Published:Updated:

விஜய வருட பலன்கள்!

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜோதிடம்

விஜய வருட பலன்கள்!

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜோதிடம்

Published:Updated:
##~##

புதிய தமிழ் வருடமான விஜய வருடம் 13.4.2013 சனிக்கிழமை நள்ளிரவு மணி 1.24-க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் சிறப்பாக பிறக்கிறது.

விஜய வருட பலன்கள்!

மேஷம்: சீர்த்திருத்த சிந்தனை அதிகமுள்ளவர்களே! உங்கள் பிரபல யோகாதிபதிகளான குருவும், சந்திரனும் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால், குடும்பத்தில் அமைதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அதேசமயம், வேலைச்சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். ஆனி, தை, மாசி மாதங்களில் வருமானம் உயரும். பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிய நேரிடலாம். எல்லோருக்கும் உதவியாக இருந்தும் சிலர் நம்மை குறை கூறுகிறார்களே என்று அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால், பிறருக்கு பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். ஆனால், சக ஊழியர்களால் உதாசீனப்படுத்தப்படுவீர்கள்.                  

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அவ்வப்போது சில நெருக்கடிகளை தந்தாலும், சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

ரிஷபம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே! உங்கள் தனப்பூர்வ புண்யாதிபதியான புதன் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால், ஆனி மாதம் முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். தாமதமான விஷயங்கள் உடனே முடியும். வாழ்க்கைத் துணைவர் பாசமழை பொழிவார். குழந்தை இல்லாதவர்களுக்கு, பிள்ளைப் பேறு கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி வாழ்க்கைத் தரம் உயரும். புதிதாக வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். என்றாலும், உங்கள் ராசியிலேயே இந்த விஜய வருடம் பிறப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். நகையை அடகு வைத்தவர்கள், அதை மீட்பீர்கள். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சம்பளம் கூடும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.

கவலை ரேகை படிந்திருந்த உங்கள் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்வதுடன், பணப்புழக்கத்தையும் அதிகரிக்க வைப்பதாக இந்த விஜய வருடம் அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வாரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

மிதுனம்: போற்றுதல், தூற்றுதலை சமமாக எடுத்துக் கொள்பவர்களே! உங்கள் பிரபல யோகாதிபதி சுக்கிரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வருமானம் உயரும். உங்களுக்கு 12-ம் ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுக்க கேது லாப வீட்டிலேயே நிற்பதால், உங்களின் கௌரவம் உயரும். வருடம் முடியும் வரை சனியும், ராகுவும் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால், மனக்குழப்பம், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். 28.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால்... உடல் உபாதை, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில், சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.          

இந்த விஜய வருடம் அலைச்சலுடன் ஆதாயம் தருவதாகவும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியதாகவும் அமையும்.

பரிகாரம்: அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்க்கை அம்மனை எலுமிச்சம் பழ தீபமேற்றி வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

கடகம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே! செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால், உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவரின் ரசனையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். இந்த ஆண்டு முழுக்க ராகுவும், சனியும் 4-ம் வீட்டிலேயே தொடர்வதால்... வீண் பழி,  சோர்வு வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உறவினர், தோழிகளிடம் அதிக உரிமை எடுத்துப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால், திடீர் பயணங்கள்,  தூக்கமின்மை வந்து செல்லும்.  வியாபாரத்தில் ஆனி, மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள்.

இந்த ஆண்டு எதிர்பாராத செலவுகளாலும், திடீர் பயணங்களாலும் உங்களை திணற வைத்தாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.  

பரிகாரம்: அருகிலுள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

சிம்மம்: உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சாமல், அன்புக்கு அடிமையாகுபவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வருடம் முடியும் வரை சனியும், ராகுவும் 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உங்கள் நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்தி வந்து மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் ஏற்பட்ட அவமானங்கள் நீங்கி... மதிப்பு, மரியாதை கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு.  

இந்த விஜய வருடம் உங்களின் நீண்ட நாள் கனவை நனவாக்குவதுடன், அதிரடி வெற்றியையும், அந்தஸ்தையும் தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஸ்ரீலஷ்மி நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

கன்னி: தொடங்கியதை முடிக்கும் வரை துவளாதவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த விஜய வருடம் பிறப்பதால், தொலைநோக்கு சிந்தனையால் எதையும் சாதிக்க முயல்வீர்கள். அடிப்படை வசதிகள் அதிகமாகும். ஆனால், பூர்விக சொத்தை விற்க வேண்டி வரலாம். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு, நல்ல பதில் வரும். நீண்ட காலமாக பார்க்க நினைத்த உறவினர், தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். 28.5.2013 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால். இனம்தெரியாத கவலைகள், வீண் விரயம், உறவினர் பகை வந்து நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க பாதச்சனி தொடர்வதால்... உடல் உபாதை வந்து நீங்கும். பேச்சில் காரம் வேண்டாம். வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், உள்மனதில் பயம், சின்னச் சின்ன போராட்டம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள், ஏமாற்றங்கள், இழப்புகள் இருக்கும். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் குறை கூற வேண்டாம்.        

இந்த விஜய வருடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும், சகிப்புத் தன்மையாலும் உங்களை வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரை அஷ்டமி திதி நாளில் வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

துலாம்: நெருக்கடி நேரத்திலும் நீதி தவறாதவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விஜய வருடம் பிறப்பதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். திருமணம் தாமதமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் மண வாழ்க்கை அமையும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். 28.5.2013 முதல் உங்களின் பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால், தடைகளும், ஏமாற்றங்களும் ஓரளவு நீங்கும். 10.7.2013 முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவார். இந்த ஆண்டு முழுக்க ஜென்மச் சனியும், ராசிக்குள்ளேயே ராகுவும் தொடர்வதால், உடல் நலக் கோளாறு வந்து செல்லும். பிள்ளைகளிடம் அதிகமான கண்டிப்பு வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வருடம் முடியும் வரை கேது 8-ம் வீட்டில் நிற்பதால் அலைச்சல், செலவினங்கள் வந்து செல்லும். வியாபாரம் செழிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். உத்யோகத்தில் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.  

இந்தப் புத்தாண்டின் முற்பகுதி முணுமுணுக்க வைத்தாலும், மையப் பகுதியும், பிற்பகுதியும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவெண்காட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅகோரமூர்த்தியை ஏதேனும் ஒரு புதன் அல்லது சனிக்கிழமையில் தரிசியுங்கள்.

விஜய வருட பலன்கள்!

விருச்சிகம்: விருப்பு, வெறுப்பு இன்றி எல்லா விஷயங்களையும் அணுகுபவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்க      ளின் நிர்வாகத் திறன், அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவருக்கு புது வேலை கிடைக்கும். சிறுக சிறுக சேமிப்பீர்கள். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ல் மறைவதால்... மன இறுக்கம், தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. நகைகளை இரவல் தர வேண்டாம். வருடம் முடியும் வரை சனியும், ராகுவும் 12-ம் வீட்டில் தொடர்வதால்... பணப்பற்றாக்குறை, வீண் பயம், தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். இந்த ஆண்டு முழுக்க கேது 6-ம் வீட்டில் பலம் பெற்று தொடர்வதால், எதிர்ப்புகள் அடங்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை குறை கூறினாலும் அனுசரித்துப் போங்கள். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள்.

இந்தப் புத்தாண்டு விட்டுக் கொடுத்துப் போவதாலும், விடாமுயற்சியாலும் உங்களை வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:  சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

தனுசு: பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் சனியும், ராகுவும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் 7-ம் வீட்டில் அமர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அழகு, ஆரோக்கியம் கூடும். பிரிந்திருந்த உறவினர்கள், தோழிகள் ஒன்றுசேர்வீர்கள். இந்த ஆண்டு முழுக்க கேது 5-ம் வீட்டிலேயே நிற்பதால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தாமதமான ஒப்பந்தங்கள் விரைவில் கைக்கு வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு, உங்களை சோர்வு நீக்கி உற்சாகமடைய வைப்பதுடன், எதையும் சாதிக்க துணை புரியும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசூரிய பகவானை தீபமேற்றி வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

மகரம்: மன்னிக்கும் குணம் அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த விஜய வருடம் பிறப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் மறைமுக அவமானம், டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். என்றாலும், சர்ப்பக் கிரகங்களான ராகுவும், கேதுவும் இந்தாண்டு முழுக்க சரியில்லாததால், மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கா தீர்கள். வியாபாரத்தில், புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி விவாதம் செய்ய வேண்டாம்.            

இந்த விஜய வருடம் கடனையும், சிக்கலையும் தந்தாலும் அதிலிருந்து விடுபடும் ஆற்றலையும் உங்களுக்கு தரும்.

பரிகாரம்:  அருகிலிருக்கும் பெருமாள் சந்நிதியில் அருள்பாலிக்கும் கருடாழ்வாரை வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

கும்பம்: கொள்கை, குறிக்கோளிலிருந்து மாறாதவர்களே! 3-ம் வீட்டில் சூரியனும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த விஜய வருடம் பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை 5-ம் வீட்டில் குரு அமர்வதால், புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் நடத்தி முடிப்பீர்கள். மகன் பொறுப்பாக நடந்து கொள்வார். பூர்விக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டிலேயே நிற்பதால் புது தெம்பு பிறக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று 9-ம் வீட்டிலேயே இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். என்றாலும், இந்த ஆண்டு முழுக்க ராகுவும் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால்... வீண் செலவுகள், தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

வெற்றி தேவதைக்கு உங்கள் விலாசம் தெரியும் வருடமிது.

பரிகாரம்:  பௌர்ணமி திதி நாளில் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் தாயாருக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

விஜய வருட பலன்கள்!

மீனம்: குறை, நிறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்துபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த விஜய வருடம் பிறப்பதால், எதிர்ப்புகளைக் கடந்து சாதிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர், தோழிகளின் கனிவான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பூர்விக சொத்தை போராடி பெறுவீர்கள். 28.5.2013 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படலாம். வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சனி அமர்ந்து அஷ்ட      மத்துச் சனியாக தொடர்வதால்... வீண் விரயம், ஏமாற்றம், எதிர்காலம் குறித்த பயம் வந்து செல்லும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க ராகு 8-லும், கேது 2-ம் வீட்டிலும் நீடிப்பதால்... உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில், ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் அதிகம் இருக்கும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம், சிறுசிறு அவமானம் வந்து செல்லும்.

கடந்த கால அனுபவ அறிவாலும், அனுசரித்துப் போகும் குணத்தாலும் ஓரளவு நீங்கள் முன்னேறும் வருடமிது.

பரிகாரம்: ஸ்ரீபகுளாமுகி அம்மனை அமாவாசை திதி நாளில் தீபமேற்றி வணங்குங்கள்.