Published:Updated:

முத்துக்கள் பத்து!

தொகுப்பு: லதானந்த்

முத்துக்கள் பத்து!

தொகுப்பு: லதானந்த்

Published:Updated:
##~##

வாழ்க்கைத் துணை அமைவது போல, வாடகை வீடு அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். முன் யோசனையின்றி குடிபுகுந்துவிட்டு, 'இங்கே எப்படிக் காலம் தள்ளப் போகிறோமோ’ என்று கலங்கி நிற்பவர்கள் ஏராளம். வாடகைக்கு வீடு தேடுபவர்கள், தாங்கள் குடியேறும் வீட்டில் அதிக சிரமம் இல்லாமல் வாழ்க்கை நடத்த உதவும் விதத்தில் சில ஐடியாக்கள் இந்த இதழில், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

முத்துக்கள் பத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றுப்புறத்தை நோட்டமிடுங்கள்!

வாடகைக்கு வீடு தேடும்போது, நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும் பகுதியையே தேர்ந்தெடுங்கள். கொசுக்கள் மண்டிய, சாக்கடைகள் நிரம்பிய பகுதிகளை அவசியம் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், வாடகையில் மிச்சப்படுத்தும் பணத்தை மருத்துவமனைக்கு தர வேண்டியிருக்கும்.

 தரகர்களைத் தவிருங்கள்! 

முத்துக்கள் பத்து!

வீடுகளை வாடகைக்குப் பிடித்துக்கொடுக்கும் தரகர்களில் பெரும்பாலானோர் தங்கள் வருமானத்திலேயே குறியாக இருப்பார்கள். கமிஷன் வந்தால் போதும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும். நீங்கள் குடி போக உள்ள வீட்டில் இருக்கும் வசதிகள், பாதுகாப்பு பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலை இருக்காது. எனவே, புரோக்கர்களிடம் உஷாராக இருப்பது நல்லது. வீடு இருக்கும் பகுதியிலேயே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும், முடிதிருத்தும் நிலையம் மற்றும் லாண்டரியில் பணிபுரிபவர்களிடமும் சொல்லி வைத்தால் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். வீட்டின் கதவில் ‘to let’ போர்டு மாட்டி செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களை நேரடியாக  தொடர்பு கொண்டால்... தரகுத் தொகை மிச்சமாகும்.

முத்துக்கள் பத்து!

அக்கம்பக்கம் சண்டைக்கோழியா?

வாடகை வீடுகளில், பொதுக் குழாய் என்றால் தண்ணீர் பிடிக்கும்போதும், வீட்டு வாசலைச் சுத்தம் செய்யும் முறைவாசலின்போதும் சில சமயம் அண்டை அயலாருடன் மனக்கசப்பு ஏற்படுவது சகஜம்.  பக்கத்து வீட்டுக்காரர் சண்டைக்கோழியாக இருந்தால் மன நிம்மதியே போய்விடும். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் தீர விசாரியுங்கள். உங்கள் வீட்டைத் தாண்டிக்கொண்டு மற்றவர்கள் செல்லும் வகையில் அமைந்திருக்கும் லைன் வீடுகளைத் தவிர்க்கலாம்.

முத்துக்கள் பத்து!

பார்க்கிங் டீடெய்ல் தேவை!

இப்போதெல்லாம் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் வீட்டின் பயன்பாட்டுக்காக அமைத்துக் கொள்கிறார்கள். எனவே, வாடகை வீட்டை தேர்ந்தெடுக்கும் முன் பார்க்கிங் வசதி பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். நிறைய வீடுகளில் வாகனங்களைத் தெருவிலேயே நிறுத்த வேண்டி இருக்கும். இயன்றவரை பாதுகாப்பாக நிழலில் வாகனங்களை நிறுத்த இயலுமா என்பதையாவது உறுதி செய்துகொள்ளுங்கள்.

முத்துக்கள் பத்து!

செல்லப் பிராணிகளை கவனத்தில் கொள்ளுங்கள்!

 வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்க்கும் வழக்கம் இருந்தால், வாடகைக்கு வீடு தேடும்போது அங்கு அதற்கான வசதிகள் இருக்கிறதா என்று கவனியுங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதை ஆட்சேபிப்பார்களா என்பதையும் விசாரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வளர்ப்புப் பிராணிகள் அலர்ஜியாக இருக்கும் பட்சத்தில், அக்கம்பக்கத்தில் யாரேனும் அவற்றை வளர்க்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

முத்துக்கள் பத்து!

அபார்ட்மென்ட்... அலர்ட்!

பார்ட்மென்ட்டுகளில் குடிபுகும்போது தரைத் தளத்தைத் தவிர்க்கலாம். மழைக்காலத்தில், வீட்டின் முன்புறம் சகதியாக மாறிவிடும். அதே போல, கடைசி மாடியையும் தவிர்க்கலாம். கோடையின் வெப்பம் வாட்டி எடுத்துவிடும். லிஃப்ட் வசதி இருக்கிறதா, 'ஏ.சி’ பொருத்த ஆகும் ஒயரிங் செலவு மற்றும் யூ.பி.எஸ் ஒயரிங் செலவு யாருடையது என்பதையும் முன்கூட்டியே பேசிக்கொள்ளுங்கள். அபார்ட்மென்ட்டுகளில் வாடகை தவிர மெயின்டனன்ஸ் சார்ஜ் எனத் தனியே கணிச மான தொகை ஒன்றையும் தர வேண்டி இருக்கும். அதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளுங்கள்.

முத்துக்கள் பத்து!

அவசரம் வேண்டாமே!

 வாடகை வீடு தேவைப்படும் சமயத்தில், காத்திருக்கும் ஒவ்வொரு நாளும் கஷ்டமாகத்தான் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அவசர அவசரமாக  கிடைத்த வீட்டுக்குக் குடிபுக வேண்டாம்.  பல்வேறு காரணிகளையும் பொறுமையாக ஆராய்ந்து,  அதற்கு ஓரிரு மாதங்கள் ஆனாலும் பொறுத்துக் கொண்டு,  நல்ல வீடாகப் பார்த்துக் குடிபுகுவதே சிறந்தது.

முத்துக்கள் பத்து!

பாதுகாப்பான ஏரியா  கவலை தவிர்க்கும்!

வீடு அமைந்திருக்கும் ஏரியாவில் திருட்டு பயம் உண்டா என்பதைத் துப்புரவாக விசாரியுங்கள். அக்கம்பக்கத்தில் ஏற்கெனவே திருட்டுகள் நடைபெற்று இருக்கிறதா, தனியே இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான பகுதியா என்பதை எல்லாம் தீர விசாரித்துவிடுவது கவலைகளைத் தவிர்க்க உதவும். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கு சிரமம் இல்லாதபடி வீடு அமைவது மிகவும் முக்கியம்.

முத்துக்கள் பத்து!

இதெல்லாம் பக்கத்தில் இருக்கிறதா...?

 நீங்கள் குடிபுகும் வீடு பஸ் நிலையம் அல்லது ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, கடைவீதி ஆகியவற்றுக்கு நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருந்தால் மிகவும் நல்லது. அலைச்சலில் மிச்சமாகும் நேரத்தை அவசியமான பணிகளுக்கு பயன்படுத்திக்       கொள்ளலாமே! 

அக்ரிமென்ட் அவசியம்!

முத்துக்கள் பத்து!

வாடகை வீட்டில் குடிபுகுவதற்கு முன்பு அட்வான்ஸ் எவ்வளவு, வாடகை எவ்வளவு, காலி செய்வதற்கான நோட்டீஸ் அவகாசம் எத்தனை மாதங்கள், காலி செய்யும் முன்னரே அட்வான்ஸில் வாடகையைக் கழித்துக்கொள்ளலாமா அல்லது காலி செய்யும் வரை வாடகை கொடுத்துக் கொண்டிருந்து, கடைசியில் மொத்தமாக அட்வான்ஸ் திரும்பக் கிடைக்குமா, எவ்வளவு மாதங்களுக்குப் பிறகு வாடகை உயர்த்தப்படும், வீட்டில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய அளவில் இருக்கும் லைட்டுகள் மற்றும் ஃபேன்களின் எண்ணிக்கை எவ்வளவு எனப் பலவற்றையும் ஒப்பந்தத்தில் எழுதிக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வெள்ளை அடிப்பது யார் பொறுப்பு என்பதையும் குறிப்பிடுங்கள். கதவு ஜன்னல்களை சரியாகச் சாத்த முடிகிறதா, தண்ணீர்க் குழாய்கள் ஒழுங்காக இருக்கின்றனவா, ஸிங்க் மற்றும் அலமாரிகள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதையும் கவனியுங்கள். மின் கட்டணம் செலுத்தத் தனி மீட்டர் இருக்கிறதா, பொது மீட்டர் எனில் எப்படிக் கட்டணம் பிரிக்கப்படுகிறது, தண்ணீர் வரி கட்டுவது யார், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் செலவு யாருடையது என்பதை எல்லாம் தெளிவாகப் பேசிவிடுங்கள்.