Published:Updated:

"ஆர்வம் இருக்குற பெண்கள்... ஆல்வேஸ் வெல்கம்!”

ஃபீலிங்ஸ்

"ஆர்வம் இருக்குற பெண்கள்... ஆல்வேஸ் வெல்கம்!”

ஃபீலிங்ஸ்

Published:Updated:
##~##

சென்னையில் பலருக்கும் சூரியன் உதித்து பொழுது விடிவதைவிட, தினமும் காலை 5 - 7 மணி வரை பிக் எஃப்.எம்-ல் 'சுப்ரபாதம்’ நிகழ்ச்சியில் 'ஆர்ஜே’ கண்மணியின் குரல் கேட்டுத்தான் புலர்கிறது காலை. இரவுப் பொழுது முடிவதும், தினமும் இரவு 9 - 11 மணி வரை 'சொல்ல மறந்த கதை’ நிகழ்ச்சியில் அவர் குரல் கேட்டுத்தான். தனியார் பண்பலைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மக்களின் 'ஃபேவரைட் ஆர்ஜே’-வாக மட்டுமில்லாமல், பிரியமான தொகுப் பாளினியாகவும் தொடர்கிறார் கண் மணி. இடையில், பட்டத்தின் மாஞ்சா கயிறால் கழுத்தில் சீரியஸ் காயம்பட்டு அவதிப்பட்டவர், அதிலிருந்து மீண்டு வந்தது நெகிழ்ச்சி ப்ளஸ் தன்னம்பிக்கை எபிசோட்!

கண்மணியுடன் கொஞ்சம் 'சாட்’ செய்தோம்!

''ரேடியோ சம்பந்தமான பல சர்வேக்களில் 'ஃபேவரைட் ஆர்ஜே’, 'ஃபேவரைட் புரோகிராம்’களில் என் பெயரையும், நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியையும் மக்கள் டிக் செய்வது, இந்த ஃபீல்டில் எனக்கிருக்கிற ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் கிடைச்ச வெற்றி. காலேஜ்ல கெமிஸ்ட்ரி படிச்சப்போ, ஆர்ஜே ஆகும் எண்ணமெல்லாம் இல்ல. இசையில ஆர்வம் இருந்ததால, சினிமாவில் பின்னணி பாடகி ஆகணும்னு ஆசைப்பட்டேன். 'திருட்டு பயலே’ படத்துல வர்ற 'பொய் சொல்லப் போறேன்... பொய் சொல்லப் போறேன்’ பாட்டுல சோனியா அகர்வாலுக்கு டப் செய்து, சிரிச்சது மட்டும்தான் திரையில் எனக்கு கிடைச்ச வாய்ப்பு. எதிர்பாராத விதமாத்தான் ஆர்ஜே ஆகி, அதில் படிப்படியா முன்னேறினேன். ஆர்ஜே-வா இருந்தாலும்... ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எனக்கான பயிற்சியா எடுத்துக்கிட்டு, ஆர்ஜே வேலையைக் கத்துக்கிட்டேதான் இருந்தேன்... இருக்கேன். நிகழ்ச்சித் தொகுப்பு மட்டுமில்லாம, எஃப்.எம் துறையில் எல்லா புரோகிராமிங் பிரிவுகளையும் கத்துக்கிட்டேன்.

"ஆர்வம் இருக்குற பெண்கள்... ஆல்வேஸ் வெல்கம்!”

நேயர்கள்தான் எனக்கான பூஸ்ட். அவங்களோட அன்பை நான் முழுமையா உணர்ந்தது, அந்த விபத்தப்போதான். மூணு வருஷத்துக்கு முன்ன டூ வீலர்ல போகும்போது பறந்து வந்த ஒரு பட்டத்தோட மாஞ்சா கயிறு என் கழுத்தை பலமா அறுத்துப் போட்டுடுச்சு. அத்தனை கழுத்து நரம்புகளையும் கட் பண்ணின மாஞ்சா கயிறால, என் வோகல் கார்டை மட்டும் கட் பண்ண முடியல. நான் மறுபடியும் பேசணும்னு இருந்திருக்கு. மரணப் படுக்கையில இருந்து எழுந்து வந்து நான் மறுபடியும் நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சப்போ, எனக்காக சந்தோஷப்பட்ட நேயர்களோட அன்பால நெகிழ்ந்துட்டேன்!'' எனும் கண்மணி, அகமதாபாத்தில் உள்ள 'முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன்’-ல் சர்வதேச அளவில் பல ஆர்ஜே-க்களுடன் சேர்ந்து தானும் பயிற்சி எடுத்து, இப்போது சென்னையில் பல ஆர்.ஜே-க்களுக்கு 'மென்டர்’ஆக இருக்கிறார்.

'சென்னை டர்ன்ஸ் பிங்க்’ என்கிற மார்பக புற்றுநோய்க்கான விழிப்பு உணர்வு நிறுவனத்தில் ஈவன்ட் டைரக்டராக இருப்பவர், சில முக்கிய விளம்பர நிறுவனங்களின் கிரியேட்டிங் கன்சல்டன்ட் ஆகவும் இருக்கிறார். டி.வி. என்ட்ரிக்கான முயற்சிகளும் தொடர்கிறது.  

''எவ்வளவு கமிட்மென்ட்கள் இருந்தாலும், எனக்குனு 'மீ டைம்’ எடுத்துக்கத் தவற மாட்டேன். ஷாப்பிங், சினிமா, புக்ஸ் படிக்கிறது, செடி வளர்க்கறதுனு என்னை நானே ரெஃப்ரஷ் பண்ணிப்பேன்’' என்று சிரிப்பவர்,

''நான் இந்த ஃபீல்டுக்கு வந்தப்போ மீடியாவில் பெண்களின் என்ட்ரி ஆரம்பிச்சுருந்தது. இப்போ அது ஆண்களுக்குச் சமமான போட்டி கொடுக்குற அளவுக்கு அதிகமாகியிருக்கு. அதனால, ஆர்வம் இருக்குற பெண்கள் ஆல்வேஸ் வெல்கம்!'' என்று அழைப்பு கொடுத்து முடித்தார் அந்த சீனியர்!

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: ரா.மூகாம்பிகை