Published:Updated:

சிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு!

ரிலாக்ஸ்

சிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு!

ரிலாக்ஸ்

Published:Updated:
##~##

னதை மயில் இறகால் வருடிவிட்டு, தன்னம்பிக்கையைத் துளிர்த்தெழச் செய்யும் 'சிக்கன் சூப் ஃபார் தி சோல்’ என்கிற உலகப் புகழ்பெற்ற புத்தகத்தின் பிரம்மா... ஜேக் கேன்ஃபீல்ட்! அமெரிக்காவைச் சேர்ந்த இந்த பிரபல எழுத்தாளர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அந்த 68 வயதுக்காரரின் தன்னம்பிக்கை பேச்சைக் கேட்க, நான்காயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாய் வரை லைனில் நின்று டிக்கெட் வாங்கி, கிட்டத்தட்ட 600 பேர் குழுமியிருந்தார்கள்!

ஜேக்கின் பேச்சில் ஆர்ப்பாட்டமோ, டிராமாவோ, வார்த்தை விளையாட்டுகளோ எதுவுமே இல்லை. மிகவும் இயல்பாக நம் வீட்டில் இருக்கும் பெரியப்பா மாதிரி... அன்பும் அக்கறையும் ததும்ப பேசுகிறார். ஆனால், ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்திருக்கும் அனுபவ செறிவு, அடைபட்டுக் கிடக்கும் நம் சிந்தனை நரம்புகளைத் தட்டி எழுப்புகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வேகம்... வேகம்... வேகம்... என்று ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆற அமர கதை படிப்பதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. அதுவும் நீதிக்கதைகள் என்றால்... ஓடியே போய்விடுவார்கள். ஆனால், கதைகள் மூலமாக கோடிக்கணக்கான வாசகர்களின் வாழ்க்கையில் ஓர் மிகப் பெரிய மாற்றத்தை உங்களால் எப்படி ஏற்படுத்த முடிந்தது?''

''தாங்க்யூ!'' என்று பாராட்டுக்கு நன்றி சொல்லிவிட்டு மிகவும் மென்மையாக பேச ஆரம்பிக்கிறார் ஜேக்.

''இதெல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை. அடிப்படையில் நான் ஓர் ஆசிரியர். சிகாகோ நகரில், முரட்டுக் காளைகளாக திமிரும் இளைஞர்களிடம் ஆப்ரிக்கன் - அமெரிக்கன்ஸ் பற்றி நான் எதேச்சையாக சில கதைகளைச் சொல்ல, அவர்கள் அதை ஆர்வமாகக் கேட்டார்கள். வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படும் கதைகளுக்கு இருக்கும் சக்தியை அப்போதுதான் முதல் முதலாக உணர்ந்தேன். அப்போது எனக்கு வயது 24'' என்று சொல்லும் ஜேக், இதன் பிறகு சொன்னதுதான் ஹைலைட்.

சிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு!

''நானும் என் நண்பர் மார்க் விக்டரும் 101 நல்ல கதைகளை தொகுத்துக் கொண்டு, ஒன்றல்ல இரண்டல்ல... 144 பதிப்பாளர்களை சந்தித்தோம். 'இக்காலத்தில் யார் குட்டிக் கதைகளைப் படிப்பார்கள்!’ என்று ஏளனம் செய்தார்கள். 'அது என்ன சமையல் குறிப்பா எழுதி வந்திருக்கிறாய்... என்ன தலைப்பு இது?’ என்று கிண்டல் அடித்தார்கள்.

கிராமப்புறங்களில் இன்னும் பல வெள்ளைக்காரத் தாய்மார்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் ஊட்ட, சிக்கன் சூப்தான் கொடுப்பார்கள். ஒரு வகையில் இந்தக் கதைகளும் 'சிக்கன் சூப்' போலத்தான். இது மனசுக்கான சிக்கன் சூப் என்கிற என் விளக்கத்தையும் கேலி செய்தார்கள்.

இதற்கெல்லாம் தளராமல், 'சிக்கன் சூப் ஃபார் தி சோல்’ புத்தகமாக வெளிவந்தால் காசு கொடுத்து வாங்குவேன் என்று இருபதாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு பதிப்பகத்துக்கு போனோம். மனம் தளராமல் புதுப்புது வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை அனுபவப்பூர்மாக கற்றுக்கொண்ட தருணம் அது.

வாழ்க்கை 'ஏ.சி’ அறையில் உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுக்காது. அது ஒரு கண்டிப் பான வாத்தியார். என்னுடைய வாழ்க்கை யையே உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், என் இளமைக் காலம் இனிமையானது இல்லை. எனக்கு வாய்த்தது, சதா சர்வநேரமும் கோபத்தில் இருக்கும் அப்பாவும்... குடிக்கு அடிமையாகிவிட்ட அம்மாவும்தான். இருந்தாலும் சிரமப்பட்டு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். கல்விக்கூடங்களை விடவும் வாழ்க்கை எனக்கு ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்தது.

சிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு!

பலவிதமான சூழ்நிலைகளில் உருண்டு புரண்டு நானும் என் நண்பனும் பார்த்தது 101 வாழ்க்கை கதைகள்தான். ஆனால், இதேபோல உலகில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் எத்தனை கதைகள் இருக்கும்? எங்கள் முதல் புத்தகத்தின் கடைசியில்... 'உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற குட்டிக் கதைகளை நீங்கள் ஏன் எங்களுக்கு எழுதி அனுப்பக் கூடாது?’ என்று இரண்டு வரி எழுதினோம். விளைவு... நாள் ஒன்றுக்கு எங்களுக்கு 200 கதைகள் வரத்துவங்கின. இவையெல்லாம் இப்போது 47 மொழிகளில் 225 புத்தகங்களாக உருவெடுத்திருக்கின்றன. இதுவரை ஐந்து கோடி புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகி இருக்கின்றன!''  

- புன்னகை மாறாமல் பேசும் ஜேக் சொல்லும் வெற்றிக்கான ஃபார்முலா, அருமை.

''ஒருவர் வெற்றியாளராக திகழவேண்டுமானால், 'வில் பவர்’ முக்கியம். ஆனால் 'வில் பவர்’ என்ற பத்து குதிரைகள் ஒரு திசையிலும், தப்பான குணங்கள் என்ற 90 குதிரைகள் எதிர் திசையிலும் நம்மை இழுக்கும்போது 'வில் பவர்’ தோற்றுப் போய்விடும். தப்பான குணங்கள் என்கிற 90 குதிரைகளின் திசைகளை மாற்ற முடியாது. ஆனால், அவற்றை கழட்டிவிட முடியுமே. எத்தனை தப்பான குதிரைகளை மனதில் இருந்து கழட்டி விடுகிறோமோ... அந்த அளவுக்கு 'நமது வில்’ பவர் அதிகரிக்கும்'' என்றவரிடம்,

''தனியறையில் உட்கார்ந்து நாம் பேசும் இந்த தத்துவங்கள் எல்லாம் ஏதோ ஒரு முயற்சியில் இறங்கி, நஷ்டத்தில் வீழ்ந்துவிட்ட ஒருவருக்கு எப்படி உதவும்?'' என்றோம்.

''பணக்கஷ்டம் என்பது யாருக்கும் புதிதல்ல. ஹென்றி ஃபோர்டு கம்பெனி ஐந்து முறை திவாலாகி இருக்கிறது. வால்டி டிஸ்னி மூன்று முறை திவாலாகி இருக்கிறார். படச்சுருள்களை பயன்படுத்தும் கேமராக்கள் வழக்கொழிந்து டிஜிட்டல் கேமராக்கள் வந்த சமயம் கோடக் கம்பெனி மிகப்பெரிய திவால் நிலையைச் சந்தித்தது. வியாபாரத்தில் நஷ்டம், பணச்சிக்கல்... எல்லாம் சர்வ சாதாரணமானது. இவற்றைக் கண்டு ஒருவர் எப்போதும் சுருண்டு உட்கார்ந்து விடக்கூடாது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை ஒன்று லாபம் கிடைக்கும். அல்லது, எதை செய்யக்கூடாது என்கிற பாடம் கிடைக்கும். இரண்டுமே நல்லதுதான்!''

- விரல்களில் வெற்றிச் சின்னம் காட்டி சிரிக்கிறார் ஜேக்!

- பி.ஆரோக்கியவேல், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism