Published:Updated:

வால்மார்ட்டுக்கு ஒரு விசிட்...

நீங்களும் நிருபர்தான்!

வால்மார்ட்டுக்கு ஒரு விசிட்...

நீங்களும் நிருபர்தான்!

Published:Updated:
##~##

நான் அமெரிக்க நாட்டுல, மேரிலாண்ட் மாகாணத்துல இருக்கேன். இங்க இருக்கற வால்மார்ட் கடைக்கு ஒரு விசிட் போலாம், வர்றீங்களா? கொஞ்ச நேரத்துக்கு அந்நிய முதலீடு, அண்ணாச்சி கடை, அந்நிய களவாணி... ஸாரி... செலாவணி எல்லாத்தையும் மறந்துட்டு... சும்மா சுத்தி மட்டும் பார்க்கலாம் வாங்க!

எங்க வீட்டுல இருந்து கார்ல வால்மார்ட் போக 15 நிமிஷம் ஆகும். பேசிட்டே போவோமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியால மட்டும் இல்ல, இங்கயும் வால்மார்ட் சில இடங்கள்ல புதுசா கிளை திறந்தப்போ, பிரச்னைகள் வெடிக்கத்தான் செய்துச்சு. தன் பசிக்கு மத்த மிருகங்களை அழிக்கற மிருகங்களைப் போல, தான் வாழறதுக்காக மிகக்குறைஞ்ச விலையில வால்மார்ட் நிறுவனம் பொருட்களை விற்பனை செஞ்சு, மற்ற வியாபாரிகளை அழிக்கறப்ப... எதிர்க்காம எப்படி இருப்பாங்க?

ஆனா, வால்மார்ட்டுக்கு சாதகமா பேசறவங்க என்ன சொல்றாங்கனா... 'வால்மார்ட்ல விலை குறைவா இருக்கறதனால, மக்கள் நிறைய பொருட்கள் வாங்குவாங்க, அதனால பொருளாதாரம் முன்னேறும்'ங்கறதுதான்.

வால்மார்ட்டுக்கு ஒரு விசிட்...

இதுல, 'நிறைய பொருட்கள் வாங்குவாங்க’ அப்டீங்கிறத அடிக்கோடு போட்டுக்கணும். ஏன்னா, ரெண்டு பொருட்கள் வாங்கதான் நாம வால்மார்ட்டுக்குப் போவோம். ஆனா, எட்டு, பத்து பொருட்கள் வாங்கிட்டு வருவோம். இதனால பொருளாதாரம் முன்னேறுதோ இல்லையோ, வால்மார்ட் நல்லாவே முன்னேறும்!

வந்த கொஞ்ச காலத்துல வால்மார்ட் உள்ளூர் வியாபாரிகளை எல்லாம் அடிச்சுத் தூக்கிட்டு, பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அப்புறம் அந்தப் பொருள் அவங்க கடையில மட்டும்தான் கிடைக்கும்னு ஒரு நிலையை உண்டாக்கும்போது, மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டுனு எல்லா தட்டு மக்களும் அங்க சரண்டர் ஆகத்தானே வேணும்?

சரி, வால்மார்ட் வந்தாச்சு. இறங்கலாமா..?

இதை வெறும் மளிகைக் கடைனு நினைக்காதீங்க. ஊசியில இருந்து பிளாஸ்மா டி.வி. வரை எல்லாம் கிடைக்கும். ம்... வலது காலை வெச்சு உள்ள வாங்க. முதல் பிரிவு, ஆடைகள். அதுவும் பெண்களுக்கான ஆடைகள். ஏன்னா, நாமதானே அவங்களோட டார்கெட்? என்னதான் உப்பு, புளி, மிளகாய் வாங்க வந்தாலும், வண்ண வண்ண உடைகளைப் பார்த்ததும் மயங்காம இருப்போமா..? பொதுவா, ஆடைகள் வாங்கறதுக்காக யாரும் வால்மார்ட் போகமாட்டாங்க. ஆனா, வால்மார்ட் போனா... ஆடைகள் வாங்கலாம். இதே நிலைமைதான் துணிமணிகளோட துணைக்கருவிகளான காலணிகள், கைப்பைகள், செயற்கை நகைகள் எல்லாத் துக்கும்.

வால்மார்ட்டுக்கு ஒரு விசிட்...

அடுத்தது, எலெக்ட்ரானிக்ஸ். சின்ன பாட்டரியில இருந்து ஃப்ரிட்ஜ் வரை கிடைக்கும். மற்ற கடைகளைவிட விலை குறைவு. ஆனா, பிரத்யேக எலெக்ட்ரானிக் கடைகளில் இருக்கும் தரமோ, எந்த விவரம் கேட்டாலும் நமக்கு விளக்கிச் சொல்லும் விற்பனையாளர்களோட தெளிவோ... இங்க இருக்காது. இந்த மளிகைக் கடையில அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அப்புறம் ஏன் எலெக்ட்ரானிக்ஸ் வெச்சுருக்காங்கனு கேட்கறீங்களா? ஏன்னா, இங்க வந்து இந்தப் பொருட்களுக்கு பில் போடறதுக்கும் பணக்கார 'புத்திசாலிகள்’ சிலர் இருக்கத்தான் செய்வாங்க. எலெக்ட்ரானிக்ஸ் மட்டுமில்ல... வீட்டு உபயோகப் பொருட்கள், பெட்டி படுக்கைகளுக்கும் இதே நிலைதான்.

நல்லவேளை பசங்கள கூட்டிட்டு வரல. ஏன்னா, இப்ப நாம இருக்குறது பொம்மைகள் பிரிவு. அதே விலை குறைவு பல்லவிதான். இந்த செக்ஷன்ல இருந்து பசங்களை நகர்த்த சில பெற்றோர் என்ன பாடு பட்டுட்டு இருக்காங்க பாருங்க. ஆனாலும், கடைசியில ஒரு பொம்மையாவது வாங்காம இங்க இருந்து நகர முடியாது. அதுதானே வால்மார்ட்டோட இலக்கு?!

இன்னொரு தடவையும் 'நல்லவேளை' சொல்லிக்கிறேன்! ஏன்னா, இப்ப நாம நிக்கறது சமையலறை சாதனங்கள் பிரிவுல. கட்டுப்பாடில்லாம தூண்டப்பட்டு நானே சில கிச்சன் அயிட்டங்களை பில் போட்டுட்டு இருக்கேன். இந்த லட்சணத்துல 'நீங்க வால்மார்ட்ல பாத்திரம் வாங்காதீங்க...’னு உங்களை நான் சொல்ல முடியாதுல. பர்ஸ் கனம் கொஞ்சம் குறைஞ்சுடுச்சு.

அடடா! எவ்வளவு காய்கறிகள், பழங்கள். ஒவ்வொண்ணும் கண்ணுக்குக் குளிர்ச்சியா, ஃப்ரெஷ்ஷா..! இல்லவே இல்ல. கண்ணுக்குக் குளிர்ச்சியாவும் இருக்காது, ஃப்ரெஷ்ஷாவும் இருக்காது. வால்மார்ட்டோட குளிர் சாதன அறையில இருந்து, காய்கறிப் பிரிவுக்கு வந்து, நம்ம வீட்டு ஃப்ரிட்ஜுக்கு வந்து, கிச்சனுக்கு வர்றதுக்குள்ள, அது செத்து பலநாள் ஆகியிருக்கும். ஆக, நாங்க ஒவ்வொரு நாளும் சமையலுக்குப் பயன்படுத்தற காய்கறிகள் எல்லாமே செயற்கையாக குளிரூட்டப்பட்ட பழசுதான். இந்தியாவுல சந்தைக்குப் போய், பறிச்ச வாசம் மாறுறதுக்குள்ள பேரம் பேசி காய்கறிகள் வாங்கி, சைடுல ரெண்டு கறிவேப்பிலை, மல்லித்தழையை இலவசமா வாங்கிட்டு வருவீங்க. வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தா, 'ஃபிக்ஸட் ரேட்’னு போர்டுக்கு கீழ இருக்குற வதங்கிய காய்கறிகளைத்தான் வாங்கி நீங்க வதக்குவீங்க.

வால்மார்ட்டுக்கு ஒரு விசிட்...

அப்பாடா... இதோ கடைசியா வந்துடுச்சு மளிகை சாமான்கள் பிரிவு. இதுதானே மெயின், இதை எதுக்கு கடைசியில வெச்சிருக்காங்க? அதுதான் வால்மார்ட்டோட சூழ்ச்சி. கடை ஆரம்பத்துலயே இந்தப் பிரிவு இருந்தா, அங்கயே மளிகை சாமான்கள் வாங்கிட்டு அப்படியே போயிடுவோமே..? அப்புறம் மத்த பிரிவுகளுக்கு எல்லாம் எப்படி நம்மை போக வைக்கிறது, பில் போட வைக்குறது? புரிஞ்சதா! இந்த ஷெல்ஃபை எல்லாம் பாருங்க... இருக்கிறதுலேயே விலை அதிகமான பொருட்கள் நம்ம கண்களுக்கு சமமான நிலையில இருக்கும். விலை கம்மியா இருக்கிற பொருட்கள் கீழ் தட்டுலயோ, ரொம்ப மேல் தட்டுலயோ இருக்கும். டெக்னிக்!

பில் போட்டாச்சு. சொன்ன மாதிரியே நாலு பொருட்கள் வாங்க வந்த நான், இருபது பொருட்கள் வாங்கியிருக்கேன். ஆரம்பிச்ச புதுசுல அதிரடியா விலை குறைச்சு மற்ற வியாபாரிகளை எல்லாம் இல்லாம பண்ணின இந்த வால்மார்ட்டோட இன்றைய பில், ஆரம்பகட்ட விலையைவிட அஞ்சாறு மடங்கு கூடியிருக்கு? யாரை கேள்வி கேட்க? இந்திய நிலைமையும் நாளைக்கு இதுதானா..?

ஒரு பாக்கெட் பால் அதிகமா வாங்கினா, ''என்னம்மா, வீட்டுல விசேஷமா?''னு அன்பா கேக்கற பால்காரரை மிஸ் பண்ணிடாதீங்க.

''தம்மாத்தூண்டு பருப்பைக் கடைஞ்சு, கீரை மேல ஊத்து. மிளகாய கிள்ளிப் போடு, கடுகு தாளிச்சுக் கொட்டி பசங்களுக்குக் ஊட்டும்மா... நல்ல 'கிண்’னுனு வருவாங்க''னு கறிகாயோடு சமையல் குறிப்பும் சொல்லும் காய்கறிக்காரஅம்மாவை மிஸ் பண்ணிடாதீங்க.

''ஏம்மா எல்லாத்தையும் நீ தூக்கிட்டுப் போற... பையனை வண்டியில எடுத்துட்டு வந்து வீட்டுல போடச் சொல்றேன் வெச்சுட்டுப் போ''னு அக்கறை காட்டுற அண்ணாச்சியை மிஸ் பண்ணிடாதீங்க. அந்நிய முதலீட்டுக்கு அடிமை ஆகிடாதீங்க!

- ஜி.சுஜாதா, மேரிலேண்ட்

நீங்களும் நிருபர்தான்!

அசத்தலான, அற்புதமான, விஷயங்கள், சாதனை புரியும் பெண்கள்... இன்னும் பலதரப்பட்ட செய்திகள் உங்கள் அக்கம்பக்கத்தில் கொட்டித்தானே கிடக்கின்றன! அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, புகைப் படங்களுடன், கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு பரிசு உண்டு!

அனுப்ப வேண்டிய முகவரி... 'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயில்: aval@vikatan.com

பின்குறிப்பு: கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மையானவையாக இருப்பது முக்கியம்.