Published:Updated:

‘சினிமாக்கார பாட்டி’!

ஸ்க்ரீன்ஸ்

‘சினிமாக்கார பாட்டி’!

ஸ்க்ரீன்ஸ்

Published:Updated:
##~##

பாலாவின் திரை மொழியால், பாத்திரப் படைப்பால் அவருடைய படங்கள் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், சமீபத்திய வெளியீடான 'பரதேசி’ படத்தில் சின்னதாய் வந்து, பார்த்தவர்கள் மனதில் சிலையாக நிலைத்து நிற்கிறார் அதில் அதர்வாவின் பாட்டியாக நடித்த கச்சம்மா. மீடியா வெளிச்சத்தில் தன் வெட்கத்தையும் கூச்சத்தையும் ஒளித்து வைக்க இடம் தேடிக் கொண்டிருந்தவரை தேடிப் பிடித்துப் பேசினோம்.

''பேராண்டி... எங்க வூட்டுக்காரர் ஏதோ ஒரு சிவாஜி படத்துக்கு சினிமா கொட்டாயிக்கு என்னைக் கூட்டிக்கிட்டு போனார். அதுக்கப்புறமா, 'ஆடு ஒண்ணு நடிச்சிருக்கு'னு சொல்லி ஊரோட ஊரா 'ஆட்டுக்கார அலமேலு' படம் பார்க்கப் போயி நின்னு, முக்கா ரூவா போட்டு டிக்கெட் வாங்குனா, அதைக் கிழிச்சுத் தந்தான் கொட்டாயிக்காரன். 'ஏண்டா கிழிச்ச?'னு கேட்டா, 'அப்படித்தான் கிழிக்கணும்'னு திமிரா பேசினான். 'சரிதான் போடா'னு சண்டை போட்டுபுட்டு வீட்டுக்கு திரும்பிட்டேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சினிமாக்கார பாட்டி’!

- தனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை எனச் சொல்லாமல் சொல்கிறார் கச்சம்மா. தினக்கூலி வேலைக்கு போவதுதான் முழுநேர தொழிலே என்பதால்... அவருடைய கை, கால்கள் படாத வானம் பார்த்த பூமியே இல்லை, மதுரை மாவட்டம், செங்குளம் சுற்றுவட்டாரத்தில். தற்போது, அந்தப் பகுதி முழுக்கவே கச்சம்மாவின் பெயர் 'சினிமாக்கார பாட்டி’.

''பக்கத்து ஊருல இருந்தெல்லாம் சனம் வந்து ஏதோ கூத்தாட்டத்தை வேடிக்கை பார்க்குற மாதிரி என்னிய பார்த்துட்டுப் போறாங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்குய்யா...'' என்று வெட்கியவரிடம், சினிமா வாய்ப்புப் பற்றிக் கேட்டோம்.\

‘சினிமாக்கார பாட்டி’!
‘சினிமாக்கார பாட்டி’!

''நல்லா பாட்டுப் பாடுவேன். அதனால 'அரவான்' படத்துல நடிக்க கூட்டிக்கிட்டு போனாக. அதப்பாத்துதான் பாலா தம்பி நடிக்கக் கூப்புட்டுச்சு. அது என்ன பண்ணிக் காட்டிச்சோ, அத நான் பண்ணினேன். ஒண்ணும் தெரியாத என்னையே எப்படி நடிக்க வெச்சுருக்கு பாத்தீகள்ல..? என்ன, கொஞ்சம் ஒடம்பு போட்டுச்சுன்னா பார்க்க இன்னும் தெடமா தெரியும்!''

- இந்த அக்கறை போன தலைமுறையின் எச்சம்.

‘சினிமாக்கார பாட்டி’!

''படம் முடிச்சி மெட்ராஸ்ல பேச (டப்பிங்) கூப்பிட்டப்போ, எம்புள்ள செத்துப் போச்சு. ஒரே மகன் சாமி. அது தெரிஞ்சு பாலா தம்பி என் மேல காட்டுன அக்கறையில அதுவும் எனக்கு ஒரு புள்ளயாயிருச்சு. எம் பெரிய பொண்ணு புத்திபேதலிச்சி போனதால என் கூடவே கிடக்குறா. அதுக்காகத்தேன் இந்த சீவனை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு கிடக்குறேன்...''

- கண்களில் வழியும் கண்ணீரை தன் முந்தானையில் துடைக்கிறார்.

ஊர், உலகமே ரசித்த தன் நடிப்பை, இன்னும் 'கொட்டாயி’க்குப் போய் பார்க்கவில்லை கச்சம்மா!

''அது என்னமோ பேராண்டி இன்னும் நான் படத்த பாக்கல. என்னமோ கூச்சமா இருக்கு...'' என்றவர், எங்களுக்காகவே நாட்டுக்கோழி அடித்து குழம்பு வைத்திருந்தார். விடாப்பிடியாக மல்லுக்கட்டி எங்களை அவர் சாப்பிட வைத்தார். அதைச் சாப்பிட்டபோது கண்கள் கலங்கியதற்கு காரம் மட்டும் காரணமில்லை.

சென்னை சத்யம் தியேட்டரில் இருந்து சாத்தான்குளம் லஷ்மி டாக்கீஸ் வரை 'பரதேசி’ படம் பார்த்தவர்கள், பாட்டியைப் பற்றி ஆச்சர்யப்பட்டு பேசுகிறார்கள். அதைவிட பல மடங்கு ஆச்சர்யத்தோடு புகழ்ந்து பேசுகிறார்... அவரை தன் கேமராவில் பதிவு செய்த 'பரதேசி’ ஒளிப்பதிவாளர் செழியன்.

''வயசான பாட்டி கேரக்டருக்கு ஆள் தேவைனு டெஸ்ட் ஷூட் வெச்சோம். அஞ்சு, ஆறு பாட்டிங்க வந்திருந்தாங்க. கூன் போட்டு திட்டுற மாதிரி நடிச்சுக் காட்டுங்கனு சொன்னப்ப, இந்த கச்சம்மா பாட்டி இயக்குநர் உட்பட குழுவுல இருந்த எல்லாரையும் கண்டபடி திட்டி கைதட்டல் வாங்கி ஜெயிச்சுட்டாங்க.

படப்பிடிப்பு சமயத்துல... கேமரா, ஆக்ஷன் சூழல் எல்லாம் கச்சம்மா பாட்டிக்கு சரிப்பட்டு வரல. வசனத்தை மறந்துடுவாங்க. கேமராவை அவங்களுக்குத் தெரியாம தயாரா வெச்சுட்டு, 'சும்மா நடிங்க பாட்டி’னா அழகா வந்து வாழ்ந்து காட்டிடுவாங்க. ஆறு மாசத்துக்கு அப்புறம் பாட்டியை டப்பிங் பேச சென்னைக்கு வரச் சொன்னோம். ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட்ல டப்பிங் பேசின ஒரு பையனை பாட்டிக்கிட்ட காட்டி, 'இது யாருனு தெரியுதா?’னு கேட்டோம். 'எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...’னு கண்ணச் சுருக்கிப் பார்த்தாங்க. 'இதுதான் உங்க பேரன் ராசா...’னு அதர்வாவைக் காட்ட, 'பேராண்டி... ஒண்ணய அந்த வசவு வஞ்சுட்டேன்... மன்னிச்சிக்கய்யா!’னு அப்படியே கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க'' என்ற செழியன்,

''ஒரே வரியில சொல்லணும்னா, அது நடிப்பு இல்ல... அவங்களோட இயல்பான வாழ்க்கை!'' என்றார் நெகிழ்ச்சியுடன்!

- செ.திலீபன்