Published:Updated:

18-ல் இருந்து 16... சரியா, தவறா?

ஒரு பரபர விவாதம்!அவேர்னஸ்

18-ல் இருந்து 16... சரியா, தவறா?

ஒரு பரபர விவாதம்!அவேர்னஸ்

Published:Updated:
##~##

ம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவுக்கான வயது வரம்பை, 18-ல் இருந்து 16 என்று குறைக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ஆனால், அரசியல் கட்சிகள் உள்பட பல தரப்பிலிருந்தும் பெரும் எதிர்ப்பலை எழும்பவே, '18 வயது என்கிற பழைய நிலையே நீடிக்கும்' என்று கையைக் கட்டிக் கொண்டுவிட்டது மந்திரி சபை.

அதேசமயம், ''பாலியல் உறவுக்கான குறைந்தபட்ச வயது 16 என்றுதான் இந்திய குற்றவியல் சட்டம் (ஐ.பி.சி), 1860-ம் ஆண்டுகளிலேயே நிர்ணயித்திருக்கிறது. அதைத்தான் என்னுடைய அமைச்சகம் கையில் எடுத்து, சட்ட திருத் தத்துக்கு வழி வகுத்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பும் எதிர்ப்புக் காட்டி, தடுத்துவிட்டனர்'' என்று வருத்தப்பட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே!

டெல்லியில் மருத்துவ துணை படிப்பு படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், 17 வயதுடைய ஒருவனையும் போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால், 'அண்டர் சைல்ட் ஏஜ் ஆக்ட்’ படி 'சிறுவன்’ என்கிற சட்ட வரைமுறைக்குள் அவன் கொண்டு வரப்பட்டுவிட்டதால்... பெரியவர்களுக்கான தண்டனையை அவனுக்கு வழங்க முடியாது. இந்த நிலையில், சிறுவர் குற்றவாளிகளுக்கான வயதை 16 என்று குறைக்க வேண்டும் என்கிற குரல்களும் எழுந்தன. இதுவும் கூட, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இங்கேயும் 18 வயது என்பதே தற்போது நீடிக்கிறது.

சரி, வயது வரம்பு நிலைப்பாட்டை மாற்றுவதன் மூலமாக என்ன பலன்? அதைப் பற்றி சென்னை, செம்மொழிப் பூங்காவில் விவாதித்தார்கள் சென்னை, தாகூர் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்பத் தலைவிகள். அவர்களோடு தானும் ஒருவராக பங்கேற்று... விவாதத்தை ஒருங்கிணைத்தார் பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் கவிஞர் பர்வீன் சுல்தானா. அந்த விவாதம் இதோ...

சித்ரா: பொதுவா உணர்ச்சிவசப்பட்டு செய்கிற குற்றங்களுக்கு தண்டனைகள் குறைவு. திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றங்களுக்குதான் அதிகமான தண்டனைகள் சட்டத்தில் உண்டு. சிறுவர் குற்றவாளிகள் விஷயத்துல, வளர்ந்த ஆண்களின் தூண்டுதலில் ஏவப்பட்டுதான் அவங்க உணர்ச்சிப் பிரவாகத்தில் பாலியல் குற்றங்களை செய்றாங்க. அதனால, சிறுவர் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு 18 என்பது சரிதான்னு எனக்குப்படுது.

ஆர்த்தி: சின்ன திருட்டு, தெருவோரச் சண்டைனா... 'சிறுவர்’ கேட்டகரியில கொண்டு வரலாம். சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பலாம். ஆனா, ஒரு பெண்ணோட உணர்வை, உயிரைச் சிதைக்கிற பாலியல் குற்றங்களிலும் அதே வயது வரைமுறையைக் காட்டி, 'சிறுவர்’ங்கற முகமூடியை மாட்டி தப்பிக்க விடுறது எப்படி நியாயமாகும்?

18-ல் இருந்து 16... சரியா, தவறா?

டெல்லி பெண் கேஸில்கூட, மற்ற அனைவரையும்விட தன்னை அதிகமா துன்புறுத்தலுக்கு ஆளாக்கினது அந்த 17 வயதுப் பையன்தான்னு அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. அந்தளவுக்கு குரூரமா செயல்பட்டவனை 'சிறுவன்’னு சொன்னா, அது எவ்வளவு பெரிய அபத்தம், ஆபத்து..!

தேஜஸ்வினி: இந்த விஷயம் சரி. ஆனா, சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 என்று குறைப்பது தவறு. 16 வயதேயான பெண்களுக்கு உடல், மன மெச்சூரிட்டி இருக்காது. சட்டப்பூர்வ அங்கீகாரம் வந்துட்டா... தவறுகள் அதிகமாக வாய்ப்பிருக்கு. அது, அவங்களோட படிப்பு, உடல்நலம், எதிர்காலம்னு எல்லாத்தையும் சிதைச்சுடும்.

பர்வீன் சுல்தானா: நம்ம சட்டத்துல வயது நிர்ணயங்களில் நிறைய முரண்கள் உண்டு. 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணை வன்புணர்வு செய்தா, அது கற்பழிப்பு என்கிற வரையறையில் வரும். அதுவே 18 வயதுக்கு கீழ் என்றால், பாலியல் வன்கொடுமை என்கிற வரையறைக்குள் வரும். ஓட்டுப் போடுறதுக்கான வயது 18, திருமணத்துக்கான வயது 21. அதாவது நம் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்க 18 வயதுப் பக்குவம் போதும். ஆனா, வீட்டை நிர்வகிக்க 21 வயது வேணும். என்னைப் பொறுத்தவரை, சம்மதத்தோட நடக்குற பாலியல் உறவுக்கான வயது வரம்பு 16 என்பது சரினுதான் நினைக்குறேன்.

அனிதா: அதெப்படி சரியாகும்? இது தப்புனு சொல்லும்போதே அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்றவங்க அதிகம். அப்படியிருக்கும்போது, '16 வயசுல செக்ஸ் தவறில்லை’னு அரசாங்கமே சொன்னா, அது எவ்வளவு அபத்தம்? கடிவாளம் என்பது கட்டுப்பாடு அல்ல, பாதை மாறிப் போகாம இருக்குறதுக்கான பாதுகாப்பு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் போட்டு வெச்சுருக்குற கடிவாளத்தை கழற்றி எறிவதுபோல இருக்கிறது இந்த வயதுக் குறைப்புச் சட்டம்.

பர்வீன்: இந்த வயது வரம்பை எதிர்த்த கட்சிகள் பல, ஆதரித்த ஒரே கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். மற்ற கட்சிகளைப் போல எமோஷனலா இல்லாம, கொஞ்சம் பிராக்டிகலா யோசிங்க. இந்தச் சட்டம் இருந்தாலும், இல்லைனாலும் இன்னிக்கு பாலுறவில் ஈடுபடும் 16 வயதினர் இருக்கவே செய்றாங்க. ஆக, ஏற்கெனவே சமூகத்தில் இருக்குற ஒரு விஷயத்தை சேனலைஸ் செய்யத்தான் இந்தச் சட்ட திருத்தத்த அரசு யோசிச்சுதே தவிர, 'தவறு செய்யுங்க’னு தூண்டுறதுக்கு இல்ல. இருவர் சம்மதத்தோட பாலுறவு நடந்திருந்தாலும், பெண்ணோட வயதை 18-க்கு கீழ்னு காரணமா காட்டி, சம்பந்தப்பட்ட ஆணை மட்டும் குற்றவாளியாக்கி தண்டனை கொடுக்கறது... நிறையவே நடந்ததாலயும்தான் இப்படியரு திருத்தம் கொண்டுவரப் பார்த்தாங்க.  

18-ல் இருந்து 16... சரியா, தவறா?

சுனிதா: கண்டும் காணாமல் நடக்கும் தவறை சட்டமே வெளிச்சம் போட்டுக் காட்டி, இது சகஜம்னு சொல்றது சரியா?

ரேணுகாதேவி: உண்மைதான். சிலர்தான் இதோட நோக்கத்தை சரியா புரிஞ்சுப்பாங்க. ஏற்கெனவே வெஸ்டர்ன் கலாசாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு இது இன்னும் சிக்கலான பாதையைத்தான் காட்டுது.

பர்வீன்: பெண்களின் பூப்படையும் வயது, ஒரு காலத்தில் 15 வயசா இருந்துச்சு. இப்ப... அது 10 வயசுக்கு குறைஞ்சுடுச்சு. அதற்கு ஈடுகொடுக்க சட்டத்திலும் திருத்தம் கொண்டு வருவது அவசியம்தானே? கிரண் பேடி, ஜெயில்ல எய்ட்ஸ் நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே வந்ததைப் பார்த்து, கைதிகளுக்கு காண்டம் கொடுக்கச் சொன்னாங்க. 'ஹோமோசெக்ஸ் என்பது குற்றம் எனப்படும் நிலையில, அதை ஆதரிக்கிற மாதிரி காண்டம் கொடுக்கலாமா?'னு பலத்த எதிர்ப்பு. 'ஒரு குற்றத்தை அழிக்க முடியலைனா, முறைப்படுத்தணும்’னு சொன்னாங்க கிரண் பேடி. இதுதான் ஒரு சட்ட வல்லுநரோட பார்வையா இருக்க முடியும்.

ஆனந்தி: மாணவர்கள்கிட்ட செக்ஸ் தப்புனு சொல்றதைவிட, அவங்களுக்கு செக்ஸ் எஜுகேஷன் கொடுக்குறதுதான் சரி. இந்த வயது நிர்ணயத்தைப் பற்றிப் பதறுவதைவிட, மாணவர்கள் பாலியல் எண்ணங்களில் மலிந்து விடாம இருக்க, அதை பத்தி பயாலஜிக்கல் தெளிவை பாடங்கள் மூலமா அவங்களுக்கு ஏற்படுத்தணும். கோ - எஜுகேஷன் கல்வியை ஊக்குவிக்கணும். பசங்களையும் ஒழுக்கமா வளர்க்கணும்னு பெற்றோர் நினைக்கணும். நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவுலதான் பிள்ளைகள் வளர்றாங்க. அதில் நல்லதை மட்டும் எடுத்துக்குற  பண்புகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள்னு இருதரப்பும் அவங்களுக்குள் விதைக்கணும்.

கை குலுக்கல்களுடன் முடிந்தது கலந்துரையாடல்!

- வே.கிருஷ்ணவேணி படங்கள்: வீ.நாகமணி