Published:Updated:

நேற்று வினோதினி... இன்று வித்யா!

நேற்று வினோதினி... இன்று வித்யா!

நேற்று வினோதினி... இன்று வித்யா!

நேற்று வினோதினி... இன்று வித்யா!

Published:Updated:
##~##

காதல் விவகாரத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி... துள்ளத் துடிக்க உயிரிழந்த வினோதினிக்கான அஞ்சலிக் கூட்டங்களே இன் னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக இதோ இன்னோர் ஆசிட் அலறல்... வித்யா!

 ''ஐயோ வலிக்குதே... என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க... என்னால வலி தாங்கமுடியல...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- அழுகை கலந்த அலறல் சத்தம் நெஞ்சைப் பிசைய, சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவுக்குள் நுழைந்தோம். உடல் முழுவதும் ஆசிட் வீச்சால் வெந்த நிலையில், வலியால் துடித்துக் கொண்டிருந்தார் வித்யா.

நேற்று வினோதினி... இன்று வித்யா!

''நீங்களாச்சும் டாக்டரை வரச் சொல்லுங்க... வலிக்குதே...'' என்று நம்மைப் பார்த்து வித்யா குரலெடுக்க,

''ஐயோ! அந்தப் படுபாவியால என் புள்ள இப்படி ஆயிட்டாளே..! காதலிக்குறோம்னு சொன்னாங்க. சரி, கல்யாணம் செய்துவைக்கிறோம்னு சொன்னோமே... ஒரு வருஷம் காத்திருக்கப் பொறுக்காம, இப்படி பண்ணிட்டானே!'' என்று தானும் அரற்றுகிறார் வித்யாவின் அம்மா சரஸ்வதி. அவரை சமாதானப்படுத்திப் பேசினோம்.

''எனக்கு ரெண்டு வாரிசுங்க. பையன் தனியார் கம்பெனியில வேலை செய்யுறான். பொண்ணு வித்யா பிளஸ் டூ வரைக்கும் படிச்சிட்டு, பிரவுஸிங் சென்டர்ல வேலை பார்த்துட்டிருக்கா. அங்க அடிக்கடி வந்த விஜயபாஸ்கரும், என் மகளும் காதலிச்சிருக்காங்க. அவன் சோழிங்கநல்லூர்ல இருக்குற விப்ரோ கம்பெனியில ஹெல்பரா வேலை செய்துட்டு இருந்தான். வேற ஜாதியா இருந்தாலும், மகளுக்காக நான் சம்மதிச்சேன். அவங்க வீட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருக்கறதால, அவளுக்கு முடிச்சுட்டு, இவங்களுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவங்கம்மா சொன்னாங்க. எல்லாரும் சரினு சொல்லிட்டோம்.

இந்த நிலையில, என் மககிட்ட வந்து, 'ஒரு வருஷமெல்லாம் காத்திட் டிருக்க முடியாது. வா... இப்பவே ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கலாம்’னு சொல்லிருக்கான். 'பொறுத்திருந்தே கல்யாணம் பண்ணிக்கலாம்’னு இவ சொல்ல... அவன் விடாம நச்சரிச்சுருக்கான். 'அதெல்லாம் முடியாது'னு சொல்லிட்டு, வீட்டுக்கு வந்துட்டா. மறுநாள் எப்பவும்போல வேலைக்குப் போனவள, சந்திச்சவன்... 'ஏண்டி இப்பவே என் பேச்ச கேட்க மாட்டேங்கிறேல்ல...’னு ஆக்ரோஷமா சொல்லிட்டே... வாட்டர் கேன்ல வெச்சுருந்த ஆசிட்டை அவ மேல ஊத்திட்டு ஓடிட்டான் படுபாவி...''

- உயிரே கருகுகிறது சரஸ்வதிக்கு. புடவை முந்தியில் கண்ணீரை அழுந்தத் துடைத்து தொடர்ந்தார்...

''அலறி சுருண்டு விழுந்தவள, பதறிப்போய் ஆம்புலன்ஸை வர வெச்சு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு தகவல் சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா, உடம்பெல்லாம் வெந்து குத்துயிரா கெடக்குறா. ஒடம்புல பட்ட ஆசிட் நரம்பு, எலும்புனு எல்லாத்தையும் பாதிச்சிஇருக்குனு டாக்டர் சொல்றாரு. தகப்பன் இல்லைனாலும் கஷ்டப்பட்டு வளர்த்தது இதுக்காகத்தானா?'' என்று கேவிய அந்தத் தாய்... ''அவனை சும்மாவே விடக்கூடாது...'' என்று ஆக்ரோஷமானது... மனதை பாரமாக்கியது.

நேற்று வினோதினி... இன்று வித்யா!

வித்யாவுக்கு கவுன்சிலிங் கொடுக்க வந்திருந்தார் லயோலா கல்லூரி சமூகப் பணி துறை துணை பேராசிரியர் அருள் காமராஜ்.

''பெற்றோர், பள்ளி, சமுதாயம், மீடியா இவை எல்லாமே... குழந்தைகள் வளர்ப்புல ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். குறிப்பா, பெண்கள் மீதான மரியாதையை ஆண் குழந்தைகள்கிட்ட ஏற்படுத்தணும். மீடியாக்கள் தங்களோட பணியில பொறுப்புணர்வோட இருக்கணும். 'பெண் என்பவள் ஆணுக்காக படைக்கப்பட்ட அடிமை, போகப் பொருள்'னு உணர்த்துற சமுதாயத்துல வளர்ற ஆண் குழந்தை, ஆணாதிக்கத்தோட வளரும். அந்த எண்ணம் அதிகமாகும்போது ஒரு கட்டத்தில் பெண்மைக்கு எதிரான குற்றவாளியா அவனை உருமாற்றும். இந்த விஜயபாஸ்கர்கூட, தன்னோட தவறான முடிவுக்கு வித்யா கட்டுப்படலங்கற ஆணாதிக்கக் கோபத்துலதான் இதை செய்திருக்கான்'' என்று வேதனையோடு சொன்னார்.  

கிண்டி, நரசிம்மபுரத்தில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு பூட்டிக்கிடக்கிறது. ''அவங்க எங்கயோ வெளியூர் போயிட்டாங்க...'’ என்றனர் அக்கம்பக்கத்தினர். ''புகாரின் பேரில் விஜயபாஸ்கரனை கைது செய்து, இப்போது புழல் சிறையில் வைத்து விசாரித்து வருகிறோம். நிச்சயமாக அவனுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவோம்'' என்று உறுதியான குரலில் சொன்னார் ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசு.

ஆசிட் அரக்கர்களுக்கு என்றுதான் முடிவோ?!

- சா.வடிவரசு,     படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism