Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 1

மாங்கனியால் மகிமை பெற்ற புனிதை!புதிய தொடர் - கரு.முத்து

பிரீமியம் ஸ்டோரி

ஆன்மீகம்

##~##

ங்கே சிவன், பிரம்மா, விஷ்ணு, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்று எத்தனை எத்தனையோ தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இவர்களுக்கெல்லாம்... 'ரிஷி மூலம்' என்பது... யாமறியோம் பராபரமே! அதே சமயம், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மண்வாசனையோடு கூடிய ஏகப்பட்ட தெய்வங்கள் உண்டு. குறிப்பாக பெண் தெய்வங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னாலும் இருக்கும் கதைகள், நூறு ஆண்டு... இருநூறு ஆண்டு... ஐநூறு ஆண்டு... ஆயிரம் ஆண்டு... ஆயிரத்து ஐநூறு ஆண்டு வரலாறு என்பதுதான் ஆச்சர்யமே!

ஆம், தெய்வங்களாக வழிபடப்படும் ஒவ்வொரு பெண்ணுமே இங்கே ரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்! இப்படிப்பட்ட பல தெய்வங்களின் சந்ததிகள், இன்றும்கூட இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதே அதற்கு சாட்சி!

இந்தத் தெய்வங்கள் ஒவ்வொருவரும் இங்கே உருவான வரலாறு... உள்ளத்தை உருக வைக்கும் அற்புதக் காவியம்... அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் உயிரோவியம். அத்தகைய வரலாற்றை உங்களுக்குப் படம் பிடிக்கத்தான் 'இதோ எந்தன் தெய்வம்’ எனும் இந்தப் புதுப்பகுதி!

என்ன... அந்த தெய்வப்பிறவிகளை தரிசிக்கப் புறப்படுவோமா!

காரைக்காலைச் சேர்ந்த வணிக மரபினரான தனதத்தன், தன் மகள் புனிதவதியை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வணிகரான நிதிபதியின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். மகளைப் பிரிய மனமில்லாததால், காரைக்காலிலேயே தனி மாளிகை கட்டிக்கொடுத்து குடி அமர்த்தினார். கூடவே, வணிகம் செய்வதற்காக பெரும்பொருளையும் கொடுத்தார். அதை வைத்து வணிகம் செய்து பெரும்புகழையும் பொருளையும் ஈட்டினார் பரமதத்தன். அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வில் ஒரு நாள் நடந்த நிகழ்வு... புனிதவதியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவர் பெயரை இந்த உலகம் உச்சரிக்கச் செய்துவிட்டது!

இதோ எந்தன் தெய்வம்! - 1

'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே’ என்று இறைவனைப் பாடுகிறது தேவாரம். ஆனால், அந்த இறைவனே... 'அம்மை!’ என்று அழைத்த பெருமைக்குரியவர் புனிதவதி. இன்று 'காரைக்கால் அம்மையார்’ என்று போற்றி வணங்கப்படுகிற அவர்தான், தமிழில் 'அந்தாதி’ என்கிற பாடல் வடிவத்தை தோற்றுவித்தவர். சைவ சமய குரவர்களான நால்வருக்கும் காலத்தால் மூத்த அவர் காலத்தில்தான் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம் என்கிறது அவரைப் பற்றிய ஆய்வுகள்) இறைவனை தமிழால் பாடி துதித்த வரலாறு தோன்றியிருக்கிறது. இவரின் பாடல்களில் இருக்கும் பண்களின் அடிப்படையில்தான் சம்பந்தரும், சுந்தரரும் தங்கள் பாடல்களை அமைத்துக் கொண்டனர். இவர் 'அற்புத திருவந்தாதி’ தவிர 'இரட்டை மணிமாலை’, 'மூத்த திருப்பதிகம்’ என்கிற இலக்கிய வகைகளையும் பாடியிருக்கிறார்.

இப்படித் தமிழுக்குத் தொண்டு செய்த அம்மையார், உடலோடு கைலாயம் செல்லும் அளவுக்கு பக்தியிலும் பேர் பெற்றிருந்தார். அத்தகைய அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை இங்கே விவரிக்கிறார், காரைக்கால் அம்மையார் ஆலயத்தின் அர்ச்சகர் ரவி சிவாச்சாரியார்.

இதோ எந்தன் தெய்வம்! - 1

''இன்று இந்தக் கோயில் இருக்கும் இடத்தில், அன்று இருந்த மாளிகையில், தன் கணவன் பரமதத்தனோடு இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக நடத்தி வந்தார் புனிதவதியார். ஒருநாள் பரமதத்தனை பார்க்க வந்த சிலர், இரண்டு மாம்பழங்களைக் கொடுத்துச் சென்றனர். பணியாள் மூலமாக அவற்றை வீட்டுக்குக் கொடுத்து அனுப்பினார். எப்போதும் இறை நினைப்பில் இருக்கும் புனிதவதி, சிவனடியார்கள் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்களை உபசரித்து உணவளித்து அனுப்பத் தவறுவதில்லை. அன்றும் அப்படி ஒரு சிவனடியார் வீட்டுக்கு வர, அப்போது அன்னம் மட்டுமே தயாராகியிருந்தது. கறியமுது எதுவும் தயாராகவில்லை. வந்தவரோ பசியால் துடித்திருக்க, அன்னத்தை பரிமாறியவர், அந்த மாம்பழங்களில் ஒன்றையும் வைத்தாள். வயிறார உண்ட சிவனடியார், பசியாறி விடைபெற்றார்.

பிறகு வந்து சேர்ந்த கணவனுக்கு உணவு பரிமாறிய புனிதவதி, மாம்பழத்தையும் வைத்தாள். ''அட, இவ்வளவு சுவையாக இருக்கிறதே, இன்னொன்றையும் எடுத்துவா'' என்று சொல்ல, தவித்துப் போனாள். உள்ளே சென்றவள், இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி வேண்ட, சிவனடியாராக வந்து மாம்பழத்தை சாப்பிட்டுச் சென்ற இறைவன், ஒரு மாம்பழத்தை அருளினார். அதை உண்டு முடித்த பரமதத்தன், ''இரண்டுமே ஒரே மரத்திலிருந்து வந்த பழங்கள்தான். ஆனால், முன்னதைவிட இது எப்படி இவ்வளவு சுவையாக... அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத தனிச்சுவையில் இருக்கிறது..?’' என்றபடியே மனைவியை நோக்கினான். அவளுடைய முகத்திலோ பதற்றம்... கணவனின் கண்களில் ஆயிரமாயிரம் கேள்விகள்... சட்டென்று மொத்த சங்கதியையும் சொன்னாள் புனிதவதி.

இதோ எந்தன் தெய்வம்! - 1

கலகலவென சிரித்த பரமதத்தன்... ''அப்படியானால் என் கண்ணெதிரே இறைவனிடம் வேண்டி பழத்தைப் பெற்றுத்தா பார்க்கலாம்'' என்றான். மீண்டும் இறையை வேண்டி பழத்தைப் பெற்ற புனிதவதி, அதைக் கணவன் கையில் கொடுக்க... அந்த நிமிடமே பழம் மறைந்தது. அதிர்ந்து போன பரமதத்தன், 'இவள், இறையருள் பெற்ற புனிதவதி' என்பதை உணர்ந்தான். அந்த நிமிடத்திலிருந்தே அவளைத் தொடாமல் தள்ளியே இருந்தவன், பிற்பாடு பாண்டிநாட்டில் குடியேறி, அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழத் தொடங்கினான்.

அவனைத் தேடி தந்தையோடு புனிதவதி செல்ல... புது மனைவி, மகள் ஆகியோரோடு புனிதவதியின் காலில் வீழ்ந்து வணங்கிய பரமதத்தன், ''நீங்கள் இறையருள் பெற்றவர் என்பதால்தான் விலகினேன், இப்போது காலில் விழுந்து வணங்கினேன். என் மகளுக்குகூட 'புனிதவதி’ என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன்'' என்று சொல்ல, நொந்துபோனாள் புனிதவதி.

இனி, 'இந்த உடல் இருந்து என்ன பயன்?' என்று சிந்தித்தவள், அந்த இடத்திலேயே ''என் உடலை பேய் உருவம் போல் ஆக்கிவிடு!'' என்று இறைவனை வேண்ட, சதையும் புற அழகும் உதிர்ந்து வெறும் எலும்பு உருவாக மாறினாள் புனிதவதி!'' என்று அம்மையாரின் வரலாற்றை, ஒரு நாடகமாகவே நம் நெஞ்சில் பதித்தார் ரவி சிவாச்சாரியார்!

இதோ எந்தன் தெய்வம்! - 1

காரைக்கால் அம்மையார் பற்றிய பல ஆய்வுகளை செய்து விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கும் பிரபல ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன், அம்மையார் பற்றிப் பேசப்புகுந்தால்... தானும் உருகி, கேட்பவரையும் உருக வைக்கிறார்!

''தமிழகம் - புதுச்சேரியைப் பொறுத்தவரை... காரைக்கால் தவிர்த்து பிற இடங்களில் அம்மையாரின் வரலாறு அவ்வளவாக தெரியாது. ஆனால், மேற்கிலிருக்கும் கேரளக் கடற்கரை பகுதி முழுவதும் 'காரைக்கால் மாதா' என்கிற பெயரில் அவருக்கு சிலைகள் இருக்கின்றன. கர்நாடகம் மற்றும் கங்கைக் கரையிலும் சிவன் கோயில்களில் அவருடைய சிலைகள் காணப்படுகின்றன. இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள நம் கோயில்களிலும்கூட சிலைகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம்... அம்மையாரின் இறை யுணர்வும் அர்ப்பணிப்பும்தான்.

எலும்புருவோடு கைலாயம் சென்றவர், 'இறைவன் இருக்குமிடத்தை கால்களால் மிதிக்கலாமா?' என்று எண்ணி தலையால் நடந்தார். அதைக் கண்டு பார்வதிதேவி ஏளனமாக சிரிக்க, ''இவள் என் அம்மை போன்றவள்'' என்ற இறைவன், ''அம்மையே!'' என்று அன்போடு அழைத்தார். பிறகு, அம்மையாரின் வேண்டுகோளுக்கு இணங்க திருவாலங்காட்டுக்கு வந்து ஊர்த்துவ தாண்டவத்தை நிகழ்த்தினார். இப்போதும் சிவனின் ஊர்த்துவ தாண்டவ சிற்பத்தை நீங்கள் எங்கு பார்த்தாலும்... எலும்பே உருவான அம்மையார் சிற்பமும் சேர்ந்தே இருக்கும்'' என்று பெருமையோடு சொன்னார்.

இப்படி தமிழுக்கும் பக்திக்கும் தொண்டு செய்த அவர், எலும்பு உருவோடு கைலாயம் சென்ற பிறகு, அவர் வாழ்ந்த வீட்டை அவர் சார்ந்த வணிக மரபினர் சிறிய நினைவிடமாக வணங்க ஆரம்பிக்க, அது இன்று கோயிலாக உருவெடுத்திருக்கிறது. இன்றும் இங்கே இருந்து தெய்வமாக அருள்பாலிக்கும் அம்மையாருக்கு உலகெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

- தெய்வங்கள் பேசும்...

படங்கள்: செ.சிவபாலன்

மாங்கனி திருவிழா!

ண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியை மையமாக வைத்து, மூன்று நாட்கள் முன்பும், பின்பும் என மொத்தம் ஏழு நாட்களுக்கு 'மாங்கனி திருவிழா' நடக்கிறது. அம்மையாரின் திருமணம், மாம்பழ நிகழ்வு, பாண்டிநாடு செல்வது, கணவன் வணங்குவது, எலும்பு உரு பெறுவது, கைலாயம் செல்வது, காரைக்கால் அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் திருநடனம் புரிவது என்று அவருடைய வாழ்க்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாள் வீதம் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிகழ்வுகளும்... 'வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்கிற அய்யன் திருவள்ளுவரின் வாக்கை நிரூபித்த புனிதவதியின் வாழ்க்கைக் கதையை இந்த மானுடர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன!

எப்படி செல்வது?  

சென்னை மற்றும் திருச்சியிலிருந்து புகைவண்டிகள் இருக்கின்றன. மற்றபடி எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. காரைக்கால் நகரிலேயே கோயில் இருப்பதால் போக்குவரத்துக்கு பிரச்னை இல்லை. நகரில் பல நல்ல தனியார் விடுதிகள் இருக்கின்றன. அருகில் ஆறு கிலோ மீட்டரில் திருநள்ளார் சனீஸ்வரன் கோயில் இருக்கிறது. அங்கு தேவஸ்தானம் சார்பில் குறைந்த வாடகையில் வசதியான  அறைகள் கிடைக்கும். மாம்பழம் வாங்கிச் சென்று படைத்து அதை அடியார்களுக்கு கொடுப்பது சிறந்த பலனைத் தரும். கோயிலில் தொலைபேசி இல்லை. அருகிலேயே இருக்கும் கைலாசநாதர் கோயில் தொலைபேசி எண்: 04368-222717. திருநள்ளார் கோயில் தொலைபேசி எண்: 04368-236530.  

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை ஆறு மணி முதல் மதியம் 12 வரை. மாலையில் 4 மணி முதல் 9 மணி வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு