Published:Updated:

"கசக்கும் படிப்பு... இனி, இனிக்கும்!"

ஒரு தாயின் கண்டுபிடிப்புஸ்டெப்ஸ்

"கசக்கும் படிப்பு... இனி, இனிக்கும்!"

ஒரு தாயின் கண்டுபிடிப்புஸ்டெப்ஸ்

Published:Updated:
##~##

''படிப்பு... இப்போ திணிப்பா இருக்கு. அதுக்கு மாற்றுதான்... என்னோட 'கிரியேட்டிவ் எஜுகேஷன்’ கல்விமுறை. இதில் குழந்தைகள் எதையும் மனனம் செய்து கத்துக்கமாட்டாங்க. புரிஞ்சு உள்வாங்குவாங்க. வேப்பங்காயா மாணவர்கள் நினைக்கற படிப்பை, வெல்லக்கட்டியா கொடுக்குறதுதான் இதோட சிறப்பு!''

 - புன்னகையுடன் நம் முன் வந்து அமர்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயபிரியாதேவி. 'கிரியேட்டிவ் எஜுகேஷன்’ என்கிற கல்விமுறையை உருவாக்கி, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வரும் அறிவுப் பெண்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுவாரசியமான வொர்க்ஷீட்கள், ஆக்டிவிட்டி ஐடியாக்கள், விளையாட்டு திட்டமிடல்கள் என்று பள்ளிக் குழந்தைகளுக்கான மெட்டீரியல்கள் தயாரிப்பில் இருந்தவரை, அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம்.

''சென்னை ஐ.ஐ.டி-யில எம்.பி.ஏ முடிச்சுட்டு, எஸ்.ஆர்.எம் காலேஜ்ல புராஜெக்ட் பிரிவுல கொஞ்ச நாள் வேலை செய்தேன். திருமணம் முடிச்சு மகள் அதிதி  பிறந்தா. புத்தகங்கள்தான் என் அறிவுலகத்துக்கான வாசல். குழந்தைகள், கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சில, நம்ம பள்ளிக் கல்வி திட்டத்தில் இருக்கும் தவறுகளையும், அதனால குழந்தைகளுக்கு படிப்பு பாரமாகிற சோகத்தையும் எனக்குப் புரிய வெச்சுது. குறிப்பா... படிப்புக்காக என் மகள் அதிதி படற சிரமங்களே... என்னை வேகமா இயங்க வெச்சுது. படிச்சோமா, புத்தகத்தை மூடி வெச்சோமானு இல்லாம, இந்த நிலையை மாத்த என்ன செய்யலாம், நம் அளவில் எப்படி செயல்படுத்தலாம்னு மனசு நிறைய சிந்தனைகள் ஓடிட்டே இருந்துச்சு. அப்போ உருவானதுதான் 'கிரியேட்டிவ் எஜுகேஷன்’.

"கசக்கும் படிப்பு... இனி, இனிக்கும்!"

இதுக்காக நான் நிறைய படிச்சேன்... ஆராய்ச்சி செய்தேன்... பாடப் புத்தகங்களை குழந்தைகள் விரும்பிப் படிக்கணும்ங்கிறதுக்காக, அதுக்கான விஷயங்களா தேடிச் சேர்த்துக் கோர்த்தேன். என் மகள் தொடங்கி, அக்கம்பக்கத்துல இருக்கற தெரிஞ்ச பசங்க வரை பிராக்டிகலா சோதிச்சுப் பார்த்து, நிறைய 'ரிவைஸ்’ செய்தேன். பள்ளிக்கூடத்துல செயல்முறைப்படுத்தத் தேவையான டெக்னிகல் அவுட்லைன்களையும் உருவாக்கினேன். இப்படி பலகட்ட உழைப்புக்குப் பிறகு நான் உருவாக்கினதுதான்... கிரியேட்டிவ் எஜுகேஷன்'' என்றவர், அதை குழந்தைகளிடம் செயல்முறைப்படுத்தும் விதத்தை விளக்கினார்.

''செடி வளர்றதுக்கு தண்ணீர் வேண்டும்னு பாடமா சொல்றதைவிட, ஒரு செடிக்கு அதை தண்ணீர் ஊற்ற வெச்சு, அது வளர்றத காண்பிச்சா, மனசுல சுலபமா, சுவாரசியமா பதியும். 'எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும், ஒரே துருவங்கள் விலகும்’னு மனப்பாடம் செய்ய வைக்காம, அது கையில ஒரு காந்தத்தைக் கொடுத்து அந்த கான்செப்ட்டை பரீட்சித்துப் பார்க்கச் சொன்னா, ஆயுளுக்கும் மறக்காது. கேள்விக்கான பதிலா மைண்ட்ல திணிக்காம, நல்ல அனுபவமா மனசுல பதிச்சுக்குவாங்க. இதுதான் கிரியேட்டிவ் எஜுகேஷன்!'' என்று அழகாகப் புரிய வைத்தார் ஜெயபிரியாதேவி.

''2007-ம் வருஷத்துல இதை உருவாக்கி நான், ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் நேரடியா போய் விளக்கினேன். இம்ப்ரஸ் ஆன சில பள்ளிகள், உடனடியா செயல்படுத்த அனுமதி கொடுத்தாங்க. குழந்தைகள் படிப்பை சிரமமில்லாம கத்துக்குறதை பார்த்துட்டு, இன்னும் பல பள்ளிகளும் ஆர்வமா வாய்ப்பு கொடுத்தாங்க. இப்போ சென்னையில மட்டும் 25 பள்ளிகளில் இது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கு. அடுத்த கட்டமா தமிழ்நாடு அளவுல முயற்சி பண்ணிட்டிருக்கேன்'' என்றவர்,

''குழந்தைகளை ஈர்க்கும் விதமா கிளாஸ்ரூம்களை விஷ§வலா மாற்றுவதில் இருந்து ஆரம்பிக்குது எங்க வேலை. ஒவ்வொரு குழந்தைக்கும் சௌகரியமான தனித்தனி டெஸ்க், உபயோகிக்க எளிமையான அதேசமயம் எழுத்தை மேம்படுத்துற வித்தியாசமான பென்சில், பேனாக்கள், எண்கள், எழுத்துக்கள்னு வண்ண வண்ண சார்ட்கள் அலங்கரிக்கும் வகுப்பறைனு முழுக்க கல்வி உலகமா மாத்திடுவோம். எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை இப்போ இதை இம்ப்ளிமென்ட் செய்திருக்கோம். எங்க குழு ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சி கொடுத்து, அவங்க மூலமா 'கிரியேட்டிவ் எஜுகேஷ’னை குழந்தைகள்கிட்ட சேர்க்குது.

"கசக்கும் படிப்பு... இனி, இனிக்கும்!"

இந்த புதிய கல்வி முறையில... மொழிப்பாடங்கள், கணிதம், ஆங்கிலம்னு அனைத்து பாடங்களுமே வித்தியாசமான முறையிலதான் கற்பிக்கப்படும். இதுக்காகவே வொர்க்ஷீட் உட்பட எல்லாத்தையும் நாங்க புதுசாவே உருவாக்கியிருக்கோம். இந்தக் கல்வி முறை குழந்தைகளுக்கு மட்டுமில்ல, ஆசிரியர்கள், பெற்றோர்களுக்குமானதுதான். ஏன்னா, எல்லா தரப்பும் சேர்ந்துதான் ஒரு குழந்தையை உருவாக்குறோம். நம் பாரம்பரிய விளையாட்டுக்களும் இந்தக் கல்வி முறையில் உள்ளடக்கம். ஒரு கல்வி ஆண்டில் 30 வாரங்களுக்கு எங்களோட பாடத்திட்டங்களை வகுத்திருக்கோம். இதுக்கு ஒரு குழந்தைக்கான கட்டணம் 350 - 400 ரூபாய் வரைக்கும்தான்'' என்றவர், இப்போது இந்த முயற்சியை இன்னும் மெருகேற்றும் முனைப்பில் இருக்கிறார்.

''இதை இன்னும் எப்படி எல்லாம் செழுமைப்படுத்தலாம்னு நிறைய ஆராய்ந்து, முயற்சிகள் எடுத்துட்டு இருக்கேன். இதுக்காக ஒரு குழுவை அமர்த்தி பாடப் புத்தகங்களை தயாரிச்சிட்டுஇருக்கோம். இந்தப் பயணத்தில் என் கணவர் ஜெயவிஜயனும், மகள் அதிதியும் உறுதுணையா இருக்காங்க. இதை இன்னும் பரவலா பல பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லணும், குழந்தைகளை சந்தோஷமா படிக்க வைக்கணும்!''

- விடை கொடுத்தார் ஜெயபிரியாதேவி!

- சா.வடிவரசு, படங்கள்: ரா.மூகாம்பிகை

ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம்!

ந்தக் கல்வி முறை, சென்னை, கோலப்பெருமாள் சீனியர் செகண்டரி ஸ்கூல், ஸ்ரீவித்யா இன்டர்நேஷனல் ஸ்கூல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பகுதிநேர பாடமாக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறது.

"கசக்கும் படிப்பு... இனி, இனிக்கும்!"

இதைப் பற்றி பேசும் ஸ்ரீவித்யா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மீனாட்சி மதுசூதனனிடம் கேட்டபோது, ''இந்தக் கல்விமுறையைப் பற்றி ஜெயபிரியாதேவி எங்களிடம் சொன்னதுமே, மிகவும் பிடித்துப் போகவே.. நாங்களும் நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவெடுத்தோம். எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை இதை அமல்படுத்தியுள்ளோம். இந்தக் கல்வி முறையின் மூலம் குழந்தைகள் நேரடியாக, உணர்ந்து கல்வி கற்கிறார்கள். உதாரணமாக, செடி, கொடிகளைப் பற்றி படிக்கும்போது, குழந்தைகளை கார்டனுக்கு அழைத்துக் கொண்டுபோய்.. 'இதுதான் செடி, இதுதான் பூ' என்று நேரடியாக பார்த்து கற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொன்றும் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதோடு, அவர்களின் அறிவுத்திறன் வளரவும் அதிக வாய்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான ஒரு கல்விமுறைதான் இந்த கிரியேட்டிவ் கல்வி முறை'' என்று சொன்னார்.

''என் குழந்தை எப்படியெல்லாம் படிக்கணும்னு     ஆசைப்பட்டேனோ, அதைவிட அதிகமாவே இப்போது படித்து வருகிறாள். காரணம், இந்த கிரியேட்டிவ் கல்வி முறைதான். தன் பிள்ளைகள் இந்த முறையில் படிக்கவேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரையும் தூண்டுகிற அளவுக்கு, இந்தக் கல்விமுறை தயாரிக்கப்பட்டுள்ளது....'' என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த முறையில் பாடம் பயின்றுவரும் குழந்தையின் அம்மாவான அமலா குமார்.