Published:Updated:

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

Published:Updated:
##~##

சுதேசி பொருட்களை சிதைத்து, சில்லறை வியாபாரிகளின் சிறகொடித்து, நுகர்வோரிடம் கொள்ளை லாபம் அடிக்கும் நூதன திட்டத்துடன், அசுர பலத்துடன் இந்திய சந்தைகளில் கால் பதிக்கிறது வால்மார்ட் நிறுவனம்.

 'இதனால், சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமல்ல... நுகர்வோர்களான உங்களுக்கும் ஆபத்துதான்' என்று பலதரப்பட்ட பிரமுகர்களும் மக்கள் மன்றங்களில் எடுத்துக் கூறி, தொடர்ந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருவது... ஆறுதல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே... மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, 'வால்மார்ட்’டின் வருகையால் நிகழப்போகும் பயங்கரங்களைப் பற்றிப் பேசுகிறார்.

''உலக வங்கியிடம் 0% வட்டியில் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி முதலீடு செய்யும் வால்மார்ட்டுக்கு முன்பாக, 12% வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்யும் நமது வியாபாரிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா?

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

விலை குறைப்பு, இலவசப் பொருட்கள் என மூளைச் சலவை செய்து நுகர்வோர்களை வசப் படுத்தி விடும் வல்லமை கொண்டது வால்மார்ட்! மத்திய அரசையே வளைக்கத் தெரிந்தவர்களுக்கு... அப்பாவி மக்களை வளைப்பது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், போகப்போக, பிளேட்டை திருப்பிப் போட்டு, விலையை உயர்த்தி, நுகர்வோரை தன் வலை யில் சிக்க வைத்துவிடுவார்கள்.

அந்நிய நேரடி முதலீடு ஒப்பந்தத்தில் '30% தான் இந்திய பொருட்களை விற்பனை செய்வோம்’ என சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலையில் உலகில் எங்கெங்கு விலை குறைவான விளைபொருட்கள் கிடைக்கிறதோ அதைத்தான் விற்பனை செய்வார்கள். உதாரணமாக, விலை குறைவாக கிடைக்கும் சீனா பூண்டு வந்த பிறகு, இந்திய பூண்டுகளின் விலை குறைந்தது அனைவரும் அறிவோம். இந்த அநியாயம்தான் காத்திருக்கிறது நம் விவசாயிகளுக்கு.

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

உள்ளூர் பெரு நிறுவனமான ரிலையன்ஸ் ஃபிரெஷ்... திண்டுக்கல் பகுதியில் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்குகிறோம் என கடையைத் திறந்தது. ஆரம்பத்தில் அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள், ஓரிரு மாதங்களிலேயே காய் அளவு சரியில்லை, அது சொத்தை, இது சரியில்லை என ஏதாவது ஒரு காரணம் சொல்லி, விலையைக் குறைத்தார்கள். அதனால், விவசாயிகள் வழக்கமான சந்தைகளில்தான் மீண்டும் விற்பனை செய்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் கால் பதிக்க நினைக்கிறது வால்மார்ட். சமவெளி காய்கறிகள், மலை காய்கறிகள், வாசனை பொருட்கள், சிறுமலை வாழை, பலா, கொடைக்கானலில் விளையும் பழங்கள் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் இங்கு வாங்க முடியும் என்பதால் இந்த மாவட்டத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்... இந்திய விவசாயிகளின், நுகர்வோர்களின் கஷ்டங்களை தீர்க்க அவதாரம் எடுத்து வர வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை. அது ஒரு கம்பெனி. லாப - நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபார நிறுவனம். ஒன்றை போட்டு பத்தை எடுக்கும் பலசாலி நிறுவனம். இத்தகைய நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் கால்பதித்தால்... நம் தேசம் மீண்டும் அடிமையாகும் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று அழுத்தமாகச் சொன்னார் பாலபாரதி!

''தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்!’ என்று அழுத்தமாக அறிவித்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்'' என்று ஆரம்பித்த நடிகர் சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி - நிறுவன தலைவர்),

''ஒரு தொழிலைச் சார்ந்து, மற்ற நாட்டுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும்போது நம்மிடம் இல்லாத ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வரமுடியும். ஆனால், இந்த சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு புகும்போது எந்தவிதமான புதிய தொழிற்நுட்ப முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. வங்கிகளிலும், காப்பீட்டுத் துறைகளிலும் ஏற்கெனவே அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பார்த்தபடி நம்முடைய அந்நிய செலவாணிகளை இம்முயற்சி அதிகப்படுத்தவில்லை. அந்நிய முதலீடு மூலம் கிடைக்கும் அந்நிய செலவாணி, நம் நாட்டை விட்டு லாபத்துடன் அந்நிய நாட்டுக்கே திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இதனால் நமக்குத்தான் கூடுதல் இழப்பு.

'வால்மார்ட் ஒன்றும் கடவுள் இல்லை!'

அவர்களுக்குத் தேவையான விவசாய உற்பத்தி பொருட்களை அவர்கள் எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள முடியும். உள்நாட்டில் கொள்முதல் செய்வதைவிட வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பெரிய அளவில் அனைத்துவிதமான பொருட்களையும் இறக்குமதி செய்வார்கள். விவசாயப் பொருட்களையும், மற்ற பொருட்களையும் நம் நாட்டில் கொள்முதல் செய்வதற்கு வெளிநாட்டுப் பொருட்களுக்கு இணையாக தரத்தை நிர்ணயிப்பார்கள். அப்போது நம்நாட்டு விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு இணையாக போட்டி போட முடியாமல் திணற வேண்டிய சூழல் நிச்சயம் உண்டாகும்'' என்று எச்சரித்த சரத்குமார்,

''இந்தியாவின் வணிகத்தை வாரிச்சுருட்டும் தந்திரத்தோடு களமிறங்கி இருக்கும் வால்மார்ட்டை, எந்தநிலையிலும்  அனுமதிக்கவே கூடாது!'' என்றார் சீறலாக!

ஆர்.குமரேசன், ம.மோகன்          படங்கள்: வீ.சிவக்குமார்

வால்மார்ட்டுக்கு சீல்!

 சென்னை, வானகரம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தில் சுமார் 7 ஏக்கரில் 'வால்மார்ட்’ நிறுவனம் பெரிய அளவிலான குடோன் ஒன்றை கட்டி வருகிறது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளிக்காத நிலையிலும், கட்டுமானப் பணி தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, பெருநகர வளர்ச்சி குழுமம், வால்மார்ட் கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism