Published:Updated:

''இப்போ நான்... நூறு பேருக்கு தாய்!''

கிரியேட்டர் நந்திதா

''இப்போ நான்... நூறு பேருக்கு தாய்!''

கிரியேட்டர் நந்திதா

Published:Updated:
##~##

றுப்பு அழகி, நந்திதா தாஸ்! 'அழகி’யாக வந்து வசீகரிக்கவும் செய்வார்; 'ஃபயர்’ என வந்து அதிர்ச்சியும் தருவார்; திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்து, உலகப் புகழ்பெற்ற விருதுகள் பலவும் பெறுவார்; இவ்வளவு உயரங்களை அடைந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் வித்திட்ட நாடகத்துக்கும் நேரம் தருவார். ஆகமொத்தத்தில், ஆச்சர்யமும் பன்முகத்திறமையும் கொண்ட பெண்ணினக் குறிஞ்சிப்பூ... நந்திதா!

 கிடைத்த ஓய்வில் இரண்டரை வயது மகன் விஹானுடன் விளையாடிக் கொண்டிருந்தவருக்கு 'மகளிர் தின அட்வான்ஸ் வாழ்த்து' சொல்லி, சில மணித்துளிகளை 'அவள் விகடன்' இதழுக்காக திருடிக் கொண்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகையாக இருப்பதே சவால் என்கிற சூழலில், இயக்குநராக, நாடகக் கலைஞராக, ஒரு குழந்தையின் தாயாக என எல்லா முகங்களிலும் பளிச்சென புன்னகைக்கும் திறமைக்கு பாராட்டு சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,

''ப்ளீஸ்... அந்த அளவுக்கெல்லாம் என்னை உயர்த்தாதீங்க!'' என்று மறிக்கும் நந்திதா...

''கிராமப்புற பெண்கள், அடித்தட்டு பெண்கள்லாம் பாருங்க... எவ்வளவு வேலைகளை தனி ஆளா பார்க்கறாங்க. அந்தப் பெண்களைப் போலத்தான் நானும் 'மல்டி டாஸ்க்' செய்யறேன்'' என்று அந்த விஷயத்தை சிம்பிளாக கடந்தவர், தொடர்ந்தார்...

''இப்போ நான்... நூறு பேருக்கு தாய்!''

''என் ஃபீல்டுல உள்ளவங்க எப்பவுமே டென்ஷன்லயே இருப்பாங்க. எனக்கு பிரஷர்லயும் டென்ஷன்லயும் வேலை செய்யப் பிடிக்காது. நமக்குப் பிடிச்சதை செய்தா... எப்படி நேரம் இல்லாம போகும்? என்னோட விருப்பங்கள், பயணங்கள், ரசனைகள், வீடு, குழந்தை, தொழில்னு எல்லாத்துக்கும் எனக்கு நேரம் இருக்கு. என்ன... கொஞ்சம் பிளான் பண்ணணும்.

என்னோட முதல் படம் 'ஃபிராக்’  இயக்கறப்ப, கண்ணுக்கு முன்ன அது ஒண்ணு மட்டும்தான் இருந்துச்சு. அதுக்கு அப்பறம் 'சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொஸைட்டி ஆஃப் இண்டியா' (CFSI)   சேர் பெர்சனாக நாலு வருஷம் இருந்தேன். இப்ப நாடகம், அதுக்கான ஒத்திகைனு நேரம் பறந்துட்டே இருக்கு. எப்பவுமே ஒண்ணோட ஒண்ண போட்டுக் குழப்பிக்க மாட்டேன். ஒரு நடிகையா கேமரா முன்ன நின்னா, அந்தப் படத்தோட கேப்டனான இயக்குநர் சொல்றதை ஃபாலோ பண்ணுவேன். நான் இயக்கற படங்கள்ல எதிர்பார்த்த அளவுக்கு பெர்ஃபெக்ஷன் வர்றவரைக்கும் சளைக் கவே மாட்டேன்'' என்றவர், இயக்குநர் என்கிற சிரமமான அனுபவத்தையும் ரசித்தே பேசுகிறார்.

''நடிக்கறதைவிட, இயக்கறது கஷ்டம். சேலஞ்ச் அதிகம். முதல் படம் இயக்கினப்ப முற்றிலும் வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. என்னோட எல்லைகளை அது விரிவாக்கிச்சு. எல்லா வகையிலும் என்னை அது செதுக்கிச்சு. ஒரு நடிகையா மட்டும் இருந்தா, ஷூட்டிங் முடிச்சுட்டு 'பேக் அப்' ஆயிடலாம். ஆனா, ஒரு இயக்குநருக்கும் கதைக்கும் உள்ள ஆத்மார்த்தமான ஈடுபாடுங்கறது ரொம்ப அதிகம். நூறு பேருக்கு தாயா இருக்க வேண்டியதும், கேப்டனா இருக்க வேண்டியதுமான ஒரு சூழல். ஐ லவ் அண்ட் என்ஜாய் இட். ஸோ ஐ ஃபீல் ஸோ கம்ஃபர்டபிள்'' என்றவர், ஒரு தாயாக பேசியவை, கேரியர் விமன்களுக்கான கைடுலைன்.

''குடும்பத்தையும் வேலையையும் பேலன்ஸ் பண்ற கலையை நான் கத்துக்கிட்டேன். அது ரொம்ப சுலப மானதும்கூட. வீட்ல இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் பையன் விஹானோடதான். எனக்கும் அவனுக்கும் பேசறதுக்கு விளையாடறதுக்குனு நிறைய இருக்கும். அவனோட சின்னஞ் சிறு உலகத்துல இருக்கற அழகும் எளிமையும் எங்க தேடினாலும் கிடைக்காது. ஒரு சந்தோஷமான அம்மாவாலதான், சந்தோஷமான குழந்தையை வளர்த்தெடுக்க முடியும். நம்மளோட பிரச்னைகள், கவலைகள் எல்லாத்தையும் குழந்தைங்ககிட்ட காட்டக் கூடாது.

இந்த சமூகத்துல ஒரு குழந்தையை எல்லா விதத்திலேயும் சரியா வளர்க்கறது ரொம்ப கஷ்டம்தான். ஆனா, சின்ன வயசுலேர்ந்து ஆரம்பிச்சுட்டா... செம ஈஸி. வீட்டைப் பாத்துக்கிட்டு... வேலைக்கும் போயிட்டு... குழந்தையையும் வளர்க்கணும்ங்கறது இன்றைய பெண்களோட பெரிய சவால். மனசும் நேரமும் இருந்தா எல்லாத்தையும் பேலன்ஸ்டா செஞ்சுடலாம். ஆண்கள் இந்த விஷயங்கள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சுட்டா... இன்னும் ஆரோக்கியமான சமூகமா இது உருவாகும்'' என்றவரின் ரிலாக்ஸேஷன் பொழுதுகள், எளிமையானவை!

''எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி. ஒரேமாதிரியான வேலைகளைச் செய்யறதுல விருப்பம் இருக்காது. சொந்த ஊர்ல இருக்கும்போது வாரத்துல மூணு நாள் யோகா. பையனோட பேசறது, விளையாடறது, சிரிக்கறதுனு அவனோடவே சரியா இருக்கும். அதுக்கப்புறம்... எழுதுவேன், மற்ற வேலைகள் பார்ப்பேன். மியூசிக் கேட்கறது ரொம்ப பிடிக்கும். புக் படிப்பேன். இப்ப கொஞ்ச நாளா படிக்கறது இல்லை. பையன் புக்கை வாங்கி ஓரமா வெச்சுடறான். ஒவ்வொரு நாளும் புதுசா அழகா ஏதோ ஒரு விஷயத்தை கத்துக்கற மாதிரி இருக்கணும். வாழ்தல் இனிதுங்கறதை முழுக்க நம்பறவ நான்'' என்றவரிடம், தற்போதைய புராஜெக்ட் பற்றிக் கேட்டோம்.

''இப்போ நான்... நூறு பேருக்கு தாய்!''

'' 'பிட்வீன் தி லைன்ஸ்' (Between the Lines)  நாடகம்தான் இப்போதைக்கு அரங்கேற்றம் செஞ்சுட்டு இருக்கேன். நானே எழுதி, இயக்கி, நடிக்கறேன். அப்புறம் பிரெஞ்சு நாடகம் ஒண்ணுல நடிக்கறேன். படங்கள்ல நடிக்கறதுக்கு நல்ல கதைகள் தேர்வு செஞ்சுட்டு இருக்கேன். கூடிய விரைவில் அடுத்த படம் இயக்கறதுக்கான முன் தயாரிப்புகள்ல இருக்கேன். ஆனா, எதுவுமே எனக்கு அவசரம் இல்லை. அதன் போக்கில் எல்லாம் நடக்கும்ங்கறதுல ரொம்ப நம்பிக்கை உள்ளவ நான். நின்னு... நிதானமா... பிளான் பண்ணி ஜெயிக்கறதுதான் எனக்குப் பிடிக்கும்!''

- இதைச் சொல்லியபோது பூத்த புன்னகை அவரை இன்னும் அழகாக்கியது.

தமிழ்த் திரையுலகின் மீதான மரியாதையும் நந்திதாவிடம் கூடியே இருக்கிறது. ''ஆரம்பத்துல தமிழ் பேசறதுக்கு கஷ்டப்பட்டேன். உதவி இயக்குநர்கள் உதவினாங்க. இங்க கமிட்டடா, ஆர்கனைஸ்டா வேலை பாக்கற ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். தமிழ்ல கதைகள் ரொம்ப ஆழமா, உணர்வுப்பூர்வமா இருக்கு. எனக்கு வரும் வாய்ப்புகளில் ஒரு நடிகையா நான் அதை ரசிச்சு, அனுபவிச்சு, முழுமையா உள்வாங்கி, வெளிப்படுத்துறேன். 'அழகி’, 'கன்னத்தில் முத்தமிட்டால்’னு மனசுக்கு மிக நெருக்கமான கதைகள் தமிழ் படத்துல நடிச்சதை மறக்க முடியாது!''

- கண்கள் மூடி சிலிர்க்கிறார் கிரியேட்டர் நந்திதா!

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism