Published:Updated:

ஒரு பிளவுஸுக்கு 10 ஆயிரம் ரூபாய்!

ஸ்டெப்ஸ்

ஒரு பிளவுஸுக்கு 10 ஆயிரம் ரூபாய்!

ஸ்டெப்ஸ்

Published:Updated:
##~##

முன்பெல்லாம் 'இந்த சேலை எந்தக் கடையில் வாங்கினது..?’ என்றுதான் கேட்பார்கள். இன்றோ, 'இந்த புடவை, பிளவுஸ், சுடிதார் எந்த பொட்டீக் கடையில் வாங்கினது..?’ என்று கேட்குமளவுக்கு 'பொட்டீக்’ கடைகளின் வளர்ச்சி உள்ளது. பெண்கள், ஆடைகள் வடிவமைத்துத் தரும் இந்த 'பொட்டீக்’ துறையில் இறங்கவும், சாதிக்கவும் நம்பிக்கை அளித்துப் பேசுகிறார், சென்னை தி.நகர் 'கீத்து பொட்டீக்’ கடையின் உரிமையாளர் சங்கீதா!

''சிறு வயதில் எதில் நமக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே, பெரும்பாலும் நம் எதிர்காலம் அமையும். எனக்கும் அப்படித்தான். என் அம்மா பத்மாவதி, வீட்டில் ஓய்வு நேரங்களில் புடவைகளுக்கு பார்டர் வைப்பது, பிளவுஸ்களுக்கு டிசைன் செய்வது என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார். அதைப் பார்த்து வளர்ந்த எனக்கும் பள்ளிப் பருவத்திலேயே அதில் ஈடுபாடு வந்தது. 'கீத்து பொட்டீக்’ ஆரம்பிக்க, அம்மா ஊட்டிய அந்த ஆர்வமே காரணம்!'' எனும் சங்கீதா, நடிகை சினேகாவின் அக்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பொட்டீக்’ தவிர, சுமார் 35 படங்களுக்கும் மேல் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ''என் உடைகளை நானே டிசைன் செய்ததுதான் ஆரம்பம். என் சகோதரி உடைகளையும் நான் வடிவமைத்தேன். எங்கள் உடைகளைப் பார்த்தவர்கள், பாராட்டுகளைச் சேர்த்தார்கள். சினேகா, சினிமாவில் காலடி எடுத்து வைத்த சமயம்... திரைப்படங்களிலும் அவரின் ஆடைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன். பெரிய அனுபவம் இல்லையென்றாலும், என் தேடலும் மெனக்கெடலும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு என்று பட வாய்ப்புகளும் விரிந்தன.

ஒரு பிளவுஸுக்கு 10 ஆயிரம் ரூபாய்!

இந்த வேலையில் என் ஆர்வத்துக்குத் தீனியும் அங்கீகாரமும் கிடைத்தது. இருந்தாலும், அதிகம் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால்... என் இரண்டு குழந்தைகளுக்கான நேரத்தை என்னால் கொடுக்க முடியாமல் போனது. எனவே, கொஞ்சகாலம் இடைவெளி எடுத்தேன். பிறகுதான், 'பொட்டீக்’ ஐடியா கிடைத்தது. இதில் நாமே முதலாளி, தொழிலாளி. எனவே நமக்கான நேரத்தை நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 'கீத்து பொட்டீக்’ உதயமானது. ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் என்ற வட்டத்தில்தான் நானும் ஆரம்பித்தேன். என் பிரத்யேக டிசைன்களும், நேர்த்தியான வேலைப்பாடுகளும், குறித்த காலத்துக்குள் முடித்துக் கொடுக்கும் வாக்குச் சுத்தமும் இந்த இரண்டு வருடங்களில் அதிக வாடிக்கை யாளர்களைத் தேடித் தந்துள்ளது.

நம் கற்பனையை காசாக மாற்றித் தரும் தொழில் இது. மூளையைக் கசக்கி நாம் உருவாக்கும் டிசைன்களுக்கும் அதை வாடிக்கையாளருக்கு பிடித்தமானதாக முடித்துக் கொடுக்கும் நேர்த்திக்கும் தாராளமாக விலை வைக்கலாம். நிச்சயதார்த்தம், முகூர்த்தம், வரவேற்பு என்று சினேகா திருமணத்தில் நான் வடிவமைத்த அத்தனை ஆடைகளுக்கும் பாராட்டுக்கள் குவிந்ததைத் தொடர்ந்து, இப்போது கல்யாணப் புடவை, குறிப்பாக பிளவுஸ் வடிவமைப்பில் நான் பிஸியோ பிஸி. ஒரு பிளவுஸுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரைகூட வாங்குகிறேன்.

ஆரம்பத்தில் இருந்தே தையல் பெண்களுக்கு ஏற்ற தொழிலாகவே இருந்துவந்துள்ளது. இப்போது அது நவீனத்துவம் பூசி, பெண்களின் வருமானத்தை பலமாக ஏற்றித் தருகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள் தோழிகளே!''

- கையில் இருக்கும் பட்டு நூலில் பாசியை கோத்துக்கொண்டே சொல்கிறார் சங்கீதா!

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism