிரியேச்சர்ஸ்’ என்கிற பெயரில், வைக்கோலில் கலைப் பொருட்கள் செய்யும் புதுமையான தொழிலில் அசத்திக் கொண்டிருக்கிறார்!

''ஆறாம் வகுப்பு வரைக்கும் தத்தி, தவழ்ந்து ஸ்கூலுக்குப் போய் படிச்சேன். அதுக்கு மேல முடியல. அப்போ தாழ்வு மனப்பான்மையின் பிடியில இருந்த என்னை மீட்டுக் கொண்டு வந்தது... என் பாட்டி முனியம்மாதான். வைக்கோல் கலைப் பொருட்கள் செய்ற நுணுக்கத்தை அவங்கதான் கத்துத் தந்தாங்க. முதலீடே தேவைப் படாம பொறுமையும், கிரியேட்டிவிட்டியும், கொஞ்சம் வைக்கோலும் வெச்சே லாபம் பார்க்கற இந்த வித்தை, எனக்கு ஒரு ஊன்றுகோலாச்சு.

பிளேடு வெச்சு வைக்கோலை குட்டி குட்டியா கட் பண்ணி, ரசனையான கலைப் பொருட்களாக்குவேன். வள்ளுவர் கோட்டம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடந்த கண்காட்சியில முதன்முதலா ஸ்டால் போட்டேன். புதுமையான விஷயம்ங்கிறதால... இளம்பெண்கள்கிட்ட நல்ல வரவேற்பு. தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுக்களோடு சேர்ந்து என் படைப்புகளை விற்பனை செய்தேன். இப்போ, என் குடும்ப வறுமை... என்னால நீங்கியிருக்கு. என் அம்மாவுக்கும், பாட்டிக்கும் பெருமை தேடித் தந்திருக்கேன்!' என்றபோது நன்னம்பிக்கையில் மலர்ந்திருந்தது மாலாவின் முகம்.

சேர்ந்து செயல்பட்டா... கூடுதல் பலம்!

ஸ்வர்ணதேவிக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது. உடல் வளர்ச்சியும் குறைவு. மதுரை, நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள தன் வீட்டில் தையல் மெஷின் தடதடக்க வேலை பார்த்துக் கொண்டிருந்தவரிடம், சைகையில் பேசினோம்.

''பத்தாவது வரைக்கும் படிச்சேன். அடுத்து என்ன பண்றதுனு தெரியல. என் சித்தி, 'தியாகம் அறக்கட்டளை'க்கு போனா... ஏதாவது வழி கிடைக்கும்னு சொன்னாங்க. அங்க, என்னை மாதிரி நிறைய மாற்றுத் திறனாளிகள் தொழில் கத்துக்கிட்டிருந்தாங்க. அதைப் பார்த்ததும்... உற்சாகம், நம்பிக்கை, ஆர்வம் எல்லாமும் எனக் குள்ள வந்துடுச்சு. தையல் கத்துக்கிட்டேன். என் உயரத்துக்கு ஏத்த மாதிரி தையல் மெஷினை செட் பண்ணி கத்துக் கொடுத்தாங்க. வீட்டில் மெஷின் போட்டு தைக்க ஆரம்பிச்சப்போ, எங் கிட்ட துணி கொடுக்க எல்லாரும் யோசிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட நம்பிக்கைக்கு ஆளானேன். இப்போ சுடிதார், பிளவுஸ், நைட்டினு எல்லாம் தைக்கிறேன்.

நார்மலான மனுஷங்க மத்தியில இருந் தப்போ, தனிச்சு உணர்ந்தேன். ஆனா, என்னை மாதிரியே இருக்கற மற்ற சகோ தரிகளோட சேர்ந்து இயங்கினப்போதான் சந்தோஷத்தை உணர்ந்தேன். அதனால மாற்றுத்திறனாளிகள், பாஸிட்டிவ் முயற்சிகளில் இறங்கியுள்ள மற்ற மாற்றுத்திறனாளிகளோட சேர்ந்து செயல்பட்டா, பெரிய பலம் கிடைக்கும்!'' என்றார் வழிகாட்டலாக.

ரொம்பப் பெருமையா... கொஞ்சம் கர்வமா..!

மதுரை, பைக்காராவைச் சேர்ந்த தனலட்சுமி, போலியோ அட்டாக் காரணமாக இரண்டு கால்களின் செயல்பாடுகளை இழந்தவர்.

''நார்மல் ஸ்கூல்ல பத்தாவது வரைக்கும் படிச் சேன். ஆனா, பெரிய கிளாஸ் போகப் போக, தவழ்ந்து போய் படிக்கறதுக்கு தயக்கமா இருந்த தால, படிப்பை நிறுத்திட்டேன். அந்த நேரத்துல தான் 'தியாகம்’ அறக்கட்டளை அமுதா மேடத் தோட அறிமுகம். அவங்களோட டிரெயினிங் சென்டர் மூலமா பை, கிளவ்ஸ் தைக்க கத்துக்கிட்டேன். பிறகு, அவங்ககிட்டயே என்னோட தயாரிப்புகளை கொடுக்க ஆரம்பிச்சேன். தினமும் அவ்வளவு தூரம் போய், வர முடியாத நிலை ஏற்பட்டப்ப... வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு தையல் நிறுவனத்தில்  வேலைக்குச் சேர்ந்தேன். காலையில் இருந்து சாயங்காலம் வரை வேலை. அதுக்குப் பிறகும் ஓய்வெடுக்கப் பிடிக்காததால, டியூஷன் எடுக்கிறேன். இப்போ 35 பசங்க என்கிட்ட படிக்கறாங்க. என்னோட வருமானத் துல அப்பா, அம்மாவைப் பார்த்துக்கறேன். ரொம்பப் பெருமையா, கொஞ்சம் கர்வமாவும்கூட இருக்கு!'' என்று சிரிக்கிறார் தனலட்சுமி.

நல்வழிகாட்டும் நல அலுவலகம்!

மதிப்புக்குரிய மாற்றுத்திறனாளிகள்!

'தியாகம் அறக்கட்டளை’யின் தலைவர் அமுத ராணியும், ஒரு மாற்றுத்திறனாளிதான். ''எனக்குப் பிறக்கும்போதே இடது கை இல்லை'' எனும் அமுதராணி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற சில வழிகாட்டுதல்கள் பகிர்ந்தார்.

''அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் நிறைய வழி செய்து கொடுக்கறாங்க. மாவட்டம் தோறும், 'மாற்றுத்திறனுடையோர் நல அலுவல கம்’ இருக்கு. இந்த அலுவலகத்துல நம்மள பத்தி பதிவு செய்துக்கணும். அரசாங்கத்தோட திட்டங்கள் மூலமா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை இந்த அமைப்பு செய்து கொடுக்கும். சுயதொழிலுக்கான வங்கிக் கடன்களையும் இதன் மூலமாவே வாங்க முடியும்!'' என்றார் நம்பிக்கை கொடுத்து!

வெற்றி காத்திருக்கிறது... விரைந்து எழுங்கள்!

- மோ.கிஷோர் குமார்,  ச.பா.முத்துகுமார்                 படங்கள்: பா.காளிமுத்து, பீரகா வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism