Published:Updated:

தொழில் துவங்கப் போகிறீர்களா...

இதோ, உங்களுக்கான வழிகாட்டல்கள்!பிஸினஸ் கேள்வி - பதில்

தொழில் துவங்கப் போகிறீர்களா...

இதோ, உங்களுக்கான வழிகாட்டல்கள்!பிஸினஸ் கேள்வி - பதில்

Published:Updated:

ஹெல்ப் லைன்                                                    வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!  

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

''நான் எம்.பி.ஏ. முடித்திருக்கிறேன். வேலைக்கான தேடல்களை விடுத்து, சிறுதொழில் செய்ய ஆசைப்படுகிறேன். இதற்குத் தேவையான அரசாங்க வழிமுறைகள், வழிகாட்டல்கள் போன்றவற்றைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.''

- ஜி.ரோகினி சுரேஷ், மதுரை

தொழில் துவங்கப் போகிறீர்களா...

''ரோகினி, இந்தக் கேள்வியுடன் ஜூட் பொருட்கள், பேப்பர் பேக் என பல தொழில் விவரங்களைக் கேட்டுள்ளீர்கள். இந்த தொழில்கள் பற்றியெல்லாம் கடந்த இதழ்களிலேயே விவரமாகக் கூறியுள்ளேன். தவறவிட்டிருந்தால் நூலகத்திலோ... அல்லது அவள் விகடன் இணைய (vikatan.com) பக்கத்திலோ படித்துப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தொழில்களைப் பொறுத்தவரை உற்பத்தி (Manufacturing) மற்றும் சேவை (Service) என இருவகையாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. இதில் உற்பத்தி என்கிற பிரிவைப் பொறுத்தவரை, குறுந்தொழில் என்றால்... அதன் எந்திர மதிப்பு 25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறுதொழில் என்றால், 25 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை; மத்தியரக தொழில் என்றால், 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை; பெருந்தொழில் என்றால், 10 கோடி ரூபாய்க்கு மேல் என எந்திர மதிப்பு அமையும். இதில் இடம், கட்டடம், மற்ற செலவுகள் தனி. சேவைத் தொழில்கள் பிரிவைப் பொறுத்தவரை... குறுந்தொழில்கள் என்றால் 10 லட்ச ரூபாய் வரை; சிறு தொழில்கள் என்றால் 10 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை; மத்தியரக தொழில்களுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை; பெருந்தொழில்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் என எந்திர மதிப்பு அமையும்.

இதில் நீங்கள் எந்தத் தொழிலின் கீழ் வருகிறீர்கள் என முதலில் உறுதிபடுத்திக் கொள்ளவும். மத்திய, மாநில, அரசுகள் குறு - சிறு மற்றும் மத்திய தொழில்களுக்கு பலவகை மானியம், சலுகைகள் என வழங்குகின்றன. குறுந்தொழில்களை எங்கு ஆரம்பித்தாலும் 15 சதவிகிதம் எந்திர மதிப்பில் மானியமாக வழங்குகிறது மாநில அரசு. மேலும் பெண் தொழில்முனைவோருக்கு 5 சதவிகிதம் கூடுதல் மானியம் கொடுப்பார்கள். தொழிலை தொடர்ந்து நடத்தும்போது... மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் கட்டும் மின்கட்டணத்தில் 20 சதவிகித தொகையை, மானியமாகத் திரும்பப் பெறலாம்.

விற்பனை வரி... நீங்கள் விற்றவர்களிடம் இருந்து பெற்று அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய பணம். இதில் ஆறு ஆண்டுகளுக்கு நீங்கள் கட்டும் விற்பனை வரி முழுவதும் அரசிடமிருந்து நீங்கள் திரும்பப் பெறலாம். இதன் உச்சவரம்பு, நீங்கள் வாங்கும் எந்திரங்களின் மதிப்பு வரைதான். 'யூஒய்இஜிபி’ (UYEGP), 'பிஎம்இஜிபி' (PMEGP)  போன்ற திட்டங்கள் என்றால்... உங்கள் திட்ட மதிப்பில் 15% முதல் 35% வரை மானியம் கிடைக்கும்.

தொழில் துவங்கப் போகிறீர்களா...

உதாரணமாக, நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்கிறீர்கள். அதன் திட்ட மதிப்பு ரூபாய் 10 லட்சம். அதில் எந்திரங்களின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என்றால்... மானிய சலுகைகள் எப்படி அமையும் என்று பார்ப்போம்.

'பிஎம்இஜிபி’ திட்டம் மூலம், கிராமத்தில் தொழில் தொடங்கினால்... ஆரம்பக் கட்டத்தில் உங்களுக்குக் கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். அதாவது, மானியத் தொகை மூன்றரை லட்சம்... உங்கள் மூலதனம் ஐம்பதாயிரம் ரூபாய்... வங்கிக் கடன் ஆறு லட்ச ரூபாய். ஆகமொத்தம் 10 லட்ச ரூபாய். தொழிலை வெற்றிகரமாக நடத்தும்போது... 3 ஆண்டுகளுக்கு மின்சார மானியம் கிடைக்கும். அதாவது நீங்கள் கட்டும் மின்கட்டணத்தில் இருந்து 20 சதவிகிதம் திரும்பப் பெறலாம். உங்கள் உற்பத்தி அதிகமாக இருந்து, நீங்கள் பொருட்களை வாங்கியவர்களிடம் இருந்து விற்பனை வரி (வாட்) பெற்று அரசுக்கு செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் வரி, முழுவதையும் ஆறு ஆண்டுகளுக்கு மானியமாக பெறலாம். இதில் உங்கள் எந்திர மதிப்பு எவ்வளவோ, அதன் மதிப்பு வரைக்குமான தொகைதான் உச்சம். எனவே, நீங்கள் 8 லட்சம் ரூபாய் வரை அரசிடமிருந்து மானியமாக பெறலாம்.

உங்கள் சொந்த மூலதனம் ரூபாய் 50,000 மட்டும். நீங்கள் தொழில் நடத்தி பெறும் லாபம் அனைத்தும் உங்களுக்கே. இத்துடன் மத்திய, மாநில அரசாங்கத்திடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இனி, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் பற்றிப் பார்ப்போம். முதலில் உங்கள் தொழில் என்ன வகை என்று தெரிய வேண்டும். அதன்பின் எங்கு ஆரம்பிக்க உள்ளீர்கள், இடம், அது வாடகை என்றால் வாடகை பத்திரம், உங்கள் தொழிலின் பெயர், குறு, சிறு, மத்திய தொழில் என இவற்றில் எந்த தொழில் எடுக்கிறீர்கள் என்ற விவரங்கள் வேண்டும். இதை மாவட்ட தொழில் மையம் அல்லது ஆன்லைனிலேயே ரிஜிஸ்டர் செய்து அத்தாட்சி பெறலாம். இணையதள முகவரி - msmeonline.tn.gov.in

உரிய சான்றிதழ்களைப் பெறுவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். உணவு உற்பத்தி எனில் 'எஃப்எஸ்எஸ்ஐஏ'  (FSSIA) அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் தொழில், 5 ஹெச்.பி. அளவுக்கும் அதிக மின்சக்தியுடன் கூடிய தொழில் என்றால், உங்கள் பஞ்சாயத்து, பேரூராட்சி அல்லது நகரசபையில் உரிய சான்றிதழ் பெற வேண்டும். 5 ஹெச்.பி. அளவுக்கும் குறைவு என்றால், இந்தச் சான்றிதழ் தேவை இல்லை. நீங்கள் உற்பத்தி செய்த பொருளின் விற்பனை 10 லட்சம் ரூபாயைத் தாண்டுபோது விற்பனை வரி பதிவு செய்தால் போதும்.

உங்களிடம் வேலை செய்யும் வேலையாட்கள் 9 பேருக்கு மேல் (மின்சாரம் உபயோகிக்கும் தொழில்), வேலையாட்கள் 19 பேர் மேல் (மின்சாரம் உபயோகிக்காத தொழில்) என்றால், உங்கள் தொழில்குறித்து, தொழிற்சாலை ஆய்வாளரிடம் பதிவு செய்ய வேண்டும்.

தொழில் துவங்கப் போகிறீர்களா...

நீங்கள் மதுரை வாசகி என்பதால், மதுரையில் உள்ள சில தொழில் பயிற்சி மற்றும் தொழில்களுக்கு மதுரை மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். அவர்கள் உங்களுக்கான பல லைசென்ஸுகளை பெற்றுத் தர 'சிங்கிள் விண்டோ’ (Single Window) என்கிற முறையில் உதவி செய்வார்கள். மேலும் மதுரை, சிறுதொழில் அதிபர்கள் சங்கத்தையும் (Maditssia 1A/4A, Dr.அம்பேத்கார் சாலை மதுரை-20. தொலைபேசி எண் 0452  2523966) அணுகலாம்.

தொழில் பயிற்சிகளுக்கு, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைந்து தையல், செல்போன் சர்வீஸ், இயற்கை உணவு, கணினி, அழகு கலை, போட்டோ, வீடியோ, காளான் வளர்ப்பு உள்ளிட்ட 25 தொழில்களுக்கான இலவசப் பயிற்சி அளிக்கிறார்கள். இவர்களுடைய அலுவலகம் பெருங்குடி ஏர்போர்ட் சாலை, மதுரை-21. போன் 0452-2690 609.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (CED)  54, விசுவாசபுரி, முதல் தெரு, ஞானஒளிவுபுரம், அரசரடி, மதுரையில் உள்ளது. இது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் துவக்கப்பட்டது. பயிற்சி மற்றும் தொழில் முனைவுக்கான அனைத்து உதவிகளையும் செய்து தரும் ஒரு நிறுவனம் இது. உணவு உற்பத்தி, அழகுக்கலை, ஃபேஷன் டிசைன், மொபைல் சர்வீஸ், டிடிபி, கணினியில் அக்கவுண்டிங் முதலிய பயிற்சிகளை அளிக்கிறார்கள். இவை அனைத்தும், மத்திய அரசின் 'எம்எஸ்எம்இ’ (MSME)  மற்றும் 'டிஎஸ்டி’ (DST)  சான்றிதழுடன் கூடிய பயிற்சிகள்.

தொடர்புக்கு: சதிஷ்குமார், திட்ட அதிகாரி - 9442392737, 0452-2603562.''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’ கேள்வி  பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  600 002