Published:Updated:

ஒரு தூப்புக்காரியின் கதை!

லைஃப்

ஒரு தூப்புக்காரியின் கதை!

லைஃப்

Published:Updated:
ஒரு தூப்புக்காரியின் கதை!
##~##

''பெண்மையை வெறும் அழகியலாகவே பார்க்கிறார்கள். அவளை நளினம், மென்மை என்ற கோணங்களிலேயே அணுகி, அழகு பதுமையாக்கி ஆராதனை செய்கிறார்கள். அவளுக்குக்குள் சக்தி இருக்கிறது. சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்கிற உத்வேகம் இருக்கிறது. அதற்காகவே தூப்புக்காரியாக அவதாரம் எடுத்த என் அம்மாவின் வாழ்க்கைதான், இந்த 'தூப்புக்காரி’!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - பேச ஆரம்பிக்கும்போதே கண்கள் தளும்புகின்றன மலர்வதிக்கு. 2012-ம் ஆண்டின் இளம் எழுத்தாளருக்கான 'சாகித்ய அகாடமி விருது' பெற்றுள்ளது இவருடைய 'தூப்புக்காரி’ நாவல்!

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிக் கோடு கிராமத்தின் அந்த சின்னஞ் சிறிய முட்டுச் சந்துக்குள் இருக்கும் மலர்வதியின் வீடு, இன்னமும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் வறுமைக்கு சாட்சி சொன்னபடி நிற்கிறது. அங்கே தேடிச் சென்ற நம்மிடம், எளிய வார்த்தைகளில் தன் பயணம் சொல்ல ஆரம்பித்தார் அந்த இளவயது இலக்கியக்காரி.

ஒரு தூப்புக்காரியின் கதை!

''எனக்கு வீட்டுல வெச்ச பேரு ஃபுளோரா. கூட பிறந்தவங்க ரெண்டு பேரு. அண்ணன் ஸ்டீபன், அக்கா லதா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சுடுச்சு. அம்மா ரோணிக்கம்தான், என்னோட ரோல்மாடல். என் அம்மா வயித்துல நான் இருந்தப்பவே, எங்கப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு நிராதரவா விட்டுப் போயிட்டார். ரெண்டு கைக்குழந்தை களையும், வயித்துல என்னையும் சுமந்துகிட்டு நிர்க்கதியா நின்னுருக்காங்க அம்மா.

பொருளாதார சூழ்நிலையாலும், கொடுமையான வறுமையாலும்தான் என்னோட அம்மா, தூப்புக்காரி வேலைக்குப் போனாங்க. மாசம் 30 ரூபாய்தான் அப்ப சம்பளம். பக்கத்துல இருக்கற பள்ளிக்கூடத்துலதான் வேலை. நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது... இடது கையில் வாரியலை (துடைப்பம்) வெச்சுக்கிட்டு, வலது கையில் என்னை வாரி அணைப்பாங்க அம்மா. அன்றைய காலங்களில் அவங்ககிட்ட வாங்கின ஒவ்வொரு முத்தத்திலும்... கழிவறையின் கசப்பான துர்நாற்றத்தைத் தாண்டிய என் அம்மாவின் ஆளுமையை நுகர்ந்திருக்கேன்.

எட்டாம் கிளாஸ் வரைக்கும் வெள்ளிக்கோடு ஸ்கூல்ல படிச்சேன். ஒன்பதாம் வகுப்பு மொளகுமூடு ஸ்கூலுக்குப் போனேன். ஆனா, குடும்பத்தோட வறுமை சூழ்நிலையால மேற்கொண்டு படிக்க முடியல. முந்திரி தொழிற்சாலையில, முந்திரி உடைக்கற வேலைக்குப் போயிட்டேன். அப்ப எனக்கு 14 வயசு. விளிம்புநிலை மக்களோடு சிநேகமும், என் சொந்த அனுபவங்களும் வலிகளை சகிக்கும் வல்லமையை எனக்குள்ள உருவாக்கிச்சு. அந்த ஒற்றைக் களம்தான்... இலக்கியவாதியா என்னை உருவெடுக்க வெச்சுது. பகல் பொழுதுகள் முந்திரி தொழிற்சாலையிலும், மாலைப் பொழுதுகள் பேனாவுடனும் நகரத் தொடங்கிச்சு.

