Published:Updated:

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே!

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே!

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே!

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே!

Published:Updated:
தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே!

சென்ற இதழ் தொடர்ச்சி...  

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமண வாழ்க்கையின் மனரீதியிலான நெருக்கம், முதிர்ச்சி பற்றி கடந்த இதழில் பேசிய கரூர், மனநல மருத்துவரான கா.செந்தில் வேலன், ''திருமணமான புதிதில்... பயமுறுத்தும் தாம்பத்ய புதிர்களை பார்க்கலாமா..?!'' என்று முடித்திருந்தார். அந்தப் புதிர்கள்  பற்றி இந்த இதழில் தொடர்கிறார்...

''எதிர்பார்ப்பும் பரிதவிப்புமாக முதலிரவு மயக்கங்கள் ஆண்... பெண் இருவருக்குமே உண்டு. ஆனால், பக்குவசாலிகள் திருமணமான புதிதில் ஒருவரை ஒருவர் இம்ப்ரஸ் செய்யவே விரும்புவார்கள். இதனால் திருமண வைபவ களைப்பில் ரெஸ்ட் எடுக்கலாமே என உறவைத் தள்ளிப் போடுவார்கள். ஒரு வகையில் இது நல்லது. ஆனால், 'என்னாச்சு... ஏதாச்சு...' என்று குடும்பத்து மூத்த பெண்கள், மண மகளை அடுத்த தினங்களில் கிசுகிசுப்பாக படுத்தி எடுப்பார்கள். இந்த நெருக்கடிக்கு பதற்றம் கொள்ளாமல், முதிர்ச்சியோடு செயல்படுவதே நல்லது.

பெரியவர்கள் என்றில்லை, புது மணத் தம்பதியருக்கும் ஏற்படும் குழப்பம், கன்னித்திரை மேட்டர்தான். முதல் உறவில் 'ஹைமன்’ எனப்படும் கன்னித்திரை கிழியும், உதிரப்போக்கு உண்டாகும் என்பது உடற்கூற்றளவில் உண்மைதான். ஆனால்... ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நடனமாடுவது, நீச்சல் என பல சந்தர்ப்பங்களில் பெண்ணே அறியாது 'ஹைமன்’ கிழிய வாய்ப்புகள் உண்டு. எனவே... முதல் உறவு என்பதற்கும் 'ஹைமனு’க்குமான தொடர்பை இக்கால பெண்கள் மறந்துவிடலாம்... ஆண்களும்தான்!

ஸ்டார்ட்டிங் டிரபிள்!

திருமணமான புதிதில் ஆண் முனைப்பாக இருப்பான். ஆனால், பால்யம் தொட்டே பாலியல் சங்கதிகள் மறுக்க/மறைக்கப்பட்ட இறுக்கமான சூழலில் வளர்ந்த பெண்களுக்கு இது தாக்குதலாக இருக்கக்கூடும். மேலும் மன, உடல் ரீதியான நெருக்கமும் வளர மாதங்கள் ஆகலாம். ஆனால், ஆண் மகன், புதுமணத் தவிப்பில்... நேரங்காலம் பார்க்காது தாம்பத்ய முயங்கலே முனைப்பாக கிடப்பது, பெண்ணுக்கு அசூயையும் எரிச்சலையும் தரலாம். நாள்போக்கிலோ அல்லது இருவருக்குமான பேச்சிலோ இந்த சங்கடம் தெளிவாகும் என்பதால், இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

திடுமென புதிய ஆணுடன் தனித்திருப்பதும், அடுத்தவர் அறிந்திராத அந்தரங்கத்தை அவனுடன் பகிர்ந்துகொண்டாக வேண்டிய நெருக்கடியும் புதுமணப் பெண்ணின் மனம், உடல் சார்ந்த எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இதன் பக்கவிளைவாக, வேண்டாவெறுப்பாக பெண்ணின் உடல் இறுகி ஒத்துழைக்காது போவது, ஆணை வெறுப்படையச் செய்யலாம்.

தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே!

'வெஜினிஸ்மஸ்’ உஷார்!

பெண்ணின் இத்தகைய உடல் இறுக்க எதிர்வினை, 'வெஜினிஸ்மஸ்’ எனப்படுகிறது. பல புதுமணத் தம்பதியினரின் வாழ்க்கையில் முதற்கோணலை இது ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தவிர்க்க, உடல் நெருக்கத்துக்கு முன் மனரீதியான நெருக்கத்துக்கு இருவருமே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிடித்த பேச்சு, வெளியே சுற்றுவது, வாசிப்பு, இசை என தனித்திருக்கும் சூழல்கள் தேவையான மன நெருக்கத்தை தரும். இவை மட்டுமல்லாது, உறவுக்கு முந்தைய முன்விளையாட்டுகள் எவ்வளவு செழிப்பாக அமைகிறதோ... அந்த அளவுக்கு 'வெஜினிஸ்மஸ்’ விலகிப்போகும். இறுக்கத்தையும் உராய்வையும் தவிர்க்கும் உயவுப்பொருளை உடல் உற்பத்தி செய்வதில் முன்விளையாட்டுகளுக்கு முக்கிய இடம் உண்டு. எனவே, முதலிரவு என்பது ஒற்றை இரவல்ல. அது... உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பரஸ்பர உடன்பாட்டுக்கு வர மேலும் பல இரவுகளை இரவல் வாங்கலாம். இந்த இழுத்தடிப்பும்கூட புதுமண வாழ்வில் இயல்பானதே.

தாம்பத்யம்... டைம்டேபிள் அல்ல!

திருமணமான புதிதில் 'ஒரு நாளைக்கு எத்தனை தடவை', 'அடச்சே... இதுக்கு கால நேரமே கிடையாதா?' என்றெல்லாம் பெண் மனசு எரிச்சலும் அசூயையும் கொள்ளும். கணவனை சகித்துக் கொண்டாலும் புதிய சுற்றமும் சூழலும் அவளை படுத்தி எடுக்கும். ஆமாம்... அதற்கென்று காலம், நேரம் மற்றும் எண்ணிக்கையை யார் வரையறுப் பது? வேறு வழியில்லை, அதுவே      தானாக ஒரு ரிதத்தில் ஒத்திசைந்து... தம்பதியர் இருவருக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமாக நாள் போக்கில் உட்காரும் வரை, சற்று இழுத்துப் பிடித்துதான் சமாளிக்க வேண்டிஇருக்கும். எண்ணிக்கை, நேரம், காலம் இவற்றைவிட... தம்பதியர் இருவருக்குமான நிறைவுதான் முக்கியம்!  

உடல் உடன்பட, மனம் உடன்பட வேண்டும்!

உறவு என்பது பரஸ்பரம் புரிதலில் உடன்படுவது. ஒருவர் மறுதலித்தாலும், தாம்பத்யம் தடம்புரளும். அப்போதைய மன, உடல் நிலை கூறுகளை முன்வைத்து இருவருமே தள்ளிப்போடுவதோ, சில்லறை உபாயங்களை கையாண்டு ஒப்பேற்றுவதோ செய்யலாம். உறவு என்பது ஆணுக்கு உறக்கத்துக்கு முந்தைய வழக்கமாகவோ அல்லது உறக்கத்துக்கான ஊக்கியாகவோ சிம்பிளாக இருக்கக்கூடும். பெண்ணுக்கோ முன், பின் என உடல்சார்ந்தும் சூழல் சார்ந்தும் பல கூறுகள் அவளையும் மீறி தீர்மானிப்பவையாக இருக்கக்கூடும்.

உதாரணத்துக்கு... 'மார்கழிக் குளிரில்... மறுபடியும் ஒருமுறை குளிக்க வேண்டுமா' என்கிற மலைப்பே... பெண்ணை உறவுக்கு உடன்படாது உதைக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், புனித வழிபாட்டு நிகழ்வுகள் என்றெல்லாம் நம்பிக்கை சார்ந்தும் உறவு தள்ளிப்போடலுக்கு காரணமாகலாம். பெண்ணின் சுத்த தவிப்பும், மலைப்பும் பரஸ்பர வெறுப்புக்கு வழி செய்துவிடலாம். முன்கூட்டியே மனம் விட்டு பேசுவது, புரிதலுக்கான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே உண்டாக்குவதன் மூலமாக, சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

தவறான தகவல் சுரங்கங்கள்!

'சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்றதெல்லாம் அந்தக் காலம். இந்த இன்டர்நெட் யுகத்தில் எல்லாத் தகவல்களும் விரல் நுனியில். ஆனால், இதில் ஆபத்தே அதிகம். போலியும் பூச்சுமான கவர்ச்சிகரமான பாலியல் வக்கிரம் கலந்து சுற்றுக்கு விடப் படுகின்றன. இவற்றை நம்பி தாம்பத்யத்தில் இறங்கினால், ஏமாற்றமே மிஞ்சும். அப்பட்ட மான இந்த பாலியல் தகவல் சுரங்கங்களைவிட ஆபத்தானவர்கள், 'உங்கள் தாம்பத்தியத்துக்கு ஊக்க மருந்துகளை சகாய விலையில் தருகிறோம்' என்று கூவி அழைக்கும் போலி மருத்துவ ஆலோசகர்கள். தங்கள் வருமானத்தை மட்டுமே முன்னிறுத்தி, அநியாயமாக உங்கள் தாம்பத்யத்தை குலைத்துவிடுவார்கள்.

திடமான உறவும், குழந்தை தரிப்பும்... ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப, அதற்கான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவே செய்யும். தாம்பத்ய உறவை அநாவசியமாக தோழிகளுடன் பகிர்ந்து கொள்வதும், ஒப்பிட்டுக்கொள்வதும் தேவை இல்லாத பிரச்னைகளை உருவாக்கும். உறவில் முன்னே, பின்னே இருக்கும் சௌகரிய, அசௌகரியங்களை குறிப்பால் உணர்த்துவதன் மூலமோ... வெளிப்படையாக உணர்த்துவதன் மூலமோ, துணையிடம் சரிசெய்து கொள்ளலாம். அதேசமயம், ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் குழந்தை கருத்தரிப்பில் தாமதமானால் முறைப்படி மருத்துவரை சந்தித்து, தம்பதியர் ஆலோசனைகளைப் பெறலாம்'' என்ற டாக்டர் செந்தில்வேலன்,

''சைக்யாட்ரிஸ்ட், செக்ஸாலஜிஸ்ட், ஃபேமிலி தெரபிஸ்ட் என மருத்துவ ஆலோசனையை, பாலியல் பிரச்சினைகளுக்காக அணுகுவதில் தவறில்லை. உங்கள் பார்வைக்கு பூதாகாரமாக தெரியும் தாம்பத்ய பிரச்னையை அவர்கள் எளிதில் களைய உதவுவார்கள்'' என்று நம்பிக்கைக் கூட்டினார்.

நல்ல கணவனாக, மனைவியாக இருப்பது என்பது ஒரு கலை. அதை அனைவருமே கற்றுக்கொள்ளுங்கள்!

- எஸ்.கே.நிலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism