Published:Updated:

"பரிபூரண தாயாகவே இருக்க விரும்புகிறேன்!”

‘பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவி பளீர்ஸ்க்ரீன்ஸ்

"பரிபூரண தாயாகவே இருக்க விரும்புகிறேன்!”

‘பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவி பளீர்ஸ்க்ரீன்ஸ்

Published:Updated:
##~##

ஸ்ரீதேவி... எவர்கிரீன் திரைக் காவியங்களால் எப்போதும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமான பெண்!  15 வருடங்களுக்கு பின் அவர் நடித்த 'இங்கிலீஷ் - விங்கிலீஷ்’ திரைப்படம், இந்தியா முழுக்க ஹிட். இதில், நடுத்தர வயதுப் பெண்ணாக வாழ்ந்து காட்டியிருப்பவருக்கு 'பத்மஸ்ரீ’ விருது, தற்போது பெருமை சேர்த்திருக்கிறது!

மும்பையில் தன் வீட்டில் இருந்தஸ்ரீதேவியை வாழ்த்துக்களுடன் சந்தித் தோம். ''வணக்கம் அவள் விகடன்!''  எனப் புன்னகையுடன் வந்தமர்ந்தார் 'மயிலு’!

கணவர் போனி கபூர், மகள்கள் ஜானவி, குஷி என்று ரிதமாகச் சென்று கொண்டிருக்கும் தன் குடும்ப வாழ்வின் நிறைவைப் பகிர்ந்து கொண்டவரிடம், 15 வருடங்களுக்குப் பின் நிகழ்ந்த சினிமா ரீ-என்ட்ரி பற்றிக் கேட்டோம்.

''கடைசியாக நடித்த 'ஜுதாய்’ எனும் இந்திப் படத்துக்குப் பின், கேமராவின் கண்களில் இருந்து விலகியே இருந்தேன். 'பிரபல ஸ்டார் இயக்குநர் யாஷ் சோப்ரா உட்பட பலருடைய படங்களை ஸ்ரீதேவி தட்டிக் கழித்தார்’ என்று அவ்வப்போது நியூஸ்களும் வந்துகொண்டிருக்கும். உண்மை என்னவென்றால், இடைப்பட்ட வருடங்களில் என் மகள்களுக்கு பரிபூரண தாயாக இருக்க விரும்பினேன். எவ்வளவு பேரும், புகழும் கிடைத்தாலும்... தாய் ஸ்தானத்தை நிறைவேற்றாமல் ஒருவர் வாழ்க்கை முழுமை பெறாது என்பது என் கருத்து. குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில், 'இங்கிலீஷ் - விங்கிலீஷ்’ வாய்ப்பு வர, பயன்படுத்திக் கொண்டேன்.

இந்த ஆணாதிக்க உலகத்தில் தன்னை அடையாளம் காட்ட ஒரு பெண் தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் போராட வேண்டி உள்ளது. எல்லா பெண்களுக்கும் கணவர் சப்போர்ட் என்கிற அதிர்ஷ்டம் வாழ்வில் கிடைப்பதில்லை. இந்தப் படத்தின் இயக்குநர் கௌரி ஷிண்டேவுக்கு, தமிழரான அவருடைய கணவர் பால்கி, ஒவ்வொரு நுண்ணிழையிலும் இருந்து ஊக்கம் அளித்தார். என் கணவர் போனி கபூரும் பட செட்டுக்கே வந்து என்னை உற்சாகப்படுத்தினார். படம் பெருவெற்றி பெற்றது. என் ஒவ்வொரு முக்கியமான வெற்றியின்போதும், 'நம்ம பொண்ணு’ என்று தமிழகத்தில் இருந்து கிடைக்கும் உரிமை கலந்த வாழ்த்து, இம்முறையும் கிடைத்தது!'' என்ற நொடியில், நம் முகத்திலும் சந்தோஷப் புன்னகை வரவழைத்தார் ஸ்ரீதேவி.

"பரிபூரண தாயாகவே இருக்க விரும்புகிறேன்!”

பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகைகளின் 'கம்பேக்’ சீஸனைப் பற்றிக் கேட்டால், பூரிப்புடன் பதில் சொல்கிறார்.

''திருமணத்துக்குப் பின், முன்பு ஜோடியாக நடித்த ஹீரோக்களுக்கே சில வருடங்களில் அக்காவாக, அண்ணியாக, ஏன்... அம்மாவாகக் கூட நடிக்க வேண்டிய நிலைதான் எப்போதும் நடிகைகளுக்கு. ஆனால், 'இது இந்த நடிகையின் கம்பேக் சீஸன்’ என்று கொண்டாடும் அளவுக்கான ஒரு முக்கியத்துவத்துடன் மீண்டும் நடிகைகள் திரைக்கு வருவது சந்தோஷமான விஷயம். அந்த வகையில் 'இங்கிலீஷ் - விங்கிலீஷ்’ல் நானும், 'ஆஜா நாச்லே’ படத்தில் மாதுரி தீட்சித் தும், 'டேஞ்சரஸ் இஷ்க்’ படத்தில் கரிஷ்மா கபூரும் திரைக்குத் திரும்பியிருப்பதை 'கம்பேக்’ என்று கொண்டாடும் இந்த டிரெண்ட்... சந்தோஷம் தருவதாக உள்ளது'' என்றவரிடம்...

மகள் ஜானவி, தன் தந்தை போனி கபூரின் சொந்த தயாரிப்பில் அறிமுகமாக இருப்பதாகக் கிளம்பியிருக்கும் நியூஸ் பற்றிக் கேட்டோம்.

''ஜானவிக்கு இப்போது 15 வயது. அதற்குள் அவள் நடிக்க வருவதாகக் கிளம்பும் வதந்திகள்... ஒரு தாயாக எனக்குக் கவலை அளிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை அவர் தற்போதைக்கு படிப்பில் கவனம் செலுத்தி, பின்னாளில் நல்ல மணவாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்றே விரும்புகிறேன்!'' என்றபோது, ஸ்ரீதேவியின் கண்களில் தாயின் தவிப்பு.

கணவர் போனி கபூர் எடுத்த 'மிஸ்டர் இந்தியா’ மீண்டும் புதிய பொலிவுடன் தயாராக உள்ளது. அதைப் பற்றிப் பேசிய ஸ்ரீதேவி, ''புதிதாக வேறு படங்களில் கமிட் ஆகவில்லை. இந்நிலையில், மீண்டும் எடுக்க திட்டமிடப்பட்டு இருக்கும் போனிஜியின் 'மிஸ்டர் இந்தியா’ படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதில் நானும் ஒரு அங்கமாவதில் மிகவும் மகிழ்ச்சி'' என்று சிலிர்த்தார் கண்களைச் சுருக்கி!

''மீண்டும் தமிழ்ப் படங்களில், கமல், ரஜினியுடன் வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பீர்களா?'' என்று கேட்டால், குஷியாகிறார்.

''அன்று ஆறு வயதில் 'துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்காவிட்டால்... இன்று எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது. இதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு நல்ல ரோல் கிடைத்தால் தமிழில் நடிக்கக் காத்திருக்கிறேன். கமல், ரஜினியுடனும் என் வயதுக்குப் பொருத்தமான ரோல் கிடைத்தால் நிச்சயம் மகிழ்ந்து நடிப்பேன்!'' என்றவர்...

''பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவி... இது எனக்கு இன்ப அதிர்ச்சி! நம் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான அதைப் பெற நான் கடந்து வந்திருக்கும் பாதை, என்னிடமிருந்து அதற்கான உழைப்பை எடுத்து, தகுதியைக் கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்!''

- இரு கைகளும் இணைத்து 'வணக்கம்!’ சொல்லி வழியனுப்புகிறார் ஸ்ரீதேவி!

- ஜோதி வெங்கடேஷ்