எங்க பகுதியில் 'இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்’னு ஓர் அமைப்பு இருக்கு. பதின் பருவங்கள்ல என்னுள் இருந்த இலக்கிய ஆர்வத்துக்கு தீனி போட்டது அதுதான். சின்ன வயசில் நான் எழுதி இயக்கிய பல நாடகங்களை அந்த அமைப்பின் சார்பில் ஊர் திருவிழாக்கள்ல போட்டிருக்கோம். அத்தனையும் வரதட்சணை, சாதியம்னு சமூகம் சார்ந்த பிரச்னைகள்தான். அப்போவெல்லாம் பாராட்டுங்கறது எட்டாக் கனியாவே இருந்துச்சு.

இயற்கை வாசிப்பும், மனித சுவாசிப்பும்தான் அப்போதிருந்தே என்னை பட்டை தீட்டின விஷயங்கள். சின்ன வயசுல இருந்தே ஓட ஓட அடி விழுந்துட்டே இருந்துச்சு. ஏழ்மையை காரணம் காட்டி ஒதுக்கினவங்க ஒருபுறம், கல்வி நிலையை காரணம் காட்டி ஒதுக்கினவங்க மறுபுறம்னு நிராகரிப்பின் நிழல்லயே வாழ்ந்தேன். அதன் பின்தான் தன்னம்பிக்கை ஊட்டுற தலைவர்களோட வரலாறு களை வாசிக்க ஆரம்பிச்சேன். குடும்பச் சூழல், வறுமைனு துரத்திப் போட்டு அடிச்சாலும், என்னோட இலக்கிய தேடலுக்கு மட்டும் விடை கொடுக்கவே இல்லை.

ஆரம்பத்தில், 'சிலுவை பாதை கட்டுரை நூல்கள்’ங்கற தலைப்பில் மூணு நூல்களை எழுதி வெளியிட்டேன். ஓரளவு வரவேற்பு கிடைக்கவே... 2008-ம் வருஷம், 'காத்திருந்த கருப்பாயி’ங்கற நாவலை எழுதினேன். கழுத்தில் இருந்த செயினை அடகு வெச்சுதான் வெளியிட்டேன். அந்த செயினைக்கூட சமீபத்துலதான் திருப்பினேன். தொடர்ந்து ஏதாவது எழுதணும்ங்கற வேகத்தில் எழுதிட்டே இருந்தேன். கிட்டத்தட்ட 40 நாவல்களை எழுதி கசக்கி எறிஞ்சிருப்பேன். பிறகுதான், அம்மாவோட வாழ்க்கையையே 'தூப்புக்காரி’ங்கற பேர்ல பதிவு செஞ்சேன்.

ஒரு தூப்புக்காரியின் கதை!

'எதிர்த்து பேசி மல்லுக்கு நிக்கறது பெண்மைக்கான வீரம் இல்ல. எதிர்நீச்சல் அடிச்சு ஜெயிச்சுக் காட்டுறதுதான் பெண்மைக்கான வீரம்’னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதை தன்னோட வாழ்க்கையிலயே நிரூபிச்சவங்கதான் எங்க அம்மா. ஒரு ரூபாய் சம்பளத்துக்காக வீடுகள்ல தண்ணீர் எடுத்துக் கொடுப்பாங்க. பக்கத்து வீடுகளுக்கு புளி குத்தி கொடுப்பாங்க. ரெண்டு ரூபாய் கிடைக்குமேனு ரேஷன் பொருள் களை தலையில் சுமந்து வந்து கொடுப்பாங்க. இத்தனை கஷ்டங்களையும் எங்க அம்மா சுமந்தது, எங்களை நெஞ்சில் சுமந்ததாலதானே? இந்த வெற்றியையும், விருதையும் அந்த நிஜ 'தூப்புக்காரி'க்கான வெகுமதியாதான் பார்க்கிறேன். அப்ப தூப்புக்காரியா... தூய்மைப்பணியாளரா இருந்த எங்க அம்மா... இப்போ பள்ளிக்கூடத்தில் சத்துணவு பணியாளர் ஆகியிருக்காங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ஓய்வுபெறப் போகும் என் அம்மாவை நல்லா பார்த்துக்கணும்.

இதோ, இந்த விருதைப் பெற கவுகாத்திக்கு போறதுக்காக மறுபடியும் செயினை அடகு வெச்சுருக்கேன். அப்புறம்... வேறென்ன விசேஷங்கள்..?!'' - இயல்பாக எழுந்துகொள்கிறார் அந்த எழுத்தழகி!          

- என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்

மறுக்க முடியாத பதிவு!

'தூப்புக்காரி' நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது?

அதைப்பற்றி பேசும் நாட்டுப்புற இயல் ஆய்வாளரும், எழுத்தாளருமான அ.கா.பெருமாள், ''விளிம்பு நிலை மக்களின் வலியை பதிவு செய்யும் பதிவுகள், எப்போதுமே தரம் நிறைந்ததாகத்தான் இருக்கும். மலையாளத்தில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளர் தகழி சிவசங்கர பிள்ளை 'தோட்டியின் மகன்' என்ற தலைப்பில் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வை பதிவு செய்திருந்தார். அதை சுந்தர ராமசாமி தமிழில் மொழி பெயர்த்திருந்தார். அதை வாசிக்கும்பொழுது துப்புரவு தொழிலாளர்களின் வலி, நம் கண்களில் கண்ணீராகத் தெறிக்கும்.

ஒரு தூப்புக்காரியின் கதை!

அந்த நாவலுக்குப் பிறகு, என்னை ஈர்த்த துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வியல் புதினம்... தூப்புக்காரி! இந்திய அளவில் அடிமட்டத்தில் உள்ள விவசாயிகளின் நிலையையும், பல்வேறு பிரச்னைகளையும் முன்வைத்து எழுத பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அடிமட்ட மக்களின் வாழ்வியலோடு இணைந்து இருந்து வாழ்க்கையை நடத்தும் மலர்வதியின் வெளிப்பாடுதான் தூப்புக்காரி. என்றைக்கும் நிதர்சனத்தின் நடுவிலே நின்று பயணிக்கும் நாவல்களே பலராலும் பேசப்படக்கூடிய படைப்பாக இருக்கும். அப்படித்தான் பயணிக்கிறது தூப்புக்காரி.

என்னுடைய கல்லூரி காலகட்டத்தில் வீடுகளின் கழிவறைகள் நிறைந்தவுடன், வீடுகளுக்கு வருகிற குறிப்பிட்ட பிரிவினர்... கையில் ஒரு நீள அகப்பை வைத்திருப்பார்கள். இன்னொருவர் டிரம்மை திறந்து அதில் மலத்தை அள்ளிக் கொட்டுவார். காலப்போக்கு சிறிது இவர்களை மாற்றியிருக்கிறது. இன்றைய சூழலில் ஒரு துப்புரவு பணியாளர் எப்படி இருப்பார், அவருக்கான உலகம் எது, எதற்கு இந்த போராட்டம் என மலர்வதி எழுதியிருக்கும் விதத்தைப் படித்துவிட்டு, தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்று நினைத்தேன். ஆனால், ஒன்பதாம் வகுப்பைக் கூட அவர் தாண்டவில்லையாம். வலி நிறைந்த அவருடைய வாழ்வியல் சூழலே... எழுத்தின் தரத்தை உயர்த்துவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மொத்தத்தில் தமிழ் இலக்கியத்தில் மறுக்கமுடியாத மற்றுமொரு பதிவு'' என்று பாராட்டினார்!