Published:Updated:

"இவங்கதான் என் இனிஷியல்...”

‘ஒப்பனை’ ராஜாவின் ஒப்பற்ற மரியாதை!ஃபீலிங்ஸ்

"இவங்கதான் என் இனிஷியல்...”

‘ஒப்பனை’ ராஜாவின் ஒப்பற்ற மரியாதை!ஃபீலிங்ஸ்

Published:Updated:
##~##

''ஏய்.. ராஜா'' என்று அவரைக் கட்டிப் பிடித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகினர்...

''ஒரு குழந்தை பிறந்தா குடும்பத்தில் எவ்ளோ பூரிப்பு இருக்குமோ, அப்படித்தான் இப்போ வரைக்கும் இருக்கேன்!' என்று நெகிழ்கிறார் அவருடைய மனைவி...

''நியூஸை டி.வி-யில் பார்த்தப்போ எங்களுக்கெல்லாம் ஆனந்தமும், கண்ணீருமா அப்படி ஒரு சந்தோஷம்!'' என்று குஷியாகிறார்கள் அவருடைய குழந்தைகளும்... கூடவே நிற்கும் மைத்துனர் மகள் பூஜாவும்...

எல்லாவற்றையும் அமைதியாகப் பார்க்கும் அந்த மனிதரோ... ''இந்தப் பாராட்டு எல்லாத்துக்கும் காரணம், என்னோட மனைவி லதா. அவங்க இல்லைனா இன்னிக்கு நான் இல்லை. அந்த அன்பாலதான் என்னோட பேருக்கு முன்ன அவங்க பேரோட முதல் எழுத்தை இனிஷியலா சேர்த்துக்கிட்டேன்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார்!

அவர்... 2012-ம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதைப் பெற்றிருக்கும் 'ஒப்பனைக் கலைஞர்' எல்.வி.ராஜா! 'வழக்கு எண் 18/9’ படத்தில் வரும் கதாபாத்திரங்களை, தன்னுடைய கைவண்ணத்தால் நிஜங்களாகவே நம்முன் நடமாடவிட்டதற்குத்தான் இந்த விருது! விருதைப் பற்றி கேட்டால்... தன்னுடைய மனைவியிடமிருந்தே ஆரம்பிக்கிறார் எல்.வி. ராஜா...

"இவங்கதான் என் இனிஷியல்...”

''திருமணம் முடிஞ்சு 20 வருஷம் ஆகுது. பெண் பார்க்கப் போனப்ப, எல்லாரும் 'பொண்ண புடிச்சிருக்கா?’னு கேட்டாங்க. லதாவோட முகக்களை எனக்குப் பிடிச்சுப் போக, 'கொஞ்சம் சர்க்கரை இருந்தா எடுத்துட்டு வாங்க!’னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டு, சம்மதம் சொல்லிட்டு வந்தேன். அன்னியில இருந்து இன்னிவரைக்கும் என் வாழ்க்கை இனிப்பா இருக்கு!'' என்று சொல்லி மனைவியைப் பார்த்தவர்,

''தேவி, தாரணினு எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன், தினேஷ் ராஜா. எளிமையான குடும்பம். கிடைக்கற வருமானத்தை வெச்சு வாழ்க்கையை நடத்துற அழகை, என் லதாதான் எனக்குக் காட்டினாங்க. ஐந்தாவதுக்கு மேல படிக்கிற சூழல் எனக்கு வாய்க்கல. ஆனா, இன்னிக்கு என்னோட பசங்க மூணு பேரும் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல படிக்கறாங்க. பெரிய அளவுல நான் சம்பாதிக்கலனாலும்... லதாவோட அக்கறையாலதான் இதெல்லாம் சாத்தியமாகியிருக்கு. குடும்பத்தில் மட்டும் இல்லை... என் தொழில் சம்பந்தமாவும் முக்கிய முடிவுகள்ல லதாகிட்ட ஆலோசனை கேட்டுதான் நடப்பேன்.

"இவங்கதான் என் இனிஷியல்...”

இப்படி அன்பும் அனுசரணையுமா குடும்பத்த நகர்த்த லதாவுக்காக நான் பெருசா எதையுமே செய்யல. அதேசமயம், அளவில்லாத அன்பைக் கொடுக்க நான் தயங்கினதே இல்ல. அந்த அளவில்லாத அன்பை வெளிப்படுத்துற விதமா அவங்க பெயரை இனிஷியலாக்கினா என்னனு தோணுச்சு. அது 'வெண்ணிலா கபடிக் குழு’ படத்தோட மேக்கப் வேலைகள் தொடங்கின நேரம். அந்த முடிவை அப்ப நிறைவேத்தினேன். அந்தப் படத்தோட டைட்டில் கார்டுல 'எல்.வி.ராஜா’ங்கற பேரைப் போட்டுக்கிட்டேன். இப்படி மனைவியை இன்ஷியலாக்கின ராசி, 'நான் மகான் அல்ல’, 'அழகர்சாமியின் குதிரை’, 'வழக்கு எண் 18/9’னு தொடர்ந்து நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததோட, இப்போ 'தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்திருக்கு'!'' என்று பெருமைப் பொங்க பேசிக் கொண்டிருந்த வரை, அன்பும் கூச்சமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் லதா.

"இவங்கதான் என் இனிஷியல்...”

''மூத்த பொண்ணு ப்ளஸ் டூ தேர்வு எழுதினதால, மூணு மாசமா டி.வி-யை ரீ-சார்ஜ் செய்யவே இல்லை. பரீட்சை முடிஞ்சதும் எதேச்சையா ரீ-சார்ஜ் செய்தோம். அதுல நியூஸ் ஓடிட்டிருக்க... 'எல்.வி. ராஜாவுக்கு தேசிய விருது'னு செய்தி வர... அத்தனை பெரிய சந்தோஷத்தை எங்களோட சின்ன வீடு இதுக்கு முன்ன பார்த்ததில்லை. ப்ரிவியூ ஷோ பார்த்தப்போவே, 'உனக்கு விருது கிடைக்கும்ப்பா!’னு சொன்னான் என் பையன். அது உண்மையாகியிருக்கு'' என்ற ராஜா, ஒரு வெற்றியைத் தருவதற்கு முன்பாக ஒரு கலைஞனிடம் இருந்து இந்த திரைத்துறை எடுத்துக்கொள்ளும் உழைப்புக்கும் முயற்சிக்கும் தானும் ஓர் உதாரணமானதைப் பகிர்ந்துகொண்டார்.

''சினிமாவுக்கு வந்து 33 வருஷம் ஆகுது. ஆரம்பத்துல கிளினிக்ல எக்ஸ்ரே எடுக்கற வேலை, சாப்பாட்டு மெஸ்ல வேலைனு போய்க்கிட் டிருந்தேன். நடிகர் சுரேஷ் சாரோட அறிமுகம் கிடைச்சு... 'வெள்ளை ரோஜா’ படத்துக்கு அசிஸ்டன்ட் மேக்கப் மேன் வேலையில கேரியரைத் தொடங்கினேன். அப்போ மாசம் 45 ரூபாய் சம்பளம். ஒரு கட்டத்துல சீனியர் மேக்கப் கலைஞர் 'கவிதாலயா’ சுந்தரமூர்த்தி சாரோட நட்பு கிடைச்சுது. சார்கிட்ட 18 வருஷத்துக்கும் மேல வேலை பார்த்தேன். கிட்டத்தட்ட 200 திரைப்படங்கள், அதுல 150 தனிப்படங்கள்னு மேக்கப் கலைஞரா பணியாற்றியிருக்கேன். மணிரத்னம் சார், சுசீந்திரன் சார், பாலாஜி சக்திவேல் சார் இப்படி பல நல்ல மனிதர்களை எனக்குத் தேடித் தந்தது இந்த சினிமாதான்.

பாலாஜி சக்திவேல் சார் இயக்கின 'கல்லூரி’ படத்தில்தான் அவரோட அறிமுகம்     கிடைச்சுது. 'வழக்கு எண் 18/9’ படத்தோட புரொடக்ஷன் வேலைகள் தொடங்கினப்போ என்னைக் கேட்காமலேயே உரிமையா என்னோட பேரை மேக்கப் டிபார்ட்மென்ட்ல இணைச்சிருந்தார் சார். உண்மையான அன்பை தர்ற மனிதர். விருது கிடைச்ச சந்தோஷத்தில் அவரை சந்திச்சப்போ, 'ஏய் ராஜா!’னு கட்டிப்பிடிச்சிக்கிட்டார். அப்படியே குலுங்கி குலுங்கி அழுதுட்டேன். இப்படி அன்பு செலுத்தறவங்க மத்தியில வாழறதே போதும்னு தோணுது!'' என்று ராஜா கண்கள் நனைய, சட்டென சூழ்ந்து சூழல் மாற்றி அந்த கலைஞனை சிரிக்க வைக்கிறார்கள் அவர் குழந்தைகள்!

- ம.மோகன் படங்கள்: வீ.நாகமணி