குடும்பத் தலைவிகளின் ‘ப்ளாஷ்பேக்’ தொடர்

##~##

'சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு’ என்பது நம் முன்னோர்களின் அனுபவ பழமொழி. உண்மையில் அப்படி ஒரே ஒரு பசுமாட்டில் தன்னுடைய புகுந்தவீட்டு வாழ்வை துவங்கி... மூன்று பெண்கள், இரண்டு பையன்கள் என்று ஐந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, அவர்களை நல்ல முறையில் கரை சேர்த்து, 'மக்களை பெற்ற மகராசி'யென ஊர் மெச்ச வாழ்கிறார், திருச்சி, ஒத்தக்கடையைச் சேர்ந்த முத்துக்கண்ணு ரெங்கராஜ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கல்லணை பக்கத்துல இருக்குற நடராஜபுரம்தான் சொந்த ஊர். நிலபுலம், நெல் வியாபாரம்னு கொஞ்சம் செழிப்பான குடும்பம் எங்களோடது. அஞ்சு பொண்ணு, ரெண்டு பையன்னு ஏழு பேர்ல நான் மூணாவது. எட்டாவதுதான் எம்படிப்பு. 18 வயசுல எனக்கு மாமன் மகன்கூட கல்யாணம். 'ரொம்ப கெட்டிக்காரப் பையன், பேங்குல அட்டெண்டரா இருக்கான், உன்னை நல்லா பார்த்துக்குவான்'னு சொல்லி எங்க தாத்தாவும், பாட்டியும் இவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கற கனவுகளோடதான் அவங்க வீட்டுக்குள்ள அடியெடித்து வெச்சேன். ஆனா... ரெண்டு மூணு நாள்லயே என்னோட அத்தனை கனவுகளும் அடிபட்டு போச்சு'' என்ற முத்துக்கண்ணுவை நாம் கூர்த்து பார்த்தோம். அதைக் கவனித்தபடி தொடர்ந்தார்...

''என்னோட மாமனார், கொழுந்தனுங்க ரெண்டு பேருனு இவரைத் தவிர அந்த வீட்டுல இன்னும் மூணு ஆம்பளைங்க. வெட்டிச் செலவுகளுக்காக வாங்கின கடன்களை அடைக்கறதுக்காகவே, ரயில்வே வேலையில வி.ஆர்.எஸ் வாங்கிட்டாராம் மாமனாரு. அவரோட சேர்த்து, கொழுந்தனுங்களும் வேலை இல்லாமதான் இருந்தாங்க. என்னவரோட 300 ரூபாய் சம்பளத்துல... இவங்க மூணு பேரு, கல்யாணம் ஆகாத ஒரு நாத்தனார்னு எல்லாரையும் வெச்சு சமாளிக்கணும்னு நினைச்சதுமே தலை சுத்திடுச்சு.  

புகுந்த வீடு! - 10

அங்க கிடைச்ச ஆறுதல்... என் நாத்தனார்தான். என்னோட வேலைகளையும் வேதனைகளையும் அவங்கதான் பகிர்ந்துகிட்டாங்க. இன்னொரு ஆறுதல், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் என்னவர்கிட்ட குடிப்பழக்கம் இல்லைங்கறதுதான். ஒண்ணரை வருஷம்தான் இழுத்துப்பிடிச்சு கூட்டுக் குடும்பமா ஓடுச்சு. ரெண்டாவது கொழுந்தனுக்கு எங்க ஊர்லயே சொந்தக்கார பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சோம். அவ வந்ததும்... அவரு கொஞ்சம் புத்தி வந்து ரெண்டு பசுமாடு வாங்கினாரு. அவரை பார்த்ததும் சின்னவரும் உடனே போய் ரெண்டு மாடு வாங்கினாரு. அவங்கவங்க வருமானத்தை வெச்சு வரவு-செலவு பார்த்துக்க ஆரம்பிச்சாங்க. அதனால, கடன்களை பொதுவுல அடைச்சுட்டு... பக்கத்துலயே நாங்க தனியா ஒரு குடிசை போட்டுக்கிட்டோம். எங்களுக்கு அந்தக் காலத்துல ஒதுக்கின கடன்... 2,650 ரூபாய்'' என்றவர், அந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு மேலேறிய கதையைத் தொடர்ந்தார்.

''பேருக்கு மட்டும் கூரை இருக்கும், சுவர் கிடையாது, கரன்ட் கிடையாது, வேற எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. மழை பெய்தா ஒழுகும். சுத்தி இருக்கிற தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வந்துடும். தண்ணி வடியிற வரைக்கும் உட்கார முடியாது, படுக்க முடியாது. நாங்க படற கஷ்டத்தைப் பார்த்துட்டு, எங்க தாத்தா 250 ரூபா கொடுத்து, 'மாடு வாங்கிப் பிழைச்சுக்கோங்க'னு சொன்னாரு. இவங்க குடும்பமே மாடு வாங்கி விக்குறதுல நல்ல அனுபவம் உள்ள குடும்பம். அதனால அந்தக் காசுல இவரு உடனே போய் நல்ல மாடா பார்த்து வாங்கிட்டு வந்தாரு. அது மாடு இல்லை, மகாலஷ்மி! அது வந்த நேரத்தில இருந்து எங்களோட வாழ்க்கை முறையே மாற ஆரம்பிச்சுடுச்சு.

புகுந்த வீடு! - 10

வரிசையா குழந்தைங்க பொறந்தாங்க. குழந்தைங்களோட குழந்தையா மாடுகளும் வளர ஆரம்பிச்சுது. பால் வித்து சேர்த்து வெச்சு இன்னொரு மாடு, இன்னொரு மாடுனு முழுக்க முழுக்க மாடு வாங்கறதுலயே கவனம் செலுத்தினேன். அஞ்சு வருஷத்துல அஞ்சு மாடுனு ஆயிடுச்சு. வேளைக்கு 35 லிட்டர் பால் ஊத்துவேன். நல்லா வருமானம் வர ஆரம்பிச்சது. இதுக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. காலையில நாலு மணிக்கு எந்திரிச்சா... பகல் 12 மணிக்குத்தான் பல்லே விலக்குவேன். அவ்வளவு வேலை இருக்கும். ஒவ்வொரு மாடா பால் கறந்து, தீனி வெச்சு, குளிப்பாட்டி, பசங்களை குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்பி, அவருக்கு சாப்பாடு போட்டு, சாப்பாடு கட்டி கொடுத்துனு வேலை வேலைதான். பசங்கள நாத்தனார் கொஞ்சம் பார்த்துக்குவாங்க. இதுல அரை கிலோ மீட்டர் தூரம் போய்த்தான் தண்ணி தூக்கிட்டு வரணும். குளிக்க, குடிக்க, மாட்டுக்குனு ஒரு நாளைக்கு மொத்தம் 40 தவலை தூக்கிட்டு வருவேன்'' என்றவரை ஆச்சர்யமாகப் பார்த்தோம்.

புகுந்த வீடு! - 10

''ஊர்ல ஒரு ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருதுனு எங்க தாத்தா சொல்லவும்... கையில இருந்த காசை போட்டு அதை வாங்கிட்டோம். பெரிய மக வயசுக்கு வந்தப்போ, இந்த வீடு இருக்குற இடம் விற்பனைக்கு வந்துச்சு. கையில இருந்த ஒண்ணேகால் லட்ச ரூபாயோட, 15 பவுன் நகையும் சேர்த்து வெச்சுருந்தேன். அதைப் போட்டு இந்த இடத்தை விலைக்கு வாங்கி கூரை போட்டு குடியேறினோம். இவரு பேங்குல லோன் போட்டு கொஞ்சம் காசு தர, மேற்கொண்டு வர்ற வருமானத்தையும் வெச்சு வீடு கட்ட ஆரம்பிச்சோம். அதுக்குள்ள பெரிவளை பொண்ணு கேட்டு வரவே... பி.ஏ படிச்சிட்டு இருந்தவளை 25 பவுனு நகை போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். அடுத்து மூணு வருஷம் கழிச்சுதான் வீடு கட்டி முடிஞ்சது. ரெண்டு வருஷம் கழிச்சு ரெண்டாவது பொண்ணு... அடுத்த ரெண்டு வருசம் கழிச்சு மூணாவது பொண்ணுனு கல்யாணம் முடிச்சோம்.

இதுக்கிடையில சேர்ற பணத்தை வெச்சு ஊர்ல இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கினோம். பையங்க ரெண்டு பெரும் நல்லா படிச்சாங்க. ரெண்டு லட்சம் கட்டி சின்னவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வெச்சோம். பெரியவன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரா சென்னையில இருக்கான். அவனுக்கு போன வருஷம் கல்யாணம் முடிஞ்சுது. இனி பசங்களுக்கு சொந்த வீடு வாங்க எங்களால முடிஞ்சதைக் கொடுக்கணும், அதுக்காக தொடர்ந்து உழைக்குறோம்!'' என்று இடைவிடாத தன் உழைப்பை மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கிறார் முத்துக்கண்ணு,

''35 வருஷமா மாடுகளோடவே வாழ்ந்துட்டா. இப்பதான் எங்க வீட்டுல மாடுகள் இல்லாம இருக்கு. தண்ணீர் தவலைகளும் ஓய்வுல இருக்கு. இவளும் கொஞ்சம் அசந்திருக்கா. இவ்வளவு நல்லது கெட்டது செஞ்சு முடிச்சாலும்... இவளுக்குனு ஒண்ணும் செஞ்சுக்கல, கயித்துலதான் தாலி போட்டிருந்தா. நாம ஒண்ணுமே செய்யலயேனு, நான் ரிட்டயரானப்ப லீவ் சரண்டர்ல வந்த பணத்தை இவகிட்ட காட்டாம நேரா நகைக்கடைக்கு எடுத்துட்டுப்போய் அஞ்சு பவுன் சங்கிலி வாங்கிட்டு வந்து கழுத்துல போட்டேன்!'' என்று கணவர் ரெங்கராஜ் சொல்லவும், புதிதாகத் தாலி கட்டிக்கொண்ட புதுப்பெண்ணாக வெட்கம் மின்னுகிறது முத்துக்கண்ணுவின் முகத்தில்!

- கரு.முத்து

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism