Published:Updated:

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

ரிலாக்ஸ்

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

ரிலாக்ஸ்

Published:Updated:
##~##

''லீவ் விட்டாச்சு... லீவு வரப்போகுது... எங்கப்பா டூர் போகலாம்..?!''  - குழந்தைகளின் கேள்விகள் குடைய ஆரம்பித்திருக்கும். ஆண்டு முழுக்க அலுவலகம், வீடு என்று உழைத்துக் களைத்திருக்கும் பெரியவர்களுக்கும் ரீ-சார்ஜ் தேவைப்படுகிறது இந்தக் கோடையில். எங்கே போவது, எப்படிப் போவது, தங்கும் இடங்கள் எப்படி என்று நம் மனது தகவல்களைத் தேட ஆரம்பிக்கும். அத்தகையோருக்கும்... இதுவரை அதைப் பற்றிய சிந்தனையே இல்லாதோருக்கும் இதோ சென்னை முதல் குமரி வரை கோடைச் சுற்றுலாவுக்கான கைடு!  

மாமல்லபுரம்: 'மகாபலிபுரம்' என்றழைக்கப்படும் மாமல்லபுரம்... சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னும் தமிழர்களின் கலைப்பெருமையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கலைப் பட்டினம்! கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரம். மகேந்திரவர்மன், மாமல்லன் நரசிம்மவர்மன் உள்ளிட்டோரால் தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட கற்      பொக்கிஷங்கள் இங்கேதான் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கின்றன. கடற்கரை கற்கோயில், குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் ரதங்கள் அர்ஜுனன் தவ சிற்பக் காட்சிகள், புலிக்குகை... என சொல்லிக் கொண்டே போகலாம்.

சென்னை மெரினாவுக்கு இணையான பீச், இந்த ஊரின் ஸ்பெஷல். ஊரைச் சுற்றி முடித்து கடைசியாக கடற்கரையில் கால் பதித்தால்... மாலை முழுக்க ரிலாக்ஸ்டாக இருந்து திரும்பலாம்!

சென்னை, புதுச்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து நிறைய பேருந்து வசதி உண்டு. இங்கு வரும் பயணிகள் மாலை நேரத்தில் மொத்தமாக ஊர் திரும்ப முண்டியடிப்பதால்... பேருந்துகளில் கூட்டம் அள்ளும். தங்குவதற்கு நிறைய விடுதிகளும் உண்டு. விடுதிகளை நன்கு விசாரித்து தேர்ந்தெடுப்பது நன்று!

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா: சென்னையின் நுழைவாயிலாக இருக்கும் தாம்பரம் அருகே உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ. பயணம். ரயில் வசதியும் உண்டு. என்றாலும் பேருந்து மூலமாக செல்லும்போது, பூங்காவின் வாயிலி லேயே இறங்கிக் கொள்ள முடியும்!

நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன முதலிய உயிரினங்கள் இங்கே உலாவிக் கொண்டுள்ளன. ஆசியாவிலிருக்கும் மிகப்பெரிய விலங்கியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று.  முழுமையாக... பொறுமையாக சுற்றிப் பார்க்க வேண்டுமானால்... மூன்று நாட்கள்கூட ஆகலாம். உங்களுடைய நேரம் மற்றும் கொளுத்தும் வெயிலைப் பொறுத்து... நடைபயணம், சைக்கிள் சவாரி, பேட்டரி கார் என்று தேர்ந்தெடுக்கலாம்.

உள்ளேயே உணவு விடுதி உண்டு. என்றாலும், நீங்கள் கையோடு கட்டிக் கொண்டு போவது நல்லது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதால், இலை, காகிதம் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. இந்தப் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை!

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

மீனாட்சியம்மன் கோயில்: நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட அழகிய நகர் மதுரை. அந்நகருக்கு அழகு சேர்க்க வைகை நதி, நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் என்று வரிசையாக ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல அமைந்திருப்பது மீனாட்சியம்மன் கோயில்! 12 கோபுரங்கள்... 4 விமானங்கள் என்று உயர்ந்து நிற்கும் அழகோ அழகு! பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், திருக்கல்யாண சந்நிதி என திகட்டத் திகட்ட பார்ப்பதற்கு எண்ணற்ற விஷயங்கள் கோயிலுக்குள் நிறைந்திருக்கின்றன!

பெரியார் பஸ் நிலையம் மற்றும் மதுரை ரயில் சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து நடைபயண தூரத்திலேயே அமைந்திருக்கிறது கோயில். சாதாரண ரக விடுதிகள் தொடங்கி, நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகள் வரை... நிறைய இருக்கின்றன. கோயிலுக்குச் சொந்தமான விடுதிகளும் உள்ளன.

'இனி, நான் மேலாடை அணிய மாட்டேன்’ என்று காந்தி அடிகள் உறுதிபூண்டது மதுரை மண்ணில்தான். அந்த மகாத்மாவின் நினைவைப் போற்றும் காந்தி மியூசியம்... மதுரையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. இது, பெரியார் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள், அவர் அணிந்த ஆடைகள், பயன்படுத்திய பொருட்கள் என பலவும் வைக்கப்பட்டுள்ளன. பக்கத்திலேயே இருக்கும் ராஜாஜி பார்க்... குழந்தைகளின் கொண்டாட்ட பூமி!

பிரமாண்ட துண்களும், மிக உயர்ந்த மேற்கூரை என பிரமிக்க வைக்கும் நாயக்கர் மகாலில்... மாலை வேளைகளில் நடக்கும் ஒளி - ஒலி நிகழ்ச்சி (தமிழ் மற்றும் ஆங்கிலம்), அற்புதக் காட்சி. வண்ண விளக்குகளின் ஊடே மகாலின் அழகோடு... அதன் வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும்!

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!
விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் செல்வது ஒரு பேக்கேஜ் டூருக்கு சமம். அட ஆமாங்க... உலகப் புகழ்பெற்ற பாம்பன் ரயில்வே தூக்குப் பாலம், ராமநாதசுவாமி கோயில், மிக நீளமான அதன் மூன்றாம் பிராகாரம், ஓலைக்குடா கடற்கரைப் பூங்கா, ராமர் பாதம், சுக்கிரீவர் கோயில், தனுஷ்கோடி கடற்கரை, பாலைவனம் போல காட்சி தரும் நகரும் மணற்குன்றுகள்.... என்று இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கொஞ்சம் சிரமப்பட்டால் அமெரிக்கா சென்று திரும்பியபோது விவேகானந்தர் வந்திறங்கிய குந்துகால் கடற்கரை, மண்டபம் மீன்கள் ஆராய்ச்சி மையம் மற்றும் அருங்காட்சியகம், அங்குள்ள கடற்கரைப் பூங்கா, உச்சிப்புளி அருகே இருக்கும் மிகத் தூய்மையான அரியமான் கடற்கரை போன்றவற்றையும் கண்டுகளிக்கலாம்.

திருவிழாக் காலங்களிலும், அமாவாசை தினங்களிலும் தங்குவதற்கு விடுதி கிடைக்காத அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கும். எனவே, சுற்றுலா வர நினைப்பவர்கள்... இத்தகைய நாட்களைத் தவிர்க்கலாம்.

தமிழகம் முழுவலும் இருந்து பேருந்து வசதியும்... சென்னை, திருச்சி, மதுரை இங்கிருந்தெல்லாம் ரயில் வசதியும் தாராளமாக உண்டு!

தேக்கடி: தமிழகத்தின் தேனி மாவட்டம், குமுளியை ஒட்டி, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தேக்கடி. 'முல்லை - பெரியாறு அணைப் பிரச்னை' என்று அவ்வப்போது செய்திகளில் அடிபடுமே... அந்த அணைதான் தேக்கடி. வருடம் முழுவதும் சீஸன்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையைச் சுற்றி வனவிலங்கு சரணாலயமும் இருக்கிறது. யானைகள், மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் என்று ஏராளமான மிருகங்கள் இங்கே இருக்கின்றன. படகு சவாரிதான் தேக்கடியின் ஸ்பெஷல். அதிர்ஷ்டம் இருந்தால் படகு சவாரியின்போதே யானைகளும், மான்களும் கூட்டம் கூட்டமாகத் தண்ணீர் குடிப்பதை ரசிக்கலாம். தேக்கடியில் தங்கும் விடுதிகளில் இருக்கின்றன. என்றாலும், செலவு அதிகம். எனவே குமுளியில் குறைந்த செலவில் தங்கிக் கொள்ளலாம். இங்கிருந்து மூணாறு செல்வதும் எளிது!

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

குஷி பொங்கும் குமரி உலா: கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினால் நடந்து போகும் தூரத்திலேயே கன்னியாகுமரி அம்மன் ஆலயம் வந்துவிடும். காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், மியூசியம், காட்சி கோபுரம், குமரி வரலாற்று ஆய்வுக் கூடம் எல்லாம் கூப்பிடு தூரத்தில்தான்! விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு ஜாலியாக போட் சவாரியும் போகலாம். குழந்தைகளுக்காக தீம் பார்க்கும் உண்டு! தங்குவதற்கான விடுதிகள் கன்னியாகுமரியில் நிறைய இருந்தாலும் 'விவேகானந்தா கேந்திரா'தான் சீப் அண்ட் பெஸ்ட்!

குமரியின் குற்றாலம், திற்பரப்பு அருவி! குலசேகரத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அழகிய தென்னை, ரப்பர் மர சோலைகளுக்கிடையே பரந்து விரிந்து கிடக்கும் பாறைகளின் நடுவே பாய்ந்து செல்லும் ஆறும், அருவியும் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

சமண மத தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோயில், சிதரால். தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோயிலை தரிசிக்க தினமும் காலை முதல் மாலை வரை மட்டுமே அனுமதி.

அடுத்த அதிசயம், ஆசியாவிலேயே மிகப் பெரிய தொட்டிப் பாலம்... மாத்தூர். இது இரண்டு மலைகளை இணைத்து பரளியாற்றுத் தண்ணீரை கொண்டு செல்வதற்காக கட்டப்பட்ட பாலம். திருவட்டாரில் இருந்து மூன்றே கிலோ மீட்டர்தான். குழித்துறை, திற்பரப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள் உள்ளன.

விட்டாச்சு லீவு... கிளம்புங்க டூரு!

நாகைக்கு ஒரு பயணம்! : தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை 16-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வணிக தலமாக விளங்கிய தரங்கம்பாடியில், 1620-ம் ஆண்டு வணிகத்துக்காகவே டேனிஷ் கடற்படை தளபதி ஓவ்கிட் என்பவரால், அந்த நாட்டு கட்டடக் கலைப் முறைப்படி கட்டப்பட்ட கோட்டை!

பழைய காலத்து நாணயங்கள், சுறாமீன் எலும்பு, முதுமக்கள் தாழி என கோட்டையில் பார்வையிட்டு வெளியே வந்தால், உலகிலேயே சுத்தமான ஆக்ஸிஜன் காற்று கிடைக்கக்கூடிய இரண்டாவது கடற்கரை என சிறப்பு பெற்ற அழகிய தரங்கை கடற்கரை. அதன் அருகிலேயே கடலோடு சேர்ந்தாற் போல் மாசிலாமணிநாதர் கோயில். ஆம், அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது கோயில்!

நாகப்பட்டினத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 150 கி.மீ தொலைவிலும் இருக்கிறது இந்த தரங்கம்பாடி.

சோழமன்னர் காலத்தில் மிகச் சிறந்த துறைமுகமாக இருந்த காவேரிபூம்பட்டினம், இப்போது பூம்புகார். கண்ணகி மண்டபம், கலங்கரை விளக்கம், அமைதியான கடற்கரையில் விளையாட்டு, படகுப் பயணம், பொழுதுபோக்கு பூங்கா என ஒரு நாள் முழுவதும் களைப்பே இல்லாமல் பூம்புகாரைச் சுற்றலாம். மயிலாடுதுறை, நாகை, சீர்காழி, சிதம்பரம் என எல்லா ஊர்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

மிக அமைதியான கிராமம், கோடியக்கரை. சதுப்பு நிலக் காடுகள், ஏராளமான வண்ணப் பறவைகள், மான்கள் என வன உயிர்களோடு... வனப்பகுதியில் ஒரு வலம் வரலாம் கோடியக்கரையில்.

நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள இங்கு இருசக்கர வாகனங்களுக்கு தடை, தங்கும் வசதிகள் இல்லை என்பதால் வேதாரண்யம், நாகப்பட்டினம் என தங்கிக் கொள்ள வேண்டும்

ஹேப்பி ஜர்னி!

- கரு.முத்து, கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன், சா.வடிவரசு, மா.நந்தினி

படங்கள்: ரா.ராம்குமார், செ.சிவபாலன்