புகுந்த வீடு!
##~##

வாழ்க்கையின் சந்தோஷங்களை மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே... அது தரும் பொறுப்புகளையும்கூட அதே மனப்பக்குவத்தோடு ஏற்று இல்லறத்தைச் செலுத்தும் பெண்கள், நம் தமிழ்க் குடும்பங்களின் வரம்! அப்படி ஒருவர்தான் சுலோச்சனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 டெயிலர் ஒருவரை 17 வயதில் மணம் முடித்து, அவருடைய சொற்ப வருமானத்தில் ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் என்று எட்டு பிள்ளைகளை பெற்றெடுத்து ஆளாக்கி, அனைவருக்கும் திருமணம் முடித்து, 13 பேரப்பிள்ளைகள், 4 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் எடுத்துவிட்ட இந்த 77 வயதிலும், 'கடமைகள் இன்னும் முடியல... முடியற மட்டும் ஓடுவோம்!’ என்று தொடர்ந்து கொண்டிருக்கிறார், விருத்தாசலத்தில் இருக்கும் இந்த சுலோச்சனா.

''இதுதான் நான் பொறந்த ஊர். ஒரு அக்கா, நான்னு அளவான குடும்பம். இவரு பொறந்தது சேத்தியாதோப்பு பக்கம் இருக்கிற குமாரக்குடி. அவங்க அத்தை அம்மணியம்மாளுக்கு சுவீகாரமா இங்க வந்தவரு... படிப்பு ஏறலனு தையல் கடை வேலைக்குப் போனார். இவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வெச்சாங்க அவங்க அத்தை.

புகுந்த வீடு!

அப்ப இது சின்ன கூரை வீடு. அத்தையம்மா, நானு, இவருனு மூணு பேருதான். காலையில சாப்பிட்டுட்டு கிளம்பி தையல் கடைக்கு வேலைக்கு போயிடுவார். இட்லிக்கு அரைக்க, சமைக்க, நெல் ஊற வைக்க, நெல் அவிக்கனு எல்லாமும் அத்தையம்மா கத்துக் கொடுத்தாங்க. கடையில இவருக்கு முக்கால் ரூபா (தற்போதைய 75 பைசா) சம்பளம். அதில அரை ரூபாயை குடும்ப செலவுக்காக அத்தையம்மாகிட்ட கொடுத்துடுவார். மீதி கால் ரூபாயில் பட்டாணியும் பழமும் வாங்கிட்டு வருவார். அதுதான் அப்பயிலேருந்து நான் கண்ட சொகம்.

மூணு வருஷம் ஓடுச்சு. மொத பொண்ணும் பொறந்தா. நாலாம் வருஷம் அத்தையம்மாளுக்கும் எனக்கும் ஆகாம போயிடுச்சு. நின்னா குத்தம்... ஒக்காந்தா குத்தம்னு மத்த மாமியாருங்க மாதிரியே படுத்தி எடுத்துட்டாங்க. தீபாவளிக்கு முதல்நாள் சண்டை முத்தி, 'வீட்டை விட்டு வெளில போயிடு’னு சொல்லி தள்ளிட்டாங்க. விடிய விடிய குளிர்ல குழந்தையை வெச்சுகிட்டு வெளியிலயே கிடந்தேன். இவரு வேலை முடிஞ்சு காலையில வீட்டுக்கு வந்ததும் விஷயத்தைச் சொன்னேன். தையல்கடை பக்கத்துல ஆறு ரூபாய் வாடகையில வீட்டைப் பார்த்து குடி போனோம்.

ரெண்டாவது பொண்ணு பிறந்த நேரம்... இவரோட சம்பளம் ஒரு ரூபாயாச்சு. ஒரு ரூபாய்க்கு ரெண்டு படி கம்பு வாங்கினா... அதை அரைச்சு ரெண்டுநாள் கூழ் குடிச் சுடுவோம். பெரிய படி அரிசி எட்டணாதான். அதுவும் ரெண்டு நாள் வரும். இப்படித்தான் சிக்கனமா ஓடுச்சு பொழைப்பு. ஆனாலும் எங்க சந்தோஷத்துக்கு கொறைச்சல் இல்லை...''

- இல்லறத்தின் ஆரம்ப நாட்களில் ஆசைகளைவிட, அனுசரணையே அதிகம் இருந்திருக்கிறது சுலோச்சனாவிடம்.

''இடையில அத்தையம்மாளுக்கு உடம்பு சரியில்லாம போகவே, வாடகை வீட்டை காலி பண்ணிட்டு திரும்பி வந்துட்டோம். கொஞ்ச நாள்ல அவங்க இறந்துட்டாங்க. வரிசையா குழந்தைங்க பிறந்து, பிள்ளைங்க ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சாங்க. இவரு கொடுக்கிற காசுல எல்லாத்தையும் சமாளிச்சுட்டே... கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்ச அறுபது ரூபாயை கொடுத்து, 'சொந்தமா தையல் மெஷின் வாங்குங்க'னு சொன்னேன். அன்னிக்கு வாங்கிப்போட்டு உட்கார்ந்தவருதான்... இந்த 78 வயசுலயும் விடாம தைச்சு, குடும்பத்தை காப்பாத்திட்டிருக்கார்'' என்றவர், தொடர்ந்து சொன்ன குடும்பத்தின் வரவு - செலவுக் கணக்கு, ஆச்சர்யப் பாடம்.

''ஒரு ரூபாயோ... ரெண்டு ரூபாயோ... வர்றத அப்படியே கையில கொடுத்துடுவாரு. பொடி போட மட்டும் காசு கொடுத்தா போதும், வேற எதுக்கும் ஆசைப்பட மாட்டாரு. மிச்சம் புடிச்சு அதுல சாமானெல்லாம் அடமானம் பிடிச்சேன். வட்டிக்கு கொடுத்து வாங்கினேன். இப்படி அப்படினு காசு சேர்த்து... ஒரு பவுன், ரெண்டு பவுனுனு பத்து பவுன் சேர்த்தேன். ஆனா, அது அந்த கடவுளுக்கே பொறுக்கல. எங்க வீடு ஆக்ரமிப்புல இருக்குனு இடிக்க வந்துட்டாங்க ஹைவேஸ்காரங்க. ஏற்கெனவே மனசுக்குள்ள மாடி வீட்டுக்கான ஏக்கம் இருக்க... பத்து பவுனையும் வித்து ஒரே வருஷத்துல மாடி வீட்டு கட்டி குடியேறினேன். இப்ப வரைக்கும் இதுதான் நாங்க செஞ்ச ஒரே சாதனை!''

- லேசாக சிரிக்கிறார் சுலோச்சனா.

புகுந்த வீடு!

''வீட்டை முடிச்சு நிமிர்ந்து பார்த்தா பெரியவளுக்கு கல்யாண வயசு. இருந்த நாலு பவுனை யும் போட்டு கல்யாணம் பண்ணி கொடுத்தேன். அடுத்தது அஞ்சு பொண்ணும் வரிசையா நிக்க.. ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்போடதான் நின்னோம். ரெண்டாவது பொண்ணு, மூணாவது பொண்ணுனு கஷ்டப்பட்டு கரையேத்தினோம். நாலாவது பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லாததால திருமணம் செய்யது தள்ளி போயிட்டே இருக்கு. அஞ்சாவது, ஆறாவது ரெண்டும் காலேஜ் முடிச்சு வேலைக்கும் போனாங்க. அவங்க சம்பாதிக்கிறது வாங்கின நகைகளோட நாங்களும் கொஞ்சம் போட்டு கட்டிக் கொடுத்தோம். இதுக்கிடையில பையனுங்களுக்கு கல்யாணம் முடிய... தனித்தனியா போயிட்டாங்க. எல்லாத்தையும் முடிச்சுட்டு நிமிர்ந்தா, 70 வயது ஓடிடுச்சு!'' என்று சுலோச்சனா பெருமூச்சு விட்டபோது, கேட்டுக் கொண்டிருந்த நமக்கே 'அப்பாடா' என்று இருந்தது.

தொடர்ந்தவர், ''இனி வீட்லயே இருக்கிற நாலாவது பொண்ணு கையால கஞ்சியோ கூழோ குடிச்சுகிட்டு நிம்மதியா சாகலாம்னு நினைச்சப்பதான் கடவுள் அடுத்த சோதனையை கொடுத்தான்'' என்றபோது, லேசாக அதிர்ந்தது நம் மனம்.

''ஆறாவது மகளுக்கு, பொண்ணு பொறந்த நிலையில அவளோட வீட்டுக்காரர் இறந்துட்டாரு. அழுது புரண்டாலும் அவளோட எதிர்காலத்தை நினைச்சு எங்க வீட்டுக்கே அழைச்சுகிட்டு வந்துட்டோம். இப்ப அவளோட குழந்தை அட்சயா எங்க வீட்ல துள்ளி திரியறா. இனி அவளையும் ஆளாக்கி நல்லவனா ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கணும். அதுக்குத்தானே அந்த ஆண்டவன் ஓய்வெடுக்கிற வயசுலயும் எங்ககிட்ட கொண்டாந்து ஒப்படைச்சுருக்கிறான்!''

- அந்த பழுத்த இல்லாளின் முகத்தில் அப்போதும் புன்னகை!

''அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டியாவான்னு பழமொழி. ஆனா... ஆறு பொண்ண பெத்தாலும் நாங்க ஆண்டியாகல! அத்தனைக்கும் நல்லது கெட்டது செஞ்சதோட... என்னையும் பார்த்துக்குற இவ... சாதாரண பெண் ஜென்மம் இல்லை... எங்க குலத்தை காக்கிற அம்மன்சாமி!'' என்று இடுங்கும் கண்களில் நீர் கசிகிறார் சக்கரபாணி!

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism