Published:Updated:

"இன்றைய ஹீரோயின்கள்... அதிபுத்திசாலிகள்!”

ஸ்க்ரீன்ஸ்

"இன்றைய ஹீரோயின்கள்... அதிபுத்திசாலிகள்!”

ஸ்க்ரீன்ஸ்

Published:Updated:
##~##

முன்பெல்லாம் சினிமாவில் ஹீரோயின்கள் 10, 15 வருடங்கள் கொடிகட்டிப் பறப்பார்கள். இப்போதோ... ஒரு ஹீரோயினின் திரை ஆயுள் அதிகபட்சமாக ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. ஹீரோக்கள் 30 வருடங்களுக்கும் மேலாக ஹீரோக்களாகவே தொடர்ந்து நடித்து வர, 'கனவுக் கன்னி’ நடிகைகள்கூட, சமயங்களில் தான் ஜோடியாக நடித்த அதே ஹீரோவுக்கே... அக்கா, அண்ணி, ஏன்... அம்மா ரோல்கூட நடிக்க வேண்டியிருக்கிறது. லட்சுமி, சௌகார்ஜானகி முதல் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா தொடர்ந்து, ரேவதி, சரண்யா, சிம்ரன் வரை இதே கதைதான்.

இதைப் பற்றி திரையுலக பிரபலங்கள் சிலரிடம் பேசியபோது...

''எங்க திரையுலக கால கட்டத்துல நாங்க உறுதியா நிலைச்சு நிற்கக் காரணம், எங்களோட நடிப்புத் திறமைதான்'' என்று ஆரம்பித்தார் சரோஜாதேவி.

''அப்போவெல்லாம் அழகு மட்டும் மூலதனம் இல்ல... நடிக்கவும் தெரிஞ்சா மட்டும்தான் நடிகையா இருக்க முடியும். அந்த நடிப்புத் திறமையாலதான், எங்களால நிலைச்சு நிற்க முடிஞ்சுது. ஹீரோவுக்கு சமமான கேரக்டர்களைப் பெற முடிஞ்சுது. அதனால பல வருஷத்துக்கும் ஃபீல்டுல இருக்கவும் முடிஞ்சுது.

"இன்றைய ஹீரோயின்கள்... அதிபுத்திசாலிகள்!”

'இப்போ வர்ற நடிகைகளுக்கு அழகு மட்டுமே போதும், நடிக்கத் தேவையில்லை'னு இயக்குநர்கள் நினைக்கறாங்க. அவங்களோட கதைகளும் ஹீரோயினை கவர்ச்சி பொம்மையா காட்டுறதாதான் இருக்கு. அதனால நடிப்புத் திறமை இருக்கற ஹீரோயின்களுக்குக்கூட அதற்கான வாய்ப்பு இங்க கிடைக்கிறதில்ல. அவங்களாலயும் கவர்ச்சியை மட்டும் வெச்சு நிலைக்க முடியல. அப்போவெல்லாம் ஒரு சில கதாநாயகிகளே இருப்பாங்க. இப்போ, ஒரு மாசத்துக்கு பல ஹீரோயின்கள் அறிமுகமாகறாங்க. இந்த வதவத வருகையால யாராலயும் மக்கள் மனசுல இடம் பிடிக்க முடியல. குறுகிய காலத்துல மார்க்கெட்டைப் பிடிக்கவும், தக்க வெச்சுக்கவும் கிளாமரை மட்டுமே நம்பி, சீக்கிரமே காணாமப் போயிடறாங்க'' என்றார் வருத்தத்துடன்.

ஆனால், 'கன்னடத்து பைங்கிளி'யின் கருத்துக்கு மாறுபடுகிறார்... 'ஸ்லிம்' புகழ் சிம்ரன்.

''இப்போ இருக்கற ஹீரோயின்களுக்கு ஷார்ட் பீரியட்தான் கேரியர் லைஃப்னாலும், ஒரே மொழியில் மட்டும் கமிட் ஆகாம பல மொழிகளிலும் நடிச்சு தங்களை நிலைநிறுத்திக்கிற அவங்களோட புத்திசாலித்தனம் எனக்குப் பிடிச்சிருக்கு'' என்று ஆரம்பித்தவர்,

''நான் நடிக்கும்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தினு எல்லா மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பும் வரவேற்பும் இப்போ இருக்குற அளவுக்கு இல்ல. எனக்கு அதுபோன்ற சில வாய்ப்புகள் வந்தபோது, 'கோலிவுட் மட்டுமே போதும்'னு முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் கிளாமர் ரோல்கள் செய்தாலும், அதை விசிட்டிங் கார்டா மட்டும் வெச்சு... போகப் போக நடிப்புத் திறமையை வெளிப்படுத்துற கேரக்டர்களா தேர்ந்தெடுத்து செய்தேன். அதனால கோடம்பாக்கத்துல 'சிம்ரன்' பெயர் சில ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.

"இன்றைய ஹீரோயின்கள்... அதிபுத்திசாலிகள்!”

இப்போ வர்ற ஹீரோயின்கள், அறிமுகம் ஆகும்போதே அதிகபட்சம் அஞ்சு பத்து படத்துலயே ஃபீல்ட் அவுட் ஆகறதுக்கான வாய்ப்பு இருக்குங்கறத நல்லாவே உணர்ந்துதான் வர்றாங்க. அதனால எல்லா மொழிப் படங்களிலும் வாய்ப்புகளைத் தேடி, அதில் ஏதாவது ஒரு ஏரியாவில் செட்டில் ஆயிடறாங்க. இது, ஹீரோயின்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல முடிவுதான்'' என்று பாராட்டு தெரிவித்தார் சிம்ரன்.  

பல ஆண்டுகளாகவே மும்பை, கேரளா பெண்களே ப்ளே செய்து வரும் தமிழ் சினிமா ஹீரோயின் ரோலை, பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக தனதாகவும் ஆக்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெண் த்ரிஷா என்ன நினைக்கிறார்?

''நான் நடிக்க வந்தப்போ... 11 வருஷம் இந்த ஃபீல்டுல நிலைச்சு நிற்பேன்னு நினைக்கல. ஆனா, என்னோட கான்ஃபிடன்ஸ்தான் என்னை இவ்வளவு போட்டிகளுக்கு மத்தியிலும் கூட்டிட்டு வந்திருக்குனு நினைக்கறேன். எந்த ஒரு ஆர்ட்டிஸ்ட்டையும் கால வரையறைக்குள்ள கொண்டு வரக்கூடாதுனு நினைக்கறவ நான். ரெண்டு, மூணு படம் நடிச்சாலும்... மக்கள் மனசுல நிலைச்சு நிற்கற கேரக்டர்கள் செய்தாலே போதும். ஆனா, இப்போ ஹீரோயின்களுக்கு அப்படி கேரக்டர்கள் எதுவும் அமையுறதில்ல. இருந்தாலும், சிலர் காத்திருந்தாவது நல்ல கேரக்டர்களா செலக்ட் செய்து பெயர் வாங்குறாங்க. ஆனா, காத்திருக்குற நேரத்துலயே அவங்களோட கேரியரே அஸ்தமிச்சுப் போற ரிஸ்க்கும் இருக்கு. அந்த வகையில, இப்போ இருக்குற ஹீரோயின்களுக்கான சவால்கள் நிறையத்தான் இல்லையா...?'' என்று கேட்டுச் சிரிக்கிறார் த்ரிஷா!

ஹீரோயின்களின் திரையுலக வாழ்க்கையின் சவால்களையும், சங்கடங்களையும், தன் பெயர் தவிர்த்துப் பகிர்ந்து கொண்டார் பிரபல சீனியர் நடிகை ஒருவர். அவர் சொன்னது-

''முன்ன எல்லாம் வருஷத்துக்கு 15 படங்கள் ரிலீஸ் ஆகும். இப்போ படம் ரிலீஸ் ஆகாத வெள்ளிக்கிழமையே கிடையாது. அதனால ஹீரோயின்களுக்கான ஸ்பேஸ் அதிகமாகிஇருக்குங்கறது உண்மை. ஆனா, நடிப்புக்காக நடிகைகளை தேர்ந்தெடுக்குற இயக்குநர்கள் இப்ப இல்ல. அதனாலேயே... ஹீரோயின்களும் நல்ல நடிகைனு பெயர் வாங்கி நிலைச்சு நிற்கணும்கிற வைராக்கியத்தோட இப்ப வர்றதில்ல. நடிப்பை ஒரு ஹாபியா எடுத்துக்குறவங்கதான் அதிகமா இருக்காங்க. நாலு படத்தில் கிளாமர் ரோல், விளம்பரம், கடை திறப்பு விழா, கொஞ்சநாள் கழிச்சு சீரியல் ஏரியானு செட்டில் ஆகிடறாங்க.

இன்னொரு பக்கம், இப்போ டாப் ஹீரோயின்களா இருக்கறவங்க எல்லாரும் அந்த இடத்துக்காக எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் வந்திருப்பாங்க. அதிலும் தமிழ், தெலுங்குனு ஒன்றுக்கு மேற்பட்ட ஏரியாவிலும் வெற்றி பெற்ற ஹீரோயின்களையும் நாம பார்க்கிறோம். நிறைய படங்கள் டப்பிங் செய்யப்படுற இந்தக் காலத்துல, அந்தப் படத்தோட ஹீரோயினும்தான் அதோட விலையை நிர்ணயிக்கிறவங்களா இருக்காங்க. அந்த வகையில, ஹீரோயின்களுக்கான முக்கியத்துவமும் இருக்கத்தான் செய்யுது. அதை பயன்படுத்திக்க நடிப்பு மேல அர்ப்பணிப்பும், கடின உழைப்பும், தளராத மனசும், சகிப்புத் தன்மையும் உள்ளவங்களா நடிகைகள் இருக்கணும். அந்த வகையில ஒரு நடிகையின் வாழ்க்கை... கடுமையான சவால்கள் நிறைந்தது என்பது உண்மை.''

ஆம்... திரையில் என்னதான் அரிதாரம் பூசினாலும், கேரக்டராக தான் கரைந்து, நம்மை மகிழ்வித்தாலும்... அவர்களும் வாழ்க்கையில் சராசரி மனுஷிகள்தானே!

- உமா ஷக்தி