Published:Updated:

கை, கால்கள் மரத்துப் போகின்றனவா...

உஷார், உஷார்!ஆல்-இன்-ஆல் உதவிப் பகுதிஹெல்ப் லைன்

கை, கால்கள் மரத்துப் போகின்றனவா...

உஷார், உஷார்!ஆல்-இன்-ஆல் உதவிப் பகுதிஹெல்ப் லைன்

Published:Updated:
##~##

''48 வயதாகும் எனக்கு கடந்த சில வாரங்களாக கை மற்றும் கால்கள் அடிக்கடி மரத்துப்போகின்றன. உட்கார்ந் திருப்பது உள்ளிட்ட ஒரே நிலையில் சேர்ந்தாற்போல இருக்கும் சமயங்களில் எல்லாம் இந்த மரத்துப்போன உணர்வும் மதமதப்பும் வருகிறது. குடும்ப மருத்துவர் தந்த மாத்திரைகளை சாப்பிடும்போது மட்டுமே நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், மரத்துப்போவது தொடர்கிறது. இது என்ன மாதிரியான பிரச்னை? இதை எதிர்கொள்வது எப்படி? மெனோபாஸுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?''

 - உ.கோகிலாராணி, சேலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கை, கால்கள் மரத்துப் போகின்றனவா...

டாக்டர் புவனேஷ்வரி ராஜேந்திரன், நியூரோபதி சிறப்பு மருத்துவர், அடையாறு:

''நரம்பு செயல் இழப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான நியூரோபதி என்பதன் கீழ் உங்கள் பிரச்னை வருகிறது. முதலில் உங்களது மெடிக்கல் ஹிஸ்டரி, வேறு புற உபாதை களின் தொடர்பு முதலியவற்றை அறிந்தாக வேண்டும். முதலாவதாக, உங்கள் கழுத்தில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும். கழுத்து வட்டுகளில் ஏதேனும் பிசகு இருக்குமானால், அதுவே கை அல்லது கால்களுக்கு செல்லும் நரம்புகளை அழுத்தி, சம்பந்தப்பட்ட அவயங்களில் நீங்கள் குறிப்பிட் டது உட்பட பல உபத்திரவங்களைக் கொடுக்கும்.

இரண்டாவதாக, உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். நீரிழிவு, சுலபமாக உடல் உள்ளுறுப்புகளை பாதிக் கும். வெறும் மரத்துப்போவதோடு, கை கால் குத்தல், எரிச்சல், தரையில் நடப்பதை உணரவே முடியாதது என நரம்பு செயல்பாட்டை குலைக் கும். மூன்றாவதாக, ஏதேனும் ஒரு பக்கமாக இரு கையோ... காலோ மரத்துப்போவதாக இருப்பின், அதற்கு 'வைட்டமின் டி’ பற்றாக்குறை காரண மாக இருக்கும். ரத்த பரிசோதனைகள் மூலம் இப்பிரச்னைகளை அறிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட ஒரு பக்கம் மட்டுமே மரத்துப்போவது மற்றும் பலவீனத்தை உணருவதாக இருப்பின், அது பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது ஆரம்பத்தில் சேர்ந்தாற் போல சில நாட்களோ அல்லது ஒரு நாள் முழுக்கவோ இருந்து பழையபடி சகஜ நிலைக்குத் திரும்புவதாக இருக்கும். சுதாரித்து மருத்துவ ஆலோசனைகளை எடுத்து... அவற்றைப் பின்பற்றவும் வேண்டும். தவறினால்... சிக்கலாகி விடும். ரத்தப் பரிசோதனையை அடிப்படை யாகக் கொண்ட டெஸ்ட்டுகள் மற்றும் இ.சி.ஜி, கழுத்து ரத்தக் குழாய் பரிசோதனை போன்ற வற்றின் மூலமாக உங்களது உடல் நல பாதிப்பை தெளிவாக அடையாளம் கண்டு சிகிச்சை பெற லாம். நரம்பியல் சிறப்பு மருத்துவரை நாடுங்கள்.

மெனோபாஸுக்கும் கை, கால் மரத்துப்போகும் நரம்பு தொடர்பான பிரச்னைக்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், மெனோபாஸ் நிலையில் இயல்பாகவே உடலில் அதிகரிக்கும் சூடு, மன அழுத்தம் போன்றவை நரம்புகளை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, உரிய காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.''

கை, கால்கள் மரத்துப் போகின்றனவா...

கல்யாணத்துக்கு முன்னே கவனிக்க வேண்டியவை...!

''மூத்த மகள், தன்னுடைய கர்ப்பகாலம் மற்றும் பிரசவம் போன்ற சந்தர்ப்பங்களில், தனது கவனக்குறைவான உடல் நலப்பராமரிப்பினால் எங்களை ரொம்பவே பயமுறுத்திவிட்டாள். தற்போது இளைய மகளுக்கு வரன் தேடத் துவங்கியிருக்கிறோம். அதனால், அவளுடைய உடல்நலன் மற்றும் வம்சவிருத்தி போன்றவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இதில் முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்டி உதவ முடியுமா?''

