Published:Updated:

கோடையிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

செல்லமே செல்லமே!அவேர்னஸ்

கோடையிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

செல்லமே செல்லமே!அவேர்னஸ்

Published:Updated:
##~##

கொடுமையான கோடை ஆரம்பித்துவிட்டது. பெரியவர்களாலேயே வெயிலைத் தாங்க முடியவில்லை. குழந்தைகளுக்கு நிச்சயம் கவனம் கொடுக்க வேண்டும். அதுவும் பள்ளி விடுமுறை துவங்கியிருக்கும் இந்நிலையில், கோடை வெயிலில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வழிமுறைகள் சொல்கிறார், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர் ரமா சந்திரமோகன்.

''முதலில், பிறந்த குழந்தைகளுக்கு வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் இருந்து ஒரு வாரம் வரை தாய்க்கு பால் சுரப்பு குறைவாகத்தான் இருக்கும். பொதுவாக, பிறந்த குழந்தைக்கு உடலில் உள்ள நீர் வற்றினால் தான் தாய்ப்பால் உடலில் சேர்ந்து சத்து கிடைக்கும், எடை அதிகரிக்கும். இதுவே அதிக எடை கொண்ட குழந்தையாக பிறந்திருந்தால், அதற்கு தாயிடம் இருந்து தேவையான தாய்ப்பால் உடனடியாகக் கிடைப்பது கடினம். இதனால் குழந்தைக்கு டீஹைட்ரேஷன் ஏற்படுவதோடு, உடலில் சோடியத்தின் அளவு அதிகமாவதால் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு உண்டு. இந்நிலை அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு நாளைக்குதான் என்றாலும், அப்போது குழந்தைக்கு மருத்துவரின் தீவிர கவனிப்பு வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடையிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

வலிப்பு வந்தால்... போர்த்தாதீர்கள்!

ஒருவேளை வலிப்பு வந்தால் குழந்தைக்கு ஆடைக்கு மேல் ஆடை, ஸ்வெட்டர் எல்லாம் போட்டு போர்த்தாமல், காற்றோட்டம் கிடைக்கும்படி படுக்க வைக்கலாம். உடம்பை வெதுவெதுப்பான நீர் கொண்டு துடைத்து எடுக்கலாம். இப்படி செய்துவிட்டு தாய்ப்பால் கொடுத்து வந்தாலே குழந்தையின் உடம்பில் உள்ள அதிகப்படியான டெம்பரேச்சர் குறைந்து இயல்பு நிலைமைக்கு திரும்பும். இன்னொரு பக்கம், இடைவிடாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே வரவேண்டும்.

'வெயில் ஆரம்பிச்சுடுச்சு...’ என்று பல வீடுகளில் குளியலுக்குப் பின் குழந்தையை ஒருமுறை பவுடரால் குளிப்பாட்டுவார்கள். அதுவும் அக்குள் பகுதி, கழுத்துப் பகுதி, தொடை இடுக்குகளில் எல்லாம் பவுடரைக் கொட்டித் தேய்ப்பார்கள். உண்மை என்னவென்றால், குழந்தைக்கு பவுடர் தேவைஇல்லை. அதனால் எந்தவித நன்மையும் கிடையாது. அதுவும் அடர் தன்மை கொண்ட பேபி பவுடர்கள், குழந்தையின் உடலில் உள்ள நுண்ணிய துவாரங்களை அடைத்து, கொப்புளம் அல்லது இன்ஃபெக்ஷன் வரவழைத்துவிடும். எனவே, குழந்தைகளைக் குளிப்பாட்டி, நன்றாக துடைத்து, கற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகள் அணிவித்து வைத்தாலே போதுமானது. வியர்த்தால் துடைத்துவிடலாம், விசிறி கொண்டு விசிறிவிடலாம்.

பொதுவாக குழந்தைகளைப் பொறுத்தவரை தலை முதல் கால் வரை டெம்பரேச்சர்     சீராக இருக்க வேண்டும். உடம்பு சூடாகவும், கால் குளிர்ந்தும் இருந்தால் குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் இருக்கிறது என்று அர்த்தம். எப்போதும் குழந்தையின் உடலைத் தொட்டுப் பார்த்து டெம்பரேச்சரை அறிந்துகொள்ள அம்மாக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

கோடையிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!

கோடை வெயிலில் குழந்தைகள் உஷார்!

ஓர் அதிர்ச்சியான சம்பவமும் சொல்கிறேன். தன் ஒரு வயது குழந்தையை காரில் பேபி ஸீட்டில் பெல்ட் போட்டு அமர வைத்து, கதவை சாத்திவிட்டு ஐந்து நிமிட வேலையாக கடைக்குச் சென்று இருக்கிறார்கள் அந்த பெற்றோர். வந்து பார்த்தால், குழந்தை இறந்துவிட்டிருக்கிறது. அதிகப்படியான வெயில் காருக்குள் இறங்க, அந்த அனலை பொறுக்க முடியாத குழந்தை இறந்தேவிட்டது. எனவே, கூடுமானவரை கைக்குழந்தைகளை வெயில் காலங்களில் அதிகம் வெளியில் அழைத்துச் செல்லாதீர்கள்.

இனி, வளர்ந்த குழந்தைகள் பற்றி பார்ப்போம். இந்த வெயில் காலத்தில் விளையாட்டு      வயதுக் குழந்தைகளுக்கு வரும் பெரும்    பிரச்னை, டீஹைட்ரேஷன். வெயிலும் விளையாட்டுமாக இருக்கும் அவர்களுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருங்கள். இல்லையென்றால், சன் ஸ்ட்ரோக் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வெறும் தண்ணீராக அதிகம் குடிக்க முடியாது என்பதால், பழச்சாறு, இளநீர், மோர் என்று ஏதாவது நீராகாரம் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருந்தால்... நீர்ச்சத்தும் குறையாது, தெம்பும் கிடைக்கும்.

ரோட்டுக்கடை ஜூஸ்.... வேண்டாமே!

அதேசமயம், தாகத்துக்காக பாட்டில் ஜூஸ்கள், ரோட்டில் விற்கும் தரமற்ற ஜூஸ்கள், ஈ மொய்த்த பழத்துண்டுகள் என்று வாங்கிக்கொடுத்து அவர்களைப் பழக்காதீர்கள். இதனால் வயிற்றுப்போக்கு  ஏற்படும் என்பதால், அவர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் கையோடு தண்ணீர், ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்புங்கள்.

இது அம்மை சீஸன். எனவே உங்கள் குழந்தைக்கு அம்மை தடுப்பூசி ஊசி போட்டிருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அம்மை வந்தால் அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையைப் பொறுத்தவரை, தாகத்தில் இருக்கும் சிறு குழந்தைகள் தண்ணீர், ஜூஸ் என்று நினைத்து வீட்டில் இருக்கும் மண்ணெண்ணெய், ஃபினாயில் போன்றவற்றை குடித்துவிட்டு அட்மிட் ஆகும் கேஸ் என்ட்ரிகள் அதிகமாக உள்ளது. எனவே, அப்படியான பாட்டில்களை குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் உயரமான இடங்களில் வைக்கப் பழகுங்கள்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார் டாக்டர் ரமா சந்திரமோகன்.

- ம.பிரியதர்ஷினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism