Published:Updated:

"வார்த்தைகளால் ‘வதை’க்காதீர்கள்..!”

சட்டத் திருத்தத்துக்கு எதிராக சீறும் பிரபலங்கள்நியூஸ்

"வார்த்தைகளால் ‘வதை’க்காதீர்கள்..!”

சட்டத் திருத்தத்துக்கு எதிராக சீறும் பிரபலங்கள்நியூஸ்

Published:Updated:
##~##

'பிரியங்கா’ என்றொரு தமிழ்த் திரைப்படம், சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தது பலருக்கும் நினைவிருக்கும். பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணை, நீதிகேட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவார் ரேவதி. எதிர்த்தரப்பு வழக்கறிஞர் நாசர், 'விசாரணை' என்கிற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணை, முடிந்த அளவுக்குக் கூனிக்குறுக வைக்கும் கேள்விகளால் கொடுமைக்கு உள்ளாக்குவார். பெரும்பாலும் எதார்த்தத்தில் இதுவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அந்தப் படம்தான் சாட்சி.

இப்படித்தான், நிகழ்வால் ஒரேயருமுறை பாதிக்கப்பட்ட பெண்ணை, வார்த்தைகளால் பலமுறை வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொண்டே இருக்கிறது இந்தச் சமூகம், சட்டம்! அதன் நீட்சிதான், 'பாலியல் பலாத்காரம்’  (sexual harassment) என்கிற வார்த்தைக்குப் பதிலாக, 'கற்பழிப்பு’ (Rape) என்கிற வார்த்தையை புதிய சட்ட மசோதாவில் சேர்த்து சமீபத்தில் மத்திய மந்திரி சபை எடுத்திருக்கும் முடிவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த முடிவு பல தளங்களில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் இவர்கள்.

"வார்த்தைகளால் ‘வதை’க்காதீர்கள்..!”

தமிழருவி மணியன், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்: ''தமிழகராதி சார்ந்து பார்த்தால், கற்பு என்பது உடலுடன் தொடர்புடைய சொல் அல்ல. கற்பு என்பது அறிவு. வீபீடனன், இந்திரஜித்திடம் 'கற்பிலாப் பாலக’ என்கிறான். அதாவது, 'அறிவில்லாத சிறுபையன்' என்கிறான். ஆக, கற்பு என்பது அறிவு. அது பெண்ணின் ஒழுக்கம் சார்ந்த சொல் அல்ல. 'கற்பு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது' என்கிறார் பாரதி. ஆனால், இங்கே... கற்பு என்பது பெண்களின் உடல் தூய்மை என்று ஆண்களால் கற்பிதம் செய்யப்பட்டு, அதுவே நீடித்துக் கொண்டும் இருக்கிறது. அதிலும் 'கற்பு அழிப்பு' என்கிற சொல், ஆணாதிக்க முட்டாள் சிந்தனையில் தோன்றிய வார்த்தை. பெண் உடலின் அதீதத் தூய்மை பற்றிய கற்பிதங்கள் அகற்றப்பட்டு, ஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது என்ற மறுமலர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சட்டப்பூர்வமான இந்த வார்த்தை மாற்றம், மீண்டும் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே இருக்கிறது.

"வார்த்தைகளால் ‘வதை’க்காதீர்கள்..!”

'பாலியல் பலாத்காரம்’ என்கிற வார்த்தையை 'கற்பழிப்பு’ என்று மாற்றுவதன் நோக்கம், வார்த்தையின் வன்மையைக் கூட்டுவதன் மூலமாக அந்தக் குற்றத்தின் கொடுமையைப் புரிய வைப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது குற்றவாளியைத் தண்டிப்பதைவிட, பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் இழிவுபடுத்தும் வார்த்தையே என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்த வார்த்தை மாற்றத்தினால் என்ன அதிரடியான மாற்றங்களும், தண்டனைகளும் கிடைக்கப் போகின்றன என்பது நமக்குப் புரியவில்லை.

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்துக்குப் பிறகு அவசர சட்டங்கள் வந்து, தூக்குத் தண்டனை கொடுப்பதா, ஆயுள் தண்டனை கொடுப்பதா என விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோதே அன்றாடம் தேசம் முழுக்க சீரழிக்கப்பட்ட சகோதரிகள் ஆயிரமாயிரம் பேர். கொலை செய்தால் மரண தண்டனை என்று தெரிந்துதானே செய்கிறார்கள்? மன அடிப்படையில் மனிதர்களைப் பண்படுத்தாமல், சட்டங்களினால் மட்டுமே குற்றங்களை சரிபடுத்திவிட முடியாது. அப்படியிருக்க, இந்த வார்த்தை மாற்றத்தால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது?''  

"வார்த்தைகளால் ‘வதை’க்காதீர்கள்..!”

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர், தமிழக பி.ஜே.பி: ''மாற்றுத்திறனாளி, சிறப்புக் குழந்தை போன்ற அழகான வார்த்தை உருவாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, 'கற்பழிப்பு’ என்கிற அபத்தமான சொல்லை சட்ட அகராதியில் ஏற்றுவது, ஏற்றுக்கொள்ள முடியாதது. 'அழிப்பு' என்கிற வார்த்தை 'நிர்மூலம்' என்ற அர்த்ததைத் தருகிறது. கற்பழிப்பு என்று சொல்லும்போது, அந்த பெண்ணின் வாழ்க்கையே அழிந்துவிட்டதுபோல அது பொருள் உணர்த்துகிறது. அந்த விபத்துக்குப் பின்னும், ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை நிறைய இருக்கிறது, அவர் மீண்டு வரவேண்டும் என்கிற நம்பிக்கையைத் தரவேண்டிய சட்டமே, 'எல்லாம் முடிந்துவிட்டது' என்று பொருள்படும்படி சொல்லாடுவது சரியல்ல.

பாதிக்கப்பட்ட பெண்ணை காயப்படுத்தாத, களங்கப்படுத்தாத புது வார்த்தைகளை உருவாக்கினால் என்ன? பெண்ணியவாதிகளின் எழுகுரல்களால், பத்திரிகையாளர்களின் புரிதலால் ஊடகங்களில் சமீப காலமாக 'கற்பழிப்பு’ என்கிற வார்த்தை புறக்கணிக்கப்பட்டு... 'பாலியல் வன்கொடுமை' போன்ற வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பெண், உடலளவில் கொடுமைக்கு உள்ளாகும்போது ஏற்படும் வலியைவிட, பல மடங்கு வலியை, அவளைக் குறிப்பிடும் வார்த்தைகளால் இந்தச் சமூகம் அவளுக்குத் தருகிறது என்பதை மறுக்க முடியாது. அது விரக்தியையும், சமயங்களில் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூடிய முடிவையும்கூட அவள் எதிர்நோக்க தூண்டுதலாக இருக்கிறது. எனவே, வார்த்தை உருவாக்கத்தில், பிரயோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.''

ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ், கரூர்: ''ஆங்கில வார்த்தையான 'ரேப்’ (Rape)இருபாலருக்கும் பொதுவானது. தமிழில் அது 'கற்பழிப்பு’ என்று மொழி பெயர்க்கப்படும்போது, ஆண்களால் பெண்களுக்கு நேர்வது என்று பொருளாக்கப்படுகிறது. எனவே, இது மொழிபெயர்ப்பு சார்ந்த சிக்கல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழிகளின் உருவாக்கத்திலும், அந்தச் சமூகத்தின் ஆணாதிக்க சிந்தனையே அடிப்படையாக இருக்கும். அந்த வகையில் இன்று புழங்கும் எல்லா மொழிகளுமே ஆணிய மொழிகள்தான். அதனால்தான் உலக மொழிகளின் கெட்ட வார்த்தைகள் அனைத்தும் ஆண்களால், அம்மா, மனைவி, சகோதரி என பெண்களைப் பழிக்கும்படியே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மொழிதான் கருத்தாக்கங்களை உருவாக்குகிறது. கருத்தாக்கங்கள்தான் சமூக சொல்லாடல்களை உருவாக்குகிறது. சமூக சொல்லாடல்கள்தான் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. செயல்பாடுகள்தான் இந்த கலாசாரத்தை எழுதுகிறது. அந்த கலாசாரத்தை எழுதுபவர்களாக எப்போதும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். இதுதான் பிரச்னையே!

"வார்த்தைகளால் ‘வதை’க்காதீர்கள்..!”

'பெண்கள்தான் பெண்களுக்கு எதிரி' என ஆண்கள் சொல்வார்கள். ஆனால். உண்மை அதுவல்ல. ஒரு மாமியார், தன் மருமகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியிருப்பது, ஒரு வீட்டில் பெண்களுக்கான குறுகிய இடத்தை வகுத்து வைத்த ஆணாதிக்க கட்டமைப்பே! இதையெல்லாம் ஓர் இரவிலேயே மாற்றிவிட முடியாது. ஏனென்றால், இந்த ஆணாதிக்க மொழி கையாடல்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, இன்று வரை தொடர்ந்து வந்திருப்பவை. மொழியில் ஆரம்பித்து சங்கிலித் தொடராக சிந்தனை, கருத்தாக்கங்கள், உறவுகள், சமூகம், அரசாங்கம், சட்டங்கள், தீர்ப்புகள் எல்லாமே ஆண்களுடையதாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க கட்டமைப்பு ஒவ்வொன்றையும் தாண்டி ஓடுகிற ஹர்டில் ரேஸ்... பெண்களுக்கானது. இதுபோன்ற தடைகளை நாம் கடைசி வரையிலும் தாண்டிக் கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது.

எனவே, புண்படுத்தக்கூடிய 'கற்பழிப்பு' என்கிற வார்த்தைக்குப் பதிலாக, சரியானதொரு வார்த்தையை அரசாங்கம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய நிலையில் சட்டங்கள்தான் ஓரளவுக்காவது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குபவையாக இருக்கின்றன. எனவே, அதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், மிக முக்கியமானவை.''

- வே.கிருஷ்ணவேணி