Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 19

ஒருநாள் வாக்குவாதமா... ஒட்டுமொத்த வாழ்க்கையா?டாக்டர் ஷாலினி

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 19

ஒருநாள் வாக்குவாதமா... ஒட்டுமொத்த வாழ்க்கையா?டாக்டர் ஷாலினி

Published:Updated:
ரொமான்ஸ் ரகசியங்கள்! - 19
##~##

ரொமான்ஸ் விஷயத்தில் பெண்கள் செய்யும் தவறுகளை பட்டியலிட்டுப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அடுத்த மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா? தங்கள் சொந்த விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் சொல்லிப் புலம்புவது/அலட்டிக்கொள்வது /ஆலோசனை கேட்பது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் நிறைய உளவியல் நுணுக்கங்கள் உள்ளன. பெண்களுக்கு மூளையில் மொழிக்கு உண்டான மையம் கொஞ்சம் கூடுதல் அளவு என்பதால், பொதுவாகவே எல்லாப் பெண்களும் கதை கேட்டுக் கொள்வதாகட்டும்... கதை சொல்வதாகட்டும், அதை ரொம்பவே சுவாரசியமான பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள். கதை சொல்கிறவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்பதைப் பொறுத்து கணவனை/காதலனை கரித்துக் கொட்டுவாள், தூக்கி வைத்து புகழும் பாடுவாள். சங்க இலக்கிய பாடலில் வருவது போல, அவன் இணக்கமாக கூடவே இருக்கும்போது, குளத்துப் பாசி கால் பட்டதும் விலகுவதை போல அவள் மனம் தெளிவாக இருக்கும். 'ஆஹா... எனக்கு வாய்த்த கணவன்/காதலன் எவ்வளவு நல்லவன்ப்பா!’ என்று எண்ணி புளகாங்கிதம் அடைவாள். அவனே சற்று விலகினால் போச்சு... மீண்டும் அவள் மனமெனும் குளத்தில் பாசி படர்ந்து மூடிவிடும். குழப்பங்கள் தலை தூக்கும். 'சீ... இவனெல்லாம் ஒரு மனுஷனா?’ என்று அவனை குறை கூறி வம்பிழுக்க தயார் ஆகிவிடுவாள். இது சொந்தக் கதை சொல்பவளின் மனநிலை.

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 19

கேட்பவளின் மனநிலை எப்படி இருக்கும்? அவள் ஒரு சந்தோஷமான இல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவளாக இருந்தால், 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்று தாராள மனதுடன் இருப்பாள். இதுவே இல்லற வாழ்வில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பெண்ணாக இருந்தால், 'ஆமா, தெரியாதா... இந்த ஆம்பளைங்கள பத்தி! எவனுமே சரியில்லை, எல்லாருமே சுத்த மோசம்!’ என்று பொத்தாம் பொதுவாக போட்டுத் தாக்கிவிடுவாள்.

இன்றைய நிலவரப்படி நம்மூர் பெண்களில் பலருக்கும் இல்லற வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் இனித்துக் கொண்டிருக்கவில்லை. ஏதாவது மனக்குறை, போராட்டம், கசப்பு உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதனால், இந்த கசப்பு உணர்ச்சியை உங்கள் மீதும் அள்ளி தெளித்துவிடும் அபாயம் எப்போதுமே இருக்கிறது.

இதைவிடக் கொடுமை, பொறாமை குணம். 'அட, இவளுக்கு எல்லாம் இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்கே, நான் மட்டும் இப்படி கடந்து கஷ்டப்படுறேனே’ என்கிற ஒப்பீடு, சுயபரிதாபம், வயிற்றெரிச்சல் அதிகம் என்பதால், நீங்கள் உங்கள் துணையைப் பற்றி ஏதாவது விளையாட்டாக அல்லது அந்த நேர ஆத்திரத்தில் சொல்லும் விஷயத்தைக்கூட அவர்கள் பெரிதுபடுத்தி, எரிகிற சின்ன நெருப்பில் கொஞ்சம் கூடுதலாக எரிபொருள் ஊற்றி வைத்தார்கள் என்று வையுங்கள்... பஸ்பமாகப்போவது யாருடைய வாழ்க்கை?!

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 19

நம்மூரில் எமோஷன் வந்துவிட்டால், யோசிக்கவே வராது. எசகுபிசகாக எதையாவது செய்துவிட்டு, பிறகு 'ஐயோ போச்சே' என்று வருந்திக் கொண்டிருப்பார்கள். இவள் சொன்னாள், அவள் சொன்னாள் என்று வேறு யாரோ ஒருவருடைய தாக்கத்தால் அப்படியே போய் துணையுடன் சண்டை போடுவது, வம்பிழுப்பது, பிரச்னைகளை உருவாக்குவது... இதெல்லாம் தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக் கொள்வது போலத்தான்! யாருடைய தாக்கத்தால் இவள் வந்து பேசுகிறாள் என்று புரியா மல் பாவம் அந்தக் காதலன்/கணவனும் காயப்பட்டு போகிறான். சில சமயங்களில் இதனாலேயே உறவில் பெரிய விரிசலே வந்து விடுகிறது.

உங்கள் துணையைப் பற்றி யாராவது ஏதாவது விஷ விதையை உங்கள் மனதில் தூவிவிட்டுப் போனாலும் நீங்கள் உஷாராக, தெளிவாக இருங்கள். யாரோ சொல்வதைக் கேட்டுக்கொண்டு உங்கள் துணையிடம் பேச்சு வளர்ப்பதற்கு முன்... இதை இப்போது பேசத்தான் வேண்டுமா? இதை பேசுவதால் இந்த உறவு இன்னும் பலப்படுமா? இதற்கு வேறு ஏதாவது விளக்கம் இருக்குமா? என்று முதலில் நீங்களே நன்றாக யோசியுங்கள். யோசிக்கும்போது உங்கள் காதலன்/கணவனின் நல்ல குணங்களை நினைவுக்குக் கொண்டு வந்து, அந்த பின்புலத்தில் நடந்து அண்மை சம்பவத்தை அசைபோடுங்கள். உண்மையில் அவர் மேல்தான் தவறு என்றாலும் அன்றைய ஒருநாள் வாக்குவாதத்தைவிட, ஒட்டுமொத்த வாழ்க்கைதான் முக்கியம் என்பதை புரிந்துகொண்டு நிதானமாகப் பேசுங்கள். அநாவசியமான வார்த்தைகளை விடாதீர்கள்.

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 19

பொதுவாக, எல்லோருமே தன் திருமண பந்தத்தை கட்டிக் காத்து, பாதுகாக்கத்தான் விரும்புவார்கள். காரணம், திருமணம் என்பது மெயின்டெயின் பண்ணுவதற்கு ரொம்பவே கடுமையான உறவாக இருந்தாலும், அது பிள்ளை வளர்ப்புக்கு ஒரு முக்கியமான சமூக அமைப்பு. இயற்கையின் எல்லா ஆட்டங்களிலுமே ஒரே ஒரு விதிதான். திருமணம் என்பதும் ஒரு கடுமையான ஆட்டம்தான். பிழைக்கத் தெரிந்தவர்கள்தான் ஜெயிப்பார்கள் (The fittest shall survive) அதனால், சும்மா யார் யார் பேச்சையோ கேட்டு உங்கள் உறவை சேதப்படுத்திக் கொள்ளாமல், யார் என்ன சொன்னால் எனக்கென்ன, இப்போது இந்த நிமிடம் நாம் என்ன செய்தால் ஆபத்தில்லாமல் பிழைத்துக் கொள்ளலாம் என்று தெளிவாக யோசித்து ஆட்டத்தை ஆடுங்கள். நீங்கள் எப்போதுமே ஜெயிப்பீர்கள்.

தொடர்ந்து ஒருவர் உங்களுக்கு தவறான கருத்துக்களையோ, ஐடியாக்களையோ கொடுப்பதாக தோன்றினால், அந்த நபரிடம் கவனமாக இருங்கள். வெளித்தோற்றத்தில் உங்களுக்கு உதவி செய்யும் பாவனையில் உண்மையில் அந்த நபர் உங்களுக்கு உலை வைத்துக் கொண்டிருக்கலாம். மனித நடவடிக்கைகளில் துரோகம் ரொம்பவே சகஜம். அதனால் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருளா என்று அலசி ஆராய்வதுதான் அறிவு. அது உங்கள் அம்மாவாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், தோழியாக இருக்கலாம், உறவுக்காரப் பெண்ணாக இருக்கலாம், உங்கள் மதம்/மத குரு/மத நூலாக இருக்கலாம்... யார் என்ன சொன்னாலும் அது உங்கள் வாழ்வை மேம்படுத்துவதாக இருந்தால்தான் அதை ஏற்று நடக்க முடியும்.

காதலன்/கணவனை ஒரு ரெடிமேட் பொருள் என்று எண்ணி ஏமாறுவதும் இங்கே அதிகமாக இருக்கிறது. இது பெண்களின் தவறுகளில் இன்னொன்று!

- நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism