Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ், ஓவியங்கள்: ஹரன்

குட்டீஸ் குறும்பு!

ரீடர்ஸ், ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

150 

##~##

சைக்கிள் வாங்கிங்!

குட்டீஸ் குறும்பு!

மூட்டுவலி இருந்தாலும், டாக்டரின் அறிவுரைப்படி தினமும் வாக்கிங் செல்லும் பாட்டி நான். ஒரு நாள் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, வழியில் உள்ள வீட்டில் இருந்த மூன்று வயதிருக்கும் பெண் குழந்தை ஒன்று, நான் சிரமப்பட்டு நடப்பதைப் பார்த்து, தன் மூன்று சக்கர சைக்கிளை எடுத்துக் கொண்டு என் முன் வந்து நின்றாள். ''பாட்டி, நடக்க முடியலையா? நான் உங்களை என் சைக்கிள் பின்னால ஏத்திட்டு வாக்கிங் கூட்டிட்டுப் போகட்டுமா?!'' என்று அக்கறையாகக் கேட்க, சிரிப்பும் அன்பும் பொங்க, அவளைக் கொஞ்சினேன்!

- சாவித்திரி விஸ்வநாதன், போரூர்

அங்க அடிச்சா... இங்க அடிக்கும்!

மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், யு.கே.ஜி படிக்கும் இரண்டாவது மகள் சுபகித்ரவேணியும் அன்று மாலை பள்ளிவிட்டு வந்தனர். இளையவள் ஒரே அழுகை. ''ஏண்டி... யார் உன்னை அடிச்சா?'' என்று கேட்டேன், அவள் அக்காவைப் பார்த்துக் கொண்டே. ''அவகிட்டயே கேளு...'' என்று அக்கா சலித்துக்கொள்ள, மீண்டும் இளையவளிடம் திரும்பினேன்.

குட்டீஸ் குறும்பு!

''யாரும் என்னை அடிக்கல. நான்தான் என் ஃப்ரெண்டை அடிச்சுட்டேன்!'' என்றாள் அவள். ''அதுக்கு நீ ஏன் அழறே?'' என்று கேட்க, ''அவளை அடிச்சதுக்கு, நீ என்னை அடிப்பியேனுதான் அழுவுறேன்!'' என்று முகத்தைப் பொத்திக்கொண்டு அழ, எனக்கும் அவள் அக்காவுக்கும் சிரிப்போ சிரிப்பு!

அதிலிருந்து அவள் அழுதால், ''யாரை நீ அடிச்சே?'' என்பதுதான் எங்கள் கேள்வி!

- எஸ்.கல்யாணி, செங்கோட்டை

 குபீர் குடுமி!  

என் ஆறு வயதுப் பேத்தி ஓவியாவின் ஃப்ரெண்ட், பக்கத்து வீட்டுப் பையன் 'குடுமி’ குணா. மூன்று வயதாகும் குணாவுக்கு, பழனிக்கு முடி காணிக்கை இருந்ததால் குடுமி கட்டியிருப்பார்கள்.

குட்டீஸ் குறும்பு!

அதனால் அவனுக்கு என் பேத்தி வைத்த திருநாமம், 'குடுமி’ குணா. அன்று நான் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தேன். ''ஏன் பாட்டி இதை மட்டும் உரிக்கல..?'' என்று குடுமியைக் காட்டி கேட்டாள் பேத்தி. ''அதுக்குப் பெயர் குடுமி. அதை எடுத்துட்டா தேங்காய் அழுகிடும்'' என்று விளக்கினேன்.

மறுநாள் விளையாடிக் கொண்டிருந்தவள் மூச்சிரைக்க ஓடி வந்தாள். ''பாட்டி... பக்கத்து வீட்டு குணா அழுகிப் போகப் போறான்'' என்று அழுவதுபோல கூற, என்னவென்று போய் பார்த்தால், குணாவுக்கு பழனியில் மொட்டை போட்டு திரும்பியிருந்தனர் அவன் பெற்றோர். குடுமி இல்லாததால் குணா அழுகிவிடுவான் என்று என் பேத்தி அழுவதை அவர்களிடம் நான் சொல்லிச் சிரிக்க, அந்த ஜோக் ஒவ்வொரு வீடாக 'பாஸ்’ ஆக, எங்கள் தெருவெங்கும் சிரிப்புதான்!

- ப.சங்கவி, குளித்தலை