- ஜெசில்லா திவாகரன், திருநெல்வேலி

டாக்டர் வீணா ஜெகராம், மகளிர் மகப்பேறு சிறப்பு மருத்துவர், திருச்சி

''உயரத்துக்கேற்ற எடை என்பது உடல்நல பராமரிப்பின் அடிப்படை. இதற்கென இருக்கும் பி.எம்.ஐ ரிசல்டைப் பொறுத்து... எடைக்குறைப்பு அல்லது அதிகரிப்பு முயற்சிகளில் இயற்கையான வழிகளில் இறங்கலாம். பி.எம்.ஐ எனப்படும் 'பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (body mass index) என்பது உடலின் சரியான எடையை பராமரிக்க உதவும் ஒரு குறியீட்டு எண். அதாவது ஒருவரது உடல் எடையை கிலோ கிராமிலும், உயரத்தை மீட்டரிலும் அளந்து கொள்ள வேண்டும். உயரத்தை உயரத்தால் பெருக்கி வரும் மதிப்பால் எடையை வகுக்க வேண்டும். இப்போது கிடைக்கும் குறியீட்டு எண் 25ஐ ஒட்டி இருப்பின், சரியான எடை. 18ஐ விட குறைவு எனில் கவனித்தாக வேண்டிய எடைக்குறைவு; 30ஐ தாண்டினால் கூடுதல் எடை என்பதால் உஷார். அடுத்ததாக மரபு சார்ந்த நோய்கள் அல்லது அதன் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை  மருத்துவ ஆலோசனை உதவியுடன் சரிபார்க்க லாம். ஆஸ்துமா, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்றவை இந்த லிஸ்ட்டில் அடங்கும்.

கை, கால்கள் மரத்துப் போகின்றனவா...

இதயம் தொடர்பான பாதிப்பு ஏதேனும் இருப்பின், மருத்துவ ஆலோசனைகள் எடுத்துக் கொள்வது முக்கியம். அதைத் தொடர்ந்து, திருமணத்துக்கான வயதாக அரசாங்கம் நிர்ணயித் திருக்கும் வயதின் துவக்கத்திலேயே திருமணம் செய்விப்பதும், உடனடியாக குழந்தைப்பேறு மேற்கொள்வதும் புத்திசாலித்தனம். தாமத திருமணம், தாமத குழந்தைப்பேறு போன்றவை இதய பாதிப்பை அதிகரிக்கச் செய்யலாம். அதே போல நரம்பு சம்பந்தமான பாதிப்புகள், வலிப்பு, தொழுநோய் போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தாலும் திருமண ஏற்பாட்டுக்கு முன்பே சிகிச்சைகளைப் பின்பற்றி தேற்றுவது சிறப்பு.

சத்துக்குறைபாட்டுக்காக ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்பிணிகளுக்கு டாக்டர் பரிந்துரைப்பதை பார்த்திருப்பீர்கள். திருமணத்துக்கு முன்பிருந்தே தினசரி உணவில் சீராக கீரைகள், காய்கறிகள் உண்பதன் மூலம், 'ஃபோலிக் ஆசிட்' மாத்திரைகள் தரும் சத்துக்களை இயற்கையாகவே பெறலாம்.

18 வயதுக்கு மேல், கருத்தரிப்புக்கு மூன்று மாதத்துக்கு முன்பு என கால அவகாசத்தில் அம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கர்ப்பகாலத்தில் தாய்க்கு 'ரூபெல்லா’ பாதிப்பு வந்தால், சிசுவுக்கு கருவிலேயே உடற்குறைபாடு ஏற்படலாம் என்பதால்தான் இந்த ஏற்பாடு. அதேபோல கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை சரியான இடைவெளிகளில் இரண்டு டோஸாக போட்டுக்கொள்ள வேண்டும். தாயின் ரத்தத்தின் 'ஆர்ஹெச்' நிலை 'நெகடிவ்' எனில், அதற்கான ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் அதிக அளவில் எதிர்கொள்ளும் சங்கடம்... ரத்தசோகை. இதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு ரத்தம் ஏற்றவேண்டிய நிலைகூட வரும். இதைத் தவிர்க்க இப்போதிருந்தே பேரீச்சம்பழம், கீரை கள், பப்பாளி போன்ற இயற்கை இரும்புச்சத்து மூலங்களை அடிக்கடி உணவில் சேர்க்கவும். அசைவம் சாப்பிடுபவராக இருந்தால்... ஆட்டு ஈரலையும் சேர்த்துக் கொள்ளலாம்''

இந்தப் பகுதிக்கு உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி...
'அவள் ஹெல்ப் லைன்’ அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002